ஜெ.என்.யூ. போராட்டத்தில் எமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி! நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு எது சரி-தவறு என தீர்மானிப்பவர்களுக்கும் நன்றி! காவல் துறைக்கும், சில ஊடகங்களுக்கும் நன்றி!

kanhaiya kumarஎவர் மீதும் எனக்கு வெறுப்பில்லை! குறிப்பாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மீது; காரணம்: வெளியில் இருக்கும் அ.பா.வி.பரிஷத்தை விட வளாகத்தில் இருக்கும் அ.பா.வி.ப. பகுத்தறிவானது!

அ.பா.வி.பரிஷத்தின் மீது பழி வாங்கும் போக்கை மேற் கொள்ளோம்! அ.பா.வி.ப.-ன் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியுமில்லை; ஏனெனில், நாங்கள் சனநாயகத்திலும், அரசியலமைப்பிலும் உண்மையாகவே நம்பிக்கையுடையவர்கள். அ.பா.வி.பரிஷத்தை நாங்கள் “எதிரியாகப்” பார்க்கவில்லை; மாறாக, அதை ஒரு எதிர்க் கட்சியைப் போலவே கருதுகிறோம்.

மிகவும் சிறப்புக்குரியது என்னவெனில், ஜெ.என்.யூ. ஒரே குரலாக இயல்பான அறச் சீற்றத்தோடு பொங்கி எழுந்தமைதான்! ஆனால்,மற்றவர்களோ எம் கதை முடிக்க இரகசிய திட்டம் தீட்டி செயல்பட்டவர்கள்! 

அரசியலமைப்பு சட்டத்தின் - ஒப்புரவியம், சமயச் சார்பின்மை, சமத்துவம் - இவைதான் எங்கள் தாரக மந்திரம்!

     நீதி மன்றத்தில் வழக்குள்ளதால் அது பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.

பிரதமர் மோடியோடு பல்வேறு கருத்து வேறுபாடுடையவன் நான்; ஆனால், அவரது டுவிட்டர் பதிவான “வாய்மையே வெல்லும்” எனும் அறக் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடுண்டு! ஆம்! இறுதியில் வாய்மையே வெல்லும்!

தொடர் வண்டி நிலையங்களில் செப்படி வித்தைகள் செய்யும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருப்பீர்கள்; அவர்களைப் போன்ற சிலர் நம் நாட்டிலும் உண்டு! கறுப்புப் பணம் நம் நாட்டுக்குத் திரும்பவரும்; பண வீக்கம் குறையும்; சமத்துவம் வரும் என பகட்டாக முழங்குவர்!

இந்தியர்களாகிய நாம் எதையும் எளிதில் மறக்கின்றவர்கள்! ஆனால், இம்முறை அவர்கள் செய்தது மாபெரும் கேலிக் கூத்து! அதை மறக்கவே இயலாது!


ஆனால், இவர்களுக்கு எதிராகப் பேசினால்? அவர்களின் தகவல் தொழில் நுட்பத்துறை “ஜோடனை காணொளிகளை” வெளியிடும்; உங்கள் குப்பைக் கூடைகளிலுள்ள ஆணுறைகளையும் அவர்கள் கர்ம சிரத்தையோடு கணக்கெடுப்பர்!


ரோகித் வெமுலாவுக்கு நீதி கோரி, “உதவித் தொகை எங்கள் உரிமை” எனும் முழக்கத்தோடு கூடிய பல்கலை கழக மான்ய குழுவுக்கு எதிரான எங்கள் போராட்டதை சட்ட விரோதமாக்கி தடுப்பதற்கு நடந்த திட்டமிட்ட தாக்குதல் இது! ஆனால் உங்களுக்குச் சொல்வேன்!

ஜெ.என்.யூவில் இடம் கிடைப்பதும் எளிதன்று! அதைப் போல் அங்கெழும் மாணவரின் குரலை அடக்குவதும் எளிதன்று.

“எல்லைகளில் நம் படைவீரர்கள் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கின்றனர்” என அவர்கள் கூறுகிறார்கள்; அம் மாவீரர்களுக்கு என் வீர வணக்கத்தை மனதார செலுத்துகிறேன்! படை வீரர்கள் எல்லைகளில் மாண்டு கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் உருகுகின்ற, சட்டமியற்றும் பாரதீய சனதாக்காரர்களைக் கேட்கிறேன்! எல்லைகளில் செத்து மடிகின்றவர்கள் என்ன உங்கள் மகனா? அன்றி சகோதரனா?வறட்சிக் கொடுமையால் நாளும் செத்துக் கொண்டிருக்கும் ஒரு ஏழை விவசாயின் மகனோ அல்லது அவரின் சகோதரனோ தானே அவர்கள்!

ஒரு போலியான விவாதத்தை இந் நாட்டில் உருவாக்காதீர்கள்! அவர்கள் சாவுக்கு யார் காரணம்?

எல்லோரும் எல்லா வளங்களும் பெறும் வரை நாங்கள் ஒய மாட்டோம்!

     நாம் இந்தியாவிலிருந்து விடுதலை கோரவில்லை; ஏனெனில், இந்தியா எவரையும் அடிமைப் படுத்தியதில்லை. எல்லையோரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் படை வீரர், ஒரு வேளை ஜெ,என்.யூ. வில் இடம் கிடைத்திருந்தால் அங்கு படிக்கலாம் என விரும்பியிருக்கலாம்! ஆனால் அங்கு இடம் கிடைத்திருக்காது!

ஒரு ரோகித்தை நீங்கள் முடிக்க நினைத்தீர்கள்; ஆனால்,பல்லாயிரம் ரோகித்துகளால் இப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருப்பதை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்!

நான் சிறையில் ஒன்றை உணர்ந்து கொண்டேன்; நாம் பண்பட்ட குரலில் பேசுகிறோம், ஆனால் “நுண்மாண் நுழை புலம்” மிக்க சொற்களைப் பயன் படுத்துகிறோம்! பாமர மக்களை இவை சென்றடைவதில்லை; நாம் சாதாரண மக்கள் மொழியில் பேசி அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! முன்னேற்றம், சமத்துவம் இவற்றை செயலாக்கம் செய்ய வேண்டும்!

இன்று நமது மாண்புமிகு பிரதமர், ஸ்டாலின் பற்றிப் பேசுகிறார்! நான் சொல்கிறேன், மோடி அவர்கள் ஹிட்லர் பற்றியும், முசோலினி பற்றியும் பேச வேண்டும்!

நமது நாட்டில் இன்று நடந்து கொண்டிருப்பது பேராபத்தை விளைவிக்கும்! இது ஒரு கட்சியையோ, ஒர் ஊடகத்தையோ பற்றியது மட்டுமல்ல!

எனது குடும்பம் மாதம் ரூபாய் 3000/ மட்டுமே ஈட்டுகிறது என்பதை எவரிடமும் சொன்னதில்லை! என் போன்றோர் வேறு எந்தக் கல்லூரியிலாவது முனைவர் படிப்பு படிக்க முடியும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? இதற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் அவர்கள் “தேச துரோகி” என்கிறார்கள்! அவர்களாகவே கற்பித்துக் கொள்ளும் இது எந்த வகையான தேச பக்தி?

உங்களுக்கு எதிராக 69 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளார்கள் என்பதை நமது அரசுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். 31 விழுக்காட்டினரே உங்களுக்கு வாக்களித்தவர்கள்; அவர்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் உங்கள் நாடகப் பேச்சில் மயங்கியவர்கள்!

உண்மையான பிரச்சனைகள் குறித்து மக்கள் அவர்களை கேள்வி கேட்காத வண்ணம், அவர்கள் மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப் பூர்வ ஊது குழல் “ஆர்கனைசர்” ஜெ.என்.யூ போராட்டம் குறித்து ஒரு முக்கிய கட்டுரை வெளியிட்டிருந்தது! ஓர் ஆரோக்கியமான விவாதம் நடத்தி அதில் ஜெ.என்.யூவை நான்கு மாதங்களுக்கு ஏன் பூட்ட வேண்டும் என்பதை அறிவுப் பூர்வமாக விளக்கினால், நான் அவர்களுடன் உடன்படுவேன்!

மாற்றுக் கருத்தை நசுக்க நினைக்கிறீர்கள்; அதை எந்நாளும் உங்களால் செய்ய முடியாது என்பதை உறுதியோடு சொல்கிறேன்!

எமக்கு விடுதலை இந்தியாவிலிருந்தல்ல! எமக்கு இந்தியாவுக்குள் விடுதலை வேண்டும்! பசியிலிருந்து விடுதலை! வறுமையிலிருந்து விடுதலை!
மனு ஸ்மிருதி சாதியத்திலிருந்து விடுதலை! எனும் முழக்கங்களை மீண்டும் ஒரு முறை எழுப்புவோம்!

தமிழாக்கம்: து.சேகர் அண்ணாத்துரை, வழக்குரைஞர், பி.யூ.சி.எல். கோவை மாவட்டச் செயலாளர்

Pin It