தமிழ்நாட்டு காலனிய கால வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த வரலாற்றறிஞர் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கை திருவண்ணாமலையில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கடந்த 17.12.2023 அன்று நடத்தியது.

சுமார் 30 ஆண்டுகளாக, வரலாற்றுத் துறையில் பணிபுரியும் காலத்திலிருந்தே பல்வேறு வரலாற்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவரது தரவுகளுடன் கூடிய வரலாற்று ஆய்வு நூல்கள் தமிழ்நாட்டில் 2015 வரை பெருமளவில் வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர்களிடம் பரிச்சயம் இல்லாமல் இருந்தது. 2015இல் இருந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் இவரது புத்தகங்களை ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இவரது புத்தகங்கள் தமிழில் கிடைக்கும் நிலை ஏற்பட்டதும், குறிப்பாக 2023 வரை 18 நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளிவந்ததின் காரணமாக பெருமளவு வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் படிக்கத் தொடங்கினர். இவரது நூல்களில் இடம் பெறும் வரலாற்றுத் தகவல்கள் தமிழகச் சூழலில் இதற்கு முன்பு படித்திராத பொருண்மையில் அமைந்திருந்தது.thiruvannamalai varalatru naduvamகாலனிய ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட ஆங்கிலேயர்களின் ஆவணங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆவணக் காப்பக ஆவணங்களின் அடிப்படையில் இது வரை ஆய்வுகள், புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் பிற ஐரோப்பிய மொழிகளான போர்ச்சுகீஸ், டேனிஷ், பிரெஞ்ச் மொழிகளில் உள்ள ஆவணங்கள் போதிய அளவு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. அவை கிடைக்கும் இடம் குறித்தும் அறிமுகமில்லை. இந்த நிலையில் போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுகாரர்கள், டேனியர்கள் இந்தியாவில் காலனிய காலத்தில் இருந்த போது இந்திய மக்களின் சமுகம், வாழ்க்கை, கல்வி, பண்பாட்டு வரலாற்று தகவல்களை தங்கள் தலைமையிடத்திற்கு அனுப்பிகொண்டிருந்தனர். இவர்கள் அனுப்பிய அந்தத் தகவல் குறிப்புகள் முறையே போர்ச்சுகல், பாரிஸ், லண்டன், டென்மார்க் போன்ற நாடுகளின் ஆவணக்காப்பங்களிலும் அருங்காட்சியகங்களிலும் உள்ளன. அவை மிக நீண்ட நாட்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் அந்தந்த ஆவணக் காப்பகங் களுக்கு நேராக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதற்காக தேவையான ஐரோப்பிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார். பிற மொழி கற்பதன் அவசியத்தையும் அவரது ஆய்வுகள் உணர்த்துகின்றன.

இந்நிலையில், தமிழில் வெளிவந்துள்ள இவரது 18 நூல்களும் தனித்துவமான தலைப்புகளில் அமைந்துள்ளது. அந்த நூல்களில் குறிப்பிட்ட சம்பவங்கள், தகவல்கள், புள்ளிவிவரங்கள் தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் புதிய எழுச்சியைக் கொண்டுவந்தது. தமிழக வரலாற்றில் புதிய மற்றும் தவிர்க்க இயலாத இந்த வரலாற்று நூல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக ஒரு கருத்தரங்கம் வைக்கலாம் என்று ஆய்வு நடுவம் முடிவெடுத்து அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியது. திருவண்ணாமலையில் பண்பாட்டு ஆய்வாளர், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த இரா.ப.அண்ணாதுரை அவர்களின் ஊக்கமே இந்த நிகழ்ச்சி நடத்த காரணம். இந்நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தவுடன் ஜெயசீல ஸ்டீபன் நூல்களை மொழிபெயர்ப்பு செய்பவரும் வரலாற்று ஆர்வலரும் எனது நண்பருமான கி. இளங்கோவன் அவர்களை தொடர்பு கொண்டு ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் ஒப்புதலைப் பெற்றோம். அதைத் தொடர்ந்து கருத்தரங்கம் டிசம்பர் 17, 2023 அன்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம. பிரகாஷ், தலைமை ஏற்கவும், திருவண்ணாமலை மகிழம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சீனி.கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டார். ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், அறிமுக உரையுடன் தொடங்கிய கருத்தரங்கில், பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் உழைப்பைப் பற்றியும் அவரது நூல்கள் குறித்தும் பேராசிரியர் பா. ரவிக்குமார் பகிர்ந்துகொண்டார். சென்னையில் கல்லூரியில் பணிபுரியும் முனைவர் சி.இளங்கோ அவர்கள் பேரா.ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் நூல்களின் தாக்கம் குறித்தும், அது எவ்வாறு கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்றும் விரிவாக எடுத்துரைத்தார். நெசவாளர்களும் துணி வகைகளும் என்ற நூல் குறித்து இரா.ப. அண்ணாதுரை அவர்கள் கருத்துரை வழங்கினார்.

ஆங்கில மூலத்தில் உள்ள இந்நூல் தமிழில் குறைந்த அத்தியாயங்களே உள்ளன என்றும் முழுவதுமாக மொழிபெயர்த்தால் அது மிகப் பெரிய வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார். முனைவர் சு. பிரேம்குமார் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் தொழில்மயமாக்கலும், சாதி வளர்ச்சியும் என்ற நூல் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார். இந்நூலில் ஏராளமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் சில தகவல்களுக்கான மூலங்களில் இருந்து வேறுபாடுகள் காணப்படுகின்றதென்றும் தெரிவித்தார். பின்னர் மொழிபெயர்ப்பு செய்த கி.இளங்கோவன், சீனு தமிழ்மணி ஆகியவர்கள் தங்கள் மொழிபெயர்ப்பு அனுபவத்தையும் நூல்களின் தன்மை குறித்தும் உரையாடினர். சிறப்பு அழைப்பாளர் சீனு கார்த்திகேயனும் பேராசிரியர் நூல்கள் குறித்தும் அவரது பங்களிப்பு குறித்தும் வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியில், பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் தனது சிறப்புரையை வரைபடங்களின் வழியே வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் போது, தனது ஆய்வுக்கான களங்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார் என்றும் ஆய்வு செய்த பல்கலைக்கழகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஐரோப்பியர் எவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களிலிருந்து மக்களிடம் உள்ள மருத்துவ அறிவு, கல்வி அறிவு உள்ளிட்டவை எவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றன என்றும் விவரித்து கூறினார்.

ஐரோப்பியர்கள் தாம் காலனிப் படுத்தப் போகும் நிலப்பரப்பின் மொழி, பண்பாட்டை எவ்வாறு கற்றுத் தேர்ந்தனர் என்றும் அந்தத் தகவல்களே பின்னாட்களில் அவர்கள் ஆட்சி செய்ய உதவின என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக ஐரோப்பியர் எங்கெல்லாம் ஆளுமை செலுத்த விரும்புகிறார்களே அங்கெல்லாம் அவர்கள் அவ்வூர் வரைபடத்தை முதலில் வரைந்து உள்வாங்கிக் கொள்கின்றனர். பின்னர் படிப்படியாக வளர்ந்து ஆளும் நிலைக்கு உயர்கின்றனர் என்பது குறித்து விவரித்தார். திருவண்ணாமலை, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகள் குறித்த வரைபடங்கள் எந்த அளவிற்கு நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது என்றும் அது எவ்வாறு வரலாற்று ஆய்வுக்கு பயன்படும் என்றும் விவரித்தார். மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்ய சில வழிமுறைகளையும் குறிப்பிட்டு உரையாடினர். எவ்வளவு ஆய்வுகள் செய்தாலும் அதை ஆவணப் படுத்த வேண்டும் என்பது மிக முக்கியம் என்றும் இது வரை தான் ஆய்வு செய்தது கடலில் ஒரு துளி என்றும் இன்னும் ஏராளமான பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்து ஆய்வுகள் தொடரவேண்டும் என்ற விழைவுடன் சிறப்புரையை நிறைவு செய்தார்.

இந்தக் கருத்தரங்கத்திற்கு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலதரப்பிலிருந்தும் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அவ்வரங்கில் புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. கள்ளக்குறிச்சி கல்லூரி மாணவர்கள் அதே இடத்தில் நாணய மற்றும் தொல்லியல் கண்காட்சி நடத்தினர். பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு அரிய விலைமதிக்க முடியாத 5 வரைபடங்களை (Maps) தந்து நெகிழ்ச்சியூட்டினார். இறுதியாக முனைவர் எ.சுதாகர் நன்றியுரை ஆற்றினார். திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய இந்த கருத்தரங்கங்கள் வெற்றிகரமாக நடந்ததுடன் நல்லதொரு வரலாற்று அறிஞரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப் படுத்தியதில் பெருமகிழ்ச்சி கொண்டு தனது பணிகளைத் தொடர்கிறது.

எழுத்தாக்கம்: ச. பாலமுருகன்

Pin It