அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் பொருரளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கான 10% EWS இட ஒதுக்கீட்டை ஒன்றிய அமைச்சரவை 7 ஜனவரி 2019 அன்று ஏற்றுக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச வரம்பை தாண்டுவதாகும். ரூ 8 லட்சத்திற்கும் கீழ் ஆண்டு வருமானம் உள்ள பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் இந்த இட ஒதுக்கீட்டில் பயன்பெறலாம். இதை சட்டப்பூர்வமாக்க ஒன்றிய பாஜக அரசு அரசியலமைப்புத் சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஜேபியின் தாய்க் கழகமாகிய RSS சமீபத்தில் (2018) நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பிஜேபியின் தோல்விக்கு பிஜேபியின் மேல் உயர் சாதியினருக்கு ஏற்பட்ட அதிருப்தி தான் காரணம் என்று அறிக்கை விட்டது. RSS அமைப்பின் அறிக்கையைப் பின் தொடர்ந்து பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் பிஜேபி 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது. அதில் சட்டிஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்தது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை (SC, ST Act 1989) மேலும் கடுமையாகியதின் விளைவாக உயர் ஜாதியினரிடம் இருந்த செல்வாக்கு சரிந்ததே இந்த தோல்விக்கு காரணம் என்று RSS வலியுறுத்தியது.modi amit and yogiபட்டியலின, பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தனது தீர்ப்பின் (2018, மார்ச்) மூலம் உச்சநீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்தது. பட்டியலின மக்களின் ஒன்று திரண்ட போராட்டம் காரணமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யும் விதமாக ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் ஒன்றை (2018, ஆகஸ்டு) செய்தது.

RSSன் மனக்கசப்பை நீக்கத் தான் இந்த ஏற்பாடா?

மோடி அரசின் இந்த நகர்வு உயர் ஜாதி வாக்காளர்களை அமைதிப்படுத்த மட்டுமில்லை, சங்கப் பரிவாரத்தையும் சமாதானம் செய்யவும் தான்.

ST, SC, OBC மக்களிடையே ஹிந்துத்துவ தத்துவத்தை RSS பரப்ப முயற்சித்தாலும், சங்கப் பரிவாரத்தின் மேல் கட்டுமானம் இன்னமும் உயர் ஜாதியினர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவில் வரும் உயர்சாதி ஏழைகளுக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது RSS அமைப்பின் நீண்ட நாள் கோரிக்கை. 2015 ஆம் ஆண்டில், RSS அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது, பொருளாதார அடிப்படையில் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அப்படி பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் அது தற்பொழுது ஜாதி அடைப்படையில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை பயனற்றதாக ஆகி விடும். மேலும் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தடுத்து விடும்.

ஒரு கட்சி விரிந்து வளர்ந்து வரும் போது ஏற்படும் பிரச்னையை தான் இன்று பிஜேபி சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக, இதற்கு முன்னர் முக்கியத்துவம் கொடுக்காத, ஒடுக்கப்பட்ட மக்களை ஓட்டுக்காக தன்னுடன் இணைத்து கொள்ள முயற்சிக்கிறது.

தன்னுடைய சித்தாந்தத்தையும் வாக்கு அரசியலையும் ஒன்றிணைத்து, பட்டியலின, பழங்குடியினரின் நலன்களையும், தனது பாரம்பரிய வாக்கு வங்கியான உயர் ஜாதியினரின் ஆதரவையும் ஒன்றிணைக்க நினைத்த பாஜகவின் முயற்சி வீணாகி விட்டது.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பிறகு, RSS அமைப்பு பிஜேபிக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியது 'உயர் ஜாதியினருக்கு பிஜேபியின் மீதான ஏமாற்றத்தை பாஜக தலைமைக்கு RSS தலைமை தெரியப்படுத்திய போதும் அதை சரி செய்வதற்குரிய எந்த பரிகாரத்தையும் பாஜக செய்யவில்லை' என்று RSS தலைவர்கள் சொன்னதாக ஹிந்து நாளிதழில் (டிசம்பர் 15 2018) செய்தி வந்தது. 2018 ஆம் ஆண்டு ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அமித் ஷா கூட்டிய ஒரு பெரிய கட்சி கூட்டத்தில் RSS அமைப்பிற்கு மிக நெருக்கமான பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் சிலரும் இது குறித்து பேசி இருக்கிறார்கள் என்றும் மேற்சொன்ன ஹிந்து நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் நோட்டாவிற்கே அதிக வாக்குகளை கிடைத்திருப்பது, உயர் ஜாதியினருக்கு பிஜேபியின் மேல் இருக்கும் கோபமே காரணம் என்று RSS அமைப்பு நம்புவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர் ஜாதியினரின் மீதான பிஜேபியின் காதல் வெட்டவெளிச்சமாக இருந்த போதிலும், மோடி அரசால் 10% EWS இட ஒதுக்கீடை கொண்டு வர முடியாது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்த இட ஒதுக்கீடை கொண்டுவந்து விடலாம் என்று அரசு நினைக்கிறது. மேலவையில் பாஜகவிற்கு போதுமான ஆதரவு இல்லை. மேலும் எதிர் கட்சிகள் 10% EWS இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வாய்ப்பில்லை.

கவர்ச்சிகரமான ஏமாற்று மட்டுமே, மக்கள் நலனல்ல பாஜகவின் நோக்கம்

அரசின் இந்த முடிவு, இட ஒதுக்கீடை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என இரு துருவங்களாக பிரிப்பதற்கு தான் உதவும். அப்படி பிளவுடும்போது ஒன்றிய பாஜக அரசை சிக்கலுக்கு உள்ளாக்கும் பல விஷயங்களில் இருந்து மடைமாற்ற 10% EWS இட ஒதுக்கீடு உதவும்.

வேலையின்மை, கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வாதரப் பிரச்சனைகள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், ரபேல் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் மாறிமாறி பிரதமரை கேள்விகள் மூலம் துளைக்கிறார்கள்.

உண்மையில், தற்பொழுது இருக்கும் SC, ST, OBC இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றாத நிலையிலும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் இல்லாத நிலையிலும், ஒன்றிய பாஜக அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட பிரிவினரை வகைப்படுத்துவதில் மோடி அரசு சுணக்கம் காட்டியது என்று கூறி NDA கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் சம்தா கட்சியைச் சார்ந்த ஒன்றிய அமைச்சர் உபேந்திரா குஷ்வாலா டிசம்பர் 10 2018 அன்று ராஜினாமா செய்தார்.

'OBC மக்களை முறையாக வகைப்படுத்தும் கொள்கையை வடிவமைக்க நீதியரசர் G ரோஹிணி தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழு இன்னும் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் அரசு OBC மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்றே தெரிகிறது. இதனால் OBC மக்களுக்கிடையே அச்சமும் குழப்பமும் நிலவுகின்றன' என்று தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இட ஒதுக்கீடு பலன்களுக்காக OBC பிரிவுக்கும் உள்ள துணைப்பிரிவுகளை வகைப்படுத்துவதற்காக 2017 இல் அமைக்கப்பட்ட நீதிபதி ரோகினி கமிஷனுக்கு 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான்காவது நீட்டிப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்க உருவாக்கப்பட்ட Roaster அடிப்படையிலான புதிய தேர்வு முறையில் உள்ள குழப்பத்தால், உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சட்டபூர்வமான நிலைத்தன்மை

'இந்த 10% EWS இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதா சட்டப்பூர்வமாக நிறைவேறாது. பல தடைக்கற்களை அரசு சந்திக்க வேண்டியதாக இருக்கும்' என அமராவதி SRM பல்கலைக்கழக பேராசிரியரும் வழக்கறிஞரும் ஆகிய V கிருஷ்ணா ஆனந்த் உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் பலர் கூறுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 340 இன் படி, ”சமூகரீதியிலும் கல்வியிலும் பின் தங்கிய பிரிவினருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்”. அதாவது இட ஒதுக்கீடு ஒரு வகுப்பாருக்கு மட்டும் தான் வழங்கப்படுமே அன்றி ஒரு வகுப்பிற்குள் இருக்கும் ஒரு சிறு குழுவிற்கு வழங்கப்பட மாட்டாது.

இந்திய சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகள் இணைந்து, இறுதியாக இந்திரா சஹானி வழக்கில் 50% உச்ச வரம்பை இட ஒதுக்கீடு தாண்டக்கூடாது என்ற இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதை மீறி, இந்த புதிய 10% EWS இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வர வேண்டுமெனில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 15,16, 340 ஆகியவற்றை அரசு திருத்த வேண்டும். அப்படியே அவற்றை மாற்றினாலும் கூட அது நீதித்துறையின் மறு ஆய்வுக்கு உட்படுத்தப் படும்.

'கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பில் உறுதிப்படுத்தியது போல, இந்த புதிய 10% EWS இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டை மீறுகிறதா என்று உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும். அரசியலமைப்பு நிர்ணய சபையில் நிகழ்ந்த விவாதங்களை கருத்தில் எடுத்துக்கொள்ளும். அந்த விவாதங்கள் அனைத்தும், சமூக, கல்வி ரீதியான பின்தங்கிய நிலையின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமே தவிர பொருளாதார அடிப்படையில் அல்ல என்பதை தெளிவாக எடுத்துரைக்கும்.

மண்டல் குழுவின் அறிக்கையில் பொருளாதார நிலை கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் தனித்த அளவு கோலாக அல்ல. மாறாக ஏனைய அளவுகோல்களில் ஒன்றாகத்தான் பொருளாதார நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தியாவில் விதிவிலக்காக தமிழ்நாட்டில் மட்டும் தான் 50% உச்சவரம்பை தாண்டி 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்திரா சஹானி வழக்கிற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதால், நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

2011 ஆம் ஆண்டில் , UPA ஆட்சியில் கல்வி நிறுவனங்களிலும் அரசுத் துறை வேலைவாய்ப்புகளிலும் OBC வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 விழுக்காட்டில் 4.5 விழுக்காட்டை தனியாகப் பிரித்து மதச் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடாக வழங்க முயன்ற போது பிஜேபி காங்கிரஸ் அரசை குடைந்தெடுத்தது. சச்சார் கமிட்டி இஸ்லாமியர்களின் பின் தங்கிய நிலையை ஆராய்ந்து அறிக்கை வழங்கியது. அதைப் பின்புலமாக வைத்து காங்கிரஸ் உள் இட ஒதுக்கீடு தந்தாலும், ஆனாலும் காவி நிற பாஜக கட்சி இஸ்லாமியர்களை கவரும் வகையில் இந்த உள் ஒதுக்கீடு இருக்கிறது என பெரும் பிரச்சினையை கிளப்பி, ஒன்றிய அரசு வழங்க இருந்த இட ஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்கியது.

உயர் ஜாதியில் உள்ள ஏழைகள் குறித்த எந்த ஆதாரமும் ஆய்வும் கணக்கெடுப்பும் மோடி அரசிடம் இல்லை. ஆனாலும் ஒன்றிய அரசு அவர்களுக்கு வழங்கும் 10% EWS இட ஒதுக்கீட்டை பிஜேபி தலைவர்கள் வரலாற்று சாதனையாகப் பார்க்கிறார்கள். ஆனாலும் காவிக் கட்சியின் அரசியல் கொள்கை முரண்பாட்டை நாடே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: scroll.in (2019, ஜனவரி 8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா

Pin It