நிலஅமைப்பு, இனம், மொழி, பண்பாடு, நாகரிகம் என்று பன்மை நிலையில் ஒன்றுபட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தை இந்துத்துவா என்ற ஒரே சர்வாதிகாரக் குடையின்கீழ் கொண்டுவர சனாதன பா.ஜ.க முயன்று வருகிறது.
அதற்காக மக்கள் அறிவு பெற்றுவிடக் கூடாது, சிந்தனை பெற்றுவிடக் கூடாது என்று மதத்தையும், கோயிலையும் காட்டி, கல்வியைப் பின்னுக்குத் தள்ளி வருகிறது இன்றைய ஒன்றிய அரசு.
மதவாக, பாசிச, சர்வாதிகார பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதனால் எதிர்க்கட்சிகளால் வலிமையான ‘இந்தியா’ என்ற கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் சில தவறான விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையும் உண்டாகிறது.
நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்று பேசுவதும், பிரதமர் வேட்பாளர் பெயராகத் தன் பெயரைச் சொல்லவில்லை, அதனால் மீண்டும் ‘தாமரை’யைத் தூக்கப் போகிறேன் போன்ற தொலைக்காட்சி செய்திகள் எதிரிகளுக்குச் சாதகமாகவும், மக்களைச் சோர்வடையச் செய்யும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
எந்த ஒரு நிறுவன அமைப்பும் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்காது. அவைகளைக் கூடிப் பேசி நல்ல முடிவுக்கு வரவும் வழி இருக்கிறது.
நாட்டுக்காக, மக்களுக்காக பொதுவாழ்க்கையில் இருக்கும் தலைவர்களிடம் பொதுநலன் மட்டுமே இருக்கும்.
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்து விடக்கூடாது.
இன்னும் 3 மாதங்களில் வரும் தேர்தல் வாழ்வா? சாவா? என்ற உயிரின் வாதையில் இருக்கிறது.
ஓங்கிக் குரல் கொடுப்பதைவிட, கூடிப் பேசி பா.ஜ.கவை வீழ்த்துவதே ‘ராஜதந்திரம்’.
- கருஞ்சட்டைத் தமிழர்