இந்தியாவில் இருப்பதைவிட அயல்நாடுகளுக்குச் செல்வதில் மும்முரம் காட்டிவரும் நரேந்திரமோடி, இப்பொழுது பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இரயில்வே, நவீன நகரங்கள், விண்வெளி ஆய்வு, புவியியல் ஆய்வு, அணுமின்நிலையம், எரிசக்தி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட மொத்தம் 17 ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந் முன்னிலையில் கையெழுத்தாகியிருக்கின்றன.

subramanian swamy 225முக்கியமாகப் பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரகப் போர் விமானங்களை இந்தியா வாங்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறது-.

இது குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் மனோகர் என்ன சொல்கிறார்?

“பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு இந்தியா எடுத்த முடிவு மிகச்சிறந்ததாகும். இந்திய விமானப்படையை வலுப்படுத்த இம்முடிவு பெரிதும் உதவும்.

இந்த விமானங்களை வாங்குவதற்கான நடைமுறைகள் பல ஆண்டுகள் தாமதமாகி வந்தன. இந்த நடைமுறைகள் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கின. ஆனால் பல்வேறு குழப்பங்கள் காரணமாக அவை இன்னமும் முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் தற்போது பிரதமர் மேற்கொண்டுள்ள முன்முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

விமானப்படையில் உள்ள உடனடி இடைவெளியை நிரப்ப, இந்த 36 விமானங்களும் தேவைப்படுகின்றன. இந்தியாவின் தேவைக்கேற்ப அவற்றை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. அவற்றின் விலை 700 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது பாரம்பரிய எதிரிகளைவிட இந்தியா கூடுதல் வலுவுடன் திகழ இத்தகைய ரபேல் ரக விமானங்கள் அவசியம்”

கோவா மாநிலம் பனாஜியில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், 11.04.2015 அன்று பி.டி.ஐ. செய்தியாளரிடம் இப்படிப் பேசியிருக்கிறார்.

அதாவது 36 ரபேல் ரகப் போர்விமானங்கள் வாங்கும் மோடியின் ஒப்பந்தம் வரவேற்கத் தக்கது, மகிழ்ச்சி அளிக்கிறது என்ற பாராட்டுப்பத்திரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சரே வழங்கிவிட்டார்.

பிரச்சினை தீர்ந்ததா என்றால் இல்லை. இவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பிவிட்டார். பெயர் சுப்பிரமணியசாமி.

இந்த ரபேல் ரக விமானங்கள் மிக மோசமானவை. இதை வாங்க எந்த ஒரு நாடும் முன்வராது.

சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த விமானங்களை வாங்க முன்வந்தன. ஆனால் பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டன.

நமது பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்தும் இதேபோலத்தான் இருக்கிறது.

என்னுடைய எச்சரிக்கையையும் மீறி ரபேல் ரக விமானங்களை இந்தியா வாங்கினால், நான் (உச்ச) நீதிமன்றத்திற்கே போவேன். இது ஒரு கறைபடிந்த ஒப்பந்தம். இதனால் கட்சியின் பெயரும் கெட்டு விடும் - இதுதான் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள செய்தி.

அவர் ஒன்றும் சாதாரண மனிதர் இல்லை. மோடி, பாரிக்கர் அங்கம் வகிக்கும் அதே பாரதிய, ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ள தலைவர்.

பிரதமர் மோடி ஒன்றை (ஒப்பந்தம்)ச் செய்கிறார். பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் பாராட்டுகிறார். பா.ஜ.க. மூத்த தலைவர் சு.சாமி எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிக்கிறார்.

பா.ஜ.க.வில் ஒரு நடைமுறை இருக்கிறது. அக்கட்சியில் ஒருவர் தெரிந்தே ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வார். மக்களிடம், அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பிவிட்டால், “அது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்று தப்பித்துக் கொள்வது.

இப்பொழுது சுப்பிரமணிய சாமியின் இந்தச் செய்தி பா.ஜ.க.வின் கருத்தா? அல்லது அவரின் தனிப்பட்ட கருத்தா?

கள்ளப்பாலைக் குடிக்கும் பூனைகளைப் பற்றிச் சாமிக்குத் தெரியாதா என்ன?

இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கட்சியில் யாரும் சொல்ல முடியாத அளவுக்குக் கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார், நான் நீதிமன்றம் செல்வேன் என்று.

குறைந்தபட்சம் சுப்பிரமணிய சாமியிடம் கேட்டுக்கொண்டாவது மோடி பாரீஸ் போயிருக்கலாம். அவருக்கு என்ன சனித்திசையோ - ராகு காலமோ - எமகண்டமோ யாருக்குத் தெரியும் என்கின்றனர் பா.ஜ.க.வினர்.

மத்தியில் பா.ஜ.க. தனித்து ஆட்சி நடத்துகிறது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் குழப்பம் - மோசடி - கோமாளித்தனம் ஆகியனவற்றின் கூட்டணி ஆட்சிதான் அங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

Pin It