1980-களின் தொடக்கத்தில் கல்லூரிக் காலத்தில் கார்ல் மார்க்ஸின் மூலதனத்தை முதன்முதலாகப் படிக்க முடிவு செய்தபோது தமிழில் கிடைக்கவில்லை; இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. பாசனப் பொறியியல் வல்லுநர் மறைந்த முனைவர் பழ.கோமதிநாயகம் தந்த பிரதிகள், டாஸ் கேபிடலின் மூன்று வால்யூம்கள் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் படிக்க மிகக் கடினமாகத்தான் இருந்தது. விஷயங்கள் ஓரளவு புரிந்தாலும்கூட நிறைய சொற்கள் என்ன வென்றே புரியவில்லை (தமிழில் படித்தாலே புரியாத விஷயம், புரியாத காலம்!).எவ்வளவோ முயன்றும்கூட முழுவதுமாகப் படித்து முடிக்க முடியவில்லை. பின்னர் மூலதனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு வந்துவிட்டது. எனினும், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோவின் எழுத்துகளை, சார்ந்த கருத்துநிலைகளை, இடதுசாரி அரசியல் இலக்கியங்களைப் படிப்போருக்கு வழிகாட்டக் கூடியதாக, தெளிவு ஏற்படுத்தக் கூடியதாக சொற் பொருள் விளக்க நூல்கள் ஏதேனும் இருக்கக் கூடாதா? என்றோர் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது -இப்போது நிறைவேறியிருக்கிறது. தோழர் எஸ்.வி. ராஜதுரையின் ‘மார்க்ஸிய கலைச் சொற்கள் - மார்க்ஸ் எங்கெல்ஸ்’ என்ற நூலின்வழி.
வாழும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய ஆய்வறிஞரான 84 வயது தோழர் எஸ்.வி.ராஜதுரை, 90-க்கும் மேற்பட்ட நூல்களையும் தமிழாக்கங்களையும் படைத்திருக்கிறார். இவ்வளவு வயதிலும் கூட எதைப் பற்றிக் கேட்டாலும் காரண, காரியங் களுடன் விளக்கக் கூடியவராக இருக்கிறார்.
மிக நெடிய வாசிப்புக்குச் சொந்தக்காரரான எஸ்விஆருடைய படிப்பில் -உழைப்பில், இந்த நூலில், ஏற்கெனவே நாம் அறிந்த சொற்கள், சொற்றொடர்கள் பலவற்றுக்கும் பொருள் உரைப்பதுடன் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்தாக்கங்கள், அவர்களுடைய முக்கியமான நூல்கள் -பெரும்பாலும் தமிழில் அவ்வளவாக அறியப்படாதவை - அரசியல் நண்பர்கள், எதிரிகள் பற்றி மட்டுமின்றி தொடர்புடைய நிகழ்வுகள், அமைப்புகள் பற்றியெல்லாம் விரிவான விவரங்கள் தரப்படுகின்றன.
தமிழ் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ள மார்க்ஸ், எங்கெல்ஸின் மிக முக்கியமான சொற்களின், சொற்றொடர்களின் வரலாறு மட்டுமின்றி, அந்தச் சொற்களை (சொற்றொடர்களை) இருவரும் எங்கெங்கே, எந்தப் பொருளில் பயன்படுத்தியிருக் கிறார்கள் என்பதையும் சூழலையும் அவற்றின் விரிவான பொருளையும் குறிப்பிடுகிறார் எஸ்விஆர். சிலவற்றுக்கான விளக்கங்கள் தனிப்பெருங் கட்டுரையளவில் அமைந்திருக்கின்றன. மார்க்ஸிய அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்களைப் படித்து ஒவ்வொரு கருத்தாக்கத்துக்குமான விளக்கங்களை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
நூலின் தொடக்கத்திலேயே ஐரோப்பிய சோசலிச -கம்யூனிச இயக்கத்தின் வரலாறு என்ற தலைப்பில் நூலின் வாசிப்புக்கு முந்தைய வாசகருக்கான விரிவான தயாரிப்பைச் செய்து விடுகிறார்.
கலைச்சொற்களுக்குள் நுழையுமுன் மார்க்ஸியம் என்னும் சொல்லை மட்டும் அறிமுகப்படுத்துகிறார் எஸ்விஆர்: ‘தொடக்கத்தில் மார்க்ஸியம், மார்க்ஸிஸ்ட், மார்க்ஸியக் கொள்கை ஆகிய சொற்கள் மார்க்ஸுக்கும் மார்க்ஸின் ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர்களுடைய எதிர்ப்பாளர்களால்தான், குறிப்பாக, ஆட்சி மறுப்பியர்களால் பயன்படுத்தப்பட்டன. மார்க்ஸியம் என்ற சொல்லை முதலில் உருவாக்கியவர் யாரென்று தெரியவில்லை... 1880-களில்தான் ரஷியாவில் நேர்மறையான பொருளில் மார்க்ஸியம் பயன் படுத்தப்பட்டது... குறுங்குழுவாக மாற்றிவிடும் ஆபத்து இருப்பதால் மார்க்ஸும் எங்கெல்ஸுமே இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர்... தொழிலாளர்களின் இயக்கம், முதலாளியத்தை அடுத்து வரும் சமுதாயம் ஆகிய இரண்டையும் குறிக்க கம்யூனிசம் என்ற சொல்லை மார்க்ஸும் எங்கெல்ஸும் பயன்படுத்தினர்’.
நூலில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சொற்களின் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக விளக்குகிறார் எஸ்விஆர்.
அந்நியமாதல் பற்றிக் கூறும்போது, அந்நியமாதல் என்பது ஒரு திட்டவட்டமான வரலாற்றுரீதியாக உருவான முதலாளிய உற்பத்தி முறையில் தோன்றும் நிகழ்ச்சிப் போக்கு என்று மார்க்ஸ் கருதியதாகக் குறிப்பிட்டு, சமுதாயத்தில் அந்நியமாக்கப்பட்ட உழைப்புக்கும் தனிச்சொத்துக்குமுள்ள இறுக்கமான பிணைப்பின் காரணமாகத் தனிச்சொத்து ஒழித்துக் கட்டப்படும்போதுதான் அந்நியமாக்கப்பட்ட உழைப்பும் -அந்நியமாதலும் - ஒழியும் என்கிறார் எஸ்விஆர். (அந்நியமாதல் பற்றி மட்டுமே தனியொரு நூலை எழுதியிருக்கிறார்).
அவசிய உழைப்பும் உபரி உழைப்பும் பற்றி விவரிக்கும்போது, உழைப்புச் சக்தி, கூலி உழைப்பாளி போன்றவற்றுடன் மூலதனத்துக்கும் உழைப்புக்கு மிடையே உள்ள இந்தச் சரக்கு உறவில்தான் முதலாளியச் சுரண்டலின் ரகசியம் புதைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.
நூலில் சில/பல சொற்கள் பற்றிய விளக்கங்கள் ஒரு குறுநூலுக்குரிய அளவில் விரிந்து செல்கின்றன. அல்லது பெருங்கட்டுரைகளாகவும் மாறிவிடுகின்றன.
அறிவொளி மரபு பற்றிக் குறிப்பிடும்போது, அறிவொளியாளர்களை மட்டுமின்றி அறிவொளியின் மையக் கருத்துகளின் மூன்று முக்கிய கூறுகளையும் அறிமுகப்படுத்துவதுடன், அறிவொளிச் சிந்தனையில் உள்ள முரண்பாடுகளையும் விளக்குகிறார்.
இருபதாம், இருபத்தியொன்றாம் நூற்றாண்டு அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை வியக்கும் எஸ்விஆர், நடப்பு விஷயங்களுடனும் பொருத்திப் பார்த்து, இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீது தாக்குதல் தொடுப்பது என்ற பெயரால், அறிவொளி மரபைத் தூக்கிப் பிடிப்பவர்கள், ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோவதைப் பார்க்கிறோம். அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, இஸ்லாம், இஸ்லாமிய நாடுகள் முழுவதையுமே அறிவொளியின் பெயரால் எதிர்க்கின்றனர். பிரான்ஸில் ஹிஜாப் அணிவதைப் பகுத்தறிவு, பெண் விடுதலை என்ற பெயரால் எதிர்ப்பவர்கள், லூர்து நகரிலுள்ள கன்னி மேரி தேவாலயத்தை அகற்றவோ, அங்கே யாரும் செல்லக் கூடாதென்றோ கூறுவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
ஆசிய உற்பத்தி முறை பற்றி விளக்குவதற்குப் பெரும்பாலும் மார்க்ஸ் எழுதியவற்றிலிருந்தான மேற்கோள்களையே பயன்படுத்திக் கொள்கிறார்.
எங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை நூலின் அறிமுகத்தில், 24 வயதேயான எங்கெல்ஸ் மேற்கொண்ட 21 மாத கால ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய இந்த நூல் எவரொருவரையும் பிரமிக்க வைக்கும் என்று குறிப்பிடுகிறார்.
இடதுசாரிகள், வலதுசாரிகள் எங்கிருந்து வந்தார்கள்? 1792-ல் பிரான்ஸைக் குடியரசாக அறிவித்த தேசிய அவையின் இடது கோடியில் ஜேகோபின்கள் வீற்றிருந்தனர். இவர்களில் மிகவும் புரட்சிகரமானவர்கள், அவையில் மிக உயர்ந்த வரிசையில் அமர்ந்திருந்தனர்; மலைவாசிகள் என்றழைக்கப்பட்டனர். இவர்களுடன் கருத்து வேற்றுமை கொண்டவர்கள் வலப்பக்கம் அமர்ந் திருந்தனர். இங்கிருந்துதான் அரசியலில் முற்போக்கான, புரட்சிகரமானவர்கள் இடதுசாரிகள் என்றும், மிதவாத, பழைமைவாதக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தோர் வலதுசாரிகள் என்றும் அழைக்கப்படத் தொடங்கினர்.
இயங்கியல் பற்றி விவரிக்கும்போது, மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே எங்கெல்ஸால் எழுதப்பட்டு, மார்க்ஸால் முழுமையாகப் படிக்கப்பட்டதுடன், அவர் தாமாகவே எழுதிய ஒரு பகுதியையும் உள்ளடக்கியது டூரிங்குக்கு மறுப்பு. இந்த நூலில் சமுதாயம், இயற்கை, மனித சிந்தனை ஆகிய மூன்றிலும் இயங்கியல் விதிகள் செயல்படுவது பற்றிய எங்கெல்ஸின் விளக்கத்தைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் எஸ்விஆர்.
உழைப்புச் சக்தி, உழைப்புப் பிரிவினை: மனிதகுல வரலாற்றில் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது தவிர்க்க முடியாததும் அது உற்பத்திப் பெருக்கத்துக்கும் அதேவேளையில் மானுட வறுமைக்கும் காரணமாக உள்ளதுமாகும்... முதலாளிய உற்பத்தி முறையின் கீழ் உழைப்புச் சக்தியுமே ஒரு சரக்காக மாறியுள்ளது. அதை விற்கிற உழைப்பாளிகளின் தேவைகளுக்கும் விருப்பங் களுக்கும் உகந்த முறையில் நெறிப்படுத்தப்படாமல், மாறாக வாங்குவோரின் தேவைகளுக்கு ஏற்பவே பயன்படுத்தப்படுகின்றன. அதை வாங்குகிற முதலாளிகளின் நிரந்தரமான நலன், இந்தச் சரக்கை மேன்மேலும் மலிவானதொன்றாக்குவதும் அதன் மூலம் தம் மூலதனத்தின் மதிப்பை இடைவிடாது பெருக்குவதுமாகும்.
உற்பத்தி உறவுகளை விளக்கும்போது, நாகரிக சமுதாயத்தின் சாரமான அம்சமாக அமைவது சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி; அதாவது பரிவர்த்தனைக்காகச் செய்யப்படும் உற்பத்தி. பயன்பாட்டுக்காக மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டபோது, உபரி ஏதும் இருக்க வில்லை. உபரி உற்பத்தி இல்லாததால் ஒருவன் மற்றொருவன் உழைப்பில் வாழ்வது சாத்தியமற்றதாக இருந்தது. எனவே, சுரண்டலும் இல்லை, வர்க்க வேறுபாடுகளும் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
கம்யூனிசம் என்ற சொல், விக்டர் த ஹுபெ என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் எழுதி, 1777-ல் வெளிவந்த தத்துவரீதியான சமூகத்திற்கான திட்டம் என்ற நூலில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. மார்க்ஸும் எங்கெல்ஸும் பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் இருந்தபோது தங்களை கம்யூனிஸ்ட்கள் என்றும் அங்கிருந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் என்றும் அழைத்துள்ளனர்.
கம்யூனிசம் என்ற சொல் பொதுவாகத் தமிழில் பொதுவுடைமை என்றே பெரும்பாலானவர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது (ஜெர்மானிய எழுத்தாளர் பீனி அடம்ஸாக் எழுதிய ‘கம்யூனிசம் ஃபார் கிட்ஸ்’ என்ற நூலை மொழிபெயர்க்கும்போது, ‘பொது வுடைமை குழந்தைகளுக்காக’ என்றே நானும் பெயர்த்திருக்கிறேன்). தனியுடைமைக்கு எதிரானது என்பதால் பொதுவுடைமை என்று மனதில் படிந்து விட்டிருக்கலாம். ஆனால், common ownership என்பதைத்தான் பொது உடைமை (பக். 560) என்று நூலில் எஸ்விஆர் குறிப்பிடுகிறார்.
எனில், கம்யூனிசம் என்றால்... அவரிடமே கேட்டபோது, ‘கம்யூனிசம் என்றே கூறிவிடலாம். அல்லாமல் கூட்டு வாழ்க்கை, சமதர்ம தத்துவம் என்று வேண்டுமானால் கூறலாம். கம்யூன் வாழ்வில் தனியுடைமையும் கிடையாது, பொது உடைமையும் கிடையாது. எனவே, பொதுவுடைமை என்பது சரியான மொழிபெயர்ப்பாகாது. இதைப் போலவே Social Democracy என்பதும் காலங்காலமாக சமூக ஜனநாயகம் என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது சோசலிச ஜனநாயகம் என்றே பெயர்க்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிடுகிறார் எஸ்விஆர்(பக். 412).
இதேபோல குட்டி பூர்ஷ்வா என்ற சொல் வரும் இடங்களில் எந்தப் பொருளில், யார் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம் (பக். 319) என்று குறிப்பிடும் எஸ்விஆர், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுவதுடன் இன்றைய நிலைமையையும் ஒப்பிடுகிறார்.
பொது சுகாதாரம், நகரத்தை அழகுபடுத்துதல், சிங்கார நகரம் என்ற பெயர்களில் எங்கெல்ஸ் காலத்திலும் ஏழைகளும் தொழிலாளர்களும் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். குடியிருப்புப் பிரச்சினை பற்றி விளக்கும்போது இன்றைக்கும் என்றைக்கும் பொருந்திப்போகும் எங்கெல்ஸின் வரிகளை இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை நூலிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார்:
“அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவை. இந்த பிரமாண்டமான வெற்றியின் காரணமாக பூர்ஷ்வா வர்க்கம் செய்துகொள்ளும் படோடோபமான சுய புகழ்ச்சியுடன் இணைந்திருப்பது மானக்கேடான சந்துகளும் குறுகலான பாதைகளும் மறைந்தொழிவதுதான். ஆனால், அவை வேறோர் இடத்திலோ, அவை முன்பு இருந்த இடத்துக்கு மிக அருகிலோ மீண்டும் தோன்றுகின்றன. முதலாளியத்தால் குடியிருப்புப் பிரச்சினையையோ மோசமான வாழ்க்கை நிலைமைகளையோ ஒருபோதும் தீர்க்க முடியாது.”
சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய பண்டங்கள், சேவைகள் இரண்டுமே முதலாளிய பொருளாதார அமைப்பில் சரக்குகள்தான் என்று குறிப்பிட்டு, சேவைகள் என்ற சொல்லுக்கான பொருள் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கிறது.
நவீன பெருவீதத் தொழில் பற்றிக் கூற, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டறைத் தொழிலில் தொடங்கி விளக்கும் எஸ்விஆர், இங்கிலாந்து நாட்டுப் பாட்டாளி வர்க்கம் எந்தச் சூழ்நிலையில் தோன்றியதோ அந்தச் சூழ்நிலையின் கொடூரம் முழுவதும் மார்க்ஸின் மூலதனம் நூலில் சித்திரிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
தவிர, மிக முக்கியமாக, மார்க்ஸ் காலத்தைய தொழிற்சாலை உற்பத்தி முறையும் சுரண்டல் முறையும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தும் பெரும் மாற்றமடைந்துள்ளன. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு இருந்த உரிமைகள் கூட இப்போது இல்லை என்பதுடன் உற்பத்தி முறையிலும் சுரண்டல் முறையிலும் புதிய வகைகள் உருவாகியுள்ளன. இவற்றுக்கு நவீன தொழில்நுட்பங் களும் கணினித் தொழில்நுட்பமும் செய்யறிவும் (செயற்கை நுண்ணறிவு) பயன்படுகின்றன. இவற்றின் காரணமாக உலகத் தொழிலாளி வர்க்கம் சிதறுண்டு கிடக்கிறது. இவை தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று அழைப்பு விடுக்கிறார் எஸ்விஆர்.
இன்றைய அதிநவீன தொழில்நுட்பச் சூழலில், செய்யறிவு முன்னேறி வரும் வேகத்தில், மிக விரைவில், உலகின் எண்ணற்ற வேலைகளை, பணியிடங்களை செய்யறிவு எந்திரங்கள் கபளீகரம் செய்யும் ஆபத்தான நிலைமை ஏற்படவிருக்கிறது; செய்யறிவின்காரணமாக ‘அழுக்குப்படா தொழில்களில்’ மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படப் போகிறது என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எல்லைகள் எல்லாவற்றையும் தாண்டி உலகம் முழுவதுமுள்ள மக்களைப் பற்றி அக்கறை கொள்ளும் கம்யூனிஸ்ட்கள் முன்னுள்ள பெரும் சவால் இது.
பண்டைக்கால சமுதாயம் பற்றிய விளக்கத்தின் போது, மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் நாகரிகங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுத வேண்டியது இந்திய மார்க்ஸியர்களின் கடமை என்றும் குறிப்பிடுகிறார் எஸ்விஆர்.
மதத்தைப் பற்றிய விளக்கத்தில் மார்க்ஸின் ஏராளமான மேற்கோள்களைத் தருகிறார் எஸ்விஆர்: “சமயம், வர்க்கப் போராட்டத்துடன் பிரிக்க முடியாத படி இணைந்துள்ளது. சமயங்களின் வரலாற்றில் காணப்படும் பெரும் போராட்டங்கள் பலவும் வர்க்கப் போராட்டங்களின் வடிவங்கள்தான்.”
மார்க்ஸ் எழுதியவற்றில் ‘வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்’, ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’ என்ற சொற்கள் எங்கும் இடம் பெறுவதில்லை. ஆனால், அவருடைய கருத்துகளை விளக்குவதற்காக, 1859-இல் வெளிவந்த மார்க்ஸின் அரசியல் பொருளாதார விமர்சனப் பகுப்பாய்வுக்கு ஒரு பங்களிப்பு என்ற நூலுக்கு எழுதிய மதிப்புரையில் தான் ‘வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்’ என்ற தொடரை எங்கெல்ஸ் பயன்படுத்தினார் என்பது போன்ற பல அரிய தகவல்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
வரலாற்று வளர்ச்சியைப் பற்றி, தான் கூறிய கருத்துகளை எல்லா இடங்களுக்கும் யாந்திரிகமாகப் பொருத்திக் காட்டக் கூடாது என்று மார்க்ஸுமே பல இடங்களில் எச்சரித்துள்ளார். தமது படைப்புகளில், உலகமனைத்துக்கும் பொருந்தக்கூடியதுஎன்றுசோசலிச சமுதாய முன்மாதிரி எதையும் ஆலோசனையாகக் கூறக் கூடிய விதிமுறைகளைச் சொல்வதைத் தவிர்த்தார் மார்க்ஸ். வருங்கால உணவகங்களுக்கு சமையல் குறிப்புகள் எழுதி வைப்பது தமது அக்கறைகளிலொன்றல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார் மார்க்ஸ்.
நூல் முழுவதுமே ஏராளமான மேற்கோள்கள், தகவல்கள், ஒப்பிடல்கள் -அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிமுறைகள் பற்றி மார்க்ஸிடம் ஒன்றுக்கும் மேலான கருத்துகள் இருந்தன என்பன போன்று. இப்போதும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தபோதிலும் எங்கெல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு நூலுக்கான கே.ராமனாதனின் தமிழாக்கத்தைத் திருத்தி செழுமைப்படுத்தி, தேவையான விளக்கங் களுக்கான அடிக்குறிப்புகளுடன் வெளியிடுவது மார்க்ஸியத்தின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ள உதவும் என்று நூலில் கேட்டுக் கொண்டு உள்ளார் எஸ்விஆர்.
தமிழில் முதல் முயற்சியாக வெளிவந்துள்ள இந்த நூல், மார்க்ஸியக் கலைச் சொற்கள் அகராதிக்கும் மார்க்ஸியக் கலைக்களஞ்சியத்துக்கும் இடைப்பட்ட வடிவத்தில் உருப்பெற்றிருக்கிறது. மார்க்ஸியத்தைப் புதிதாகக் கற்போருக்கும் ஓரளவு கற்றவர்களுக்கும் கூட உதவக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது ‘மார்க்ஸிய கலைச்சொற்கள்.’
இந்த நூல் மார்க்ஸிய கலைக்களஞ்சியப் பணியில் ஒரு தொடக்கமாக அமைந்து பின்னாளில் என்னைவிட அதிகப் படிப்பும் புரிந்துணர்வாற்றலும் உள்ளவர்கள் சிறப்பான ஆக்கங்களைத் தருவார்கள் என நம்புவதாகத் தெரிவிக்கிறார் எஸ்.வி.ஆர்; உண்மைதான்.
உள்ளபடியே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எனத் தொடங்கி எண்ணற்ற அறிஞர்களைக் கற்பதற்கு உதவியாகத் தமிழில் அவசியம் அருஞ்சொல் பொருள் - ஒரு சொல்லுக்கு ஒரு பாரா அல்லது ஒரு பத்தியளவில் சுருக்கமாக -அகராதியொன்றின் தேவை இன்னமும்கூட இருக்கிறது. இதற்கான பணியையும் இப்போதே தோழர் எஸ்.வி.ஆர். முன்னெடுக்க வேண்டும்; தமிழுக்கு அணி சேர்க்கும் இந்தப் பெரும் பணியில் சின்னச் சின்ன வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு, இடதுசாரி எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் அனைவரும் இணைந்து கொள்ளவும் வேண்டும்.
மார்க்ஸியக் கலைச்சொற்கள்
மார்க்ஸ் எங்கெல்ஸ்
ஆசிரியர் : எஸ்.வி.ராஜதுரை வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -600 050 ரூ.1000/
- எம்.பாண்டியராஜன்