annamalai 309“முளைத்து மூன்று இலை விடாத “ என்பது போல், அரசியலுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கூட ஆகாத அண்ணாமலை, இன்றைக்குத் தமிழ்நாட்டு அரசியலில் மிக மோசமான முன் வடிவங்கள் பலவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவை ஆளும் ஒரு கட்சிக்கு மாநிலத் தலைவராக இருக்கும் அவர், கவனமாகப் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, கண்ணியக் குறைவாகப் பேசாமலாவது இருக்க வேண்டும். ஆனால் அவர் உதிர்க்கும் சொற்கள் எல்லாம் அநாகரிகமாகவும், அடாவடித்தனமாகவும் உள்ளன!

ஓரிரு நாள்களுக்கு முன்னால், அவரைக் கண்டித்துச் சென்னையில் ஊடகவியலாளர்கள் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களைப் பேட்டி எடுத்த ஒரு தொலைக்காட்சி நெறியாளர், “பல்லுப்படாமல்" கேள்வி கேட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். கொச்சையான இன்னொரு பொருளைத் தரும் அந்தத் தொடரை ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் எப்படிப் பயன்படுத்தலாம் என்று கேட்டதற்கு, அண்ணாமலை சொல்லி இருக்கிற விடை இன்னும் மோசமாக இருக்கிறது!

எங்கள் ஊரில் எல்லாம் இப்படிப் பேசுகிற பழக்கம் உண்டு என்று சொல்லி இருக்கிறார். எந்த ஊரில் அப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை! தான் பொது இடத்தில் கேவலமாகப் பேசிவிட்டு, தான் பிறந்த ஊரையும் தேவையில்லாமல் இங்கே அவர் கேவலப்படுத்தி இருக்கிறார். இதற்கு அந்த ஊர் மக்களும் அவரைக் கண்டிக்க வேண்டும்.

அப்படியே அது ஊர் வழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் எதனை எங்கே பயன்படுத்தலாம் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தலைவரும் இது

தங்கள் ஊர்ப் பழக்கம் என்று கொச்சையாக பேசத் தொடங்கினால், அது எங்கே போய் முடியும்? தமிழ்நாட்டின் பொது மேடைகளும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளும், கொச்சையான இடத்திற்கான எடுத்துக்காட்டாக தானே ஆகிவிடும்!

இதற்காக வருத்தம் தெரிவிப்பீர்களா என்று கேட்டபோது, மன்னிப்பு கூந்தல் எல்லாம் கேட்க முடியாது என்று விடை சொல்லி இருக்கிறார்!

எவ்வளவு திமிர்! எவ்வளவு ஆணவம்!!

அண்ணாமலையைப் போல், ஆணவத்தில் தலை வீங்கி ஆடிய ஆயிரம் பேர்களை வரலாறு பார்த்து இருக்கிறது!

கண்ணியம் மிக்க அறிஞர் அண்ணா போன்றவர்களைத்தான் காலம் நினைவில் வைத்துக் கொள்ளும். கண்ணியம் இல்லாத அண்ணாமலைகளை விசிறி அடித்து விடும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It