ஆர்எஸ்எஸ் ஆளுநர் ஆர் என் ரவியே வெளியேறு! போட்டி அரசாங்கம் நடத்தாதே! ஒன்றிய அரசே ஜிஎஸ்டி வரிமுறையை கைவிடு!! மாநில அரசுகளின் வரி அதிகார உரிமையை பறிக்காதே!! பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம், இடது ஜனநாயக சக்திகளை வலுப்படுத் துவோம். என்ற முழக்கத்துடன், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, தமிழக ஆளுநர் மாளி கையை, வருகின்ற ஜூலை 16ஆம் தேதி, முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த புரட்சிகர ஜனநாயக சக்திகளுக் கும் தமிழக மக்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது.

governor ravi 253தமிழக சட்டமன்றம் நிறை வேற்றிய 20 மசோதாக்கள், தீர் மானங்கள் ஆளுநர் கையொப்பம் இடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒன்றிய பாசிச மோடி அரசு, தமிழக சட்டமன்றத்தை வெறுமனே மசோதா இயற்றக்கூடிய மன்றமாக ஆளுநர் வழியாக அழிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையில் பெயரளவில் இருக்கின்ற அரைகுறை கூட்டாட்சி வடிவங்களை ஒழித்துவிட்டு ஒரு பாசிச சிறுகும்பல் ஆட்சியின் கீழ் அனைத்தையும் கொண்டு போவதற்காக நாடாளுமன்ற சனநாயகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் தூக்கி வீசி வருகிறார்கள். அதைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு ஆளுநர் ரவியை முகவராக ஒன்றிய மோடி அரசு பணியமர்த்தியுள்ளது.

ஆளுநர் ரவி இதற்கு முன்பாக நாகா தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நாகாலந்தில் ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டவர். அது மட்டுமின்றி உளவுத்துறையில் பணியாற்றிய அதிகாரவர்க்கத்தைச் சார்ந்த நபர். இந்திய அரசுக்கும் நாகா சோசலிச கவுன்சில் என்ற விடுதலைப் போராட்ட அமைப்புக்கும் நடைபெற்றுவரும் பல்லாண்டு காலப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று அதை சீர்குலைத்தவர். பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட விசயங்களைக் கூட நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடித்துக் காலங்கடத்தி நாகா விடுதலைப் போராட்டத்தைப் பின்ன டையச் செய்தவர். அங்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர், அரசியல் சுதந்திரத்துக்கு போராடக் கூடிய நாகா விடுதலைச் செயற்பாட் டாளர்கள் எனப் பலரையும் சிறையில் அடைத்து சனநாயகத்தின் குரல்வளையை நெரித்தவர். ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி வெளியேறிய போது நாகாலாந்து தழுவிய அளவில் மக்கள் அதை வரவேற்றனர், கொண்டாடினர்.

கடந்த எட்டாண்டுக் காலமாக மோடி ஆட்சியின் பல்வேறு சட்டங்கள், கொள்கைகளுக்குத் தமிழ்நாடு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டு நாடாளு மன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல் என நான்கு முக்கியத் தேர்தல்களிலும் பா.ச.க.வால் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. இத்தேர்தல்களில் பாசக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு அலையே தமிழ்நாட்டில் வீசியதாக அறியப் படுகிறது. இந்த எட்டாண்டுகள் மட்டுமின்றி மாநில உரிமை, பார்ப்பன எதிர்ப்பு சமூக நீதி, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, வைதீக இந்துமத எதிர்ப்பு ஆகியவற்றின் உலைக்களமாக தமிழ்நாட்டு அரசியல் இருந்து வருகின்றது. இதை உடைத்தெறிவதற்கு பாசக என்ற கட்சி மட்டும் தமிழ்நாட்டில் செயல்பட்டால் போதாது, கூடவே ஒன்றிய அரசின் அதி காரத்தை மாநிலத்தின் அடிநுனி வரைப் பாய்ச்சுவதற்கான கருவியாக ஆளுநரைப் பயன்படுத்துகிறது பா.ச.க. அத்தகைய நோக்கத்தை நிறைவு செய்வதற்காக ஆர்.என். ரவியை ஆளுநராகப் பணியமர்த்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளான நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என ஒவ்வொரு விவகாரத்திலும் அதற்கு எதிரான கொள்கைப் பரப்புரையை ஆளுநர் பொறுப்பில் இருந்தபடி செய்து வருகிறார் ரவி. முதல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் பேசப் பட்டவற்றை எதிர்த்து அடுத்த நாள் பொது வெளியில் பேசுகிறார். பல்கலைக் கழகங்கள் தொடங்கி ஆதீனங்கள் வரை பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் நேரடியாகத் தலையிட்டுக் காவி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறார் அவர். மதச் சிறுபான்மையினரின் அமைப்புகளுக்கு எதிராக நச்சுக் கருத்துகளைப் பரப்புகிறார். தமிழக வளர்ச்சிக்கு எதிராகவும், சனாதனத்திற்கும் இந்துராஷ்டிரத்திற்கும் ஆதரவாகவும் அன்றாடம் கொள்கைப் பரப்புரை செய்கிறார். ஆளுநர் மாளிகையைத் தமிழ்நாடு அரசுக்கு எதிரான புகாரளிக்கும் மையமாகவும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சமூக சக்திகளை ஆர்.எஸ்.எஸ். பா.ச.க.விற்குப் பின்னால் அணி திரட்டுவதற்கான அலுவலகமாகவும் செயல் படுத்தி வருகிறார் அவர். ஒன்றிய அரசின் அதிகாரமும் உளவுத் துறைப் பின்னணியும் ஆர்.எஸ்.எஸ்.இன் பின்புலமும் இணைந்த ஒருவராக தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு விரட்டி யடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு எழுந் துள்ளது.

ஆளுநர் பதவியே மாநில அதிகாரத்திற்குக் கடிவாளம் போடவும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் செய்யப்பட்ட ஏற்பாடு என்ற வகையில் ஆளுநர் பதவியை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காகவும் போராட வேண்டும்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்புமுறை மாநில அரசுக்கு இருந்த வரிவிதிப்பு அதிகாரத்தைப் பறித்தது. ஜி.எஸ்.டி. வரிமுறையின் வழியாக மாநில அரசின் வருவாயைச் சூறையாடிப் போனது ஒன்றிய அரசு. ஜி.எஸ்.டி. கவுன்சில் என்ற ஏற்பாட்டின் மூலம் வரி விதிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு இருந்த அதிகாரமும் பறிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இல்லாத ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வழியாக முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசு களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய தொகையையும் ஜி.எஸ்.டி முறையால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்குவதாக ஒப்புக்கொண்ட தொகையை யும் இழுத்தடிப்பது, காலந்தள்ளுவது என்பது தொடர் கதையாக மாறியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காலத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாத தற்குக் காரணம் கடவுளின் செயல் என்று கைவிரித்தது ஒன்றிய மோடி அரசு. மாநில அரசுகளோ பத்திரப் பதிவு, மோட்டார் வாகனம், எரிபொருள் விற்பனை, மது விற்பனை போன்ற சிற்சில துறைகளில் இருந்து பெறக் கூடிய வரிவருவாயைச் சார்ந்து தமது செல வினங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்தச் சூழலில், மேலும் பல்வேறு விவகாரங்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது, பத்திரப் பதிவுத்துறையையும் ஒரே தேசக் கொள்கையின் பெயரால் ஒன்றிய அளவில் மாற்றுவதன் மூலம் மாநில நிதியதி காரத்தை நூறு விழுக்காடு இல்லாதொழிப்பது என்ற திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வித நிதியதிகாரமும் இல்லாத மாநகராட்சி போல் மாநில அரசை மாற்றியமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மாநில வரிவிதிப்பு அதிகாரத்தைப் பறித்து, ஜி.எஸ்.டி. யின் வழியாக நாடு தழுவிய அளவில் வரியைத் திரட்டிக் கொள்ளும் அதே நேரத்தில் வரிச்சலுகை, மானியம், வாராக் கடன் தள்ளுபடி, ஊக்குவிப்புகள் என பன்னாட்டு , உள்நாட்டுக் கார்ப்பரேட்களுக்கு இலட்சக் கணக்கான கோடிகளை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டு ஏகபோகப் பாசிச சிறுகும்பலின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறதோ அதுபோல பொருளியல் அதிகாரத்தைப் பறித்து நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் அப்பால் ஏகபோக நிதிமூலதன சிறுகும்பல் கையில் ஒப்படைத்து வருகிற பாசிச பா.ச.க. அரசு. மாநில அரசுகள் தமக்குக் கிடைக்கும் சொற்பான வரி வருவாயில் இருந்தும் ஒன்றிய அரசிடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் பன்னாட்டு நிதிநிறுவனங்களிடமிருந்தும் வெளிச்சந்தையில் இருந்தும் பெறும் கடனில் இருந்தும் மாநிலங்களில் தமது நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்த சொற்பமான வரி வருவாயில் இருந்தே தமது சமூக நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்புகளின் காரணமாக அத்திட்டங்களை தொடரவும் விரிவாக்கவும் முடியாத நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன. நிதியற்ற கையறு நிலை என்ற பெயரில் மென்மேலும் தனியார்மய, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என யாவற்றிலும் தற்காலிக, ஒப்பந்தப் பணிகள் என்ற மக்கள் விரோதக் கொள்கையை அமல் படுத்தக் கூடிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன.

இதை எதிர்த்து முறியடித்து மாநிலப் பொருளியல் இறைமையை மீட்பதற்கான முதல் படியாகவே ஒரே தேசம், ஒரே வரி என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரிவதிப்பு முறையை ஒழித்துக்கட்டக் கோரிப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எனவே, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி வருகிற ஜுலை 16 அன்று நடத்தவிருக்கின்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு மேற்கண்ட கோரிக்கை முழக்கத்தோடு அனைவரும் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என்ற பொது மேடையின் முதல் நிகழ்வு இது. இந்த நிகழ்வில் பாசிச எதிர்ப்பு முன்னணியில் உறுப்பு அமைப்புகளாக பங்கேற்காத அமைப்புகளும் சனநாயக ஆற்றல்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை வலுப்படுத்தி பாசிச மோடி - அமித்ஷா சிறுகும்பல் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவோம் என்று சனநாயக ஆற்றல்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

பாலன், ஒருங்கிணைப்பாளர், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி

Pin It