நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அய்தராபாத் பல்கலைக் கழகத்தில், தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மாணவர் ரோகித் வெமுலா 17-01-2016 ஞாயிறு இரவு மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மகாபாரதக் கதையில் சத்ரியனான அர்ச்சுனனைவிட, சூத்திரனான ஏகலைவன் சிறந்த வில்லாளனாக இருப்பதைக் கண்ட துரோணாச்சாரி, “குரு காணிக்கை” என்ற பெயரில் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டுப் பெற்று அவனு டைய ஆற்றலை அழித்ததுபோல், இன்று பார்ப்பன மேல்சாதி ஆதிக்கம் ரோகித்தின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பதற்காக, உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியது.
2016 சனவரி 26 அன்று 67 ஆவது குடிஅரசுநாள் விழா, நடுவண் அரசாலும் மாநில அரசுகளாலும் கண்கவர் முறையில் கொண்டாடப்பட்டது. ஆனால் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் கிட்டத்தட்ட அப்படியே நீடிக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படு வதற்கு முந்திய நாள் - 1949 நவம்பர் 25 அன்று, அரசமைப்பு அவையில் மேதை அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையில், “1950 சனவரி 26 ஆம் நாள் இந்தியர்களாகிய நாம் முரண்பாடுகள் கொண்ட வாழ்வில் நுழைகிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம்.
ஆனால் சமூக, பொருளியல் நிலைகளில் சமத்துவமின்மை நீடிக்கும். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு; ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற நிலை இருக்கும். ஆனால் நம்முடைய சமூக, பொருளியல் வாழ்விலோ, நீண்டகாலமாக இருந்துவரும் சமூகக் கட்ட மைப்பின் காரணமாகச் சமத்துவமற்ற நிலை நீடிக்கும்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சமத்துவமற்ற முரண்பாடுகளை நீடிக்கவிடப் போகிறோம்? இந்த முரண் பாடுகளை விரைவில் நீக்காவிட்டால், இவற்றால் பாதிக்கப் படும் மக்கள் நாம் அரும்பாடுபட்டு உருவாக்கி உள்ள இந்தச் சனநாயக அரசமைப்பு முறையையே தூக்கி எறிவார்கள்” என்று கூறி எச்சரித்தார்.
ஆனால் 67 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவில் ஒருவரின் சமூகத் தகுதியை, உயர்கல்வி வாய்ப்பை, பொருளாதார வாழ்நிலையைத் தீர்மானிப்பதில் சாதிப் படிநிலையில் அவர் வகிக்கும் நிலையே முதன்மையான காரணியாக விளங்குகிறது.
26 அகவையிரான ரோகித் தற்கொலை செய்து கொள்ளும்முன் எழுதிய மடலில் இக்கருத்தை, “ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் வாக்காளனாக, சில நேரங்களில் வெறும் எண்ணிக்கையாக, சிலநேரங்களில் பொருள்களாகக் கூட அடையாளம் காணப்படுகிறான்.
ஒரு மனிதன் எப்போதாவது அவனது விழுமியங்களின்-ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால், உறுதியாக இல்லை” என அவர் பதிவு செய்திருக்கிறார்.
சாதி அமைப்புக்கு, இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடிய ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதைக் கண்டித்து அய்தராபாத், தில்லி, மும்பை, புனே, கொல்கொத்தா, சென்னை முதலான பெருநகரங்களில் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். ரோகித் தற்கொலை செய்துகொண்ட நாள் முதலாய் அய்தராபாத் பல்கலைக்கழகம் மாணவர்களின் தொடர் போராட்டத்தினால், செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. சாதி ஆணவத்தால்-இந்துத்துவப் பாசிச வெறியால் ரோகித் “படு கொலை” செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
ரோகித் வெமுலா ஆந்திர மாநிலம் குண்டூர் நகரில், சாவித்திரி பாய் (சோதிராவ் புலேவின் துணைவி பெயரால் உள்ள) நகரில் மிகவும் பின்தங்கிய சூழலில் பிறந்து வளர்ந்தவர். தாழ்த்தப்பட்ட “மாலா” சாதியைச் சேர்ந்தவர். குடும்பப் பொறுப்பற்ற தந்தை. அதனால் முற்றிலும் தாயின் கடும் உழைப்பால் வளர்ந்தவர்.
2012 ஆம் ஆண்டில் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்றார். ரோகித் கல்லூரிக் கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் தாழ்த்தப்பட்டவர்க்கான இட ஒதுக்கீட்டின் பிரிவில் அல்லாமல், அதிக மதிப்பெண் பெறுவோர்க்குரிய பொதுப்பிரிவில் (eneral Category) இடம்பெறும் அளவுக்குப் படிப்பில் சிறந்து விளங்கினார். அதேபோல், முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புக்காக-மாதம் உருவா 25,000 கல்வி உதவித் தொகை பெறும் தகுதியையும் பெற்றார். 2014-15ஆம் கல்வி ஆண்டு முதல் அய்தராபாத் நடுவண் பல்கலைக்கழகத்திலேயே தன் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குமுன், அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைந்தார். அச்சங்கத்தின் தலைவராக விளங்கினார். இந்நிலையில், யாகூப் மேமனைத் தூக்கிலிட்டபோது, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற, மரணதண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முனைப்புடன் அவர் செயல்பட்டார்.
2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத்துக்குப் பொதுத்தேர்தல் நடைபெறவுள் ளதைக் கருத்தில் கொண்டு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்ற பரப்புரையை இப்போதே சங்பரிவாரங்கள் தொடங்கி விட்டன.
அதேபோல் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்து வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக உ.பி.மாநிலத் தில் 2013 செப்டம்பரில் முசுலீம்கள் பெருமளவில் வாழும் முசாபர் நகரில் சங்பரிவாரங்கள் முசுலீம்கள் மீது கொடிய தாக்குதலை நடத்தி, இந்து-முசுலீம் பகையை மூட்டின. அதனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பா.ச.க. கைப்பற்றியது. பா.ச.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இது உதவியது.
முசாபர் நகரில் முசுலீம்கள் மீது இந்துத்துவ குண்டர்கள் நடத்திய வெறித்தாக்குதல் குறித்து எடுக்கப்பட்ட குறும்படத்தை மாணவர் விடுதியில் திரையிட தில்லிப் பல்கலக்கழகம் அனுமதிக்க மறுத்ததைக் கண்டித்து, அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பா.ச.க.வின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP - ஏ.பி.வி.பி) மோடி தலைமை அமைச்சரான பின், இந்துத்துவக் கொள்கையைப் பரப்புவதிலும், இதற்கு எதிரானவர்களைத் தாக்குவதிலும் வெறித்தன மாகச் செயல்பட்டு வருகிறது.
அய்தராபாத் பல்கலைக்கழகத்தின் ஏ.பி.வி.பி.யின் தலைவரான சுசில் குமார் 2015 ஆகத்து 3 அன்று, தன்முக நூலில் யாகூப் மேமனின் தூக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அம்பேத்கர் சங்கத்தினரை “ரவுடிகள்” என்று கண்டித்தார்.
எனவே 2015 ஆகத்து 4 அன்று ரோகித் வெமுலா மற்ற தலித் மாணவத் தோழர்களுடன் மாணவர் விடுதியில் அறைக் குச் சென்று முகநூலில் அவரின் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சுசில்குமாரின் தோள் பகுதியில் சட்டை கிழிந்து சிராய்ப்பு ஏற்பட்டது. அதன் பின் சுசில்குமார் தன் முகநூலில் தலித் மாணவர்கள் பற்றிய குறிப்பை நீக்கிவிட்டார்.
ஆனால், சுசில்குமார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்து வப் பிரிவுக்குச் செல்லாமல், வெளியே உள்ள அர்ச்சனா மருத்துவமனையில் 2015 ஆகத்து 4 அன்று மாலை 4.30 மணிக்குச் சேர்ந்தார். தலித் மாணவர்கள் தன் வயிற்றுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதால் தனக்கு முன்பே இருந்த குடல்முளை அழற்சி (appendicitis) நோய் மிகவும் மோசமாகிவிட்டது என்று கூறி அறுவை மருத்துவம் செய்து கொண்டார்.
அர்ச்சனா மருத்துவமனை அளித்த அறிக்கையில் சுசில்குமாருக்கு, தோள்பகுதியில் சிறிய அளவில் சிராய்ப்பு இருந்தது என்றும், வயிற்றுப் பகுதியில் தாக்கப்பட்டதற்கான காயம் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. மேலும் அர்ச்சனா மருத்துவமனையில் சுசில்குமாரைப் பார்த்த பல்கலைக்கழகத் தின் மருத்துவர் அனுபமாவும் இதே கருத்தைக் கூறினார்.
பல்லைகக்கழத்தின் மாணவர்கள் குறித்த ஓழுங்கு நடவடிக்கைக்குழு ஏ.பி.வி.பி. மாணவர்களையும், அம்பேத்கர் சங்க மாணவர்களையும் அழைத்து அவர்களிடையேயான மோதல் குறித்து விசாரித்தது. இனி இதுபோல் நிகழக்கூடாது என இருதரப்பினரையும் எச்சரித்தது.
ஆனால் சுசில்குமார் தில்லி சென்று மோடி அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயாவைச் சந்தித்தார். ஏ.பி.வி.பி. மாணவர்களைத் தலித் மாணவர்கள் தாக்குவ தாகவும் இந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அமைச்சரிடம் கூறினார்.
உடனே அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயோ, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு இதுகுறித்து மடல் எழுதினார். அம்மடலில் அய்தராபாத் பல்கலைக்கழத்தில் தலித் மாணவர்கள் சாதிவெறி-தேசவிரோத-தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்; அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பண்டாரு தத்தாத்ரேயா பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 1980 முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள், கல்வியிலும் செல்வத்திலும் அரசியலிலும் முன்னேற்றம் பெற்ற பிரிவினர் இந்துத்துவத்தை விரும்பி ஆரத்தழுவிக்கொள்ளும் போக்கைப் பார்க்கிறோம். தத்தாத்ரேயாவும் இந்த வகையினர்தான்.
நரேந்திரமோடி ‘வாணியர்’ என்ற பிற்பட்ட வகுப்பில் பிறந்தவர் என்பதால் அவரைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பேராளர் என்று சொல்லமுடியுமா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் களாக வரத்தகுதிபடைத்த மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களைவிடத் தீவிரமான இந்துத்துவப் பாசிஸ்ட்தானே, மோடி!
ஸ்மிருதி இரானியை அமைச்சராகக் கொண்டுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை, பண்டாரு தத்தாத்ரேயாவின் மடலை 2015 ஆகத்து மாதமே அய்தராபாத் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியது.
இதற்கிடையில், சுசில்குமாரின் தாய், 2015 அக்டோபர் மாதம் அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில், தன் மகனைத் தாக்கியவர்களைத் தண்டிக்கக் கோரி வழக்குத் தொடுத்தார். சுசில்குமாரின் தாய் எப்படிப்பட்ட வீராங்கனை தெரியுமா? 2014ஆம் ஆண்டு “அன்பின் வெளிப்பாடே முத்தமிடல்” என்ற கருத்தைக் கொண்டு மாணவர்கள் அய்தராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் அதற்கான குறியீடாக முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது, சுசில்குமாரின் தாய் ஏ.பி.வி.பி.யினரையும் பாரதிய சனதாக யுவமோர்ச்சா அமைப்பினரையும் திரட்டிக்கொண்டு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அதிரடியாக நுழைந்து அம்மாணவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வர். இப்போது அய்தராபாத் மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பா.ச.க. வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார்.
சுசில்குமாரின் தாய் தொடுத்த வழக்கின் மீது காவல்துறை விசாரித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. தெலுங்கானா காவல்துறையின் தலைவர் எம்.கே.சிங் உயர்நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையில், “சுசில்குமார் குடல் முளை அழற்சி நோய்க் காக அறுவை செய்து கொண்டார்.
அவர் அறுவை செய்து கொண்டதற்கும் 2015 ஆகத்து 4 அன்று நடந்த மாணவர் தகராறுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அத்தகராறில் சுசில்குமாருக்கு ஏற்பட்ட காயம் என்பது மிகவும் சாதாரண மானது என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை ரோகித்தின் கொடிய இறப்புக்கு எதிராகப் போராடிவரும் மாணவர் கூட்டியக்கம் 26-1-16 அன்று வெளியிட்டது.
இந்நிலையில் 2015 செப்டம்பர் மாதம் அப்பாராவ் அய்தராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். இவர் கம்மாநாயுடு சாதியினர். தெலுங்குதேசம் கட்சியுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பவர். இருபது ஆண்டு களாக அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பணிசெய்து வருபவர்.
மேல்சாதித் திமிர் பிடித்தவர். அப்பாராவ் 2001 முதல் 2014 வரை மாணவர் விடுதியின் தலைமைக் காப்பாளராக இருந்தார். 2012ஆம் ஆண்டு பத்து தலித் மாணவர்கள் பத்துப் பேரை விடுதியிலிருந்து வெளியேற்றிய கொடிய சாதி நஞ்சு கொண்டவர். தனக்கு முன் இருந்த 35 பேரை ஓரங்கட்டி விட்டு, தனக்குள்ள அரசியல் செல்வாக்கின் காரணமாகத் துணைவேந்தர் பதவியைக் கைப்பற்றினர்.
இதற்கிடையில் 2015 திசம்பர் மாதத்திற்குள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ‘தலித் மாணவர்கள் மீது எடுக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்ன?’ எனக்கேட்டு நான்கு நினைவூட்டு மடல்களை அனுப்பியது. துணைவேந்தர் அப்பா ராவின் ஆணையின் பேரில், மூத்த பேராசிரியர் ஸ்ரீவத்சவா தலைமையில் கூடிய துணைக்குழு, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோகித் வெமுலா, பிரசாந்த், விசயகுமார், சேஷய்யா, சங்கண்ணா ஆகிய அய்ந்து முனைவர்பட்ட ஆய்வு மாணவர் களை விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது.
இந்த ஆணை 2015 திசம்பர் 16 அன்று அய்வரிடமும் தரப்பட்டது. விடுதியைவிட்டு உடனே வெளியேற வேண்டும்; அம்மாணவர்களின் ஆய்வுக்குரிய துறைகளில் மட்டும் நுழையலாம்; கல்வியைத் தொடரலாம்; ஆனால் நிர்வாக அலுவலம், உணவுக்கூடம், பிறபொது இடங்களில் அவர்கள் நுழையக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. அம்மாணவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திட வாய்ப்புத் தரப்படவில்லை.
தீண்டாமையின் பெயரால் 1500 ஆண்டுகளுக்கு மேலாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில், குடிநீர் நிலைகள், சத்திரம், சாவடி போன்ற பொது இடங்களில் நுழைவதற்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தினர். அதே வடிவிலான தீண்டா மையை அய்தராபாத் பல்கலைக்கழகம் கடைப்பிடித்திருக் கிறது. இது பல்கலைக்கழகமா? பார்ப்பன அக்ரகாரமா?
2015 திசம்பர் 18 அன்று ரோகித் வெமுலா துணைவேந் தருக்குத் தன் கைப்பட ஒரு மடல் எழுதினார். அது மிகவும் சுருக்கமான மடல். அதில், “தலித் சிக்கலுக்கான தீர்வு:
1. தலித் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும்போது 10 மில்லிகிராம் சோடியம் அசைடைக் (நஞ்சு) கொடுத்து, அவர் களுக்கு அம்பேத்கரைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்போது இதைப் (நஞ்சை) பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள்.
2. உங்கள் கூட்டாளியான தலைமை விடுதிக் காப்பாளரிடம் சொல்லி, தலித் மாணவர்கள் அறைகளுக்கு ஒரு தூக்குக் கயிறு கொடுக்கச் சொல்லுங்கள்” என ரோகித் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றபின் 1920இல் இந்தியாவுக்குத் திரும்பிய அம்பேத்கர், கல்வி கற்க உதவி செய்த பரோடா மன்னரிடம் உயர் பதவியில் பணியில் சேர்ந்தார். அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் எவரும் வீடு தர மறுத்துவிட்டனர்.
தன் சாதி அடையாளத்தை மறைத்து ஒரு பார்சி விடுதியில் தங்கினார். ஆனால் விரைவில் அம்பேத்கர் “தீண்டாதவர்” என்று தெரியவந்ததும் அந்த விடுதி உரிமையாளர் அம்பேத்கரைப் பெட்டிப் படுக்கையுடன் உடனே விரட்டிவிட்டார். எங்கே செல்வது என்று தெரியாமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
சுதந்தரம் பெற்று 69 ஆண்டுகளுக் குப் பிறகும், தரம்வாய்ந்த உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் அம்பேத்கருக்கு 1920 இல் ஏற்பட்ட அதே கொடிய கையறு அவலநிலை அய்தராபாத்தில் அய்ந்து தலித் ஆய்வு மாண வர்களுக்கும் ஏற்பட்டது.
இவர்கள் செய்த தவறு என்ன? தங்கள் உரிமைக்காகப் பேராடினார்கள்; இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக அம்பேத் கரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். மற்ற ஒடுக்கப்பட்ட பிரிவினருக் காகவும் போராடினர். காஷ்மீரிகள், வடகிழக்கு மாநிலமக்கள், திபெத்தியர்கள், திருநங்கைகள் ஆகியோருக்காகவும் குரல் கொடுத்தனர்.
2015 திசம்பர் 18 அன்று ரோகித் தன் முக நூலில், “மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும் போதெல்லாம் வஞ்சகமான வழிமுறைகள் மூலமே ஒடுக்கப் படுகின்றனர். இந்தியா முழுவதும் இப்படித்தான் நடக்கிறது” என்று பதிவு செய்திருந்தார். எனவேதான் இவர்களுக்கு 2015 சூலை முதல் மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 வழங்கப்படவேண்டிய கல்வித் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டது.
தவறு எதுவும் செய்யாத நிலையில், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் பெறும் நோக்கத்தில், இந்த அய்ந்து தலித் மாணவர்களும் 2016 சனவரி 3 ஆம் நாள்முதல் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிய கூடாரம் அமைத்துத் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அக்கூடாரத்தில் புலே, சாவித்திரிபாய், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் படங்களை வைத்திருந்தனர்.
கடுங்குளிரில் இரவில் அங்கேயே படுத்துக் கிடந்தனர். தொடர் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தினர். ரோகித் தற்கொலை செய்து கொண்ட சனவரி 17ஆம் நாள் வரை பல்கலைக்கழக நிர் வாகத்தின் தரப்பிலிருந்து எவரும் இம்மாணவர்களைச் சந்திக்க வில்லை. ரோகித் வெமுலா தன்னுடன் வெளியேற்றப்பட்ட பிரசாந்திடம் சொன்னார்: நாம் நாய்களைப்போல் கிடக்கிறோமே; எந்தத் துறையிலிருந்தும் ஒருவரும் வந்து நம்மைப் பார்க்கவிலையே”! என்று.
ஊடகங்களும் இந்த அய்ந்து தலித் மாணவர்களின் கொடிய நிலையை வெகுமக்களிடம் கொண்டு செல்லவில்லை. மாநில அரசும், அரசியல் கட்சிகளும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. மென்மையான கவிதை உணர்வு கொண்ட ரோகித் தங்களுடைய கொடிய அவலநிலையை-தீண்டாமைக் கொடுமையை அனைவர்க்கும் உணர்த்திட ஒரே வழி-தன் உயிரை மாய்த்துக் கொள்வது மட்டுமே என்று நினைத்தார் போலும்!
ரோகித் வெமுலா 17.1.2016 இரவு மாணவர் விடுதியில் தன் மூத்த நண்பர் அறையில் தற்கொலை செய்து கொண்டார். உடனே இது அரசியலிலும், ஊடகங்களிலும் பரபரப் பாகப் பேசப்படும் முதன்மைச் செய்தியானது.
ரோகித்தின் கொடிய சாவுக்குக் காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ரோகித்தின் சாவுக்குக் குழிதோண்டிய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோருக்கு எதிராக, அய்தராபாத் பல்கலைக்காக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களைச் சந்திக்க அரசியல் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் படையெடுத்தனர். பெரிய பெரிய படங்களுடன் நாளேடுகளில் செய்திகளும், நீண்ட கட்டுரை களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் சில நாள்களில் இதெல்லாம் அடங்கிவிடும் என்பது ஆளும்வர்க்கத்துக்கு நன்றாகத் தெரியும். 2008 ஆம் ஆண்டில் இதே அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த தலித் மாணவர் செந்தில், சாதி காரணமான புறக்கணிப்பு-பாகுபாடு காட்டுதல் ஆகிய வற்றால் மனம் உடைந்து நஞ்சுண்டு மாண்டார்.
இச்செய்தி ஊடகங்களுக்குச் சில நாள்களுக்குச் சிறுதீனிபோல் மட்டுமே அமைந்து அடங்கிவிட்டது. ரோகித் வெமுலாவின் இறப்புக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது போல் தோன்றலாம். அதனாலேயே இனி தலித் மாணவர் தற்கொலை நடக்காது என்று கூறிவிட முடியுமா? பார்ப்பன மேல்சாதி ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் நீடிக்கும் வரை, இதுபோன்ற சாவுகள் தொடரும்.
எதிர்ப்பின் வீச்சைத் தணிப்பதற்காக ரோகித்துடன் விடுதியிலிருந்து நீக்கப்பட்ட மற்ற நான்கு தலித் மாணவர்கள் மீதான தடை ஆணையைத் திரும்பப் பெற்றுள்ளது பல் கலைக்கழகம். துணைவேந்தர் அப்பாராவ் மீதும், நடுவண் அரசின் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மீதும் காவல்துறை ரோகித் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது. நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ரோகித் வெமுலாவின் தற்கொலை மடலில் தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று தெளிவாக எழுதியிருக்கிறார்.
இந்தச் சாவுக்குச் சாதி காரணமல்ல” என்று விளக்கமளித் துள்ளார். ஆனால் ரோகித் எழுதிய மடலை முழுமையாகப் படிக்கும் எவரும், சாவுப்படுகுழியில் அவரைத் தள்ளியது எது? யார்? என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்! யார் யார் காரணம் என்று ரோகித் பெயர்களைக் குறிப்பிடாத தற்குக் காரணம் அவருடைய சான்றாண்மையா? அல்லது தன் தோழர்களும், தன் குடும்பமும் மேலும் துன்பங்களுக்கு இலக்காகி விடக்கூடாதே என்ற எண்ணமா?
மேலும், ஸ்மிருதி இரானி அப்பட்டமான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். “உயர்பொறுப்பில் உள்ள யார் புகார் தெரிவித்தாலும் அதை உரிய நிறுவனதுக்கு அனுப்புவது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை. பண்டாரு தத்தாத்ரேயா 2015 ஆகத்து மாதம் எழுதிய மடலை உடனே அய்தராபாத் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினேன். அதன்மீது நான்கு நினைவூட்டுகள் அனுப்பப்பட்டன.
அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் அனுமந்த ராவ், அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் நிகழும் தற்கொலை கள் குறித்து 2014 அக்டோபரில் எழுதிய கடிகத்தையும் அய்தராபாத் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினேன். இதன் மீது ஆறு நினைவூட்டுகள் அனுப்பட்டுள்ளன. எனவே பண்டாரு தத்தாத்ரேயா மீதோ, என் மீதோ குற்றம் சாற்றுவது சரியல்ல” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
அனுமந்தராவ் அனுப்பிய மடல்மீது பல்கலைக்ககழம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தத்தாத்ரேயாவின் மடல் மீது மட்டும் முறையான விசாரணை நடத்தாமல் அய்ந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்தது ஏன்? மேலும் தத்தாத்ரேயா, ஏ.பி.வி.பி. மாணவர் தலைவர் சுசில்குமார் கூறியதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தலித் மாணவர்கள் சாதிவெறியர்கள், தேசத் துரோகிகள், தீவிரவாதிகள் என்று தன் மடலில் முத்திரை குத்தியது ஏன்? எப்படி? அதை அப்படியே ஸ்மிருதி இரானி அனுப்பியது ஏன்? இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்கிற இந்துத்துவப் பாசிசப் போக்கே இதற்குக் காரணம்.
துணைவேந்தர் அப்பாராவ் இதில் அப்பட்டமான குற்ற வாளி. அய்தராபாத் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அமைதியாக முடித்துவைக்கப்பட்டு விட்ட பிரச்சனைமீது முறையான விசாரணை நடத்தவில்லை.
உயர்நீதிமன்றத்தில் காவல்துறையின் உயர்அதிகாரி, ‘சுசில்குமார் தாக்கப்படவில்லை; அவர் அறுவை செய்து கொண்டதற்கும் சுசில்குமார்-ரோகித் மோதல் தகராறுக்கும் தொடர்பில்லை’ என்று எழுத்துவடிவில் அளித்த அறிக்கையை யும் புறக்கணித்துவிட்டு, தாத்தாத்ரேயா ஸ்மிருதி இரானி என்கிற அமைச்சர்கள் அளித்த அழுத்தத்தின் பேரில், அய்ந்து தலித் மாணவர்களை விடுதியிலிருந்து விரட்டினர்.
14 நாள்கள் நடத்திய மாணவர்களின் போராட்டதைச் சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லை. எனவே ரோகித் சாவுக்கு முதன்மையான குற்றவாளி துணைவேந்தர் அப்பாராவ் தான். இதற்குத் துணைபோனவர்கள் தத்தாத்ரேயும், ஸ்மிருதி இரானியும் என்பதே உண்மையாகும்.
நடுவண் அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் தான் தலித் மாணவர்களின் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் அய்தராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் மட்டும் 10 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்திய அளவில் கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த 25 தற்கொலை களில் 23 பேர் தலித்துகளாக இருப்பது ஏன்?
மத்தியப் பல்கலைக்கழகங்களான இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIT), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), தில்லியில் உள்ள இந்திய மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலான மத்தியப் பல்கலைக் கழகங்களில் முற்றிலும் பார்ப்பன மாணவர்களே படிக்கும் நிலை நீண்டகாலமாக இருந்துவந்தது.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பட்டியல்குல, பழங்குடி இன மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மாணவர்களும் இடஒதுக்கீட்டின் வாயிலாகவும், பொதுப்பிரிவு நிலையிலும் இடம் பெறுகின்றனர். காலங்காலமாகக் கல்வியைத் தங்களின் முற்றுரிமை யாகப் பெற்றிருந்த பார்ப்பனர்களால் இதைச் செரித்துக் கொள்ள முடியவில்லை.
மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆதிக்க நிலையை இழந்து விட்டநிலையில், உயர்மதிப்பு வாய்ந்த மத்தியப் பல்கலைக் காகங்களிலேனும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கின்றனர்.
எனவே ஊரகப்பகுதியிலிருந்தும், சிறுநகரப் பகுதிகளி லிருந்தும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடம் பிடிக்கும் பட்டியல்குல-பழங்குடி-பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் புறக்கணித்தல், இழிவாக நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெரும் எண்ணிக்கையில் உள்ள மேல்சாதி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் பல தொல்லைகளை உண் டாக்குகின்றனர். தாய்மொழி வழியில் படித்த மாணவர்களும் இந்த அவலநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இக்கருத் தைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நடுவண் அரசால் அமைக் கப்பட்ட சுகதேவ் தோரட் குழுவின் அறிக்கையும், பிற ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.
கல்வி நிறுவனங்களில் ‘ராகிங்’ (ragging) கொடுமையைச் சட்டத்தின் மூலம் ஒழித்ததுபோல், பல்கலைக்கழகங்களிலும் சாதியப் பாகுபாடு காட்டும் செயல்களுக்கு இன்னின்ன மாதிரி தண்டனை என்று சட்டம் செய்யவேண்டும்.
தொடக்கப்பள்ளி முதலே சாதி உணர்ச்சிக்கு எதிராகவும், மனித உரிமைகள், மனித விழுமியங்கள் சுதந்தரம், சமத்துவம், சகோரத்துவம், முதலான கருத்துகளுக்கு உரம் சேர்த்திடவும் ‘இவற்றைப்’ பாடமாகக் கற்பிக்கப்படவேண்டும். தற்போது இந்தநிலை இந்தியாவில் இல்லை. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல மேலைநாடுகளில் குடிமைக் கல்வி என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
சிறுபான்மையினர், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் எந்தவொரு மதக்கல்விக்கும், மதப் பண்டிக்கைக்கும், சடங்குக்கும் இடம் இல்லை என்றநிலை உருவாக்கப்படவேண்டும். இன்றுள்ள பா.ச.க. அரசு கல்வியில் இந்துத்துவக் கருத்துகளைப் புகுத்த முயல்வதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் பின்தங்கிய சமூக, பொருளாதார வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மற்ற மாணவர்களுடன் சமமாகப் பழகும் சூழலை உருவாக்கவேண்டும். தலித் மாணவர்களுக்கு மன ஊக்கமும், தங்கள் குறைகளைப் பயப்படாமல் எடுத்துரைக்கவும் அவற் றைப் போக்குவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
“தீண்டப்படாத மக்களுக்கு எதிராகப் பாகுபாடுகாட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒருமனப் போக்காக இருக்கின்ற தீண்டாமையானது கற்பனைக்கு எட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களிலோ கிராமங்களிலோ மறைந்து போகாது என்றுநான் உறுதியாகக் கருதுகிறேன்” என்று மேதை அம்பேத்கர் 1945இல் எழுதினார்.
70 ஆண்டுகளுக்குப் பின்னும் அதேநிலை நீடிக்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டியதல்லவா? இதற்குத் தீர்வாக அம்பேத்கரே வழிகாட்டியுள்ளபடி, தீண்டாமையை-சாதி அமைப்பை, பொருளாதார ஏற்றத்தாழ்வை இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல் இவற்றைக் கட்டிக்காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பேராலான போலியான சனநாயகக் கட்டமைப்பை அடியோடு தூக்கி எறிவதே ஒரே தீர்வாகும்.