"தொழிலாளி வர்க்கமோ விவசாயி வர்க்கமோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் வெகுமக்கள் மீது, குறிப்பாக மாற்றுக்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் மீது, செல்வாக்கு செலுத்தக்கூடிய புதிய உத்திகளை கம்யூனிஸ்டுகள் கண்டறிந்தாக வேண்டும்" என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோபாட் காந்தி எழுதிய நூல்தான் 'அனைத்துலக அளவிலும் இந்திய அளவிலும் இடதுசாரிகள் முன் இருக்கும் சவால்கள்' என்ற இப்புத்தகம்.

உலகம் முழுவதும், கொரோனா பெருந்தொற்று, பொருளாதார பெருமந்தம், வேலையிழப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகளால் பெரும்பாலான உழைக்கும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நெருக்கடி காலகட்டங்களை பயன்படுத்தி முதலாளித்துவம் தன்னை மறுகட்டமைத்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பல்வேறு ஆதார தகவல்களுடன் இந்நூலில் கோபாட் காந்தி விவரிக்கிறார்.

gopat gandhi bookஉலகம் முழுவதும் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள்தான் இவ்வுலகை ஆள்கிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு அவர்களையே ஆட்டிப் படைக்கும் மிகப்பெரிய முதலாளித்துவ அமைப்புகள் தோன்றியுள்ளன. இத்தகைய மிக பிரம்மாண்டமான கட்டமைப்புகள் 2008-ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உருவானவை. ரகசிய ஆதிக்கக் குழு எனும் இக்கட்டமைப்பின் மையம், பெரும் சொத்து நிர்வாகக் குழுக்களில் முதலீடு செய்துள்ளவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும். இந்தக் குழுக்கள்தான் உலகம் முழுவதையும் ஆக்டோபஸ் போன்ற பிடிப்பைக் கொண்டுள்ள அறக்கட்டளை நிறுவனங்கள், இதர அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பெரும்பாலான ராட்சச கார்ப்பரேட் நிறுவனங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்தக் குழுக்கள்தான் மிக முக்கியமான பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ்தான் பெரும்பான்மையான பில்லியனர்கள் இருக்கின்றனர்.

முதலாளித்துவ நெருக்கடி முன் எப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் இந்நிலையில் உலக முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முழுவதையும் முன் எப்போதும் இல்லாத வகையில் மறு கட்டமைப்பு செய்வதற்காகத்தான் பொருளாதார மீட்பு பெருந்திட்டம் என்ற திட்டத்தை ரகசிய ஆதிக்கக் குழுவினர் செயல்படுத்த முனைகின்றனர். இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போதே தொடங்கப்பட்டது. இத்திட்டம் அண்மையில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது என்பதை பல்வேறு தகவல்களுடன் இந்நூலில் விவரிக்கிறார் கோபாட் காந்தி. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தை உலக அளவிலும் இந்திய அளவிலும் எதிர்கொள்ள கம்யூனிஸ்டுகள் தயாராக உள்ளார்களா? என்றால் மிகவும் பலவீனமான நிலையிலேயே கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக கோபாட் காந்தி தெரிவிக்கிறார்.

1980-களின் நடுப்பகுதியிலிருந்து இருந்து வரும் நவதாரளவாத கொள்கைகள் அவற்றுடன் சேர்ந்து வந்த நுகர்வு கலாச்சாரம் ஆகியன தொழிலாளி வர்க்கம் சிதறுண்டு போன தன்மைக்கு காரணமாகின. அவை வெகுமக்களின் குறிப்பாக இளைஞர்களின் உணர்வில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தின. நவ தாராளவாத பொருளாதார கொள்கைகள் தொழிற்சங்கங்களை தகர்த்தன. மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களிடம் வேலைகளை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து உழைப்பை கறக்கும் முறை உருவானது. உழைப்பு ஒப்பந்த அடிப்படையில் ஆனதாக்கப்பட்டது. அவற்றின் காரணமாக உலகில் பெரும்பாலான பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் சிதறுண்டு போய்விட்டது. இவை அனைத்தும் உழைக்கும் மக்களிடையே வேலை செய்யும் கம்யூனிஸ்டுகளின் பின்னடைவுக்கான புறநிலைக் காரணங்கள். ஆனால் இவை மட்டுமே கம்யூனிஸ்டுகளின் பின்னடைவுக்குக் காரணங்கள் அல்ல, இதை விட முக்கியமாக (இந்திய) கம்யூனிஸ்டுகளின் அகநிலை காரணங்களே அவர்களின் பின்னடைவுக்கான முதன்மையான கரணங்கள் என்று கோபாட் காந்தி இந்நூலில் குற்றம் சாட்டுகிறார்.

இந்தியாவில் உள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசியல்ரீதியில் மெல்லமெல்ல முடிவை நோக்கிச் செல்லுமளவுக்குச் சரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான தேக்கநிலையை எதிர்கொள்வதற்கு புதிய மற்றும் ஆக்கபூர்வமான விஷயங்கள் எதனையும் பரிசீலிக்க இயலாதவையாகி விட்டன. அவை இறுக்கமான நிலைப்பாடு/வறட்டுவாதம் வழக்கமாகச் செய்து வந்ததையே திரும்பத்திரும்பச் செய்தல் அல்லது உலகில் மாற்றம் ஏதும் நிகழாததுபோல செயல்படுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘பூசாரி தினந்தோறும்’ கோவிலுக்குச் சென்று மணி அடிப்பதுபோல' பழக்கப்பட்டுப்போன அன்றாட வேலைகளைச் செய்துகொண்டு ஒரே வட்டத்துக்குள் சுற்றிச்சுற்றி வருகின்றன. அவை செய்யும் வேலைகள் அவை வகுத்துக்கொண்ட இலக்குகளை நோக்கி அவற்றை முன்னெடுத்துச் செல்கின்றனவா என்பதைப் பார்க்காமல் விளையாட்டு மரக்குதிரையொன்றின் மீது அமர்ந்துகொண்டு பெடலை மேன்மேலும் அழுத்தினாலும், இறுதியில் பத்தாண்டுகளுக்கு முன் எந்த இடத்தில் இருந்தனவோ அதிலிருந்து ஓரடிகூட முன்னே செல்ல முடியாத அதே நிலையில்தான் இருக்கின்றன. மேலும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்று அவர்களால் உரிமை கொண்டாடப்படுவதும் சிறுகுழுவுக்கு மட்டுமே புரியக்கூடியதுமான கருத்துகளை மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தின் சாரமான வர்க்கப் போராட்டம், சோசலிச மாற்றம் ஆகியவற்றைக் களைந்தெறிந்த கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

கம்யூனிஸ்டுகள் ஆக்கப்பூர்வமானவர்களாகச் செயல்படுவது முடிந்துபோய் பழைய வார்ப்புக்குள்ளேயே இயங்கும் போக்கைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நாடாளுமன்ற இடதுசாரிகள் சட்ட/நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருப்பதைத் தவிர வெகுமக்களுக்கு உள் உந்துதல் தர இயலாதவர்களாகி விட்டனர். நாடாளுமன்றத்துக்குப் புறம்பே இயங்கும் தீவிரச் சக்திகளோ பல பத்தாண்டுகளுக்கு முன் செய்து வந்தவையும், நிகழ்ச்சிகள் நடந்தபின் அவற்றுக்குப் பின்னால் ஓடுவதுமான அதாவது வெகுமக்களை அரசியல்தன்மை பெற்றவர்களாக ஆக்காமல் அவர்களது பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளும் பழக்கப்பட்டுப்போன அதே வேலைகளையே மேற்கொண்டு ஒரே வட்டங்களுக்குள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். இளம் மக்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய புதியன ஏதும் அவர்களிடம் இல்லை என்கிறார் கோபாட் காந்தி.

கம்யூனிஸ்டுகள் கருத்துநிலை ரீதியாக மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டாலும், அதன் சாரத்தை அதன் கண்ணோட்டத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாக உள்ளார்கள் என்று குற்றம் சாட்டும் கோபாட் காந்தி, நாம் மார்க்சியத்தை தர்க்க அளவிலும் அறிவு அளவிலும் ஏற்றுக் கொள்கிறோமேயன்றி நமது பிற்பட்ட சிந்தனையையும் கருத்துகளையும் மாற்றிக் கொள்ள விருப்பமில்லாதவர்களாகவோ, இயலாதவர்களாகவோ இருக்கிறோம் என்கிறார். கம்யூனிஸ்ட் திட்டம் நிலைத்து நிற்கக் கூடியதாகவும் சாத்தியமானதாகவும் இருக்க வேண்டுமானால் சுதந்திரம், மகிழ்ச்சி, புதிய விழுமியங்கள் ஆகியவற்றை இணைத்துக் கொள்கின்றதாக அது இருக்க வேண்டும் என்கிறார் கோபாட் காந்தி. (இதை அவர் அனுராதா மாடல் என்கிறார், அனுராதா காந்தி கோபாட் காந்தியின் வாழ்க்கைத் துணையாகவும் சக அரசியல் செயல்பாட்டாளராகவும் வாழ்ந்தவர், 2008ம் ஆண்டு தனது 54வது வயதில் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்).

நிலப்பிரபுத்துவ மனப்பான்மை நம் சிந்தனையில் மேலாதிக்கம் செலுத்தும் இந்தியா போன்ற நாடுகளில் நமது விழுமியங்கள் அடிப்படையில் பார்ப்பனியத் தன்மையில்தான் உள்ளன. இந்தியாவில் நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம் பார்ப்பனிய வடிவத்தை மேற்கொண்டுள்ளது. சாதிய படியமைப்பில் ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ அதற்கேற்ப அது மேலும் வலுவானதாக உள்ளது. என்றாலும், அது சமூகம் முழுவதிலும் பரவலாக உள்ளது. மேல் சாதி உயர்வு (பார்ப்பனிய) மனப்பான்மை என்பது உடலுழைப்பை அவமதித்தல், குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வீட்டு வேலைகளுக்குமான உடைமைகளாகப் பெண்களைப் பார்த்தல் போன்ற ஆண் பெண் அதிகார உறவுகளின் அதே வடிவங்கள்; மனைவிகளை அடித்தல் (ஏன் அவர்களைக் கொலை செய்தல் கூட); தீண்டாமையைக் கடைப்பிடித்தல் அதன் உச்ச வடிவம்தான் பாலியல் வன்புணர்வும் சித்திரவதை செய்தலும், அதனுடைய மென்மையான வடிவம் சமூகப் புறக்கணிப்பு. இதனுடன், சாதிக்குள்ளேயே அல்லது துணை சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் அகமண முறை ஆகிய பண்புகளும் சேர்ந்து கொள்கின்றன.

நாம் மார்க்ஸிஸ்டுகளாக ஆன பிறகு சோசலிச/கம்யூனிச விழுமியங்களை உடகிரகித்துக் கொள்ளக்கூடியது என்பது நமது ஆழ்மனதில் பதிந்துள்ள முதலாளிய/நிலப்பிரபுத்துவ விழுமியங்களையும் அணுகுமுறைகளையும் அகற்றிவிட்டு அவற்றின் இடத்தில் சோசலிச உணர்வை வைக்கும் நீண்ட நிகழ்முறையாகும்.

அப்படியானால், சோசலிசம்/கம்யூனிசம் என்பதற்கான முதன்மையான பண்புகள் யாவை? எளிமை (அகங்காரம் அல்ல), பாசாங்குகள் மிக மிக அற்ப அளவிலேயே உள்ளதும் வெளிப்படையாகப் பேசுவதுமான நேர்மை, சாதி மற்றும் ஆண் பெண் அதிகார உறவுக் கண்ணோட்டங்களை (அவற்றின் கடுமையான மற்றும் நுட்பமான வடிவங்கள் இரண்டையும்) மறுத்தல், சமபந்தி முறை, கலப்புத் திருமணம், அனைத்து சாதிகளுடனும் அனைத்துப் பரஸ்பரத் தொடர்புகளும் கொள்ளுதல் ஆகியவற்றை ஊக்குவித்தல், மேல்சாதி மனப்பான்மை, அறிவுச்செருக்கு ஆகியவற்றின் அனைத்து வடிவங்களையும் மறுத்தல், உடலுழைப்புக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தல் (குறிப்பாக இல்லங்களில்!), உயர்வு மனப்பான்மை, உடைமை மனப்பான்மை, பொறாமைகள் முதலியன அற்றவையும் அன்பையும் பரஸ்பர மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டவையுமான உறவுகளை ஊக்குவித்தல், (தனிச்சொத்துடன் இணைப்புள்ள) குடும்ப அமைப்பிலிருந்து கூட்டு வாழ்வுக்கு கம்யூன் வாழ்வுக்குப் படிப்படியாக மாறுதல் போன்ற வழிமுறைகளை கோபாட் காந்தி முன்மொழிகிறார்.

மேற்கண்ட இந்த மாற்றத்தை எவ்வாறு சாதிப்பது?

குழு/ வட்டம்/ கட்சி/ அமைப்பு என்பது இந்தத் திசை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை அனைவருக்கும் அதிகபட்ச மகிழ்ச்சி என்பதை நமது இலக்காகக் கொண்டு சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் நமது உறவுகளைக் கட்டமைக்க முயன்றாக வேண்டும். இதையே திருப்பிச் சொல்வதென்றால். (குறைந்தபட்சம் தொடக்கத்தில் நமது வட்டத்திலாவது) மகிழ்ச்சி என்ற இலக்கு ஒருவரிடம் இருக்குமானால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேறு இரண்டின் (சுதந்திரம், ஜனநாயகம்) பெரும்பகுதியை அடைவது மேலும் எளிதானது. என் தோழர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புவேனாகில், அவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது அவர்களைப் புண்படுத்தும் முறைகளை நாடமாட்டேன். சுதந்திரம் என்பதைப் பொருத்தவரை, அனைத்து சுதந்திரத்துக்குமான தொடக்கமுனை, நமக்கு முதலாவதும் முக்கியமானதும் என்னவென்றால் நமக்குள் இருக்கிற சிக்கல்கள், அதாவது முரண்பாடுகள், எடுத்துக்காட்டாக, மனித உறவுகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதற்கும் நிலப்பிரபுத்துவ/நுட்பமான ஆணாதிக்க அணுகுமுறைக்கும் உள்ள முரண்பாடு. இந்த முரண்பாடுகளுடன் கணக்குத் தீர்த்துக்கொள்ளப் பலரால் முடிவதில்லை.

இந்தக் கட்டுத்தளைகளிலிருந்து நாம் விடுதலை பெற்றதும், நம் தோழர்களிடம் சாதாரணமான/இயல்பான மனிதப் பிறவிகளாக நடந்து கொள்ளத் தொடங்குவோம். நமது சிந்தனையையும் இயக்கத்தையும் சுதந்திரமும் மகிழ்ச்சியுள்ள சூழலில் கட்டுவோம். ஆனால் நாமே சுதந்திரமற்றவர்களாக இருப்போமேயானால், நமது கூட்டுறவுகளில் சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவை உள்ள சூழலை உருவாக்குவது சிந்தித்துப் பார்க்க முடியாததாகும். அந்தச் சூழல் இல்லாவிட்டால் நமது பரஸ்பரத் தொடர்புகள் அனைத்தும் திரிக்கப்பட்டவையாகவே இருக்கும். மற்றவர்கள் மீது நம்மைப் பற்றிய நேர்மறையான மனப்பதிவுகளை உருவாக்க மேலதிக முயற்சி செய்வதாகவே இருக்கும். நமது வட்டத்துக்குள் புதிய விழுமியங்களை, அத்துடன் சேர்த்து சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வரும் முயற்சியாக இருக்காது.

துடிப்பு மிகுந்த எந்தவொரு புதிய கம்யூனிஸ்ட் வட்டமும் இந்தப் பாணியில்தான், கம்யூன் வாழ்க்கையை நோக்கிக் கட்டப்பட வேண்டும் என்று கூறும் கோபாட் காந்தி, இது உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு பொதுவாகப் பொருந்துவதாக இருந்தாலும், இந்தியாவிலுள்ள தனித்துவமான நிலைமைகளைக் கருத்தில் கொள்கையில் நமக்குக் கூடுதலான வேலைகள் உள்ளன என்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்டுகள் முதலில் கருத்துநிலைத் தளத்தில் மார்க்சியத்தை இந்தியத் தன்மையாக்க வேண்டும். இந்திய நிலைமைகளுக்கு அவற்றுக்கே உரிய தனித்தன்மை உள்ளது. எனவே, நமக்கான மார்க்சிய கருத்திநிலைத் தளம் பிற நாட்டு நிலைமைகளின் நேரடி நகலாக இருக்க முடியாது.

இங்கு நிலவுகிற மரபுகள், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியாவிற்கு 3000 ஆண்டுகால வலுவான மக்கள் இயக்கம், ஜனநாயக பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கம் உள்ளது. அது உலகாயதவாதிகளில் தொடங்கியது; பின்னர் பௌத்த மரபு உருவாயிற்று. அதன் பிறகு பக்தித் துறவிகளின் இயக்கங்கள் உருவாயின. இறுதியாக ஜோதிபா ஃபுலே, அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் தோன்றின. கம்யூனிசத்தை இந்தியாவில் பிரயோகிப்பது என்பது, இந்த நாட்டின் நெடிய, மாபெரும் மக்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டும். ஒரு வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறை நமக்குத் துல்லியமாகக் கற்பிப்பது இதுதான். அதைப் புறக்கணிப்பதென்பது நமக்கான ஆபத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வதாகவே அமையும். எனவே, இந்தியாவுக்கான எந்தவொரு உண்மையான கம்யூனிஸ்ட் செயல்திட்டமும் பார்ப்பனிய எதிர்ப்பு நடைமுறையின் இந்த நீண்ட, நெடிய மரபை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அச்செயல்திட்டம் இந்த நாட்டில் நீண்டகாலமாக உள்ள ஜனநாயக மரபின் மீது கட்டியெழுப்பப்பட்டு அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

சமுதாயத்தில் அடிப்படையான ஜனநாயக மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக வெகுமக்களைத் தட்டியெழுப்புவதுதான் முக்கியம். இதன் பொருள், பொருளாதாரப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதல்ல; மாறாக இப்போதுள்ள சூழ்நிலைமையையும் நமக்குள்ள அக வலிமைகளையும் (அமைப்புரீதியான வலிமைகளையும்) கருத்தில் கொண்டு எதெதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்வதுதான்.

அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருகிற அல்லது குறைந்தபட்சம் புதிய நம்பிக்கையைப் பெறுவதற்காக மக்களைத் தட்டியெழுப்புகிற அம்சங்களாக தேசப்பற்றும் அதனுடன் இணைந்த சுதேசி பொருளாதாரமும், நம் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் ஊடுருவியுள்ள பார்ப்பனிய அமைப்பைத் தகர்த்தெறியும் ஜனநாயக கோரிக்கையும் இருக்கும் என்று கோபாட் காந்தி கருதுகிறார்.

சாதி அமைப்பு ஆதிக்கம் செலுத்திவரும் வரையிலும் பார்ப்பனியம் நமது சிந்தனையின் எல்லா அம்சங்களிலும், எல்லா சமூக உறவுகளிலும் ஊடுருவி இருக்கும் வரையிலும் இந்தியா ஒருபோதும் வெற்றிகரமான ஜனநாயக நாடாக இருக்காது. சாதி அமைப்பு மக்களைப் பிளவுபடுத்துவதும், மேல் கீழ் வரிசையைக் கொண்டதும் மட்டுமல்ல. சாதியையும் ஆணாதிக்கத்தையும் பிறப்பிக்கும் பார்ப்பனியம் உள்ளார்ந்த மேற்குடித்தன்மையையும் சகிப்பின்மையையும் மனிதத்தன்மையற்ற தன்மையையும் கொண்டதாகும். கருத்துநிலையும் சாதி அமைப்பின் பிளவுபடுத்தும் தன்மையும் வரலாறு நெடுக ஆளும் வர்க்கங்களுக்கான இலட்சியப் பூர்வமான கருவிகளாக இருந்து வந்துள்ளதுடன், சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், நமது சமூக, பொருளாதார சொல்லாடல்களின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியுள்ளன. மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு, பிரதேச மொழிகளுக்கு சரிசமமான முக்கியத்துவம் வழங்கப்படும் கூட்டாட்சி முறை ஜனநாயகத்துக்கு இன்றியமையாததாகும்.

நாட்டுப்பற்று என்ற பிரச்சினையைப் பொருத்தவரை, சுதந்திரப் போராட்டத்தின்போது நடந்தது போலவே சுதேசி என்பதைச் சுற்றி மக்கள் அணிதிரள வேண்டும் என்ற அறைகூவல் வெளிநாட்டுப் பொருட்களையும் அமேசான், வால்மார்ட் ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களையும் அரசின் சலுகை சார்ந்துள்ள இரு பெரும் முதலாளிகளான அதானி, அம்பானி ஆகியோரையும் புறக்கணிப்பதுடன் இணைக்கப்பட வேண்டும். கிராமியத் தொழில் முனைப்புகளையும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

பார்ப்பனியம் என்பதைப் பொருத்தவரை, அது கட்டமைப்பு ரீதியானதும் கருத்துநிலை ரீதியானதும் ஆகும். புலேவும் பெரியாரும் வெகுமக்கள் கிளர்ச்சிக்கு இட்டுச் சென்ற சில புதுமையான முறைகளை ஏற்படுத்தினர். அம்பேத்கர் மூலம் தலித் இயக்கம் ஊக்கம் பெற்றது. இன்று சமூகக் களத்தில் பார்ப்பனியத்தின் மீதான தாக்குதல் மேற்சொன்ன மூவரின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதுடன் அவற்றை பக்தி, உலகாயத மரபுகளுடன் இணைத்து, மரபாகச் செய்யப்பட்டு வந்ததுபோல முதன்மையாக நாட்டார் இசை மூலமும் பல்வேறு நாட்டார் கலைவடிவங்கள் மூலமும் வெகுமக்களிடையே பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். கருத்துநிலை மட்டத்தில் இவை முதன்மையான சாதனமாக இருக்க, கட்டமைப்பு மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டிய மேடை என்பது பார்ப்பனிய உயர்வு மனப்பான்மையின் வெளிப்படையான மற்றும் நுட்பமான அனைத்து வடிவங்கள், சாதியம், ஆணாதிக்கம் ஆகியவற்றைப் பொது வெளி, குடும்பம் இரண்டிலும் குறிவைத்துத் தாக்கக் கூடியதையும் கலப்பு மணங்கள், பல்சமய உறவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

சுட்டிக்காட்டுவதற்கு உலகில் எந்த மாற்றும் இல்லாத நிலையில், நுண் அரசியல் மட்டத்தில் நாம் உருவாக்கும் மாற்று மட்டுமே புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கான அனைத்து சேர்க்கைப் பொருட்களையும் கொண்டிருக்கும். ஆகவே கம்யூன் வாழ்க்கையை நோக்கி விழுமியங்கள் சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்ட முறையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கட்டப்படுவதும், இந்திய நிலைமைகளுக்கு உகந்த வகையில் மார்க்சியத்தை பயன்படுத்தும்வதுதான் நம்முன் உள்ள உடனடி கடமைகள் என்று இந்நூலை முடிக்கிறார் கோபாட் காந்தி.

- ச.நிதீஷ் குமார், பொறியியல் இளங்கலைப் பட்டதாரி, ஊடகத்துறையில் பணிபுரிகிறார்.

(செப்டம்பர் 30, 2022 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் விஜயவாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கப்பட்ட எழுத்து வடிவம்.)

அனைத்துலக அளவிலும் இந்திய அளவிலும் இடதுசாரிகள் முன் இருக்கும் சவால்கள்

கோபாட் காந்தி | தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: என்சிபிஎச், சென்னை | விலை: :ரூ.75/-