முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசுவதே ‘தேச விரோதம்’ - ‘ஆன்டி நேஷனல்’ என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடு கிறார்கள். இவர்கள் பேசும் ‘தேசபக்தி’ வரையறைக்குள் ஆர்.எஸ்.எஸ். வருகிறதா?

AGNooraniமொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசினாலே ‘தேச விரோதிகள்’ - ‘ஆன்டி இண்டியன்’ என்று எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ஓலமிடுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். மட்டுமே ‘தேச பக்தி’ கொண்ட அமைப்பு என்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற ‘தேசபக்த’ நெருப்பில் புடம் போட்டு வந்தவர்கள் என்று பூணூலை உருவுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் பேசுகிற தேசபக்தி என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் தேசியக் கொடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பதுதான்.

சரி, அந்த அளவுகோலின்படியாவது இவர்கள் தேச பக்தர்கள் தானா? இல்லை என்பதே இதற்கான பதில். இது குறித்து ஆய்வாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ‘டான்’ இதழில் எழுதிய கட்டுரையை ‘டெக்கான் குரோனிக்கல்’ ஏடு (செப். 29, 2014) வெளியிட்டுள்ளது.

பார்ப்பன ‘தேச பக்தி’ முகத்திரையைக் கிழித்தெறியும். அக்கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவத்தை இங்கே தருகிறோம்.

“இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா வழியாக மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது.

ஆனால், “இந்திய அரசியல் சட்டத்தை புறக்கணிக்கிறோம்; இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறையையும் நாங்கள் ஏற்கவில்லை” என்று ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தியுள்ள அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் வழியாகவே இப்போது ஆர்.எஸ்.எஸ். தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறது.

விசுவ இந்து பரிஷத் செயல் தலைவராக இருக்கும் அலோக்குமார் அண்மையில் ஒரு மாநாட்டில் பேசும் போது, “இந்தியாவின் அடையாளம் பண்பாடு ‘இந்து’ என்பதுதான். இதை சீர்குலைக்கும் நோக்கத்தோடு கட்டாய மத மாற்றங்கள்  நடக்கின்றன. இந்த மதமாற்றங்களைத் தடை செய்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இந்திய அரசியல் சட்டம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று தெளிவாகக் கூறுகிறது. ஆனாலும், அரசியல் சட்டத்தை மதிக்கஇவர்கள் தயாராக இல்லை. ‘இந்தியா’ இந்துக்களுக்கான நாடாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள். அரசியல் சட்டம் ஒருவர் விரும்புகிற மதத்தை ஏற்கலாம் என்று வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை (பிரிவு 25) மறுக்கிறார்கள்.  மூவர்ண இந்திய தேசியக் கொடியை தேசியக் கொடியாக ஆர்.எஸ்.எஸ்.  ஏற்கவில்லை. ‘பஜ்வாதுவாஜா’ என்று அவர்கள் அழைக்கும் காவிக் கொடியை மட்டும் அங்கீகரித்து அதையே ‘குரு’வாகவும் அடையாளப்படுத்துகிறார்கள்.

குருவாக இவர்கள் அடையாளப்படுத்தும் காவிக் கொடிக்குத்தான் பெரும் தொகை நன்கொடையாக ‘குரு தட்சணை’ என்ற பெயரில் வாங்குகிறார்கள் இந்த ‘குருதட்சணை’க்கு தாராளமான வரிச் சலுகைகள் வருமான வரித் துறையால் வழங்கப்பட் டுள்ளது. அவர்கள் இந்திய தேசியத்தை மறுத்து இந்து தேசியத்தையே தங்களிடம் அடையாள மாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் தேசியக் கொடியை நிராகரிப்பதன் வழியாக அரசியல் சட்டத்தையும் அவமதித்து வருகிறார்கள்.

1993 ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்திய அரசியல் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று அறிவித்ததோடு தாங்கள் விரும்பும் தேசம் எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்பதற்கான திட்டங்கள் மற்றும் யோசனைகளையும் அந்த வெள்ளை அறிக்கை முன் வைத்தது. அந்த வெள்ளை அறிக்கைக்கு சுவாமி ஹிரானந்த் ஒரு அணிந்துரை எழுதியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“இந்தியாவின் அரசியல் சட்டம், நாட்டின் பண்பாடு, குணாம்சம், சூழல், சூழ்நிலைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தச் சட்டம் அன்னிய நாட்டுச் சார்புடையது.... நம்முடைய பொருளாதாரம் நீதி, நிர்வாக அமைப்புகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால், இந்திய அரசியல் சட்டத்தை முதலில் முடக்கி செயல்படுத்தாமல் தடுக்க வேண்டும். இந்த சட்டத்தை முழுமையாக புறந்தள்ள வேண்டும்” (It had to be discarded completely).

200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த கேடுகளை இந்திய அரசியல் சட்டம் இழைத்துள்ள கேடுகளோடு ஒப்பிட்டால் பிரிட்டிஷார் இழைத்த கேடு சொற்பம்தான். ‘பாரதத்தை’ இந்தியாவாக மாற்றும் சதி தொடர்ந்து கொண்டிருக்கிறது. (The damage done 200 years long rule of the British is negligible as compared the harm done by our constitution. The conspiracy to convert Bharath into India Continue.).

மேலும் அந்த ஆர்.எஸ்.எஸ். வெள்ளை அறிக்கைக்கான அணிந்துரையில் அவர் எழுது கிறார்: “உலகம் முழுதும் நாம் ‘இந்தியர்களாக’ அடையாளப்படுத்தப்படுகிறோம். ஆனால் நமது சுதந்திரப் போராட்டத்தை இந்து மதத்தின் அடிப்படையில் தான் நடத்தினோம். ‘வந்தே மாதரம்’ தான் நமது தேசிய கீதமாக இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியா நமது இந்துஸ்தானையும் வந்தே மாதரத்தையும் வெளியேற்றி விட்டது” என்று எழுதினார்.

அரசியல் சட்டத்தை முற்றாக ஒழித்தாக வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறது.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1992 டிசம்பர் 25ஆம் தேதி மசூதி இடிப்புக்கு முன்னிலை வகித்த சுவாமி முக்தானந்த் என்பவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் இவ்வாறு கூறினார்.

“இந்துக்களுக்கு எதிரான அரசியல் சட்டத்தை நாம் நிராகரிக்க வேண்டும். இந்த நாட்டின் சட்டங்களில் நமக்கு முழுதுமாக நம்பிக்கை இல்லை. நமது புனிதமான சாதுக்கள் நமது புண்ணிய பூமியில் சட்டத்தைவிடவும் மேலானவர்கள் இந்தியாவின் குடிமக்கள் அனைவரையும் இயற்கையான குடிமக்களாகவும் சமமானவர்களாகவும் நமது அரசியல் சட்டம் கூறுவது, ஒரு ஏமாற்று வித்தை.” (humbug)

1993 ஜனவரி மாதம் அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ராஜேந்திர சிங் இவ்வாறு கூறினார். “இந்தியா, எனும் பாரதம் என்று சட்டம் கூறுகிறது. நாம் அதை ஏற்க முடியாது ‘பாரத், எனும் இந்துஸ்தான்’ என்று தான் நாம் கூற வேண்டும். அரசு ஆவணங்கள் நம்முடையது பன்முகக் கலாச்சாரம் என்று கூறுகிறது. ஆனால் நம்முடைய கலாச்சாரம் நிச்சயமாக பன்முகக் கலாச்சாரம் அல்ல (Official documents refer to the composite culture, but ours is certainly not composite culture).

1993 ஜனவரி 24இல் அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி அரசியல் சட்டம் மாற்றப்பட்டாக வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அவர் வெளியிட்ட ஒரு பிரசுரம். “இந்தியாவின் பண்பாடு வரலாறு தெரியாத மேற்கத்திய நாட்டுக்காரர்களால் உருவாக்கப்பட்டதே இந்திய அரசியல் சட்டம்” என்று கூறியது. நமது அரசியல் சட்டம் முழுதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இவை எல்லாம் முக்கிய காரணிகளாகும் என்று எழுதியுள்ளார்.

அதே நூலில் முரளி மனோகர் ஜோஜி, பட்டியல் இனப் பிரிவு, பழங்குடிப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைக் கடுமையாகக் கண்டித்தார். “அரசியல் சட்டம் ஒரு குப்பைத் தொட்டி. அது குப்பைகளின் குவியல்; தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமைக்கு அரசியல் சட்டமே எதிரி” என்றும் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோதி அதில் எழுத்துபூர்வமாக பதிவு செய்தார் என்று ஆதாரங்களோடு எழுதியுள்ளார் ஏ.ஜி. நூராணி.

இந்திய அரசியல் சட்டம் தேசியக் கொடி பற்றி இப்படி வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ள பார்ப்பனர்கள்தான் உரிமைக்குக் குரல் கொடுத்தால் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள் - இதுதான் பார்ப்பனர்களின் இரட்டை வேடம்.                  

Pin It