இரண்டு ஆண்டுகளுக்கு முன், 31.12.2017 அன்று, தான் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்றும், அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தன் கட்சி போட்டியிடும் என்றும், அதனைப் போர் வரும்போது அறிவிப்பேன் என்றும் ரஜினி சொன்னார்.
அடுத்து என்ன நடக்கும் என்று அப்போது தந்தி தொலைக்காட்சியில் இருந்த பாண்டேவிடம் கேட்டனர். "அவ்வளவுதான், இனி ரஜினி சைலன்ட் மோடுக்குப் போய் விடுவார். அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்துவார்" என்றார் பாண்டே.
அதுதான் நடந்தது.
இப்போது மீண்டும் நேற்று (05.03.2020) தன் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களைச் சந்தித்த பின், ஊடகவியலாளர்களிடம், "இன்று மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு மிக நன்றாக நடந்தது. ஆனாலும் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்தான். அது என்னவென்று நேரம் வரும்போது சொல்கிறேன்" என்று ஒரு எதிர்பார்ப்பை (திரைப்படங்களில் வருவது போல ஒரு சஸ்பென்ஸ்) ஏற்படுத்திவிட்டு, அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு விட்டார்.
அவருக்கு என்ன ஏமாற்றம் நேர்ந்திருக்கும் என்று எல்லா ஊடகங்களும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
நோக்கம் நிறைவேறி விட்டது.
மக்களுக்கு அன்றாடம் ஆயிரம் சிக்கல்கள் வாழ்வில் ஏற்படுகின்றன. பொருளாதார வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பு, குடியுரிமைச் சட்டம் ஏற்படுத்தப் போகும் எதிர்காலச் சிக்கல்கள், சாதிய மோதல்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ரஜினிக்கு எது ஏமாற்றம் தந்திருக்கும் என்பது குறித்து ஊடகங்கள் கவலைப்பட்டு, மக்களையும் கவலைப்பட வைத்துள்ளன.
ஊடகங்களில் ஆளுக்கொன்று பேசினார்கள். எதுவும் உண்மையில்லை. யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
ஆனால் தன் வலையொளியில் (YouTube) பாண்டே 26 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியதுதான் உண்மையாக இருக்க முடியும். என்ன காரணம்? எப்படிப் பாண்டேயை மட்டும் நம்புவது? அவருக்கு மட்டும் எப்படி எல்லா உண்மைகளும் தெரிந்து விடும்?
விடை எளிது. "ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யுறான்" என்பதே விடை. இது ஒரு நாடகம். இவர்கள் எல்லோரும் நடிகர்கள். ரஜினியை வாயசைக்கச் சொல்கிறார்கள். பாண்டேயைப் பொழிப்புரை எழுதச் சொல்கிறார்கள்.
இது ஒரு பச்சைப் பார்ப்பன நாடகம். இதில் பாண்டே போன்றவர்களுக்கு ஒரு முக்கியப் பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தமிழருவி மணியனை வைத்துச் சொல்லச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் தனக்கு கொடுக்கப்படும் 30 நிமிடங்களில், கொஞ்சம் ‘ஓவர் ஆக்ட்' செய்து, 10 நிமிடங்கள் தன்னைப் பற்றி பேசி விடுவார். 50 ஆண்டு காலப் பொதுவாழ்வில், தான் ஒரு செப்புக் காசு கூட யாரிடமும் வாங்கியதில்லை என்பது குறித்தும், தனக்குப் பதவியில் ஆசையில்லை என்பது குறித்தும் அவரால் பேசாமல் இருக்க முடியாது. அதற்கெல்லாம் நேரமில்லை. இது ஒரு குறும்படம். எனவே இயக்குனர்கள் அதனை அனுமதிக்க முடியாது. பாண்டேதான் நல்ல நடிகர். இதற்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்திருப்பார்கள்.
சரி, பாண்டே சொன்ன பொழிப்புரை என்ன?
ரஜினி மூன்று வினாக்களைக் கூட்டத்தில் முன்வைத்தாராம்.
1) வரும் தேர்தலில் 60-65 விழுக்காடு இளைஞர்களுக்குத்தான் வாய்ப்பு தரப்படும். நீங்கள் போட்டியிட வாய்ப்பில்லை என்றால், அதனை ஏற்றுக் கொள்வீர்களா?
2) தேர்தல் முடிந்தவுடன், மாவட்டச் செயலாளர் போன்ற மிக முக்கியமான சில பதவிகளைத் தவிர மற்ற அனைத்தும் கலைக்கப்பட்டு விடும். இது உங்களுக்குச் சம்மதமா?
3) முதலமைச்சர் பதவிக்கு இன்னொருவரை நியமித்து விட்டு, நான் கட்சித் தலைவராக மட்டும் இருந்து கொண்டு, ஆட்சியையும், கட்சியையும் இயக்குவேன். ஏற்றுக் கொள்வீர்களா?
முதல் இரண்டு கேள்விகளுக்குச் சரி என்று சொன்னவர்கள், மூன்றாவது கேள்விக்கு ஒரு மனதாக முடியாது என்று சொல்லி விட்டார்களாம். அதுதான் ரஜினிக்கு ஏமாற்றமாம்.
பாண்டே தந்திருக்கும் பொழிப்புரை இதுதான், இதன் உட்பொருள், பொதுமக்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ மட்டுமில்லை, நேற்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் தெரிந்திருக்காது என்பதே உண்மை.
அதாவது, பதவியை விரும்பாத, தியாகத்தின் திருவுருவமான ரஜினிகாந்த், புறவாசல் வழியாகச் சர்வாதிகாரியாக விரும்புகிறார் என்பதே இதன் பொருள். இது இதுவரையில் நடக்காத புதுமை என்கிறார் பாண்டே. பன்னீர்செல்வத்தை முன்னால் நிறுத்தி, ஜெயலலிதா பின்னால் இருந்து நடத்திய ஆட்சியை நாம் எப்போதோ பார்த்து விட்டோம். அது நீதிமன்றத்தால் ஏற்பட்ட நிர்ப்பந்தம். இது தந்திரம்!
இதனை மன்றப் பொறுப்பாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும், பிறகு ஏன் இந்த நாடகம்? ‘பதவியும் வேண்டாப் பண்பாளர்' என்று ஒரு காட்சி அமைத்து, ரஜினியின் தியாக பிம்பத்தை இன்னும் சற்று உயர்த்துவதற்காகத்தான்!
எல்லாம் சரிதான், ஆனால் அடுத்த முதலமைச்சர் யாரென்பதை, ரஜினியோ, பாஜகவோ, பாண்டேயோ முடிவு செய்ய முடியாது. அதனைச் சரியான முறையில், சரியான நேரத்தில் தமிழக மக்கள் முடிவெடுப்பர்கள்!