பல்லவி

தேவதையும் இல்ல தெய்வமும் இல்ல
மனுசி தானம்மா நீயி!
பெண்ணின் குணமெனச் சொன்னவை எல்லாம்
பழமை வாதிகளின் பொய்யி!
நிமிரவும்.. கொஞ்சம் திமிரவும்..
தோழி வாராய்! மூன்றாம் போராய்!

சரணம்-1

நிலவென்று போற்றி கவிதைகள் சொல்லி-உன்னை
துணிகள் துவைக்க விட்டானே!
மலரென்று கொஞ்சி மகிழ்ந்தவன் உன்னை
சமையல் அறையில் நட்டானே!

தலையில் மட்டுமா நேர்கோடு
வளைவு எதற்கு வாழ்வோடு
நெஞ்சம் வேண்டும் நெருப்போடு
அன்பால் செய்து தந்தால் என்ன
திரிய வேண்டுமா விலங்கோடு?

சமத்துவக் கொள்கையில் ஒத்துப்போகிற
கணவனோடு நீயும் கருத்தரி! இனி
பிள்ளைகள் பெற மட்டுமே பெண் என்றால்
கர்ப்பப் பையினை அறுத்தெறி!

சரணம்-2

மதமெல்லாம் கூடி மடமைகள் செய்து-உன்னை
அடிமைப் பொருளென வைத்ததம்மா!
பக்தியில் நீயும் றெக்கையை மறக்க
மண்ணுக்குள்ளே தான் புதைத்ததம்மா!

என்ன ஆடை உடுத்த வேண்டும்
என்ன வேலை பார்க்க வேண்டும்
நீயே முடிவை எடுக்க வேண்டும்
உரிமைச் சாவி எவன் கொடுப்பது
நீதான் பூட்டை உடைக்க வேண்டும்!

கால காலமாய் காத்துவந்ததால்
உன்னது தானே நெருப்பு-உன்னை
அடிமை செய்திடும் கொடிய மிருகத்திற்கு
கொள்ளி வைப்பதுன் பொறுப்பு!

Pin It