தமிழ் மன்னர்கள் முடியுடை வேந்தர்கள் என்றே அழைக்கப்பட்டனர். சேர, சோழ, பாண்டியர்களில் சோழர்களின் ஆட்சிக் காலத்தைப் பற்றிய விவாதம் இப்போது அரங்கேறி வருகிறது. நமது முன்னோர்கள் என்பதற்காகவே போற்றுவதோ அல்லது தூற்றுவதோ இல்லாமல் நடுநிலையோடு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இதனைப் பார்க்க வேண்டும்.
தஞ்சையில் நெடிதுயர்ந்து நிற்கும் பெரிய கோயிலை அடையாளமாகக் கொண்ட இராசராச சோழனின் ஆட்சியைப் பொற்காலம் என்று சிலரும் கற்காலம் என்று சிலரும் பட்டிமன்றம் நடத்துகின்றனர்.
இத்தனைக் காலமாக தமிழ் மன்னர்களின் பெருமைகள் பேசப்பட்டு வருகின்றன. அதனையே நம்பியிருக்கும் தமிழர்கள் மத்தியில் குறைகளைக் கூறும்போது ஆத்திரம் வருவதும் இயற்கைதான்.
அன்று முதல் இன்று வரை தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்படவில்லை. எழுதப்பட்டவை எல்லாம் அரசர்களின் வரலாறுதானே தவிர மக்களின் வரலாறு அல்ல.
மன்னர்களின் வரலாறு என்பதும் போரும், அதன் வெற்றியும் தோல்வியும் மட்டுமே! வெற்றி பெற்றால் மன்னரின் வீர, தீர, பராக்கிரமம் பாராட்டப்படும். அந்த வெற்றிக்காகப் போரிட்டு மடிந்த வீரர்களைக் கண்டு கொள்வதில்லை.
தமிழர் வரலாறுகளைப் பதிவு செய்த கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பேராசிரியர் கே.கே.பிள்ளை மற்றும் டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்கள் இந்தக் கண்ணோட்டத்திலேயே வரலாறுகளைப் படைத்துள்ளனர். அந்தக் குறிப்புகளே தமிழர் வரலாறுகளாகப் பேசப்படுகின்றன.
பண்டைய தமிழ் மன்னர்கள் எடுப்பித்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும், அவர்களின் காலத்திய நாணயங்களும், மன்னர்களின் புகழ்பாடும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்றுக்கு ஆதாரங்களாகக் காட்டப் படுகின்றன. காலப் போக்கில் புதிய ஆவணங்கள் கிடைக்கும்போது வரலாறுகள் திருத்தப்பட வேண்டும்.
சோழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சோழ மண்டலத்தைத் தொன்று தொட்டு ஆண்டுவந்த அரச மரபினர். இவா¢களில் முதல் இராசராச சோழனே தலை சிறந்தவனாகக் குறிப்பிடப்படுகிறான். இவனது காலம் கி.பி. 985-1014.
இவன் இரண்டாம் பராந்தக சோழனுக்கும். பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். இவனது இயற்பெயர் அருண்மொழி வர்மன். இவனது ஆட்சியில் மூன்றாம் ஆண்டு முதல் இவனுக்கு இராசராசன் என்னும் பெயரே வழங்கி வந்தது என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.
இந்நிலையில் இராசராச சோழனின் ஆட்சியைப் பற்றி இயக்குநர் ரஞ்சித் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தமிழ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த ஜூன் 5 அன்று நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் டி.எம்.மணி என்ற உமர் பரூக்கின் நினைவுநாளையட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.
சாதியத்தை எப்படி நீக்குவது? சாதியில்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி போன்றவை பற்றியும், நிலமற்ற மக்கள் குறிப்பாக தலித்துகள் நடத்தப்பட்ட விதம் பற்றிய உமர் பரூக்கின் “செந்தமிழ் நாட்டுச் சேரிகள் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை பற்றியும் அவர் பேசியுள்ளார்.
நமது வரலாறு, பேரரசன் இராசராச சோழனின் ஆட்சிக் காலம் “பொற்காலம்” என்று குறிப்பிடுகிறது. ஆனால் பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் அவனது ஆட்சிக் காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் “கற்காலம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவனது ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் இருந்துள்ளது.
“பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்தத் தகவலை வேறு பலரும் பேசியுள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது கருத்து எந்தச் சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை” என்று அந்த மனுவில் இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.
சோழ மன்னர்களில் முதல் இராசராசன் என்னும் இம்மன்னன் பேராற்றலும், பெரு வீரமும் கொண்டவனாக விளங்கினான்; இவன் ஆட்சியில் சோழ இராச்சியம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அண்டை நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றிமேல் வெற்றி பெற்று நாட்டை விரிவுபடுத்தினான். பாண்டி மண்டலம், சேர மண்டலம், தொண்டை மண்டலம், சங்க மண்டலம், கொங்கு மண்டலம், நுளம்பபாடி நாடு, கலிங்க நாடு, ஈழமாகிய மும்முடிச் சோழ மண்டலம் ஆகியவை அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.
இந்த மாபெரும் வெற்றிக்கு அவன் மகன் இராசேந்திரனும் துணையாக இருந்தான். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் சிறப்புப் பெயர்கள் சோழ மன்னர்களின் மாவீரத்தைப் பறைசாற்றின. கடல் கடந்து சென்று போரிடுவதற்கு மாபெரும் கப்பற்படையும் நால்வகைப் படைகளுக்குத் துணை செய்தன.
சோழ நாட்டின் தலைநகராகிய தஞ்சாவூரில் தன் பெயர் என்றும் நின்று நிலவ வேண்டும் என்பதற்காக மாபெரும் கோயில் கட்டுவித்தான். அது பிற்காலச் சோழர் காலத்துச் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், இராசராசனது பெருமைக்கும், புகழுக்கும், சிவபக்திக்கும் ஒரு கலங்கரை விளக்காகவும், கண்டோர் வியக்குமாறு வான்முட்ட நின்று நிலவுகிறது.
இவையெல்லாம் இராசராச சோழனின் பெருமைகளைப் பறைசாற்றும் ஒரு பக்கம்தான்; அவனது ஆட்சியின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். இராசராச சோழனின் ஆட்சியில் ஆரியப் பார்ப்பனரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.
தமிழ் மன்னர்களாகிய சோழர்கள் ஆரியப் பார்ப்பனர்களுக்குச் சிறப்பிடம் அளித்து அவர்களின் அடிமைகளைப் போல ஆட்சிசெய்துள்ளனர். இராசராச சோழன் உள்பட அனைத்து மன்னர்களின் கதையும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்று வரலாறுகள் கூறுகின்றன.
“தமிழகத்து மன்னர்கள் தமிழகத்தைச் சேர்ந்த அந்தணா¢களிடம் என்ன குறை கண்டனர் என்பது விளங்கவில்லை. இம்மன்னர்கள் ஆயிரக்கணக்கில் வடநாட்டு பிராமணர்களை இறக்குமதி செய்து கோவில்களிலும், கல்வி நிறுவனங்களிலும், மடங்களிலும் அவர்களைப் பணிக்கு அமர்த்தி மரியாதை செய்தனர். பொன்னையும், பொருளையும். குடியுரிமைகளையும் வாரி வழங்கினர்.
பிராமணருக்கு மட்டும் நிலங்களும், கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அகரம், அக்ரஹாரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் எனப் பல பெயரில் இவை விளங்கின. அரசனுடைய ஆணைகள் எதுவும் அவற்றினுள் செயல்படாது. எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், ஆயங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்து முழுவிலக்கு பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது” என்று பேராசிரியர் கே.கே.பிள்ளை தம் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் வரலாற்று அறிஞராகப் போற்றப்படும் ரொமிலா தாப்பர், தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றிய முதல்குறிப்பு இராசராச சோழனின் ஆட்சிக் காலத்தில் வந்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். அவனது காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச்சேர¤யும்; பறைச்சேரியும் இருந்ததை எடுத்துக்காட்டுகிறார்.
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராசராசனின் காலத்தில் தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவம் செல்வாக்குப் பெற்றிருந்தது. அவனது காலத்தில் சமூகக் கட்டமைப்பு வருணாசிரமமே என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
நிலமானது தனியரு பார்ப்பனர்க்குத் தரப்பட்டால் “ஏகபோக பிரமதேயம் எனப்படும். அதுவே பார்ப்பனர் குழுவுக்குக் கூட்டாகத் தரப்பட்டால் “பிரமதேயம்" எனப்படும்.
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், “முதலாம் இராசராசன் மற்றும் இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பிரமதேய கிராமங்களின் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினர்களின் நில உரிமைகள் சுருக்கப்பட்டன” என்று கூறுகிறார்.
“இராசராச சோழனின் 17ஆம் ஆண்டில் (கி.பி.1002) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களில் நிலம் வைத்திருக்கும் பிற வகுப்பினர் எல்லோரும் தங்கள் நிலங்களை விற்றுவிட வேண்டும்.
அவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை வாங்கும் பார்ப்பனர்கள் பணத்தை உடனடியாக அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும். இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது” என்று மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு “தேவதானம்” என்று பெயர். இந்த நிலங்களில் இருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு வருணாசிரமக் கல்வி கற்பிக்கப்பட்டது.
இதுபற்றி நீலகண்ட சாஸ்திரியார் கூறும்போது, “உயர் கல்வியானது சாதி தழுவியே கற்பிக்கப்பட்டது. மடங்கள் - கோயில்களைச் சார்ந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இது பயிற்றுவிக்கப்பட்டது” என்கிறார்.
அவர்கள் படித்ததும், இவர்கள் சொல்லிக் கொடுத்ததும் சமஸ்கிருத நூல்கள். நான்கு வேதங்கள், சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்றவையே பாடத்திட்டங்கள். எனவே சோழர்கள் ஆட்சியில் வேதக் கல்வியே சொல்லிக் கொடுக்கப் பட்டது. தமிழ்க் கல்வியைப் பற்றி ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.
கோயில்களில் தேவாரம் ஓதுவதற்கு ஓதுவார்களை நியமித்தான் என்பதைத் தவிர, மற்றபடி அவனது காலத்தில் கல்விமுறை சமஸ்கிருதமாகவே இருந்தது. கோயில்களிலும் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதமே செல்வாக்குப் பெற்றிருந்தது.
சோழர்களின் காலத்தில் கிராமசபை சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை உத்திரமேரூர் சாசனம் மூலம் அறியலாம். பிராமணர் அல்லாதவர்கள் கிராமசபையில் உறுப்பினராகும் தகுதியற்றவர்கள் என்பதால் பிரமதேயக் கிராமங்களை பிராமணர்களே நிர்வாகம் செய்து கொண்டனர்.
பிற கிராமங்களை நிலப்பிரபுக்களே நிர்வாகம் செய்து கொண்டனர். இந்த இரண்டிலும் தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இவர்கள் பண்ணை அடிமைகளாகவே இருந்தனர். ஊருக்கு வெளியே ஒதுங்கி - ஒடுங்கிக் கிடந்தனர்.
அக்காலத்தில் பெண்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் விற்கப்படு கிறவர்களாகவும், வாங்கப் படுகிறவர்களாகவும் இருந்தனர். கோயில்களில் ‘தேவரடியார்' என்னும் தேவதாசிகள் தொழிலுக்காகவே உருவாக்கப் பட்டனர்.
கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்தது. இராசராசனின் தந்தையாகிய சுந்தர சோழன் மாண்டபோது, அவனது மனைவி வானவன்மாதேவியும் உடன்கட்டை ஏறினாள் என்று கல்வெட்டு கூறுகிறது.
இவ்வாறு சோழ மன்னர்களின் ஆட்சியைப் பற்றி வரலாறுகள் கூறுகின்றன. பயன் பெற்ற உயர்குடியினர் அவர்களைப் பாராட்டுவதும், பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கருத்துகளைக் கூறுவதும் இயல்புதான். இராசராச சோழனைத் தங்கள் சாதியின் மூத்த வழித்தோன்றலாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள் ஆத்திரப்படுவதும் இயற்கைதான்.
மனித வரலாற்றில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சாதிவெறியும் மதவெறியும் தலைதூக்கி நிற்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வருணாசிரமம் இருந்தது ஒன்றும் வியப்பல்ல. இராசராச சோழனின் ஆட்சி பொற்காலமா? கற்காலமா? என்று விவாதம் செய்வது இக்காலத்தில் எரியும் பிரச்சினையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதாகும்.
- உதயை மு.வீரையன்