சிந்தனைச் சிற்பி என்று போற்றப்பட்ட ம.சிங்காரவேலர் (1860-1946) தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்தியாவிலேயே பொதுவுடைமைக் கொள்கையை முதன் முதலில் போதித்த முன்னோடிகளில் முதன்மையானவர். தமிழ்நாட்டில் காங்கிரஸ், சுயமரியாதை, கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பரப்பியவர்.

singaravelar speechஇந்தியாவில் முதன் முதலாக கான்பூரில் 26-12-1925 அன்று பொதுவுடைமை இயக்க மாநாட்டுக்கு தலைமை ஏற்று, கொடியேற்றி, கொள்கைத் திட்டத்தை அறிவித்தவர் அவர். இதற்கு முன்பாகவே 1922ஆம் ஆண்டில் கயாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் பற்றியும் முதன் முதலாகத் திட்டம் தீட்டிக் கொடுத்த பெருமைக்குரியவர்.

உலகத் தொழிலாளர்களின் திருநாளாகிய மே தினத்தை இந்தியாவில் முதன் முதலாக 1-5-1923இல் கொண்டாடிய முதல் தலைவர். அமெரிக்கத் தொழிலாளர்களான சாக்கோ, வான்சிட்டி ஆகியோரை அமெரிக்கா அரசு கொன்றபோது, இந்தியாவில் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்.

தொழிலாளர் மற்றும் உழவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ்நாட்டில் முதன்முதலில் ‘தொழிலாளி’ என்ற தமிழ் இதழையும், லேபர் அன்டு கிசான் கெசட் என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டு, அவர்களுக்கு வழிகாட்டியவர். உழைப்போரின் நல்வாழ்வுக்காக 1923ஆம் ஆண்டிலேயே இந்தியத் தொழிலாளர் மற்றும் உழவர் கட்சியைத் (Labour and Kissan Party of Hindustan) தோற்றுவித்தார்.

தமிழ்நாட்டில் நடந்த முதல் நாத்திகர் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று அரிய உரையாற்றி நெறிப்படுத்தியவர். 1925ஆம் ஆண்டில் நகராண்மைக் கழக உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது, கடவுள் நம்பிக்கையை மறுத்து, ‘மனச்சாட்சிப்படி பொறுப்பேற்கிறேன்’ என்று உறுதிமொழி ஏற்று வழிகாட்டியவர்.

நகராண்மைக் கழகப் பாடத்திட்டத்தில் மதத்தைப் பற்றியும், போரைப் பற்றியும் பாடங்கள் இருக்கக் கூடாதென முதன் முதலில் தீர்மானங்கள் கொண்டு வந்தவர். சென்னையில் டிராம் போக்குவரத்தையும். தொலைபேசியையும் அரசுடைமை ஆக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்த பெருமைக்கு உரியவர்.

அத்துடன் தமிழக மக்களுக்கு முதன்முதலில் மார்க்சியத்தையும், டார்வினிசத்தையும் போதித்தார். அறிவியல், மானிடவியல், சமூகவியல், உளவியல், அரசியல் ஆகிய துறைகளைப் பொதுமக்களுக்கு எளிய முறையில் விளக்கியவர். பல புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்துவதிலும், பல அரிய செயல்களைச் செயல்படுத்தியதிலும் அவர் முன்னோடியாக விளங்கினார். பலர் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கேற்கவும், பொதுவுடைமை, சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்றவும் அவர் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவ்வாறு பொதுவுடைமை இயக்கத்திற்கும். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் பாலமாக இருந்தவர் அவர். பெரியார் ஈ.வெ.ரா, தோழர் ஜீவா, நாகை முருகேசன், சி.எஸ்.சப்பிரமணியம், அறிஞர் அண்ணா, கே.டி.கே.தங்கமணி முதலிய பெருமக்களோடு நெருங்கிய தொடா¢பில் இறுதிவரை இருந்தார்.

இவரது 1925ஆம் ஆண்டு கான்பூர் பொதுவுடைமை மாநாட்டுத் தலைமை உரையை சென்னை மயிலாப்பூர் ‘துறை’ என்னும் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது, எக்காலமும் தேவைப்படும் இந்த உரை காலத்தின் தேவை கருதி இப்போது மறுவாசிப்புக்காக விடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் நோக்கம் என்ன என்பதையும், இங்கே எதற்காக கம்யூனிஸ்டுகள் கூடியிருக்கிறார்கள் என்பதையும் அவர் உரையின் தொடக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு விடுகிறார்.

“நம் மாநாடு இவ்வுலகில் வாழ்கின்ற எல்லா மனித உயிர்களுக்கும் இவ்வுலகத்தை செழுமையும், இன்பமும் நிறைந்ததாக ஆக்கப் பாடுபடும். நமது நலம் பயக்கும் இயக்கத்தை நசுக்க கம்யூனிச எதிரிகள் முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளாகிய நாம் இந்த அரங்கில் இந்தியாவில் நிலவும் அரசியல், பொருளாதார நிலைமையைப் பொதுவாக ஆராயவும், நம் நாட்டு மக்கள் வாழ்வை மேலும் சிறப்பாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆக்குவதற்குரிய நடவடிக்கைகளைத் திட்டமிடவும் இன்று கூடியுள்ளோம்.”

உலகின் பிற பகுதிகளிலும், இந்தியாவிலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆட்பட்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் துன்பத்திற்கு உள்ளாயினர். இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் இந்த இயக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதுதான்.

“அவர்களுக்கு அளிக்க நம்மிடத்தில் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் கல்வாரி என்ற இடத்தில் சிலுவையில் அறையப்பட்டபோது, “ஓ நீங்கள் செய்வதை இன்னதென்று அறியாமல் செய்கிறீர்கள்” என்று தம்மைத் துன்புறுத்தியவர்களிடம் நம் மனித இனத்தின் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் கூறியதே அந்தப் பதிலாகும்” என்று கூறுகிறார்.

சமூகம் அல்லது மதம், அரசியல் அல்லது பொருளாதாரம், அறிவியல் அல்லது தத்துவம் ஆகிய துறைகளில் எந்தச் சீர்திருத்தத்தின் முன்னோடிகளும் தங்கள் சிந்தனைகள், கருத்துகள், செயல்கள் இவைகளுக்காக இவ்வுலகத்தில் கட்டாயம் துன்புற வேண்டுமென்பது வருத்தத்திற்குரியதாகும்.

மக்களுக்காக உழைத்து மாண்ட மாவீரர்களுக்கு மாநாட்டில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. ஜெர்மன் தொழிலாளர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட லீப்நெக்ட், புகழ்பெற்ற வீரப் பெண் ரோசாலக்ஸம்பர்க், பிரெஞ்சுக்காரர்களிடேயே புகழ் பெற்ற எம்.ழூவாரே இவர்களை உலகத் தொழிலாளர்கள் என்றும் நினைவில் வைத்துப் போற்றுவர்.

சோவியத்தின் மாபெரும் தலைவன் நிக்கோலாய் லெனின் மறைவை மாபெரும் இழப்பு என்று குறிப்பிடுகிறார். இங்கிலாந்தில் வாழ்ந்த ஜார்ஜ் லான்ஸ்பெரி, நம் நாட்டைச் சேர்ந்த தேச பந்துதாஸ், சுப்பிரமணிய சிவா மற்றும் கான்பூர், சென்னை, பிற இந்திய நகரங்களில் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கும் அவர் உரையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மறைந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வாழும் மக்கள் நிலையை வேதனையோடு விளக்குகிறார். “உலக மக்களில் நம் நாட்டு மக்கள் மட்டுமே, இம்மண்ணில் மனித இனம் வாழும் மிக்க துயரம் தோய்ந்த பகுதியைச் சார்ந்தவர்கள். வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உறையுள், உடை, மனித வாழ்வின் மிக உயர்ந்த விடுதலை, ஒத்த உரிமை, அறிவு ஆகியவைகளை இழந்து, நம் நாட்டின் பெரும்பகுதி மக்கள் உலகில் உள்ள மற்ற நாடுகள் எட்டியுள்ள தரத்தைவிட மிகக் கீழான நிலையில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராக உள்ள இந்நாட்டு விவசாயிகளே மிகுதியான துன்பத்தை அனுபவிக்கின்றனர். கிராமங்களில் அவர்கள் வாழ்க்கை தாங்க முடியாதபடி உள்ளது என்கிறார்.

“அன்புத் தோழர்களே! மனித வாழ்க்கையின் இந்த அவலமான நிலைமைகளைச் சீர்திருத்த உங்களின் திட்டம் என்ன? உண்மையில் கம்யூனிஸ்டுகளாகிய நாம், நம் இன்றைய துன்ப வாழ்க்கையை மகிழ்ச்சியும், வளமையும் கொண்ட வாழ்க்கையாகத் தீவிர மாற்றம் செய்ய என்ன செய்யப்போகிறோம் என்பதை இம்மாநாட்டில் விளக்க வேண்டும். இது மண்ணின் மீது வாழும் ஒவ்வொருவரின் பிறப்புரிமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பெரும் பங்கினை ஏற்றுக் கொள்ள வேண்டும். எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும் இந்தியாவில் ஏற்படப் போகும் தொழிலாளர் அரசில் முன்னணிப் படையாக நாம் இருக்கிறோம் என்று நம்பினார். ஆனால் விடுதலை பெற்ற அரசாங்கத்தால் அடக்குமுறைக்கு ஆளான கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது.

“கம்யூனிஸ்டுகளுக்கு சாதியோ சமயக் கோட்பாடுகளோ கிடையா. இந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது கிறிஸ்துவர்கள் அவைகளைப் பற்றி எத்தகைய சொந்தக் கருத்துகளைக் கொண்டிருக்கலாம். கோடிக்கணக்கில் உள்ள இவ்விந்திய மக்களின் தீண்டாதோர் பொருளாதாரச் சார்புடைமையுடன் தீண்டாமைப் பிரச்சினை சிறப்பாகப் பிணைந்துள்ளது” என்கிறார்.

உலகக் கம்யூனிசத்தின் சிறப்பைப் பற்றியும், அது எதைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதைப் பற்றியும் தவறான எண்ணமும் மிகுதியாக உள்ளது. கம்யூனிசம் என்றால் என்ன? மனித வர்க்கத்தின் ஏறக்குறைய எல்லாத் தீங்குகளையும் போக்கிச் செம்மையுறச் செய்யும் குறிக்கோளைக் கொண்ட ஒரு நெறி அல்லது தத்துவமாகும்.

அதே சமயத்தில் ஒரு நெறியாகவும், வழிமுறையாகவும் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் பங்கிடுவதிலும், அனுபவிப்பதிலும் சமத்துவமின்மை சரி செய்யப்பட்டு, எல்லோரும் ஒத்த நன்மையடையக் கூடிய முறையில் அதனால் ஒழுங்குபடுத்தப்படலாம்.

மார்க்சிய கம்யூனிசம் பற்றி சிறிது கூடுதலாக விளக்குகிறார். உலகத்தில் மக்கள் இரண்டு வர்க்கங்களாக உள்ளனர். அதாவது சொத்து உள்ளவர்கள், சொத்து இல்லாதவர்கள். இவர்களையே பூர்ஷ்வா வர்க்கம் என்றும், பாட்டாளி வர்க்கம் என்றும் குறிப்பிடுகிறோம். இவ்விரண்டு வர்க்கங்களும் எப்பொழுதும் தங்களுக்குள் போராடிக் கொண்டிருக்கின்றன.

“முதலாவதாக, மூலதன ஆதிக்கத்தை ஒழிப்பது, போர்கள் நடைபெறாமல் செய்வது, நாட்டின் வரம்புகளையும், எல்லைக் கோடுகளையும் ஒழித்து, எல்லா அரசுகளையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட அமைப்பாக்குவது, உண்மையான தோழமையுணர்வையும், சுதந்திரத்தையும் நிலைநாட்டல் ஆகிய இவைகளே குறிக்கோளாகும். இதுவே கம்யூனிஸ்டின் கனவாகும்” என்று நமது கம்யூனிசக் குறிக்கோளை விளக்குகிறார்.

இந்திய விவசாயிகளை இந்த மண்ணின் உயிர்ச் சத்து என்று குறிப்பிடுகிறார். அவர்களுடைய துன்பங்களையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கம்யூனிஸ்டுகள் அறிவார்கள். இம்மண்ணின் போலித் தலைவர்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எங்கள் வாழ்க்கைக்குரிய எல்லா நலன்களையும் தேவைகளையும் வழங்குகின்றனர். ஆனால் நிலவுடைமையாளர்கள் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த நாடகத்துக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

“வரலாற்றுக் காலம் தொட்டு நமது அரசியல் ஒற்றுமையை விழுங்கும் பேய்களாக சாதி, மதங்கள் இருந்து வந்துள்ளன. இந்த சாதி மத வேற்றுமைகள் இன்று நாட்டை மீண்டும் சின்னா பின்னப் படுத்துகின்றன. பயன் இல்லாத இவற்றை நம்முன் ஆர்ப்பரித்துக் காட்டுவோர் நம் நாட்டுக்கும், நம் குறிக்கோளுக்கும் பகைவர் ஆவர்” என்று சிங்காரவேலர் அன்று கூறியது இன்றும் பொருத்தமாகவும், தேவையாகவும் உள்ளது.

தோழர் ம.சிங்காரவேலரின் தலைமையுரை

(கான்பூரில் டிசம்பர், 1925 - இல் முதலாவது கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஆற்றிய உரை)

வெளியீடு:என்சிபிஎச், சென்னை.

விலை:ரூ.30.00

Pin It