பல்கலைக்கழகங்களில் வர்க்கப்போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பஜனை மடங்களல்ல. அது சமூகத்தின் உயர்மட்ட வர்க்க வாழ்க்கையில் நுழைவதற்கான வாசல் என்பது எல்லோருக்கும் தெரியும். கூடவே அதிகாரவர்க்கமாக ஆவதற்கும் பல்கலை மற்றும் உயர்கல்வி அவசியம் என்பதும் தெரியும்.

அதனால்தான் சமூகத்தின் அதிகாரவர்க்க அந்தஸ்தை தங்களுக்கானதாக மட்டுமே கருதிக்கொள்ளும் பார்ப்பன உயர்சாதியினர் வெறிகொண்டு ஆட்டம் போடுகிறார்கள். மற்றவர்கள் அதை அடையவிடாமல் தாக்குதல் நடத்துகிறார்கள்.

ஒருபுறம்...

கடந்த ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா. இப்போது ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் சேலம் முத்துகிருஷ்ணன். நாம் மதிப்புமிக்க மாணவச்செல்வங்களை தொடர்ச்சியாக இழந்துகொண்டிருக்கிறோம்.

JNU Protestsஇவர்களுக்கு முன்னதாக கடந்த 2008-ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த தலித் மாணவர் செந்தில் குமார் தற்கொலை செய்துகொண்டார். அதையொட்டி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வியாளர் வினோத் பவராலா குழு விசாரணை நடத்தியதில் அங்கு தீண்டாமை கொடுமைகள் உள்ளதென உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசிடம் அறிக்கையும் கொடுக்கப்பட்டது. அதேபோல் ரோஹித் வெமுலா தற்கொலையையொட்டி நடந்த ஆய்வுகளின்படி உயர்கல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் சாதிய கொடுமைகளால் கடைசி நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆகும் என கணக்கிடப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் மரணம் அதன் எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.

செந்தில் குமார், ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் போன்றோர் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் இசுலாமிய மாணவர் நஜீப் காணாமல் போனார். பல்கலைக்கழக மாணவர் தேர்தலையொட்டி ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கும் நஜீப் காணாமல் போனதற்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது இது கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களில் தலித், இசுலாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு இவை குறைந்தளவிலான எடுத்துக்காட்டு.

இன்னொரு புறம்...

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தில்லியில் நடத்திய இரண்டுநாள் பயிற்சி பட்டறையில் இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரான சுதர்சன ராவும், மத்திய - மாநில பல்கலைக்கழகங்களின் 51 துணைவேந்தர்களும் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்த்த பல பல்கலைக்கழகங்களின் மூத்த கல்வியாளர்கள் 721 பங்கேற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் மூத்த நிர்வாகிகளான சக்கரவய கிருஷ்ன கோபால், சுரேஷ் சோனி ஆகியோர் பங்கெடுத்த இரண்டு நாள் முகாம் இது.

"கல்வி முறையில் இந்தியத்தன்மை குறைந்துவிட்டது என்றும் கல்வியை இந்திய மயமாக்க வேண்டும் என்றும்” மிகுந்த முக்கியத்துவத்தோடு இந்த பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டுள்ளது. இந்திய மயமாக்கல் என்பது இந்துத்துவ மயமாக்கல்தான் என்று தனியாக விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை.

“இந்த இரண்டுநாள் பயிலரங்கின் மூலம் நமது கல்வியில் மேற்கத்திய தாக்கமானது மிகப்பெரிய குறைபாடாக உள்ளதை கல்வியாளர்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும், இந்திய சிந்தனையை நமது கல்வியின் மைய நீரோட்டமாக புகுத்த வேண்டிய உணர்வை கல்வியாளர்களும் உணர்ந்ததாகவும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க இனி வாரந்தோறும் இறுதி நாட்களில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நடத்த உள்ளதாகவும்” நந்தகுமார் என்பவர் கூறியுள்ளார்.

இந்த பயிலரங்கத்தில் "மேற்கத்திய கல்வியை நோக்கி சாய்ந்தவண்ணமுள்ள நமது கல்வித்துறைகளில் மாற்றத்தினை கொண்டுவர நாம் அதற்கான இலக்கியங்களை உருவாக்க வேண்டும். அதன்மூலம் சமூகம் மற்றும் மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். இந்த மாற்றத்தை முதலில் கல்வியளர்களின் மட்டத்தில் உருவாக்க வேண்டும். இதை செய்துவிட்டால் மாணவர்கள் நம்மை நோக்கி தானாக வருவார்கள்'' என்று டெல்லி பல்கலைக்கழக Political science பேராசிரியர் பிரகாஷ் சிங் பேசியுள்ளார்.

பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் என மொத்த கல்வி துறைகளும் எந்த அளவு இந்துத்துவவாதிகளான பார்ப்பன உயர்சாதியினரின் பிடியில் அகப்பட்டுள்ளது என்பதற்கான சின்ன உதாரணம் இது.

வர்க்க பார்வையற்ற பார்வைக்கோளாறு.

இந்துத்துவத்தின் இத்தகைய கல்வித்துறை செயற்பாடுகள் குறித்த நமது கண்ணோட்டம் மிகவும் மேலோட்டமானதும் கேலியானதுமாகும். அவர்கள் சமஸ்கிருதத்தை அல்லது இந்தியைப் புகுத்துகிறார்கள்; அறிவுக்கும், உண்மைக்கும் பொருத்தமற்ற வகையில் ராமாயணத்தில் ஆகாய விமானம், மகாபாரத குருஷேத்திர போரில் அணுகுண்டு, பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை பாடமாக்குகிறார்கள் என்பனத்தான் நமது விமர்சனம்.

ஆனால் உண்மை அதுவல்ல. மூடநம்பிக்கைகளை பரப்புவதன் மூலம் மக்களை முட்டாளாக்குவது மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மாறாக, கல்வியின் மூலம்தான் அனைத்து உயர்பதவிகளையும் அதிகாரத்தின் அனைத்து உயர்மட்டங்களையும் பார்ப்பன உயர்சாதியினரால் அடைய முடியும் என்பதுதான் அவர்களின் இலக்கு. பார்ப்பனர்கள் என்றால் பூஜாரிகள்தான் என்று நம்மவர்கள் இன்னமும் எண்ணிக்கொண்டிருப்பதுதான் அறியாமையின் உச்சம்.

பார்ப்பன உயர்சாதியினர் அதிகாரவர்க்கமாக நீடிக்கும் வர்க்கப்போராட்டம் தொடர்கிறது என்பதை உணராத போக்குதான் நம்மிடையே நீடிக்கிறது. மாணவர்கள் மீதான தாக்குதல்கள் வெறும் தீண்டாமை பிரச்சினையாக மட்டுமே சுருக்கப்படுகிறது.

ஆதலால்தான் தலித் மாணவர்கள் தாக்கப்படும்போது அதனை தீண்டாமைக்கு எதிரானப் போராட்டமாக தீவிரப்படுத்துகிறவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சரவணன் போன்ற ஏழை பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயிர்கள் பறிக்கப்படும்போது முடங்கி விடுகிறார்கள். தீண்டாமைக்கும் பிற்படுத்தப்பட்ட ஏழை சரவணனுக்கும் சம்பந்தமில்லையே என திகைத்து விலகி நிற்கிறார்கள். 

இது வர்க்கப்போராட்டம்!

கல்வி புனிதமானது என்று பார்ப்பனர் வரையறுக்கவில்லை. புனிதமான எங்களிடம்தான் கல்வி இருக்க வேண்டுமென்று வரையறுத்துள்ளார்கள்.

ஏன்? ஏனென்றால் கல்வியுடையவனே சமூகத்தின் அதிகார வர்க்கமாக இருக்க முடியுமென்ற உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடுகிறவர்களாக, அதற்கான செயல்திட்டத்தை வரைகிறவர்களாக (policy makers), அதை நடைமுறைப்படுத்துகிறவர்களாக என சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக பார்ப்பனர் - உயர்சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதைத்தான் பார்ப்பனர் - உயர்சாதியினர் நலன் பேணும் இந்துத்துவமாக அவர்கள் வரையறுத்துள்ளார்கள்.

இது வெறும் அதிகார மமதைக்கானதல்ல. இதன் மூலம்தான் சமூகத்தின் மேல்நிலை வர்க்க வாழ்க்கையை அடைய முடியும் என்பதால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வர்க்கச் சூத்திரம் அது.

அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே கல்வியை தன் வசமே வைத்துக்கொண்டனர் பார்ப்பனர். தொழில் வளர்ச்சியின் காரணமாக உடல் உழைப்பிற்கு கூட கல்வி அடிப்படை தகுதியென ஆன பின்பு மூளை உழைப்பிற்கான மற்றும் அதிகார வர்க்கத்திற்கான கல்வியை தமதுப் பிடியில் வைத்துக்கொள்ளத் தொடங்கினர்.

அதிகாரவர்க்கமாக நீடிப்பதற்கு அதிகாரம் தம் பிடியில் இருக்க வேண்டுமென்பதன் தேவையை உணர்ந்துதான் அவர்கள் 1925-இல் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பை தொடங்கினார்கள்.

வெள்ளையர்களோடு அதிகார பேரத்தை நடத்துவதற்கு பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் நோக்கம் காங்கிரசால் தடைபட்டது.

ஆனாலும் இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்த வெள்ளையர்களோடு இணக்கமாகி தமது உயர்மட்ட வர்க்க வாழ்க்கையை பாதுகாத்துக்கொண்டார்கள். அந்த நேரத்தில் பாசிச ஜெர்மானியர் பலநாடுகளை அடிமைப்படுத்தி, இந்தியாவையும் ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற நிலை வந்தபோது அவர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டு ஜெர்மானியரோடு இணக்கமாகி தாங்கள் அதிகாரவர்க்கமாக நீடிப்பதற்கு தயாராக இருந்தார்கள்.

நிலைமை அவர்கள் நினைத்ததுபோல் இருக்கவில்லை. ஜெர்மன் பாசிசம் கம்யூனிச இரசியாவால் அடித்து நொறுக்கப்பட்டது. இங்கிலாந்து பேரரசும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டி வந்தது. புதிய இந்தியா தமது பொருளாதார நலனிலிருந்து கம்யூனிச இரசியாவோடு நெருக்கமானது. பார்ப்பனர்களின் கனவு பலிக்கவில்லை. ஆனாலும் அதிகாரவர்க்கத்திலிருந்து தாங்கள் விரட்டப்படும் நிலை உருவாகவில்லை என்பதில் ஆசுவாசமடைந்தார்கள்.

1947-இல் அதிகாரம் இந்திய சொத்துடைய வர்க்கங்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டது. வெள்ளை அடிமைத்தளையை உடைத்தெறிந்த அனைத்து மக்களும் தங்களின் சமூக நீதிக்கான இயக்கங்களைக் கொண்டிருந்தார்கள். சீர்த்திருத்தம் தவிர்க்க முடியாததாக இருந்தது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான கம்யூனிஸ்ட் கட்சி முழு பலம்பெற முடியாவிட்டாலும், வெவ்வேறு வகையிலான சமூக நீதி இயக்கங்கள் தோன்றிய வண்ணமிருந்தன. ஆதலால் வருணாசிரம கொள்கையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கூட சனநாயக வேடம் பூண்டுதான் ஆட்சி நடத்த முடிந்தது.

கல்வியில், வேலை வாய்ப்பில், சமூக நடவடிக்கைகளில் அனைத்துப் பிரிவினரையும் அங்கீகரிக்க வேண்டியிருந்ததால் பார்ப்பனர் ஆதிக்கம் கொஞ்சம் தளர்ந்தது.

பார்ப்பனர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை சரியாக விளங்கிக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். தங்களின் இடமான அதிகாரவர்க்க வாழ்நிலையை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாதென தீர்மானித்தார்கள். அதிகாரவர்க்க இடத்திற்கான உயர்கல்வியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை உருவாக்கினார்கள்.

இந்த முயற்சியில்தான் ஆர்.எஸ்.எஸ்-ஆல் 1978-இல் வித்யா பாரதி மற்றும் அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இன்றைய தேதியில் வித்யாபாரதியின் கட்டுப்பாட்டில் சுமார் 18,000 பள்ளிகள் நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவைத்தவிர இவ்வமைப்பில் சுமார் 80,000 ஆசிரியர்கள் உள்ளனர். மட்டுமல்லாமல் இவ்வமைப்புகளின் சார்ப்பில் சில பத்தாயிரம் ஓராசிரியர் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் அதிகாரவர்க்கத்தின் உயர்நிலைகளை அடையும் வழிமுறைகள் தொடங்கி வளர்ந்து வந்த நிலையில்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அவர்களை அச்சுறுத்தியது. அது இந்தியாவில் தலித்துகள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகப்பிரிவினர்களுக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கல்வியிலும் அதிகாரவர்க்கப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் வாய்ப்புகளை திறந்துவிட வழியமைத்தது.

1989-இல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முயன்ற பிரதமராக வி.பி. சிங்கிற்கு எதிராக பார்ப்பன உயர்சாதியினர் கடுமையானப் போராட்டத்தை நடத்தினார்கள். ராஜிவ் கோஸ்வாமி என்ற டெல்லி பல்கலைக் கழகத்தின் மாணவனை பலிகொடுத்தார்கள்.

இது பார்ப்பன உயர்சாதியினர் தங்களின் உயர்மட்ட வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கான வர்க்கப்போராட்டம்.

தங்களின் வர்க்க வாழ்நிலைக்காக 1925-இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்கிய அவர்களுக்கு இரசியாவின் வீழ்ச்சியும், அமெரிக்காவின் ஆதிக்கமும், உலகமயமாக்கலும் நம்பிக்கையடைய செய்தது.

அவர்கள் புதிய வர்க்க அணிசேர்க்கைக்கு தயாரானார்கள். மூர்க்கமாக களமிறங்கினார்கள். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி நாடெங்கும் இசுலாமிய எதிர்ப்பு கலவரங்களை நடத்தினார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார்கள்.

  • உலகமயமாக்கல் எதிர்ப்பு போராட்டங்களை முனைமழுங்க செய்து ஏகாதிபத்தியங்களின் கருணையைப் பெற்றார்கள்.
  • இசுலாமியர் மீது வெறுப்பை விதைத்து தலித் உட்பட பெரும்பான்மை மக்களை தங்கள் பின்னால் அணிதிரட்டிக் கொண்டார்கள்.

இதன் மூலம் காங்கிரஸை விட தாங்கள்தான் உலகமயமாக்கலுக்கு தீவிர சேவையாற்ற முடியும் என்று நம்பிக்கையை அமெரிக்க உட்பட வளர்ந்த நாடுகளிடம் உருவாக்கினார்கள். மோடியை வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆதரித்தது.

1925-இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்கி கிட்டதட்ட 100 ஆண்டுகள் காத்திருந்த அவர்களின் கைகளில் ஆட்சி அசுர பலத்தோடு வழங்கப்பட்டிருக்கிறது.

இப்போது அதிகாரவர்க்க உயர்மட்ட வாழ்க்கையும் அதற்கான கல்வியும் தங்களுக்கு மட்டுமே உரிமையுடைது என்று பிரகடனப்படுத்துகிறார்கள்.

நஜீப், முத்துகிருஷ்ணன், ரோஹித் வெமுலா, சரவணன் என உயிர்கள் பலி வாங்கப்படுகிறது.

இது வர்க்கப்போராட்டம்.

அவர்களின். தொடங்கப்பட்ட கிட்டதட்ட அவர்கள் தங்களுக்கு சாதகமான வர்க்க அணிசேர்க்கையை உருவாக்கிக்கொண்டார்கள். அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அதிகாரத்தின் துணையோடு தங்கள் வர்க்க வாழ்நிலைக்கான கல்வியை ஆக்கிரமிக்கிறார்கள்.

சமூகத்தின் உயர்மட்ட வர்க்க வாழ்க்கையை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதும், அதற்கான வர்க்க அணிசேர்க்கையை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதும் பார்ப்பனர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் அவர்கள் எப்போதும் ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.

உயர்சாதியினரின் வர்க்க ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முடியாத அரசியல் பலவீனம்!

பார்ப்பன உயர்சாதியினரின் தாக்குதலை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையாகவும், புறக்கணிப்பு நடவடிக்கையாகவும், காலாகாலமாக பின்பற்றப்படும் சடங்குத்தனமான உளவியல் சிக்கலாகவும் பார்க்கிறது தலித் அடையாள அரசியல். அது சமூகத்தில் ஒவ்வொருவரு பிரிவினருக்கும் உடமையான வர்க்க வாழ்க்கையை பிரிதொரு பிரிவினர் அடைய முயற்சிக்கக் கூடாதெனும் வர்க்க ஒடுக்குமுறைக்கான தீண்டாமையை வெறும் மனம் சார்ந்தப் பிரச்சினையாக சுருக்குகிறது.

அதனால்தான் அம்பேத்கர் உட்பட அனைவரும் இந்துக்களாக உணர்கிற உழைக்கும் மக்களின் மனம் சார்ந்த சாதிய உணர்வுகள் ஒருபோதும் மாறாது என்றும் இந்தியாவில் வர்க்கப்போராட்டம் சாத்தியமே இல்லை என்றும் அறிவிக்கின்றனர்.

அம்பேத்கரின் இந்த அரசியல் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி அரசாங்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டது. அது எதிர்பார்த்தப்படியே இடதுசாரி இயக்கங்களை பின்னடைவுக்குள்ளாக்கியது. ஜெ.என்.யு மாதிரியான அரசியல் செல்வாக்குடைய பல்கலைக்கழகங்களும் அதற்கு பலியாகியுள்ளது.

ஜெ.என்.யு ஆரம்பிக்கப்பட்ட 1969 முதல் அது இடதுசாரிகளின் ஆதிக்க கோட்டையாக இருக்கிறது என வலதுசாரிகள் உட்பட அனைவரும் கூப்பாடு போடுவதை இப்போதும் கேட்கலாம். ஆம், உண்மைதான்.

உலகப் புகழ்பெற்ற 100 பல்கலைக்கழகங்களில் ஜே.என்.யு-வும் ஒன்று. அனைத்து மாநில மாணவர்களும் படிக்கும் இடம். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர், மாணவர் என மூன்று தரப்புகள் இணைந்து நிர்வாகம் செய்யும் ஜனநாயகப்பூர்வமான வழிமுறை ஜே.என்.யு-வில் உள்ளது. அங்கே அரசியல், பொருளாதாரம், பண்பாடு என சமூகப்பிரச்சனைகள் அனைத்தும் குறித்த விவாதங்கள் நடக்கும். அதையொட்டிய போராட்டங்களும் நடக்கும்.

இந்தியாவை நிலைகுலைய செய்த 1975 அவசர நிலையின்போது கொஞ்சமும் தயங்காமல் அதற்கு எதிராக மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து நின்றுப் போராடினார்கள். அதுவே அங்கிருக்கும் ஜனநாயகத்திற்கு சான்று. இன்றுவரையும் அநீதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் இடதுசாரிகளின் ஆதிக்கத்தாலேயே நடந்தது. பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதித் திமிர் அடக்கப்பட்டிருந்தது. வலதுசாரி இயக்கங்கள் துளிர்விடக்கூட முடியவில்லை.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மாணவர்கள் உயிரிழக்கவும் இல்லை. அந்த அளவில் இடதுசாரி அரசியல் செல்வாக்கு செலுத்தியதென்றால் அம்பேத்கரிசமோ, வர்க்கப்போராட்ட எதிர்ப்பு அரசியலோ செல்லுபடியாகவில்லை என்றே பொருள்.

ஆனால், உலகமய காலகட்டத்தில் வர்க்கப்போராட்ட எதிர்ப்புவாதிகள் ஒரு புதிய தந்திரமான அரசியலை முன்வைத்தார்கள்.

‘வர்க்கப்போராட்டம்தான் சாதியை ஒழிக்கும். வர்க்கப்போராட்டம் தவிர்க்க முடியாதது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி ஒழிப்பும் வர்க்கப்போராட்டத்தின் இரு அம்சங்கள். ஆனால் இந்தப் போராட்டங்களில் உடனடியாக தலித்துகள் பங்கேற்பது சாத்தியமில்லை.

ஏனென்றால், வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களைவிட உள்நாட்டு ஏகாதிபத்தியமான பார்ப்பனியம் தலித் மக்களை கடுமையாக அடக்கி, ஒடுக்கி நசுக்கியது. அந்த கொடுமையிலிருந்து தலித்துகள் ஓரளவு வெளியேறவும், தங்களது மனித மாண்பை அடையவும் வெளிநாட்டு ஏகாதிபத்தியம்தான் துணைசெய்தது. வெளிநாட்டு ஏகாதிபத்தியம் வழங்கிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளால்தான் தலித்துகள் தங்களது மனித மாண்பை மீட்டெடுத்தனர். அந்த நன்றியின் பொருட்டே அவர்கள் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் (வெள்ளையாருக்கு எதிரானப் போராட்டத்தில்) ஆர்வம் காட்டவில்லை.

நிலைமை இப்போதும் மாறிவிடவில்லை. தலித்துகள் கல்வியின் மூலம் குறைந்தபட்ச பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் நீடிக்கிறது. ஆகவே இப்போதும் வர்க்கப்போராட்டத்தில் தலித்துகளின் பெரும் பங்களிப்பை எதிர்பார்க்க முடியாது’ என்று வர்க்கப்போராட்டத்திலிருந்து தலித்துகளுக்கு விடுப்பு கொடுப்பதற்கான லீவ் லெட்டர் அரசியலை முன்வைத்தனர்.

இந்த தந்திர அரசியலின் முக்கிய நாயகராக ஆனந்த் தெல்டும்டே (ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்- நூலாசிரியர்) இருக்கிறார்.

இந்த தந்திர அரசியல் தலித் மாணவர்களின் மத்தியில் கொஞ்சம்கொஞ்சமாக செல்வாக்குபெறத் தொடங்கியது. கல்வியின் மூலம் முன்னேற வாய்ப்பிருக்கும்போது நமக்கெதற்கு வர்க்கப்போராட்டம் என்று காயடிக்கும் பணியில் இறங்கிய என்.ஜி.ஓ-க்களுக்கு ஆனந்த் தெல்டும்டேயின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற நூல் ஒரு கையேடாக விளங்கியது.

இதுபோன்ற தத்துவார்த்தப் பின்னணியிலேயே பல்கலைக்கழகங்களில் முற்போக்கு, இடதுசாரி மாணவர் இயக்கங்களைப் பலவீனப்படுத்தி அம்பேத்கர் மாணவர் சங்கம் (ASA – Ambedkar Students Association), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தினர் பிர்சா அம்பேத்கர் (BAPSA), பூலே மாணவர் சங்கம் போன்றவை எழுச்சியுற்றன.

“ஏகாதிபத்தியம் வழங்கிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளால்தான் தலித்துகள் தங்களது மனித மாண்பை மீட்டெடுத்தனர் என்றும்; இப்போதும் தலித்துகள் கல்வியின் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் நீடிக்கிறது என்றும்; அவர்கள் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் (வெள்ளையாருக்கு எதிரானப் போராட்டத்தில்) ஆர்வம் காட்டாதது போல் இப்போதும் வர்க்கப்போராட்டத்தில் பங்களிப்பை காட்ட முடியாது என்றும்” காயடித்த அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களின் மீது இப்போது ABVP போன்ற வலதுசாரி மாணவர் இயக்கங்கள் செல்வாக்கு பெற்று வர்க்க தாக்குதலை நடத்துகிறது. அது அரசின் ஆதரவோடு தீவிரமாகி வருகிறது.

இப்போது நம்முன் உள்ள கேள்விகள் இவைதான்

  • பார்ப்பன உயர்சாதியினர் தங்களது அதிகார வர்க்க வாழ்நிலைக்காக நடத்தும் வர்க்க தாக்குதலை எப்படி எதிர்கொள்வது?
  • இந்துக்களாக உணர்கிற உழைக்கும் மக்களிடமுள்ள சாதிய மனநிலையே மாறாது என்றால் அதிகாரவர்க்கமாக நீடிக்கும் பார்ப்பன உயர்சாதியினரின் மனநிலை மட்டும் எப்படி மாறும்?
  • மாறாததை எதிர்த்து என்ன போராடி, என்ன பலன்?
  • அப்படியானால் தலித் அடையாள அரசியலின் போராட்டத்தின் இலக்கு என்ன?
  • எல்லாம் மாறும் என்ற வர்க்கபோராட்ட தத்துவம் இதற்கு கூறும் வழிமுறை என்ன?

- பாவெல் சக்தி & திருப்பூர் குணா

Pin It