மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில் ‘பொதுவுடைமை குழந்தைகளுக்காகஞ்’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமானது. புரிந்துகொள்ள முடியவில்லை என்போரும் இதன் மூலம் பொதுவுடைமையைக் கற்கலாம்; விவாதிக்கலாம்.
இந்நூல் மூன்று பகுதிகளானது. முதல் பகுதியில் பொதுவுடைமை, முதலாளித்துவம், உழைப்பு, சந்தை, நெருக்கடி, முதலாளித்துவம் தோன்றிய முறையும் எடுத்துக்காட்டப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் மக்கள் படும் அனைத்து கேடுகளிலிருந்து விடுபட்ட சமுதாயத்தைப் பொதுவுடைமை என்பது சுட்டுகிறது. இது ஒரு நோயைக் குணப்படுத்துவது போல. முதலாளித்துவம் நோயென்றால் (அது அப்படியல்ல) அதற்கு மருந்தாக பெருமளவு மக்களை நலம் பெறச் செய்வது பொதுவுடைமை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. பொதுவுடைமை நல்ல நிவாரணம் என்றபோதிலும் அது அனைத்தையும் குணமாக்கக் கூடியதல்ல. இது முதலாளித்துவத்தால் ஏற்பட்ட கேடுகளுக்கான ஒரு நிவாரணம் மட்டுமே என்பது நூலில் வலியுறுத்தப்படுகிறது.
பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். முதல் ஆட்சி செய்வதால் முதலாளித்துவம் என்றழைக்கப்படுகிறது. நம்மை ஆள்வது யார்? உண்மையில் பொருள்கள்தான் ஆள்கின்றன. எல்லாப் பொருள்களும் ஆளமுடியாது. அத்தகைய சிறப்புப் பொருள்கள் வானத்திலிருந்தோ, வேற்றுக் கிரகத்திலிருந்தோ வந்ததல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டவைதான். இவற்றை தாங்கள்தான் உருவாக்கினோம் என்பதை மறந்து அந்தப் பொருள்களுக்குச் சேவையாற்றத் தொடங்கி விட்டார்கள். என்பது எளிமையாக விளக்கப்படுகிறது. கடவுள், மதம், சடங்குகள் எல்லாம் இவ்வாறு மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள்தான்.
முதலாளித்துவ சமூகத்தில் மக்களிடையே உறவுகள் பற்றி அறிய முதலாளித்துவம் தோன்றிய விதத்தை அறியவேண்டும்? நிலப்பிரபுத்துவம், வணிக முதலாளித்துவம், தொழிற்சாலைகள் என முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில், உடைமை இல்லாதவர்கள் தங்களையே விற்றுக் கொள்ளும் நிலைக்கு ஆளானார்கள். உற்பத்தி, உறவுகள் ஆதிக்கத்தைக் கட்டமைத்தன. முதலாளிய வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி வளர்ந்தது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உழைப்பு, சந்தை, நெருக்கடி ஆகியவற்றை அறிவது அவசியம். அடுத்தடுத்த தலைப்புகளில் இவை விளக்கப்படுகின்றன.
எவ்வாறு நாம் உற்பத்தி செய்யவேண்டும். எதை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். எந்த அளவு உற்பத்தி செய்யவேண்டும் என்பதையே தொழிற்சாலைகள் அதாவது முதலாளித்துவம் பேசுகின்றன என்பதும் இவை மக்களைப் பற்றி கவலை கொள்வதில்லை. மாறாக சந்தையில் மட்டும் இதன் கவனம் இருப்பதும் சுட்டப்படுகிறது. தேய்ப்புப் பெட்டியை எடுத்துக்காட்டாகக் கொண்டு நெருக்கடி உணர்த்தப்படுகிறது.
முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவுடைமை சோதனை முயற்சியாகப் பல்வேறு வடிவங்களில் அறிமுகமாகிறது. சமூக ஜனநாயகம், லுட்டியம், தொழில்நுட்ப நுகர்வுவாதம், அராஜகம், அரசு சோசலிசம் போன்ற பல முயற்சிகள் இது பொதுவுடைமை அல்ல என்ற முடிவை நோக்கி தள்ளியிருப்பதை முயற்சிகள் மூலம் முன்வைக்கப்படுகிறது. இறுதி முயற்சியில் அல்ல என்று சொல்வதற்குப் பதிலாக, இது எங்களுடைய கதை. இப்போது நாங்கள் நாங்களாகவே வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், என்று முடிக்கிறார்.
நிறைவுரையாகப் பொதுவுடைமை வேட்கை எனும் தலைப்பில் 1991-க்குப் பிந்தைய உலகம் அலசப்படுகிறது. பொதுவுடைமையின் தோல்வி எனக் கருதப்பட்ட இக்காலகட்டத்தில், உலகமெங்கும் பெருந்திரள் மக்கள் எழுச்சிகள் பல்வேறு வடிவங்களில் நடந்தன. இவையெல்லாம் பொதுவுடைமை பற்றிய நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளன.
1991 வரலாற்றின் முடிவு அல்ல; அது புதிய வரலாற்றின் தொடக்கம். எனவே, பொதுவுடைமையின் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது என்ற முதலாளித்துவ குரல் அதிர்ச்சியடையும் வண்ணம் புதிய நம்பிக்கைகள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. நமக்கான பொதுவுடைமை, பொதுவுடைமைக்கான திசைவழி போன்ற விவாதங்கள் மேலெழுந்துள்ளன.
இது குழந்தைகளுக்கானதா? என்ற கேள்விக்கு, எல்லா வயதினரையும் குழந்தைகளாகப் பாவித்து எழுதியுள்ளதாக நூலாசிரியர் சொன்னதைப் பதிப்புரையில் ந.முத்துமோகன் குறிப்பிடுகிறார். குழந்தைகள் உணர்ந்துகொள்ளவும் உணர்ந்தவர்கள் மீண்டும் விவாதங்களின் வழியே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய சூழலை எதிர்கொள்ள, காலத்தின் போக்கில் வரலாறு மீண்டும் ஒருமுறை திறந்திருப்பதை எடுத்துக்காட்டி நூல் நிறைவடைகிறது.
பொதுவுடைமை குழந்தைகளுக்காக...
பீனி அடம்ஸாக் | தமிழில்: எம்.பாண்டியராஜன்
பதிப்பாசிரியர்: ந. முத்துமோகன்
பக்கங்கள்: 123 | விலை: ரூ.150
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
- மு.சிவகுருநாதன்