இந்திய ஒன்றியத்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று "இந்தியத் தொழில்நுட்பக் கழகம் " என்ற ஐ.ஐ.டி.நிறுவனம். 1959ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் தன்னாட்சி பெற்று, ஐ.ஐ.டி கவுன்சில் (அவை ) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இதன் தலைவர்.
இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்த ஐ.ஐ.டியின் உதவிப் பேராசிரியர் விபின், இக்கல்வி வளாகத்தில் சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் இருப்பதாகவும், அதன் கோரத் தாண்டவத்தால் மன உளைச்சல் அடைந்து பணியாற்ற முடியவில்லை என்று சொல்லித் தன்பதவி விலகல் கடிதத்தை இணைய வழியில் அனுப்பியுள்ளார்.
இது இன்று நேற்றையப் பிரச்சனையன்று. உயர்சாதி, தாழ்த்தப்பட்ட பட்டியல் / மலைவாழ் சாதி என்று சாதி அடிப்படையிலும், மத வேறுபாட்டுக் காழ்ப்புணர்ச்சியிலும் மாணவர்கள், ஆசிரியர்களிடையே பார்ப்பனியம் தலைதூக்கி ஆடுவதன் விளைவு இது.
இஸ்ரோ விஞ்ஞானி கேரளத்தைச் சேர்ந்த ரகுவின் மகனான ஆய்வு மாணவர் உன்னிகிருஷ்ணனின் எரிந்த உடல் ஐ.ஐ.டி. வளாகத்தில் கிடந்துள்ளது.
1990களில் கணித மேதை வசந்தா கந்தசாமி உயர் சாதிய ஆதிக்கத்தில் பட்டபாடு சொல்லும் தரமன்று.
2019ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்திப் இதே வளாகத்தில் தற்கொலை செய்துள்ளார். தன் மரணத்திற்குக் காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூவர் என அவரே பதிவு செய்திருந்தார். என்ன நடவடிக்கை எடுத்தனர் ?
இதுவரை இங்கு19 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் வருகைப் பதிவும், மதிப்பெண் குறைவும் எனநிர்வாகம் சொன்னாலும், அது பொருத்தமாகப் படவில்லை.
சாதியம், மதம் என்ற பார்ப்பனிய ஆதிக்கமே இங்கு ஆளுமையில் இருப்பது கண்கூடு, வேதனைக்கு உரியது, கண்டிக்கத் தக்கது.
இதற்குத் தீர்வு காண என்ன செய்யப் போகிறது ஐ.ஐ.டி நிறுவனம் !
- கருஞ்சட்டைத் தமிழர்