கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகார பூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. (‘தி ஸ்க்ரால்’ பத்திரிகையில் கல்பனா சர்மா எழுதிய கட்டுரை)

காஷ்மீரில் உள்ள புல்வாமா என்னும் ஊரில் பிப்ரவரி 14 அன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 40 ரிசர்வ் காவல்துறை வீரர்களின் மரணத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கியமான ஊடகங்கள், குறிப்பாக தொலைக்காட்சி செய்திகள், இதுவரை எட்டாத உற்சாகத்தையும் பரவசத்தையும் அடைந்துள்ளன.

இது ஆபத்தானதாக இல்லாமல் இருந்தால், வியப்பானது என்று சொல்லி ஒதுக்கிவிடலாம். ஆனால், ஊடகங்களின் இந்தப் போக்கு தேர்தல் காலத்தில் அதீதமான தேசியவாதத்திற்கான தீனியைப் போட்டிருக்கிறது. இந் நிகழ்வின் உடனடி எதிர்வினை என்பது காஷ்மீரிகள் மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் – மீதான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் பிறரின் தாக்குதலாகும்.

வரப்போகும் தேர்தலில் இது முக்கியமாகக் கருதப்படும். ஏற்கெனவே, பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா உட்பட பலரது வாக்குமூலங்களின் மூலம், புல்வாமா தாக்குதலை முடிந்த வரையில் அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முதலில், புல்வாமாவிலும் பிறகு பிப்ரவரி 26 அன்றும் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏன் ஊடகங்கள் அடிப்படைக் கேள்விகளைக்கூட கேட்காமல், குறிப்பிட்ட “ஆதாரங்களில்” இருந்து கிடைத்த துண்டுத் தகவல்களை மீண்டும் பெருகச் செய்தன?

எடுத்துக்காட்டாக, புல்வாமா தாக்குதல் நடந்த அன்று, ஊடகங்களுக்கு அந்தப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. தாக்குதல் நடந்த இடங்களின் தெளிவற்ற படங்களே கிடைத்தன. ஊடகங்கள் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் பதில்களைச் சார்ந்து இயங்கின.

இருப்பினும், அதிகார பூர்வமான ஒரு சந்திப்பிற்கு முன்பே, ஊடகங்களின் சில பகுதிகளில் வெடிபொருட்களின் அளவு குறித்த செய்திகள் வெளியாயின. இது 350 கிலோ முதல் 80 கிலோ, 35 கிலோ என்று குறைந்தது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் நிறம், அது எங்கே தயாரிக்கப்பட்டது என்பன போன்ற தகவல்களும் வெளியாயின.

தடயவியல் சோதனைகள் செய்யப்படாதபோது, இத்தகவல்கள் எப்படிக் கிடைத்தன? யாருமே இதைக் கேட்கவில்லையா? இத்தகவல்கள் நிச்சயமாக நம்பகமானவையாக இருந்திருக்காது. எனவே, ஆதாரங்கள் கிடைத்து அவை ஆராயப்படுவதற்கு முன்பு இம்மாதிரி செய்திகள் வெளியிடப்படக்கூடாது. ஆனால், முன்பு நடந்தது போலவே, இந்திய ஊடகங்கள் அவநம்பிக்கையை நிலவச் செய்து, ஆராயப்படாத, முரணான, அன்றைய அரசிற்கு ஏற்றதான ஊகிக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டிருக்கிறது. நம்பகமான ஊடகங்கள், இவ்வகையான ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு சற்று யோசித்திருக்கும்.

எதிர்பார்த்தபடியே, பிப்ரவரி 25 அன்று, தடவியல் சோதனைகளுக்குப் பிறகு, பல ஊடகங்கள் சொன்னதுபோல அது விளையாட்டு பயன்பாட்டுக்கான வாகனம் கிடையாது என்றும், மாருதி எக்கோ வேன் என்றும், 30 கிலோவிற்கு அதிகமான வெடிபொருள் அதில் இல்லையென்றும் தெரிய வந்தது.

மேலும், உளவுத் துறை தோல்வியடைந்துவிட்டது என்று பேசப்பட்ட போதும், ஊடகங்கள் அதுதான் உண்மையா என்று தெரிந்து கொள்ள முற்படவில்லை. எதிர்க்கட்சிகள்கூட, தேசதுரோகிகள் என்று சொல்லப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக இருந்துவிட்டனர். எனவே, புல்வாமா தாக்குதல், டெல்லிக்கு உடல்கள் கொண்டு வரப்படுவது, அதைத் தொடர்ந்து இறுதி சடங்கு சம்பந்தமான சில புகைப்படங்களுடனும் முடிந்து விட்டது. ஏன் குடும்பங்கள் சடங்குகளைச் செய்வதற்குக் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வியைக்கூட ஊடகங்கள் கேட்கவில்லை. அதன் பிறகு, பிப்ரவரி 26 அன்று அதிகாலையில், இந்திய விமானப் படை, ஜைஷ்-இ-முகம்மதின் பயிற்சி முகாம் இருப்பதாகக் கூறப்படும் மலை உச்சியில் 1000 கிலோ வெடிகுண்டைப் போட்டதாகச் சொல்லப்படுகிறது.

அன்றைய காலையில், ஒரு விரிவான அதிகாரபூர்வ சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், கவனமாக எழுதப்பட்ட விஷயங்களை வெளியுறவு செயலாளர், விஜய் கோகலே வாசித்துக் காட்டினார். அதை அவர் வாசித்து முடித்ததும், எந்த கேள்விகளும் அனுமதிக்கப்படவில்லை. அடிப்படையான கேள்வியான, அவர் சொன்ன பாலகோட் என்பது பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ளதா அல்லது ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்திலுள்ளதா என்ற கேள்விகூட அனுமதிக்கப்படவில்லை.

அதிகாரபூர்வ அறிக்கை எத்தனை பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப் பட்டனர் என்பதைக்கூடச் சொல்லவில்லை. ஆனாலும் சில மணி நேரங்களில், நம் ஊடகங்கள் 300, 350, ஏன் 600 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தன. அத்தனை பேர் கொல்லப்பட்டிருந்தால், பாகிஸ்தான் அமைதியாக இருந்திருக்குமா என்பதைக்கூட யாருக்கும் கேட்கத் தோன்றவில்லையா? வானிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை எப்படி நம் ஊடகங்களுக்குத் துல்லியமாகத் தெரிந்தது? அது ஒருவேளை தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஜெய்ஷ் முகாமாக இருந்தால், அங்கு தீவிரவாதிகள், வேலையாட்கள் உட்பட அனைவரும் அங்கே இருந்தனரா? அங்கு உள்ளூர் பொது மக்கள் யாரும் அங்கே வேலையில் இல்லையா? அவர்கள் இறந்து போயிருந்தால், பாலகோட்டைச் சுற்றியுள்ள நகர் மற்றும் கிராமப் புறங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்காதா? இப்படிப் பல அடிப்படைக் கேள்விகள் உள்ளன.

பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான், இந்திய விமானப் படைகளுக்கு இடையில் நடந்த சிறு போரின்போது இந்திய விமானம் கீழே விழுந்து, விமான ஓட்டுநர், விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானால் பிடிக்கப்பட்டதில் பால்கோட் தாக்குதல் சம்பவம் குறித்த கேள்விகள் காணாமல் போயின. அதீதமான தேசிய பற்றுடன் பேசிக் கொண்டிருந்த செய்தியாளர்களை இந்தச் சம்பவம், சில மணிநேரம் அமைதி அடையச் செய்தது.

பைலட் கைது சம்பந்தமான செய்திகூட, பாகிஸ்தானிடமிருந்துதான் வந்தது. எதிர்பார்த்தபடியே, இந்திய அதிகாரிகள் இதை முதலில் மறுத்தனர், பிறகு, ஒரு சிறிய சந்திப்பில் வெளியுறவுத் துறை பேச்சாளர் ரவீஷ் குமார் இதைத் தெரிவித்தார். ஏர்வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர், இச் சந்திப்பின்போது குமாருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த போதிலும் பேசாதது மர்மமாகவே இருக்கிறது.

முந்தைய நாளில் நடந்த சந்திப்பைப் போலவே, எந்தக் கேள்வியும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், இந்தியா நடத்திய தாக்குதலுக்கும், பாகிஸ்தானின் எதிர்வினைக்கும் இடையிலான 48 மணிநேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட எந்தவொரு மூத்த அதிகாரியும் அரசின் சார்பில் அதிகாரபூர்வமான செய்தியை வெளியிடவில்லை. மாறாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தொலைக்காட்சி சந்திப்புகளை நடத்தி அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

வேண்டுமென்றே, அதிகார பூர்வ தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிக அளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்கு இந்திய அரசு பதிலளிக்காமல் இருக்கிறது. பொய்யான செய்திகள் அதிக அளவில் பரவும் இந்நேரத்தில், அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து பின்வாங்கி, அரைவேக்காட்டுத் தனமான தகவல்களைப் பெயர் குறிப்பிடப்படாத சில “ஆதாரங்களின்” அடிப்படையில் வெளியிடுவது, மன்னிக்கவே முடியாத செயல்.

இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம்: சிக்கலான நேரத்தில் கேள்விகளைக் கேட்டால் ஊடகவியலாளர்கள் தேச துரோகிகள் ஆகிவிடுவார்களா? இதற்கான பதில் இதுதான்: ஏன் ஊடகவியலாளர்கள் தங்கள் “தேசியவாத” அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்? ஊடகவியலாளர், தன் அரசியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, சுதந்திரமாகவும், ஆர்வத்துடனும் இருக்க வேண்டும். இதில் அவர் “தேசத்திற்கு” ஆதரவாக இருக்கிறாரா, இல்லை ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக இருக்கிறாரா என்பது முக்கியமில்லை.

அதீதமான தேசியவாதம் எந்த அளவிற்கு ஊடகங்களைத் தாக்கியிருக்கிறது என்றால், முதன்மையான தொலைக்காட்சி செய்தியாளர்கள் இந்திய விமானப் படைக்கான ஆதரவைச் சமூக வலைதளங்களில் தெரிவித்து அதன் மூலம் தங்கள் நிலையை வெளிப்படுத்த முயன்றனர். சுதந்திரமான ஊடகத் துறை இருக்கும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், ஆயுதப் படைகளின் மகிமையைப் பாடுவதோ, “எதிரிகளின்” இரத்தம் குறித்து பேச வேண்டியதோ பத்திரிகையாளரின் வேலை அல்ல. இந்திய ஊடகத் துறை, கட்டுப்பாடே இல்லாத எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டது என்பதில சந்தேகமில்லை.