நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றபின்னர், இந்துத்துவ வெறித்தனங்கள் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன.

பல்வேறு பண்பாடுகள், மொழிகள் கொண்ட மக்கள் வாழும் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் மதச் சார்பின்மையை நீக்குவதற்கான முயற்சி, மதம் மாறத் தடை, மாட்டிறைச்சி உண்ணத்தடை, சமஸ்கிருதம் - இந்தி மொழித் திணிப்பு, சிறுபான்மை மக்கள் மீதும் தொடர்ந்து கொண்டு இருக்-கும் தாக்குதல்கள் இவை மோடியின் ஆட்சிக்கு எடுத்துக்காட்டுகள்.

இவை ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது, காவிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தாலி குறித்த ஒரு விவாதத்திற்கு எதிராகப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதல் - சன் தொலைக்காட்சி விவாத நெறியாளர் வீரபாண்டியனுக்கு எதிரான காவிகளின் நடவடிக்கை - இவை போன்றவைகள் எல்லாம், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரானவைகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஊடகங்களை எச்சரிப்பதாகவே உள்ளன.

மார்ச் 23 அன்று பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங். அது குறித்து அவரின் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர், அந்நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதை அருவெறுப்பாகக் கருதுவதாகக் கூறியிருக்கிறார்.

ஊடகங்கள் இதை விமர்சித்தன. இதில் என்ன தவறு இருக்கமுடியும்.

இதைத் தாங்கிக்கொள்ள முடியாத வி.கே.சிங், ‘ஊடக விபச்சாரிகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்’ என்று பேசியிருக்கிறார்.

இதன்மூலம் பெண்களை (பாரத மாதாக்களை) விபச்சாரி என்ற சொல்லால் இழிவுபடுத்தும் சிங், அதை ஊடகங்களின் மீதும் ஏற்றிச் சொல்லியிருப்பதில் எந்த அளவு இந்துத்துவ வெறி தலைவிரித்தாடுகிறது என்பது தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின்போது, மோடி அலை என்று ஏகமாக ஊடகங்கள் பேசின. அவை அப்போது காவிக் கும்பலுக்கு ‘கற்பு’குரிய ஊடகங்களாகத் தென்பட்டன. இன்று விமர்சனம் செய்யும்போது அவை விபச்சார ஊடகங்களாக மாறிவிட்டன.

உலகை ஆரியக்குடையின் கீழ்க் கொண்டுவருவேன் என்று சொன்ன ஹிட்லரின் பாசிச வெறிக்கும், இந்து வெறிக் காவிகளின் பேச்சுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அதைத்தான் கண்டனத்திற்குரிய வி.கே.சிங்கின் “விபச்சாரப்” பேச்சு எடுத்துக்காட்டுகிறது.

Pin It