dhanush karnanவெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருந்த திரைப்படத்தை, சமூகம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருவியாகப் பயன்படுத்தியது திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பு.

பெண்ணுரிமை, சாதிய / வர்க்க ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை என்று சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குத் திரைப்படங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதும் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளிவருவது பெருகிய காலத்தில், சமூகம் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியத் திரைப்படங்கள் வருவது குறைந்தது. அவ்வப்போது ஓரிரண்டு திரைப்படங்கள் வந்தபோதிலும், கமலஹாசனின் ‘தேவர் மகன்’, விஜயகாந்தின் ‘சின்னக் கவுண்டர்’ போன்ற ஆண்ட பரம்பரைப் பெருமைகளைப் பேசிய படங்கள் சமூகத்தைப் பின்னுக்கு இழுத்தன.

எனினும், அண்மைக் காலங்களில் சாதியத்தை, சாதியத்தின் வன்மத்தை வெளிப்படையாகப் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. அசுரன், பரியேறும் பெருமாள் படங்களின் வரிசையில், தற்போது ‘கர்ணன்’ திரைப்படமும் சேர்ந்திருக்கிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் சாதியின் குரூர முகத்தைப் படம்பிடித்துக் காட்டிய இயக்குநர் மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக வெளிவந்திருக்கிறது, கர்ணன் திரைப்படம்.

நடிகர்கள் தனுஷ், லால், யோகி பாபு, அழகம்பெருமாள் ஆகியோர் முக்கியக் கதைமாந்தர்களாக நடித்திருக்கின்றனர். கொடியன்குளம் சாதிக் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதைப் படத்தின் தொடக்கக் காட்சிகளே வெளிப்படுத்துகின்றன.

படத்தில் காட்டப்படும் பொடியன்குளம் கிராமத்தில், பேருந்து நிறுத்தப்படுவதில்லை. இதனால் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கல்வி, மருத்துவம் போன்ற வாழ்வாதாரம் சார்ந்த உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.

ஒரு கட்டத்தில் கொதிப்படைந்த நாயகனும், கிராம மக்களும் பேருந்தைத் தாக்குகின்றனர். இதனையடுத்து, கிராமத்தில் நுழையும் காவல்துறை அராஜகத்தில் ஈடுபடுகிறது. இதற்குப் பின்னால் அதிகார வர்க்கத்தின் ஆணவம் மட்டுமல்லாது, சாதியக் குரூரமும் ஒளிந்துள்ளதைக் காட்டுவதே கர்ணன் திரைப்படம்.

கிராமங்களின் யதார்த்த அழகியலைச் சொல்வதில் இயக்குநருக்கு நிகரில்லை. நாயகனின் வசனங்கள், ஆண்டாண்டு காலமாய்த் தேக்கி வைத்திருந்த ஆற்றாமையை வலியுடன் வெளிப்படுத்துகின்றன. கர்ணன் போன்ற படங்கள் இன்னும் பல வெளிவர வேண்டியது தேவையான ஒன்று. அந்த மட்டிலும் கர்ணன் கொண்டாடப்பட வேண்டிய படம்தான்! ஆனால்….!!!!

சாதிய அநீதிக்கு எதிராக வெகுமக்கள் ஒற்றுமையை வலியுறுத்தாமல், ஒற்றை அடையாளத் திரட்டலை முதன்மைப்படுத்தி, அதற்கு வலிவூட்ட நாயக பிம்பத்தைக் கட்டமைப்பது சாதியொழிப்பிற்கு எவ்வகையில் உதவும்?

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் நடந்த ரணங்களைத் திரைப்படமாகப் பதிவு செய்வது, வரலாற்றில் நடந்த பிழைகளை நினைவுறுத்தவும், பிழைகளிலிருந்து பாடம் கற்க உதவுவதாகவும் இருக்க வேண்டும். அவ்வகையில், இத்திரைப்படம் வரலாற்றைப் பதிவு செய்யும் ஒரு முயற்சி. எனினும் அம்முயற்சி நேர்மையானதுதானா என்ற இடத்தில்தான் நாம் நமது கேள்விகளை முன்வைக்கவேண்டியுள்ளது.

1937-இல் நீடாமங்கலமாகட்டும், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தருமபுரிக் கலவரமாகட்டும், வரலாறு நெடுக ஒடுக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்று போராடியது திராவிட இயக்கங்களே. அந்த வரலாற்றை, பங்களிப்பைச் சாமர்த்தியமாகச் சொல்லாமல் தவிர்ப்பது அல்லது அதை வேறொருவரின் பங்களிப்பாக மட்டுமே காட்டுவது, நேர்மையான படைப்பாளிக்கு ஏற்ற செயலா? அதைச் சொல்லாமல் தவிர்ப்பது மட்டுமன்று, அதற்கு எதிராகவே காட்சிகளை அமைப்பது எந்த வகையில் நியாயம்? புனைவுக் கதையில், ஆண்டு குறிப்பிடப்படுவதும், பின்னர் அதற்கான சமாதானங்களும், சமாளிப்புகளும் அறம் சார்ந்தவைதானா என்பது கர்ணன் பட இயக்குநரின் மனசாட்சிக்கே வெளிச்சம்! பட்டியலினத்தவரை ஏற்றிக் கொள்ள மறுக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்ட நீதிக்கட்சியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியனார் வரலாறு, பேருந்தை மையமாகக் கொண்டு படமெடுத்த இயக்குநருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

அதுமட்டுமன்று. சாதியப் பிரச்சினையை வெறும் பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தவருக்கான பிரச்சினையாகச் சுருக்குவது என்ன விதமான அணுகுமுறை? இதற்கெல்லாம் வேராக – அடிப்படையாக அமைந்திருக்கும் வருணாசிரமத்தை – மனுதர்மத்தை – பார்ப்பனியத்தைப் படைப்பாளி தனது படைப்பில் வெளிப்படுத்தாமல், தொட்டுக் கூடக் காட்டாமல் கடந்து போவது ஏன்? சாதியக் கட்டமைப்பிற்கான அடிப்படையை விவரிக்கும்போது மட்டும் இந்த இயக்குநர்களுக்கு செலக்டீவ் அம்னீசியா (Selective Amnesia) வருவது ஏன் என்று விளங்கவில்லை. ஆனால் சிவசாமிகளைக் காப்பாற்ற ‘வேணுகோபால் சேஷாத்திரி’கள்தான் அவதாரம் எடுக்கின்றனர் (அசுரன்).

உண்மையான வரலாறு மட்டுமே காலம் கடந்தும் நிலைத்திருக்கும். திரிபுவாதங்கள் காற்றோடு கரைந்து போகும். வரலாறை மக்களுக்குச் சொல்ல முனைபவர்கள் இதை உணர வேண்டும்.

தோழமைச் சக்திகளையே எதிரெதிராக நிறுத்துவது பார்ப்பனியத்திற்கு வழக்கமான ஒன்று. கர்ணன்களுக்குக் கிருஷ்ணன் தேரோட்டியாக முயற்சிக்கும் காலமிது. கர்ணன்கள் சுதாரிப்பது நல்லது!

- வெற்றிச்செல்வன்

Pin It