இந்து இந்தியா, பல பெண் கருக்களைக் கலைத்தது. பல பெண் சிசுக்களைக் கொன்றழித்தது. குழந்தை திருமணத்தைத் தடுக்கவே போராட வைத்தது. பல பெண் குழந்தைகளை விதவைகளாக்கியது. பல பெண்களை ‘சதி’ என்னும் பெயரால் கணவனின் பிணத்தோடு கட்டி எரித்தது. பல பெண்களை வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொன்று குவிக்கிறது. ஆனால் நாங்கள் கலாச்சாரத்தில் உயர்ந்த நாடு என்று வெட்கமே இல்லாமல் பெருமைப்பட்டுக் கொள்கிறது. இவை அனைத்தும் கலாச்சாரமாற்ற நாடு என்பதற்கே உதாரணம். இந்துத்துவ இந்திய நாடு பெண்களை எப்படி நடத்தும் என்பதற்கு மணிப்பூர் கலவரம் மேலும் ஒரு உதாரணமாகவே திகழ்கிறது!

மணிப்பூர்! அங்குள்ள மைத்தி, குக்கி மனிதர்களுக்கிடையேயான பிரச்சனை குறித்தும், அந்த வன்முறையில் பா ஜ க வின் பங்கு குறித்தும் பலர் எழுதி முடித்துவிட்ட நிலையில், அதைப் பற்றியே நானும் எழுதப் போவதில்லை. எனவே, இது மணிப்பூரில் என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் கட்டுரையல்ல! மணிப்பூர் கலவரம், கயர்லாஞ்சிக் கொடூரம், ஜாதியப் பாலியல் வன்கொடுமைகள், போர்க்களங்கள், குடும்பங்கள், திருமணங்கள், பெண் குழந்தைப் பாலியல் வன்முறைகள் என பல ஆணாதிக்க அட்டூழியங்களில் பெண்ணுடல் ஏன் ஆணாதிக்க வன்முறைப் பூமியின் மேல் மற்றும் ஒரு வன்முறைப் பூமியாக்கப்படுகிறது? ஏன் வன்முறைக் கொள்கலனாக்கப்படுகிறது? அவற்றைக் கூட ஏன் பெண்கள் இன்னும் எதிர்க்கத் துணியவில்லை? என்ற கோணத்தில் மட்டுமே யோசித்து அந்த உளவியலை ஆராய எண்ணியே இதை எழுதுகிறேன்.manipur protest 394இந்து மதம் x பெண்கள்

வரலாறு முழுவதும் ஆணாதிக்க உலகில் பெண்ணுடல் ஆண்களால் ஒரு சொத்தைப் போல மாற்றப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! வீரம், கோபம், போர்க்குணம் போன்றவை ஆண்மைக்கான குணங்கள் எனவும் அடக்கம், அமைதி, நாணம், அச்சம், மடம், அழுகை, கற்பு போன்றவை பெண்மைக்குரிய குணங்கள் எனவும் தொடர்ந்து இரு மனிதர்களையும் வெவ்வேறு மனிதர்களாக்க அரும்பாடு பட்டு வெற்றியும் அடைந்தது ஆணாதிக்கக் கருத்தாக்கம்! ஆணாதிக்கக் கருத்தாக்கம் மதங்களை உருவாக்கி, பெண்களையும் அதை நம்ப வைத்து அதில் ஊறிப் போக வைத்து பெண்களை அடிமையாக்குவதை வெற்றிகரமாக செய்து முடித்தது.

இந்தியாவில் மத மறுப்பாளர்கள் மிகக் குறைவு. மற்றபடி, மதம் தான் பெரும்பான்மை மக்களின் வாழ்வியலாக உள்ளது. எல்லா மதங்களும் பெண்களை இழிபிறவிகள் போலவும் ஆண்களை விட தாழ்ந்தவர்களாகவும் நடத்தி விட்டு பெயருக்கு தாய்க்குலம், தாய், தெய்வம் என பிதற்றிப் பித்தலாட்டம் செய்யும். மத மனநிலை தான் பெண்களை அடங்கிப் போகவும், பொறுத்துக் கொள்ளவும், சாந்தமாக இருக்கவும், வெட்கப்படவும், பயப்படவும் கற்றுக் கொடுக்கிறது. அதே மதங்கள் தான் ஆண்களை ஆணாதிக்க மிருகங்களாக - பெண்களைப் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கவும், பெண்களைத் தனக்கான அடிமை, வாரிசை உருவாக்கி வளர்க்கும் இயந்திரம் என்று நினைக்கவும் கற்றுக் கொடுக்கிறது.

உலகில் அடிமைப் போட்டி நடத்தினால் இந்திய நாட்டு இந்து வாழ்வியலுக்குப் பழக்கப்பட்ட பெண்கள் தான் முதலிடம் பெறுவார்கள். மற்ற மதங்களைப் பின்பற்றும் பெண்கள் (இஸ்லாம், கிறித்துவம்) அடுத்தடுத்த இடங்களைப் பெறலாம். மதங்கள் அனைத்தும் ஆண்கள் ஆதிக்கத்திற்காக ஆண்கள் எழுதி வைத்தவை! இந்து, இஸ்லாம், கிறித்துவம் என எல்லா மதங்களும் பெண்களை ஆண்களை விட நீ மிகவும் தாழ்ந்தவள்; அவனுக்கு சேவை செய்து அவன் வாரிசை உருவாக்கப் பிறந்தவள் என்பதையே போதிக்கும்! பெண்களை அடக்கி ஒடுக்குவதில் எல்லா மதங்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டாலும் இந்து மதம் தான் முதலிடம் பிடிக்கும். நாம் ஜாதி இல்லாத நிலை, தலாக் போன்ற மற்ற காரணங்களுக்காக இஸ்லாமிய மதத்தை ஆதரித்தாலும் அது தான் உலகில் இரண்டாமிடம் பிடிக்கும்.

இந்தியாவின் பெரும்பான்மை மதம் இந்து மதம் என்பதால் நாம் இந்து மதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு ஆராயலாம். மனு சாஸ்திரம் என்னும் அநீதிக்குப் பழக்கப்பட்ட இந்திய இந்து மக்களும், சங்கராச்சாரியார்களும் பெண்களை அடிப்படை மனித உரிமைக்குக் கூட தகுதி இல்லாதவர்களாகத் தான் கருதுகிறான். இந்து மத மனுவைப் போல அயோக்கியத்தனங்களைப் பெண்களுக்கு எதிராக யாராலும் யோசிக்கவே முடியாது. ஒரு பெண் சுதந்திரமாக இருக்கவே கூடாது, அவர்கள் ஆண்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது மனு சாஸ்திரம். அத்தியாயம் 9 இல் உள்ள கீழ்க்கண்ட ஸ்லோகங்களே அதற்கு சான்று.manusmrithi 1

பெண்களை எப்போதெல்லாம் வசை பாடலாம் / தூற்றலாம் எனக் கூறுகிறது பின்வரும் ஸ்லோகம்:manusmrithi 2

கணவனே கண் கண்ட தெய்வம் எனக் கருதி அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என பெண்களைக் கட்டளையிடும் அத்தியாயம் 9 இல் உள்ள மனு சாஸ்திர ஸ்லோகங்கள்:manusmrithi 3

வாரிசை, அதிலும் குறிப்பாக ஆண் வாரிசைக் கட்டாயமாக்கும் மனு சாஸ்திர ஸ்லோகங்கள்:

manusmrithi 4

இவை அனைத்தும் அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா எழுதிய மனு நீதி என்னும் மனு சாஸ்திரம் (ஸ்ரீ இந்து பப்ளிககேஷன்ஸ்) நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. ( இந்து மதம் பற்றி பெண்கள் இன்னும் முழுமையாக அறிய நூலை இந்த link இல் வாசிக்கலாம். https://ia601705.us.archive.org/32/items/acc.-no.-30173-manu-needhi-2011/Acc.No.30173-Manu%20Needhi-2011.pdf)

தெய்வத்தின் குரல் என்னும் நூலில் சங்கராச்சாரி பெண்கள் வேலைக்கு செல்வதையே பெரும்பாவம் என்கிறார். இவ்வாறு பெண்களை உரிமையற்ற, பாலியல் பந்தமாகவும், ஆணின் அடிமையாகவும் தான் இந்து மதம் கருதுகிறது. பெண்களையும் அவ்வாறே அனைத்தையும் நம்பும் மடப் பெண்ணாக்கி அடிமைகளாக்கியது இந்து மதம். இப்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்களிடமும் ஆணாதிக்க மனநிலை தான் மேலோங்கி இருப்பதற்கும் இந்து மத வாழ்வியலை ஒப்புக் கொண்டு விட்டதே காரணம். அங்கு வாழும் பெரும்பாலான பெண்கள் ஆண்களின் கைப்பாவைகள் தான். உரிமைக்கான விடுதலைக்கான மன நிலையே இல்லாமல் மழுங்கடித்து விட்டன இந்து மத வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள்! படித்தாலும் வேலைக்குக் கூட செல்லாமல், தன் துறையில் சிறந்து விளங்காமல், தனக்கென்று எந்த இலக்கும் அற்ற கணவன், அவனின் வாரிசுகள் மற்றும் அந்த வாரிசின் வாரிசுகள் - இவைகளைச் சுற்றியே வாழ்ந்து மடியும், சுயமரியாதையற்ற அற்பமானவர்களாகவே திரிகின்றனர்! இதில் முற்போக்குப் பேசும் பெண்களும் இருக்கலாம். இதற்குக் காரணம் இந்து மத மனநிலை தான்! (தமிழ் இலக்கியங்களும் அவற்றிற்கு சற்றும் குறைந்தது அல்ல!)

தன் வாரிசை உருவாக்கிக் கொள்ளும் போது மட்டும் ஜாதி, மதத் தூய்மை பற்றிக் கவலைப்படும் இந்திய இந்துத்துவ ஆணாதிக்க சமூகம் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஜாதி, மதம், வயது என எந்தத் தூய்மையையும் எதிர்பார்ப்பதில்லை! இதுவும் ஒரு இந்து மத மனப்பான்மை தான்!

எப்படியெனில், ஆர். எஸ். எஸ்., இந்துத்துவ சாவர்க்கர் பாலியல் வன்புணர்வை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று தன் நூலான ‘Six Glorious Epochs of Indian History’ இல் கூறியுள்ளார்.

{ References

https://thewire.in/communalism/modi-should-remember-rape-is-also-a-weapon-of-ideology-and-savarkar-a-proponent

https://scroll.in/article/808788/reading-savarkar-how-a-hindutva-icon-justified-the-idea-of-rape-as-a-political-tool

https://savarkar.org/en/pdfs/6_Glorious_Epochs_of_Indian_History.pdf

}

மூளை மழுங்கடிக்கப்பட்டப் பெண்ணுடல் பெருஞ்சினம் கொள்ளாது

பெண்ணுடலைப் பெண்ணே அருவருக்கக் கற்றுக் கொடுத்து, அதைப் போற்றிப் பாதுகாக்கக் கற்றுக் கொடுத்து, கணவனுக்கு மட்டுமே உரித்தான பொருளாகத் தான் தமிழ் சமூகமும் இந்துத்துவ இந்தியாவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெண்களை மூளைச் சலவை செய்துள்ளது. கணவனையும், அவன் மூலம் பிறக்கும் குழந்தைகளையும், கணவனின் குடும்பத்தையும் கட்டிக் காக்கவும், கணவனும் அவனின் குடும்பமும், அவனின் வாரிசுகளும் எவ்வித கொடுமை செய்தாலும் பொறுத்துக் கொள்ளவும் தான் பெரும்பாலான பெண்களை ஆணாதிக்க சமூகம் பழக்கப்படுத்துகிறது. அவ்வாறு மூளைச் சலவை செய்யப்பட்டு மூளை மழுங்கடிக்கப்பட்டப் பெண்ணுடல் தனக்கெதிராக அநீதி இழைக்கப்படும் போதும் பொறுத்துக் கொள்ளவே பழக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பாலியல் வன்புணர்வு, கூட்டுப் பாலியல் சித்திரவதை, திருமணத்திற்குள் நடக்கும் marital rape, என பல்வேறு விதமான பாலியல் வன்முறைகள் பெண்ணுடலின் மீது கட்டவிழக்கப்படும் போதும் கூட, தன்னைக் கொல்லும் போது என்ன செய்வதென்று அறியாமல் உயிர்விட்டு மடியும் பெண் சிசுவைப் போலவே என்ன செய்வதென்றறியாமல் திகைத்துப் போய் வன்முறைகள் அனைத்தையும் சகித்துக் கொள்கிறார்களே தவிர, பெருஞ்சினத்தோடு தன்னைச் சித்திரவதை செய்து அநீதியின் உருவமாய் நிற்கும் ஒரு ஆணுறுப்பைக் கூட எட்டி மிதித்து சிதைக்காமலும், ஒரு சிலவற்றைக் கூடக் காயப்படுத்தாமலும் ஒரு ஆணைக் கூடக் கொல்லாமலும் விட்டு வைக்கக் காரணமாய் இந்த பொறுத்துக் கொள்ளும் மனநிலையே அமைகிறது ! இதனால் தான் பிரெஞ்ச் பெண்ணியவாதி simone de beauvoir ‘One is not born, but rather becomes, a woman (ஒருவள் பெண்ணாக பிறப்பதில்லை அவள் பெண்ணாக்கப்படுகிறாள்)’ என்று கூறியுள்ளார் .

பெண்களைக் குழந்தைப் பருவத்திலிருந்து எந்த மதத்தையும் பின்பற்றக் கற்றுக் கொடுக்காமல் இருந்தால் ஒவ்வொரு ஆணாதிக்கப் பாலியல் வன்முறை/பிற வன்முறையின் போதும் குறைந்தபட்சம் ஒரு சில ஆண்களாவது ஆணுறுப்பு அடிக்கப்பட்டு/சிதைக்கப்பட்டு இந்தியாவில் கொல்லப்படலாம்! அதைப் பார்க்கும் பல ஆணாதிக்க மனங்கள் பதைபதைக்கலாம்! ஆணுறுப்பு மிகவும் பலவீனமானது. ஆனால் வன்முறையின் போது கூட அதை எட்டி உதைக்க/சிதைக்க பெண்கள் பழக்கப்படவில்லை. வரலாறு முழுக்க வன்முறை வெறியாட்டம் மூலம் பல பெண்களைக் கொன்று குவித்த ஆணாதிக்க வெறி அது வரையில் அடங்கப் போவதில்லை.

(நான் என்றைக்குமே வன்முறை ஆதரவாளர் அல்ல ! ஆனால் தனக்கெதிராக கேவலமான, மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு ஒரு வன்முறை நடக்கும் போதும் ஏன் இந்த பெண்ணினம் இப்படியே அதைப் பொறுத்துக் கொள்கிறது என்று யோசிக்கும் போது எனக்கு தோன்றிய சிந்தனை தான் மேற்கண்ட சிந்தனை)

ஆனால் இவை எல்லாம் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆண்குறியை வழிபாட்டுச் சின்னமாக்கிய மதமல்லவா இந்து மதம்? நம் நாட்டில் பெரும்பாலான பெண்களுக்குத் தான் இந்து மதப் பைத்தியம் பீடித்தள்ளதே!

பெரியாரிய அமைப்புகளும் பெண்ணுடல் அரசியலும்

பெரியார் ஒருவரைத் தவிர இந்திய மண்ணில் அழுத்தமாகப் பெண் விடுதலை பேசியவர் இந்த 21 ஆம் நூற்றாண்டு வரை எவரும் இல்லை என்றே கூறலாம்!

பெண்ணுடல் அரசியல் (கற்பு,குழந்தைப் பேறு பைத்தியம், திருமணம், குடும்பம்) என பலவற்றைப் பேச வேண்டிய பெரியாரிய அமைப்புகளும் தன் வேலையை சரியாகச் செய்வதாக நான் உணரவில்லை. ஏனெனில் அவ்வமைப்புகளிலும் தீவிரமாகப் பெண்ணுடல் அரசியல் பேசப்படுவதில்லை! பெரியாரைத் தவிர ஆண் தலைவர்கள் அவ்வளவு வீரியமாகப் பெண்ணியம் பேசவில்லை!

ஆணாதிக்கக் கட்டமைப்புகள் அனைத்திற்கும் எதிராகக் கேள்வி எழுப்பும் நூல்களான ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘பெண் விடுதலை’, ‘அழியட்டும் ஆண்மை’, ‘அழியட்டும் பெண்மை’ போன்ற நூல்கள் விற்பது, பாலின சமத்துவம் என்று எங்கோ ஒரு பயிற்சி வகுப்பு, இது போன்ற வன்கொடுமைகள் நடக்கும் போது ஏதோ ஒரு அடையாளப் போராட்டம் என எதையாவது அவ்வப்போது செய்யும் ஒரே ஒரு காரணத்திற்காக அவ்வமைப்புகளை வரவேற்கலாம்.

ஆனால் ஜாதி ஒழிப்பு, கடவுள் & மூடநம்பிக்கை மறுப்பு, சமூக நிதி போல ‘பெரியாரியப் பெண்ணியம்’ பற்றிய தொடர் பிரச்சாரமோ, தோழர்களிடையே அது பற்றிய தொடர் கலந்துரையாடலோ நடைபெறவே இல்லை. தொடர் கலந்துரையாடல்கள் தான் ஆண்மையையும் பெண்மையையும் அழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்கும். அது பல பெயர்களில் இயங்கும் அனைத்து பெரியாரிய அமைப்புகளிலும் பெருமளவில் நடக்கவேயில்லை! அதனால் தான் சில நேரங்களில் பெண்ணியம் குறித்த கருத்துக்களில் ஆணாதிக்க மதக்காரர்களும் ஏதோ ஒரு இயக்கத்தில், ஏதோ ஒரு தலைவர் பெயரை உச்சரித்துக் கொண்டு அவ்வமைப்பில் உள்ள ஆண்களும் ஒரே மாதிரியான ஆணாதிக்க மனமுடையவர்களாகவே உள்ளனர்.

பெரியாரிய அமைப்பில் உள்ள ஆண் தலைவர்கள் பெரியார் பேசிய/எழுதிய கற்பு, திருமணம், குடும்பம் பற்றிய புரட்சிகாரமான கருத்துகளை அப்படியே கூறுவதற்குக் கூட அஞ்சும் சூழ்நிலை தான் உள்ளது. அதையும் ஒரு சில ஆண் தோழர்கள் அயோக்கியத்தனமாக இது வரையில் ஒன்றுமே விளங்காத அடிமைப் பெண்களை ஏமாற்றப் பயன்படுத்தலாம் என அஞ்சுகிறார்கள் என நினைத்து என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்!

என்ன செய்யலாம்? என்ற என் எண்ணங்கள்......

எது எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் உங்கள் பெண் குழந்தைகளை மதமற்ற மனிதர்களாக வளர்க்க முயலுங்கள்.. மதங்கள் அனைத்தும் பெண்மைக்குரிய அம்சங்கள் என்று அச்சம், மடம், நாணம், தாய்மைப் பைத்தியம், ஆணுக்கு சேவை செய்ய தன் வாழ்க்கையையே தொலைக்கும் அடிமை என்ற எண்ணங்களை உங்கள் பெண் பிள்ளைகளுக்குத் தரும். இந்த எண்ணங்கள் எதுவும் அண்டாமல் பெண் குழந்தைகளை வளர்க்க முயலுங்கள்! மத மறுப்பாளர்களாக்குங்கள்! பெரியாரைத் தொடர்ந்து வாசிக்கச் சொல்லுங்கள்! எண்ணிக்கை அளவில் பெண்களை விட ஆண்களில் மத மறுப்பாளர்கள் அதிகம் தான் என்றாலும் உங்கள் மதம் பெண்கள் பற்றிய மதிப்பீடுகளாக உங்களுக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து மறுத்து விடுங்கள்!

பெரும்பாலான ஆண்களையும் பெண்களையும் மதங்களைத் தூக்கியெறிய வைத்தாலே நல்ல மாறுதல்கள் வரலாம். பெண் வழி சமூகங்கள் வன்முறையற்றும், ஆணாதிக்க சமூகங்கள் என்றென்றும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கின்றன என்பதற்கு மனித குல வரலாறே சாட்சி! கிறிஸ்டோபர் ரையன் மற்றும் cacilda jetha ஆகிய ஆய்வாளர்கள் இதை தங்கள் “sex at dawn” நூலில் உறுதிபடுத்தியுள்ளனர். மதமற்ற, பெண் வழி சமூகமே பாலின சமத்துவத்தோடும் வன்முறையற்று அமைதியோடும் இருக்கும். இவை அனைத்தும் இப்போதைக்கு நடக்கப் போவதில்லை! ஆனாலும் காலம் ஒரு நாள் மாறும் என நம்பித் தொலைப்போம்!

- யாழ்மொழி

Pin It