பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த தாலி அகற்றும் மற்றும் மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்குத் தடை விதித்திருக்கிறது நீதி மன்றம். அதற்குக் காரணமாகச் சமூக ஒழுங்கு கெட்டு விடும் என்கிற தன்னுடைய சமூக அக்கறையை(?) வெளிப்படுத்தியிருக்கிறது.

veeramani 340ஒருவருடைய கருத்தை மறுப்பதற்கும்,நிகழ்ச்சியினை விமர்சிப்பதற்கும் இந்த சனநாயக நாட்டில் எல்லோருக்கும் இடமிருக்கிறது.சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ஒரு நிகழ்ச்சியைத் தடை செய்ய நீதிமன் றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.ஆனால், இந்த அதிகாரங்கள்,உரிமைகள் எல்லாம்,மக்களின் தன்மானத்தைப் பாதுகாக்கவும்,பாதுகாப்பாக வாழ்வதற்காகவும்தானே இந்திய அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப் பட்டது. அதற்கு மாறாக, முழுக்க முழுக்கச் சர்வாதிகாரிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத் தவும்,நிலவுடைமைச் சிந்தனையைப் பேணி காப்பதற்காகவும்தான் இந்தச் சட்டங்கள் பயன்பட்டு வருகின்றன என்பதையே இது போன்ற தடைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தச் சட்டம் எவ்வளவு உயர் வானதாக, மக்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதிபடுத்தும் வகையில் இருந்தாலும்,அதைப் பயன்படுத்துபவர்கள் ஆதிக்க உணர்வோடு இருப்பார்களேயெனில் இந்தச் சட்டம் மக்களுக்குப் பயனில்லை என்று பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் சொன்னது எத்தகைய உண்மை என்பதை நீதிமன்றத் தீர்ப்புகளும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன.

சமூகத்தில் சாதி,மத, இன அடிப் படையில் பாகுபாடு காண்பிக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவு 15(1). வேலைவாய்ப்பில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவு 16 (1). இந்தப் பிரிவுகளைக் காரணம் காட்டியே இடஒதுக்கீடு கூடாது என்று வாதிட்டவர்கள் நமது எதிரிகள்.ஆகவே, இந்த அதிகார வர்க்கம் சமூக ஒழுங்கு கெட்டு விடும்,சமூக நல்லிணக்கம் பாதிக்கும் என்று கூச்சலிட்டால், சமூக மேம்பாட்டிற்கு மிகப் பெரிய பின்னடைவு வரப்போகிறது என்று பொருள்.

தாலி என்பது இந்து மதத்தின் அடையாளம். ஆகையால், இந்துக்களின் மனங்களைக் காயப்படுத்தும் என்கின் றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 25 முதல் 28 வரை மதச்சுதந்திர உரிமை குறித்துப் பேசுகின்றன.இந்தச் சட்டத்திற்கு எதிராகவே இந்து அமைப்பினர் எப்போதும் பேசுவர்.

தாலி அகற்றும் போராட்டம் எந்த வகையில் இந்து மதத்தைப் பாதிக்கிறது? இந்தப் போராட்டம் எந்த இந்துவின் மீதும் தீண்டாமையைத் திணிக்கவில்லை, எந்த இந்துவையும் வேசி மகன் என்று சொல்லவில்லை, எந்த இந்துவையும் கருவறைக்குள் வரக்கூடாது என்று கூறிக் கடவுள் வழிபாட்டு உரிமையை மறுக்கவில்லை.

குறிப்பிட்ட சாதியைத் தவிர பிற இந்துக்கள் அனைவரும் சூத்திரர்தான் என்பதை அழுத்திச் சொல்லும் பூணூல் அணியும் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதே!.

97 விழுக்காடு இந்து மக்களை அவமானபடுத்தும் ஆவணி அவிட்டம் என்னும் பூணூல் அணியும் விழாவை எந்த இந்து அமைப்பும் விமர்சிக்க மறுக்கிறதே ஏன்? இந்து அமைப்புகளிடம் இதற்கு நியாயமான பதில் இருக்கிறதா?

kolathoor mani 249தாலி பெண்களின் உரிமை என்பது சிலரது வாதமாக இருக்கிறது. இதை விட அபத்தம் எதுவும் இல்லை.ஏனென்றால்,எந்தப் பெண்ணிற்கும் தன் தாலியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை.அவள் கழுத்தில் எந்த வடிவில் தாலி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவள் பிறந்த சாதிதான்.தாலியை ஏற்றுக் கொள்ளும்போதே சாதிய அமைப்பை ஒரு பெண் ஏற்றுக் கொள்கிறாள்.திருமணத்தின் போது அறியாமையில் தாலி அணிந்தவர்கள் பின்னர், சுயமரியாதை உணர்வு பெற்று, அதனைக் கழற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டாமா? தாலி அணிவது பெண்களின் உரிமை என்றால் தாலியைக் கழற்ற வேண்டும் என்று பெண்கள் நினைப்பதற்கும் உரிமை உண்டு என்பதை இந்த ஆணாதிக்கச் சமூகம் உணர மறுக்கிறது. இந்த அடிமைச் சின்னத்தை அகற்றும் விழாவினைத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்ததில் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது? இந்த விழாவிற்குத் தடைவிதிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? பெண்ணிற்குத் தாலி வேண்டாம் என்று தீர்மானிக்கக் கூடிய உரிமை பெண்ணிற்கு இல்லையா?. தாலி பெண்ணடிமைச் சின்னம் என்று பரப்புரை செய்யும் உரிமை திராவிடர் கழகத்திற்கு இல்லையா?தமிழனாக, பெண்ணாகப் பிறந்ததால், அடிமையாகப் பார்க்கும் சனாதனப் பார்வையை விமர்சிக்கப் பெரியாரியச் சிந்தனையாளர்களுக்கு உரிமை இல்லையா? திராவிடர் கழகத்திற்கு வழங்கிய இந்தத் தடை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 க்கு எதிரானது.

97 ஆம் ஆண்டு ஆந்திர அரசு வழங்கிய தீர்ப்பு, தனிமனிதன் கண்ணியத்துடன் வாழ்வதை, பிரிவு 21 உறுதி செய்கிறது என்று கூறியிருக்கிறது.ஆக,பெண்கள் தன்மானத்துடன் வாழ்வதை வெளிப் படையாகத் தடுக்கிறது இந்தத் தடை. பெண்களிடம் வரதட்சனை வாங்குவது சட்டப்படி குற்றம்.அதே போல், தாலி என்கிற அடிமைச் சின்னத்தை அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் குற்றம்தான். குடும்ப வன்முறைச் சட்டத்தில் இந்த மதவாத அமைப்பு களின் மீது வழக்குப் பதிய வேண்டும். உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தினால்தான் வன்முறை என்று பொருள் இல்லை. உளவியல் ரீதியாகப் பெண்ணை அடிமை யாகச் சித்தரிக்கும் ஆணாதிக்கப் பொது புத்தியும் வன்முறையே.

இந்துக்கள் என்று வகைப்படுத்து வதில்,பட்டியல் சமூக மக்களும் அடங்குவர். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களின் அடித்தளம் என்று இந்துத்துவ அமைப்புகள் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றன. அப்பேர்ப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில், ஒரு கோடி ஆதிதிராவிடர்கள் (பறையர்கள்), 40 இலட்சத்திற்கும் குறையாத அருந்ததியர்கள் அடக்கம். இந்த இரண்டு சமூக மக்களும் இயல்பாக மாட்டிறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உணவுப் பண் பாட்டை இழிவுபடுத்தும் வகையில், மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கின்றன இந்துத்துவ அமைப்புகள். தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாடே இந்த மண்ணின் பண்பாடு என்பதை உணர்த்தும் வகையில், திராவிடர் கழகம் மாட்டிறைச்சி உண்ணும் விழாவினை நடத்துகிறது. இதில் யார் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை இந்துக் களாகத் தங்களைக் கருதுபவர்கள் சிந்திக்க வேண்டும். ஆக, இந்து தாழ்த்தப் பட்டவர்களையும், இந்துப் பெண்களையும் இழிவுபடுத்தியது இந்து அமைப்புகள்தான். பெண்களின் தன்மானத்தை நிலை நாட்டுவதற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உணவுப் பண்பாடே உழைக்கும் மக்களின் பண்பாடு என்பதைப் பறைசாற்றும் விதமாகவும் இந்த விழாவினை நடத்தத் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. தன்மான உணர்வு கொண்ட பெண்களும்,விடுதலை உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்டோர்களும் அணி திரண்டு போராட வேண்டிய தருணம் இது.

Pin It