ஆட்சியாளர்களின் பரம்பரைப் பட்டியலையும்; அரசர்கள் நிகழ்த்திய போர்ப் பயணங்களையும்; மேற்குடிகளின் ஆடம்பர வாழ்க்கையையும்; அரண்மனைகள், கோவில்கள் குறித்த வருணனைகளையும்; அந்தப்புர மனைவியரின் எண்ணிக்கையையும் வரலாறு என்ற பெயரில் படித்து வந்தோம். இதில் ஆர்வம் காட்டாமல் சற்று வேறுபாடான முறையில் இந்திய வரலாற்றை, இந்திய மக்களது வரலாறாகப் படிக்க விரும்புவோருக்கு நன்கு அறிந்த பெயரே கோசம்பி. இவரது பெயர் பல்வேறு உச்சரிப்புகளில் தமிழில் வழங்கி வரும் நிலையில் அவரது மராத்தி மொழிப் பெயரின் சரியான உச்சரிப்பு கோசம்பி என்று கூறுவதுடன் இந்நூல் தொடங்குகிறது.

+++

மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்ட இந்நூலின் முதற் பகுதி இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது. இதில் முதலாவது இயல் அவரது தந்தையைக் குறித்த அறிமுகத்துடன் தொடங்கி அவரது மாணவப் பருவம், அமெரிக்காவில் கல்வி பயின்றமை, இந்தியா திரும்பி பல்கலைக்கழக ஆசிரியர் பணி, டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) கணித அறிவியலாளராகப் பணியாற்றியமை, அவர் ஆர்வம் காட்டிய பல்துறை ஆய்வுகள், குறிப்பாக நாணயவியல் ஆய்வு, பெரிய அளவிலான அணைகள் கட்டுவது குறித்த அவரது கருத்து, அவர் மேற்கொண்ட சீனப் பயணம் என்பனவற்றைக் கூறிச் செல்கிறது.

dd kosambiyin vaazhkkaiyum aaivugalumஇரண்டாவது இயல், வரலாறு பற்றி கோசம்பி கொண்டிருந்த மார்க்சியப் பார்வையை அறிமுகம் செய்கிறது. கோசம்பிக்கு முன்பு இந்திய வரலாற்றாசிரியர்கள் காலனியவாதிகளாகவோ தேசிய இயக்கம் சார்ந்தவர்களாகவோ இருந்தனர். முன்னவர்கள் ஐரோப்பிய மேலாண்மை உணர்வுடன் இந்திய மக்களைப் பார்த்தனர் என்றால், பின்னவர்கள் இந்தியாவின் பண்டைய பெருமையிலும் காவிய இதிகாசங்களிலும் முகம் புதைத்து மகிழ்ந்தனர். ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவ்விரு வரலாற்று வரைவியலில் இந்தியாவின் எளிய மக்களுக்கு இடமில்லாமல் போனது. அம்மக்களது இடத்தை மன்னர்களும் வைசிராய்களும் கவர்னர் ஜெனரல்களும் பிடித்துக் கொண்டார்கள்.

வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்திய நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான வரலாற்றுச் சான்றுகளை எங்கே கண்டறிவது என்பதில் தெளிவில்லாத நிலை. இத்தகைய அறிவுச் சூழலில் நம்முடைய வரலாற்று வரைவுக்கான சான்றுகள் எங்கே புதைந்துள்ளன என்பதைக் கண்டறிந்ததுடன், அவற்றைப் பயன்படுத்தி எழுதும் வரலாற்று வரைவுக்குப் பொருத்தமான வரலாற்று முறையியலாக மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் டி.டி. கோசம்பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த கோசம்பி.

கணித அறிவியலாளராக விளங்கினாலும் வரலாறு, தொல்லியல், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், மானுடவியல், இனவரைவியல், நாட்டார் வழக்காற்றியல் போன்ற அறிவுத்துறைகளில் ஆர்வமும் புலமையும் அவருக்கு இருந்தது. இத்துறைகள் சார்ந்த நூலறிவுடன் நின்றுவிடாமல் இவை சார்ந்த கள ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். சமஸ்கிருதம், பாலி போன்ற இந்தியாவின் தொன்மையான மொழிகளில் புலமை மிக்கவராகவும் விளங்கினார். இவ்வகையில் கணித அறிவியலாளர் என்ற எல்லையைக் கடந்து ஓர் இந்தியவியலாளராக (In­dologist) அவர் மாறிவிட்டார். அவரது இந்தியவியல் என்பது உயர்கல்விப் புல எல்லையைக் கடந்து, மக்களை நோக்கியதாகும். இதற்குப் பின்வரும் நான்கு காரணங்கள் உள்ளன என்று குறிப்பிட இடமுள்ளது.

               முதலாவது காரணம், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என்பனவற்றை மட்டுமே ஆய்வுத் தரவுகளாகக் கொள்ளாமை.

               இரண்டாவது காரணம், மக்களைச் சந்திக்கும் வகையிலான கள ஆய்வுகளை மேற்கொண்டு உற்றுநோக்கியும் உரையாடியும் பெற்ற தரவுகளைப் பயன்படுத்தியமை.

               மூன்றாவது காரணம், இவ்வாறு சேகரித்த தரவுகளை ஒன்றிணைக்கும் வகையிலான பல்துறை இணைப்பு (inter disciplinary) ஆய்வு அணுகுமுறையைக் கையாண்டது.

               நான்காவது காரணம், தன் ஆய்வு முறையியலாக (methodology) மார்க்சியத்தைப் பயன்படுத்தியது.

இந்நான்கு காரணங்களும் அவரது சமகாலத்து ஆய்வாளர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியதுடன், பன்முகத் தன்மை கொண்ட ஆய்வாளர் என்ற அடையாளத்தையும் வழங்கியது.

அத்துடன் அவரது வரலாற்றாய்வின் சிறப்புத் தன்மைகளில் ஒன்றாக யூஜினா வனினா என்பவரின் கூற்றும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அக்கூற்று வருமாறு:

               மத்தியகால இந்தியா குறித்த தனது ஆய்வில் கோசம்பி இந்திய வரலாற்றினை வெளி உலகத்­திலிருந்து ஒருபோதும் தனிமைப்படுத்தியது இல்லை. அவரைப் பொறுத்தவரை, இந்திய வரலாறு என்பது மனிதகுல பொது வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்திய வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்கள், ஆளுமைகள், நிகழ்வுகள், இலக்கியப் பிரதிகளை, அவற்றுக்கு இணையான வெளி உலக - எகிப்து, கிரேக்கம், சீனம், ரோம், மத்தியகால மேற்கு ஐரோப்பா - இணைகளுடன் ஒப்பிட்டு அலச கோசம்பி ஒருபோதும் தவறியதில்லை. (பக்கம்100)

+++

இந்நூலின் இரண்டாவது பகுதி, கோசம்பியின் ஒருங்கிணைந்த முறையியலையும் பேசுபொருள்களையும் அறிமுகம் செய்கிறது. கணித அறிவியலாளரான கோசம்பி இந்திய வரலாற்றில் கொண்டிருந்த ஈடுபாடே, அவரை ஒரு வரலாற்றாசிரியராக மாற்றியது என்றால், அவர் மேற்கொண்ட வரலாற்று ஆய்வு அவரை மார்க்சியவாதி ஆக்கியது.

மார்க்சியத்தின் மீது கோசம்பி கொண்டிருந்த ஈடுபாடு பின்வரும் செய்தியால் புலனாகும். சமஸ்கிருத செவ்வியல் கவிஞர் பத்ரஹரியின் கவிதைகள் புத்தகத்தை கோசம்பி பதிப்பித்துள்ளார். அந்நூலை “இன்றைய சமுதாயத்தின் மாபெரும், தன்னிகரற்ற முன்னோடிகளான மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் புனிதமான நினைவுகளுக்கு” என்று எழுதி அம்மூவருக்கும் அர்ப்பணித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களை இரு பிரிவினராகப் பாரக்க இடமுண்டு. முதற்பிரிவினர் அதை ஓர் அறிவார்ந்த முறையியலாக மட்டுமே ஏற்றுக் கொண்டு ஓர் அறிவுப் புலத்தில் செயல்படுபவர்கள். இரண்டாவது பிரிவினர் செயலுக்கான வழிகாட்டியாக அதை ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி என்ற அமைப்புடன் (இயக்கத்துடன்) தம்மை இணைத்துக்கொண்டு களத்தில் செயல்படுபவர்கள். இச்செயல்பாட்டின் போது நடைமுறை உத்தியாக மார்க்சியம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டிலிருந்து தற்காலிகமாக விலகிச் செல்வதும் நிகழும். சிலர் இதை நிரந்தரம் ஆக்கிக் கொள்வதும் உண்டு. இவ்விரு பிரிவினரில் கோசம்பி முதற்பிரிவைச் சார்ந்தவர்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முக்கிய பலவீனமாக இன்றுவரை தொடர்வது இவ்விரு பிரிவினருக்கும் இடையே நிலவும் இணக்கமின்மைதான். பண்பாடு, பண்பாட்டு அரசியல், அடித்தள மக்கள் வரலாறு, இந்திய அரசியலிலும் சமூக இயக்கங்களிலும் முன்னோடிகளாகச் செயல்பட்ட ஆளுமைகள் மீதான மதிப்பீடு (சான்றாக பெரியார், அம்பேத்கர் பற்றிய மதிப்பீடுகள்), சாதி, மதம், மொழி என்பன குறித்த பார்வை என ஆராயவேண்டிய பல்வேறு ஆய்வுச் சிக்கல்கள் இன்று இந்தியச் சமூகத்தில் உருவாகி நிலைபெற்றுள்ளன. இது குறித்த உரையாடலை இவ்விரு பிரிவினரும் இணைந்து நடத்தவேண்டிய வரலாற்றுச் சூழல் இன்று இந்திய அரசியலில் உருவாகியுள்ளது. ஆனால் ‘தலைவனாய் இரு அல்லது தலைவனோடு இரு’ என்ற விருது வாக்கியத்தைப் பின்பற்றும் போலியான  மார்க்சியர்கள் இரு பிரிவிலும் இயங்கி இத்தகைய இணக்கம் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும் அவலத்தை இன்று காண்கிறோம்.

கோசம்பியைப் பொறுத்தவரையில் மார்க்சியத்தை ஓர் ஏணியாகப் பயன்படுத்தியவரில்லை; ‘மூடுண்ட சிந்தனையாக’வும் பார்க்கவில்லை. அவரது மார்க்சியம் என்பது மனித குல வரலாற்றினைத் திட்டவட்டமான ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவியல்முறை ஆகும். மார்க்சிய தத்துவத்தின் ஒரு முக்கிய கூறு ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’ ஆகும். இந்திய வரலாற்றை அவர் ஆராயத் தொடங்கும்போது வரலாற்றுப் பொருள்முதல்வாத முறையியலின் தேவையை வலியுறுத்தினார்.

இந்தியாவில் சாதி அமைப்பும் வர்க்கச் சமுதாயமும், இந்திய நிலவுடைமை முறை, மார்க்ஸ் குறிப்பிட்ட ஆசிய உற்பத்தி முறை என்பன குறித்த கோசம்பியின் கருத்துகளுடன் மார்க்சியர்கள் உடன்படவும் மாறுபடவும் இடமுண்டு. இதன் அடிப்படையில் மார்க்சியக் கருத்துநிலைக்குப் புறம்பானவர் என்று அவரை முத்திரை குத்திவிட முடியாது. அல்லது அவருக்கு முன்பே தோன்றியவர் மார்க்ஸ் என்று கால ஆராய்ச்சி செய்து கோசம்பியின் கருத்துக்கள் தவறானவை என்று முடிவு கட்டிவிடவும் முடியாது. தரவுகளின் அடிப்படையில் திறந்த உள்ளத்துடன் ஆராயவேண்டும்.

+++

மார்க்சியம் குறிப்பிடும் அடித்தளம்-மேற்கோப்பு என்ற இரண்டில் பண்பாடு என்பது மேற்கோப்பில் இடம்பெறுகிறது. அடித்தளமே மேற்கோப்பை உருவாக்கும் என்று மார்க்சியம் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால் இதை இறுக்கமான ஒன்றாக மார்க்ஸ் வரையறுக்கவில்லை. பண்பாட்டின் சில கூறுகள் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதும் உண்மை. இதற்குச் சான்றாக ஜோசப் பிளாக் என்பவருக்கு 1890இல் எங்கல்ஸ் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ள பின்வரும் பகுதிகள் அமைகின்றன:

‘....பொருளாதாரக் காரணி மட்டுமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்று யாராகிலும் ஒருவர் சொன்னால் அவர் மார்க்சின் கூற்றைப் பொருளற்ற அரூபமான அபத்தமான சொற்றொடராக மாற்றிவிடுகிறார் என்றுதான் கூறவேண்டும். பொருளாதார நிலை என்பது அடித்தளம். ஆனால் மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த பல்வேறு கூறுகள், வரலாற்றுப் போராட்டங்கள் எத்திசையிலே எந்தப் போக்கிலே செல்லவேண்டும் என்பதில் தமது செல்வாக்கைக் காட்டத்தான் செய்கின்றன. பல நேரங்களில் அப்போராட்டங்களின் வடிவத்தை முடிவு செய்வதில் அவையே முக்கியப் பங்கு வகிக்கின்றன.’

இதுபோன்றே போர்ஜியஸ் என்பவருக்கு 25 சனவரி, 1894இல் எழுதிய கடிதத்திலும் அரசியல், நீதிமுறை, தத்துவம், சமயம், இலக்கியம், கலை என்பன தங்களுக்குள் எதிர்வினை புரிவதுடன் பொருளாதார அடித்தளத்தின் மீதும் எதிர்வினை புரிவதாக எங்கல்ஸ் குறிப்பிட்டுள்ளார். “உற்பத்தி இல்லாமல் வரலாறு இல்லை” என்று குறிப்பிட்ட கோசம்பியும் தமது ‘பண்டைய இந்தியா அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு’(1989) என்ற நூலில் “மக்கள் சமுதாய அமைப்பை நிர்ண­யிப்பது பொருளாதார சக்திகள் மட்டுமே என்று கூறுவதும் போதாது. செல்வ விகிதாச்சாரத்தையொட்டி முன்னேற்றம் நடந்தே தீரும் என்ற அவசியம் ஒன்றுமில்லை. அப்படிச் சொல்வது உண்மையல்ல” (பக்கம்:17) என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த இடத்தில் ஆங்கிலேய மார்க்சியர் இ.பி. தாம்சனின் ‘பண்பாடு இல்லாமல் உற்பத்தி இல்லை’ என்ற கூற்றும் நினைவில் கொள்ளத்தக்கது.

இவ்வகையில் கோசம்பியின் வரலாற்றாய்வு என்பது பண்பாட்டுக் கூறுகளை ஒதுக்கிப் புறந்தள்ளி விடும் ஆய்வல்ல. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்வுகளையும் அவர் கூர்மையுடன் அவதானித்துள்ளார். சடங்குகள் அவற்றில் பயன்படுத்தும் கலன்களில்கூட வரலாறு மறைந்துள்ளதை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

இன்று பண்பாடு என்பதைக் கூறத்தகாத ஒரு சொல்லாக மாற்றும் முயற்சியை மார்க்சியத்தின் பெயரால் சிலர் முன்னெடுக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்நூலாசிரியர் மார்க்சியச் சிந்தனையாளரும் வகுப்புவாதத்திற்கு எதிரான கருத்துநிலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவருமான கே.எம். பணிக்கரின் பின்வரும் கூற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்:

‘மார்க்சிய வரலாற்றியலில் பண்பாட்டாய்வுக்கு ஒப்பீட்டளவில் உரிய கவனம் அளிக்கப்படவில்லை எனில், அதனை வகுப்புவாதம் தன்வயப்படுத்திக் கொள்வதும், பண்பாட்டு ஆய்வில் ஏகாதிபத்தியம் மேலாதிக்கம் செலுத்திவிடுவதும் மிக எளிதாகிவிடும்’(பக்கம்:100).

இம்மேற்கோள் ஓர் எச்சரிக்கை மணி என்பதை இன்றைய இந்திய அரசியல் சூழலை அறிந்தவர்கள் நன்கு அறிவர். இன்றைய அரசு பெருமுதலாளிகளுக்கான அரசு. ஆனால் பல்வேறு சமுகப் பிரிவினரின் ஆதரவைப் பெற்ற அரசு. இந்த ஆதரவைப் பெற அவர்கள், கையாளும் கருவியாக இந்துமதமும் அது சார்ந்த சனாதனச் சிந்தனைகளும் அமைந்துள்ளன. பண்பாடு என்ற பரந்த களத்திற்குள் அடங்குவதுதான் சமயம். எனவே சமயம் சார்ந்த அரசியலை விமர்சிக்க பொருளாதார அரசியல் மட்டுமின்றி, பண்பாடு சார்ந்த அரசியலும் தேவைதானே. அரசியலில் முற்போக்காகவும் பண்பாட்டில் பிற்போக்காகவும் எப்படி இயங்க முடியும்?

ஆசிய உற்பத்தி முறை, இந்தியாவில் அடிமை முறை, இந்திய சாதிமுறை என்பன குறித்து அவர் விவாதித்துள்ளார். ‘இந்தியாவில் நிலவிய தன்னிறைவு பெற்ற கிராம கம்யூன் முறைமையே ஆசியமுறை’ என மார்க்ஸ் குறிப்பிடுகிறார் என்பது கோசம்பியின் கருத்தாகும். அதாவது பேரரசுகள் எழுந்தாலும் வீழ்ந்தாலும் மக்கள் கவலைப்படாமல் நிலத்தோடு தமது துயர வாழ்க்கையைத் தொடர்ந்தனர் என்கிறார் (பக்கம்:130). (இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்பது ஒரு தமிழ்ப் பழமொழி). இந்தியாவைப் பற்றி (On India) என்ற நூலில் “தன்னகங்காரம் மிக்க கிராமங்கள்” என்று மார்க்ஸ் குறிப்பிடுவது இதைத்தான். ‘ஆசிய உற்பத்தி முறை இருந்தது. அது இந்தியாவுக்கு மட்டும் பொருந்துவதாக உள்ளது’ என்பது கோசம்பியின் கருத்து (பக்கம்:131).

எஸ்.ஏ. டாங்கே எழுதிய ‘பண்டைக்கால இந்தியா’ என்ற நூல் குறித்த அவரது மதிப்பீடும் (பக்கம்:72), பகவத்கீதையின் தோற்றமும் அதன் நோக்கமும் என்பன குறித்த கோசம்பியின் கருத்துக்களும் (பக்கம்:91-92, 148-152) அவரது நூல்களின் வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அடிமை முறை குறித்த அவரது கருத்துக்கள் முற்றிலும் இறுதியான கருத்துக்கள் அல்ல என்றாலும் சில சான்றுகளின் அடிப்படையில் அறிவுப்பூர்வமான சில முன்மொழிவுகளை அவர் முன்வைத்துள்ளார். அவை விவாதிக்கப்பட வேண்டியவை. ஆவணங்களில் கூறப்பட்ட இடங்களையும் பொருள்களையும் தேடவேண்டும் என்பது அவரது ஆய்வு வழிமுறைகளில் ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறும் பின்வரும் செய்திகள் அவரது ஆய்வு வழிமுறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.

குறிப்பிட்ட ஒரு சமூகப் பழக்கவழக்கம் எப்போது முதல் முதலாகக் குறிப்பிடப்படுகிறது, குறிப்பிட்ட உணவுப் பொருள் அல்லது தொழில்நுட்பம் முதல் முதலில் எப்போது அறிமுகமாகியது ஆகிய தரவுகளைத் தேட வேண்டும். உதாரணமாக, தேங்காய்! தேங்காயை பார்ப்பன பூசாரிகள் காலம் காலமாகப் பயன்படுத்துகிறார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், எந்தப் பண்டைய பார்ப்பனிய ஆவணத்திலும் தேங்காய் குறிப்பிடப்படவில்லை. பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு வாக்கில்தான் மலேயா போன்ற தென்கிழக்கு நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பசுவை புனிதப் பசு என்கிறார்கள். ஆனால், செழித்து வளர்ந்த கங்கைச் சமவெளிச் சேற்றில் நீர் எருமைகளே நன்றாக வளர்ந்து பலனையும் அளித்திருக்க முடியும். புத்தர் காலத்துக்குப் பிறகுதான் இந்த விலங்கு (பசு) முக்கியத்துவம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. இவ்வாறு ஆவணங்களை ஆராய்வதுடன் களப்பணிகளும் தொல்லியல் சான்றுகளுடன் ஒப்பிடுவதும் அவற்றை நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் காலப்பகுப்புச் செய்து அறிதலும் அவசியம் ஆகும்.(பக்:124-125).

கோசம்பியின் வரலாற்றாய்வுகளும் புராண ஆய்வுகளும் தொன்மைச் சிறப்புடைய பண்டைத் தமிழக வரலாற்றாய்வுக்கு வழிகாட்டும் தன்மையன. இந்திய ஒன்றியமானது பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோரும் மொழி பேசுவோரும் உணவுப் பழக்கங்களைக் கொண்டோரும் இணைந்து வாழும் நாடு. எனவே இந்நாட்டின் அரசியல் சமூக வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் ஒற்றை அடையாளத்தை வெளிப்படுத்தும் அல்லது வலியுறுத்தும் நோக்கில் எழுதுவதென்பது தவறான செயலாக அமையும். இத்தவற்றைச் செய்யாமல் காத்துக்கொள்ள கோசம்பியின் வரலாற்று அணுகுமுறை வழிகாட்டியாக அமையும்.

 +++

கோசம்பியின் எழுத்துக்களில் மார்க்சியத்தின் செல்வாக்கு தெளிவாக வெளிப்படுகிறது. இந்திய வரலாற்று வரைவின் போதாமை என்ன என்பது குறித்து “(மார்க்சியர்களாகிய) நம்மைப் பொறுத்தவரை, மனித சமுதாய உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி சக்திகளில் ஏற்படும் அடிப்படைத் தொடர் மாற்றங்களின் காலமுறை வளர்ச்சிப் போக்குகளே வரலாறு ஆகும். இத்தகைய வரலாறு நமக்கு (இந்தியர்களுக்கு) இதுவரை எழுதப்படவில்லை” என்று கூறிச் செல்கிறார் (பக்கம்:128-129). இப்படிக் குறைபடுவதுடன் நின்றுவிடாமல், இந்திய வரலாற்று வரைவில் பின்பற்ற வேண்டிய காலகட்டங்களை வரையறுப்பது தொடர்பாக கோசம்பி முன்வைத்துள்ள கருத்துகளையும் இந்நூலாசிரியர் அறிமுகம் செய்துள்ளார். இப்பகுதிகள் ஆழமான வாசிப்பிற்கு உரியவை என்பதுடன் வரலாற்று வரைவுக்கு வழிகாட்டும் தன்மையன.

இந்திய சமூக அமைப்பு குறித்த ஆய்வில் தவிர்க்க இயலாததாக அமைவது சாதி. இது குறித்த கோசம்பியின் கருத்துகளை இந்நூல் திரட்டித் தந்துள்ளது. சாதிகுறித்த புரிதலுக்கு இவை பெரிதும் உதவும் தன்மையன. சாதியின் தோற்றம் குறித்த ஆய்வுடன் நின்றுவிடும் பொதுவான மரபிற்கு மாறாக சாதி ஏன் தேவைப்பட்டது? அதன் செயல்பாடு என்ன? அதன் விளைவுகள் என்ன? என்ற வினாக்களுக்கு கோசம்பி விடை தேடியுள்ளதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

இந்நூலின் மூன்றாம் பகுதியில், இதுவரை தமிழில் வெளிவராத கோசம்பியின் எழுத்துகளை மொழியாக்கம் செய்து தந்துள்ளார். இந்தக் கட்டுரைகள் அறிவியல், ஆராய்ச்சி, திட்டமிடல், தொழில்நுட்பம் ஆகியன குறித்த கோசம்பியின் கருத்துகளைக் காட்டுகின்றன. இக்கருத்துகள் புதுமையாக உள்ளன.

+++

இத்தகைய சிறப்பியல்புகள் கொண்ட ஓர் ஆய்வாளரை அறிமுகம் செய்யும் நோக்கில் நூல் ஒன்றை எழுதுவது சற்றுக் கடினமான பணிதான். வாய்மொழி வழக்காறுகளைச் சேகரித்து விளக்கம் தருவது போன்று தரவுகளைச் சேகரித்து விளக்கம் தந்து எழுதிவிட முடியாது. ஆழமான வாசிப்பும் தரவுகளைத் தேடிக் கண்டறியும் விடாமுயற்சியும் சேகரித்த தரவுகளை இணைத்துப் பார்க்கும் ஆற்றலும் அவற்றை ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் திறனும் தேவைப்படும் பணி இது.

மேலும் நாம் அறிமுகம் செய்யப்போகும் ஆளுமையின் வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி அவரது பணிகள் குறித்தத் தெளிவான அறிமுகமும் இடம் பெறவேண்டும். வாழ்க்கை வரலாற்றிலேயே வட்டாடிவிட்டு, அரசல் புரசலாக அவரது பணிகளைப் பட்டியலிடுதல் அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றை மேம்போக்காகப் பதிவிட்டுவிட்டு அவரது பணிகளை எவ்வித விளக்கமும் இன்றி பட்டியலிடுதல் ஆகிய, இருவிதமான போக்குகளை நாம் அவ்வப்போது சந்திக்கிறோம்.

இந்நூலாசிரியர் மேற்கூறிய இடர்பாடுகள் எவையும் இன்றி கோசம்பியின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது ஆய்வுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். கோசம்பியின் நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்தறிந்தமை இந்நூலாசிரியரின் எழுத்துகளில் பளிச்சிடுகிறது.

கோசம்பியின் மறைவுக்குப் பின் (1966 ஜூன்) அவரையும் அவரது பணிகளையும் வெளிப்படுத்தும் வகையில், ‘Historical probings : In Memory Of D.D. Kosam­bi’, ‘Essays in Honour Of Late Professor D.D.Kosambi’, ‘The Many Careers Of D.D.Kosambi’ என்ற தலைப்புக்களில் மூன்று தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. ஆங்கில ஆய்விதழ்கள் சிலவற்றில் ஆழமான கட்டுரைகளும் வெளியாகி உள்ளன. இவை எல்லாம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாகக் கிட்டாத தமிழக அறிவுச் சூழலில் இந்நூல் வெளிவந்துள்ளது. இது தீவிர வாசகர்களுக்குப் பயன்தருவது மட்டுமின்றி ஆய்வு மாணவர்களுக்கும் வழிகாட்டும் தன்மையது.

இந்நூலின் தாக்கத்தால் கோசம்பியின் வரலாற்று நூல்களின் வாசிப்புத் தளம் தமிழகத்தில் விரிவடைவதுடன் அவரது வரலாற்று முறையியலை அடியொற்றி தமிழ்ச் சமூகத்தின் வரலாறு எழுதப்படும் என்று நம்புகிறேன். தோழர் மூ. அப்பணசாமிக்கு வாழத்துக்களும் பாராட்டுக்களும்.

டி.டி. கோசம்பியைக் குறித்தும், அவரது ஆய்வுகள் குறித்தும் எளிமையாகவும் அதே நேரத்தில் ஆழமான செய்திகளுடனும் எழுதப்பட்ட இந்நூலுக்கு முன்னுரை எழுதும்படி அன்பிற்குரிய எழுத்தாளத் தோழர் மூ. அப்பணசாமி பணித்ததை எனக்கு வழங்கப்பட்ட மரியாதையாகவே கருதுகிறேன்.

வரலாறு, பண்பாடு, அறிவியல்

டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்

மூ.அப்பணசாமி

விலை: ரூ.400/- | வெளியீடு: ஆறாம்திணை

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்