இந்தியா  இந்துக்களின் விரோதியா? என்று கேட்கும் அளவிற்கு பழமைவாதம், சனாதனம்,  வேதம் இன்ன பிறவெல்லாம் வேரூன்றி உள்ளது. அனைத்து இந்துக்களையும் ஒருநாளும் சமமாக நடத்தியதில்லை. சாதி, ஏற்றத்தாழ்வும்,  முரண்பாடுகளின் மொத்த உருவமாகவும் தான் இந்து சமயம் இருந்து வருகிறது. இன்றளவும் அதைக் களைவதற்கு யாரும் முன்வரவில்லை. வேண்டுமென்றால் சமரசம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று வேதம் என்றால் அப்படித்தான் ,அதை அனைவரும் ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. வேதம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது அன்பையும் அகிம்சையையும் போதிக்க வேண்டும். இதை விடுத்து  நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன் என்பதை எப்படி ஏற்க முடியும்? இது எதன் அடிப்படையில் நியாயம்? அல்லது இது அனைவருக்கும் எப்படி பொதுவானதாக இருக்க முடியும்?

ambedkar 452திட்டமிட்டு பிரிவினைவாதத்தை உண்டாக்கி ஒருத்தர் உயர்ந்தவர் மற்றவர் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்று சொல்வது எதன் அடிப்படையில்? நாங்கள் விரும்பாத சாதியும், மதமும் ஏன் எங்களைப் பிணைக்க வேண்டும்? எதன் அடிப்படையில் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களானோம்? என்னை தாழ்ந்தவன் என்று சொல்வதற்கு நீ யார்? உனக்கு யார் அந்த அதிகாரத்தை தந்தது? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளைத் தான் அம்பேத்கர் இச்சமுகத்தைப் பார்த்து முன்வைத்தார்.

இவை எல்லாவற்றையும் எதிர்த்தும்,  தீர்வு காணும் நோக்கத்திலும் பாபாசாகேப் அம்பேத்கர் புராதன இந்து தேசத்தை தன் அறிவால் அளந்து பார்த்தார். அதன் வெளிப்பாடுதான் 'இந்து மதத்தின் புதிர்கள்'.  அதில் சாதியாலும் மதத்தாலும் கட்டப்பட்ட இந்த தேசத்தை செங்கல் செங்கல்லாக சிதைத்தார்.  எதை எதிர்த்து? யாரை எதிர்த்து? அரசியல் செய்தாரோ அவர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் இப்பொழுது அம்பேத்கரை தன்வசப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அம்பேத்கரின் சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது பெண் விடுதலைச் சிந்தனை. பெண் அடிமைத்தனத்தை மிக மூர்க்கமாக எதிர்த்த பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் வரிசையில்  அம்பேத்கர் முக்கியமானவர்.  பெண் விடுதலைக்காக பாபாசாகேப் அம்பேத்கர் ஆற்றிய பணி மகத்துவமானது. அதனால்தான் இன்று பெண்கள் மத்தியில் அம்பேத்கர் ஒரு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் பெண் விடுதலைக்கும், சமூக விடுதலைக்கும் அம்பேத்கர் வேண்டப்படுகிறார்.

டாக்டர் அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு மே திங்கள் ஒன்பதாம் நாளன்று அமெரிக்காவின் நியூ யார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த மானுடவியல் கருத்தரங்கில் "இந்தியாவில் சாதிகள் அவற்றின் அமைப்பு இயக்கம் தோற்றம் வளர்ச்சி" எனும் ஆய்வு கட்டுரையை படித்தார். அதில் இந்திய பெண்களின் வீழ்ச்சிக்கும், அடிமைக்கும் சாதிய அமைப்பு  அடிப்படையாகக் கொண்டுள்ள இந்து மதமே காரணம் என்ற வாதத்தை முன்வைத்தார்.

மனுசாஸ்திரம் பெண்களையும் ஒடுக்கப்பட்ட ஓர் அங்கத்தினராக மாற்றியது. சாதி இழிவை விடவும் பெண்ணடிமைத்தனம் மிக மோசமான சூழலில் இருந்த காலம் அது. காரணம் பெரும்பாலான மக்கள்  ஆதிக்க வர்க்கத்தால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். பெண்கள் அப்படி அல்ல. ஆதிக்க சாதியாக இருந்தாலும் கூட அவர்கள் அங்கும் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர்.  இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனு. மனுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. பெண்கள் எப்பொழுதும் தனியாக இருக்கக் கூடாது. அவர்கள் ஏககாலத்திற்கும் ஆணைச் சார்ந்து தான் இருக்க வேண்டும். சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுவதற்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, கைம்பெண் கொடுமை, தோல்சீலை அணிவதற்கு தடை, தீட்டு விலக்கு இப்படி பெண்களை அடிமைப்படுத்துவதை மனு மிக கவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ராஜாராம் மோகன்ராய் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை எதிர்த்தார்.  அதேபோல் தேவதாசி முறை, கடவுளை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பெண்களை சுதந்திர சிந்தனையில் இருந்து விடுபடுவதற்கு எதிராக இருந்தது. கைம்பெண் கொடுமை,  தீட்டு விலக்கு, உள்ளிட்டவை கடவுளோடும் அது சார்ந்த இந்து சமயத்தோடுப் பிணைந்தவையாகவே இருந்தது. அதேபோல் 30 வயதான ஆண் தன் மனதிற்கு பிடித்த 12 வயது கன்னியை மணக்க வேண்டும் அல்லது 24 வயதான ஆண் 8 வயது சிறுமியை மணக்க வேண்டும் என்ற வரையறைகள் எல்லாம் மனு உருவாக்கியிருந்தது.

கல்வி கூடவே கூடாது என்று மறுக்கப்பட்டிருந்தது. ஏட்டைத் தொடுவது தீட்டு என்றிருந்த அந்த காலக்கொடுமை இப்படி பெண்களை சுற்றி எப்பொழுதும் அடிமைச் சங்கிலி பின்னப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றையும் வேரறுக்கும் நோக்கத்தில்தான் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் தன் வாழ்நாளில் பெரும் பங்கை பெண் விடுதலைக்காக செலவிட்டார். அதனால் தான் பெண் விடுதலை அடையாமல் சமூகம் விடுதலை அடையாது என்ற தன் தீர்க்கமான வாதத்தை முன் வைத்தார். அதனடிப்படையில் பெண்களின் விடுதலையை பற்றி சிந்திக்க தொடங்கினார். பெண்விடுதலைப் பற்றி பேசும் பொழுது  முதலில் நீங்கள்தான் உங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்ற நோக்கத்தில் "பெண் விடுதலைக்கு ஆண்களை விட பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள்" என்ற வலிமையான சொற்களால் சிந்திக்கத் தூண்டினார்.

மனு சொல்வது

 1.கணவனை இழந்த கைம்பெண் சதி என்னும் உடன்கட்டை ஏற வேண்டும்.

2.கணவனை இழந்த கைம்பெண் தலையை மொட்டை அடித்துக் கொண்டு முக்காடு இட்டுக் கொள்ள வேண்டும்.

  1. பொது இடங்களில் புழங்கக் கூடாது. சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. மீறினால் அந்த குலத்திற்கு பாவம் வந்து சேரும். அவர்கள் குடும்பம் ஒதுக்கி வைக்கப்படும்

4.பொதுமக்கள் யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும். பொது வீதிகளில் நடமாடக் கூடாது.

5.பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவள். அவளுக்கு கல்வி அறிவு கூடாது.

6.தொழு நோயால் இருந்தாலும் ஒரு ஆணினுடைய (குஷ்டம் பிடித்திருந்தாலும்) அவருடைய இச்சைக்கு அந்தப் பெண் உட்பட வேண்டும். மேலும் அவர் கூறும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அந்தப் பெண் கடமைப்பட்டவளாகிறாள். அவளுக்கென்று சுய விருப்பு வெறுப்பு ஏதும் இருக்கக்கூடாது.

7.கணவனின் கட்டளையை நிறைவேற்றுவதே அப்பெண்ணின் தலையாய பணி. அப்படி இருந்தால் மட்டுமே அவளுக்கு புண்ணியம் வந்து சேரும். இல்லையேல் அவள் நரகத்தில் தள்ளப்படுவாள்.

8.பால்ய விவாகம் இங்கு நடைமுறையில் உண்டு. ஆண் எவ்வளவு வயதாக இருப்பினும் அவருக்கு பெண் என்ற அடிப்படையில் ஓர் சிறுமியை கூட மணமுடித்து வைக்கலாம் அதற்கு அந்தப் பெண்ணிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை.

இதுபோன்ற கொடுமை தான் மனு வலியுறுத்துகிறது. இன்னும் தீவிரத் தன்மையுடன் பெண்களை யார் வேண்டுமென்றாலும் உரிமை கொண்டாடலாம். அவள் உடல் மீது அவளுக்கே உரிமையில்லை. உடல் மட்டுமல்ல உயிர் மீதும் அவளுக்கு உரிமை இல்லை என்பதை தான் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் வலியுறுத்துகிறது.

டாக்டர் அம்பேத்கர், தீண்டாமைக் கொடுமைக்குக் காட்டிய ஆர்வத்தைப் போல, பல மடங்கு பெண் விடுதலைக்காகவும் போராடியுள்ளார். இந்துமதக் கோட்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது மனு. இந்த மனுதான் பெண்களை மிகவும் இழிவாக சித்தரிக்கிறது.  அவர்களை அடிமையாகவும், அறிவற்றவர்களாவும் ஆகும் சொத்து உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் கேள்வி எழுப்புவதற்கு தகுதி அற்றவர்களாகவும் குறிப்பிடுகிறது. இந்துப் பெண்களுக்கு உரிய உரிமை தர இந்து மதம் மறுத்து வந்தது. இதற்கான முக்கிய காரணம் மனுவாக இருந்ததை கண்டு வெகுண்டெழுந்து, டாக்டர் அம்பேத்கர் மனு நூலை டிசம்பர் 25, 1927 அன்று  எரித்தார்.

"டாக்டர் அம்பேத்கர், பெண்களின் முன்னேற்றத்தை முன் வைத்துதான் சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியும் என்கிற தீர்க்கமான எண்ணம் கொண்டவர்'. 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி நாக்பூரில்  40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் முக்கியத்தும் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. பெண்கள் தங்கள் கணவரை ரத்து செய்யும் உரிமை சட்டப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  2. பலதார மணம் பெண்களுக்கான அநீதி என்பதால் இந்தப் பழக்கத்தை கட்டுப்படுத்த சட்டத்தில் தேவையான திருத்தங்களையும் மாற்றங்களையும் அரசு செய்ய வேண்டும்.
  3. பணிபுரியும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக விடுப்பு, ஈட்டுத்தொகை,  ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  4. ஷெட்யூல்ட் பிரிவு பெண்களுக்கான கல்வி, மேம்பட ஆரம்ப கட்டாயக் கல்வி, தங்கும்விடுதி,  இலவசக் கல்வி,  உதவித்தொகை வழங்க மாநில அரசுகள் சட்டத்தின் மூலம் வழிவகை செய்ய வேண்டும்.
  5. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை மேற்பார்வை செய்ய ஆண்களுக்கு பதிலாக பெண் மேற்பார்வையாளர்களையே நியமிக்க வேண்டும்.
  6. மத்திய மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு பெண் தொகுதியிலிருந்து பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க படுவதைப் போல,  ஷெட்யூல்டு வகுப்பு பெண்களின் பொதுவான மேம்பாடு மற்றும் முன்னேற்றம் கருதி அனைத்து சட்டமன்றங்களிலும் மற்றும் பிரதிநிதித்துவ  அமைப்புகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தீர்மானங்கள் இயற்றப்பட்டதோடு அம்மாநாட்டில் உரையாற்றிய அம்பேத்கர், "பெண்களை திருமணம் செய்ய அவசர படுத்தாதீர்கள். திருமணம் என்பது ஒரு பொறுப்பு. மணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் கணவனோடு நிமிர்ந்து நிற்க வேண்டும். கணவனுக்கு நண்பனாக சமமாக உரிமை பெற வேண்டும். அவனுடைய அடிமையாய் இருக்க மறுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும் அந்த மாநாட்டில் தான் கொள்கையாக விளங்கும் "கற்பி, ஒன்றுசேர்,போராடு" என்ற கொள்கை முழக்கத்தை முன் வைத்தார்.

கற்பி!

பெண்ணே! உனக்கு எந்த விதத்தில் எல்லாம் துன்பங்கள் வந்தன, எப்படி தடுக்க முடியாமல் திணறினாய் என்பதை பிறருக்கு கற்பி! உன்னை உயர்த்திக்கொள்ள நீ முயற்சி செய்வதற்கு எத்தகைய வழிகள் பயன்பட்டன எப்படி எல்லாம் உயர்வு பெற்றாய் என்பதை அடுத்தவருக்கு கற்பி!

ஒன்றுசேர்!

பெண்ணே!  நீங்கள் கற்பித்தவைகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்படுத்திவிட்டது என்றால் நீங்கள் ஒன்று சேருங்கள். அவ்வாறு ஒன்று சேரும்போது தலைமைப் பதவிக்காக வழிகாட்டும் பண்பிற்காகவும் போட்டி போட வேண்டாம். பெண்ணே!  ஒற்றுமையே வலிமை தரும் என்கிற உயரிய லட்சியத்தை மனதில் இருத்தி ஒன்றுசேர் என்று பிரகடனப்படுத்தினார்.

போராடு!

பெண்களே கற்பித்து ஒன்று சேர்ந்து விட்டால், அடுத்த இலக்கு போராட்டமே. போராட்டத்தின் ஆழமும், வீச்சும் மக்களை சிந்திக்கச் செய்யும். காலம் காலமாக மிதிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட கிடக்கும் உங்கள் மீது அவர்கள் சிந்தனையை செலுத்துவார்கள். உங்கள் போராட்டம் நியாயமானது தான் என உணர்வார்கள். விளைவு வெற்றிதான். ஆகவே தான் போராடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த முழக்கம் தான் பெண்களை விடுதலையை நோக்கி இட்டுச் சென்றது. இதை ஏற்க மறுக்கும் பெண்களைப் பார்த்து தான் பெண்களின் விடுதலைக்கு ஆண்களைவிட பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள் என்று தன் காட்டமான உணர்வை பதிவு செய்தார்.

அதன் பின்னர்தான் பெண்கள் இழிவு குறித்து பரவலாக பேசப்பட்டன. பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை வலியுறுத்தி இந்து சட்டம் கொண்டுவர விரும்பினார். அதன் பொருட்டு அன்றைய பிரதம மந்திரியாக இருந்த பண்டிட்  ஜவகர்லால் நேரு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் உரையாடல் நிகழ்த்தினார்.  அவரும் அம்பேத்கரின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்தார். அதனால் நாடாளுமன்றத்தில் இந்து மசோதாவை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த சட்டம் இதுவரை பெண்களை பீடித்திருந்த அந்தக் கொடுஞ் செயல்களைச் களைவதற்கு ஒரு துருப்புச் சீட்டாக இந்து சட்ட மசோதா அமையும் என்று தீர்க்கமாக அம்பேத்கர் நம்பினார். அதனால் பெண்களின் முழு விடுதலையையும் முன்வைத்து அவர் சட்டத்தை கொண்டு வந்தார்.

இந்துச் சட்ட மசோதாவின் சாரம்சம் 

  1. கணவனை இழந்த கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம். மறு திருமணம் என்பது சட்டப்படி இனி வரும் காலங்களில் பெண்களின் உரிமையாகும்.
  2. திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனில் அவரை விவாகரத்துச் செய்யும் உரிமை.
  3. பெண்களுக்கு சொத்துரிமை குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு நிகராக பெண்களும் குடும்ப சொத்தில் பங்குதாரராக இச்சட்டத்தின்படி கருதப்படுவர்.
  4. பெண்களின் பாலிய விவாகம் தடை செய்யப்பட்டது. மேலும் பெண்களின் திருமண வயது வரம்பு புதிதாக வரையறைச் செய்யப்பட்டது.
  5. பெண்களுக்கு அரசியல் கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என சட்டத் திருத்த மசோதா வலியுறுத்தல்.
  6. வேலைக்குப் போகும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மூன்று மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க இம்மசோதா வலியுறுத்துதல்
  7. வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று தாங்கள் விரும்பும் கடவுளை தரிசிக்கும் வணங்கும் உரிமை.
  8. மாற்று மதத்தை சார்ந்த ஒரு மகனை விரும்பினால் மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் உரிமை. (தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் ஓர் மகத்தான உரிமையைப் பெண்களுக்கு இச்சட்டம் வழங்கியது)
  9. பெண்களின் மீது நடத்தப்படும் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை
  10. பெண்கள் தங்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராட சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை

இப்படி பெண்களின் அனைத்து உரிமைகளையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் இந்து சட்ட மசோதா அமைந்திருந்தது. ஆனால் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது மிகப்பெரிய துர்பாக்கிய நிலை.

பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது.

பாராளுமன்றத்தில் அனைத்து ஆதிக்க சாதி இந்து மன நிலையால் இச்சட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இதற்கு வல்லபாய் படேல்,  ராஜாஜி உள்ளிட்ட சாதி இந்து மனோநிலைமை, பெண்களையே வைத்து,  பெண்களுக்கு எதிராக கொண்டு வரும் சட்டம் என்று பொய் சொல்லி, எதிர்த்து போராடுவதற்கு தூண்டி விட்டனர். அவர்கள் சொல்லும் காரணம் வினோதமானது.

டாக்டர் அம்பேத்கர் இந்து சட்டத்திருத்த மசோதா என்கிற பெயரில் தொன்மை வாய்ந்த இந்து மதத்தின் மீது போர் தொடுக்கிறார். இதை அனுமதித்தால் எத்தனை காலம் நாம் கடைபிடித்த சாஸ்திரங்களும், சடங்குகளும், அர்த்தமற்றவை ஆகிவிடும். நம் நாட்டின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படும் பெண்களைப்போல் வாழாமல் பெண் விடுதலை என்கின்ற பெயரில் நம் சமுதாயப் பெண்களை டாக்டர் அம்பேத்கர் கொச்சைப்படுத்துகிறார்கள். இதை வரவேற்றால் நம்முடைய கலாச்சாரமும் பழமை வாய்ந்த பண்பாடும் பாழ்பட்டுப் போகும். ஆகவே பெண்களே டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக அணிதிரள்வோம். இந்து சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப்போம் என்று கலகம் செய்து அம்பேத்கருக்கு எதிராக அணி திரட்டினார்.

பாவம் அவர்கள் பலியிடப்படும் ஆடுகளைப் போல அவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்து டாக்டர் அம்பேத்கருக்கு எதிராகவே கோஷங்களை எழுப்பினர்.

பாராளுமன்றத்திலும் இச்சட்டத் திருத்த மசோதாவை முன்வைத்து பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் போனதால் தோல்வி அடைந்தது.

எனக்கும் என் சிந்தனைக்கும் உரிய அங்கீகாரம் இல்லாத இவ்விடத்தில் இனி நான் இருக்க மாட்டேன் எனக் கூறி தன் சட்டத்துறை அமைச்சர் பதவியை துச்சமென தூக்கி வீசி எறிந்தார். உடனே தன் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்துவிட்டு 1951ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவது எத்துனை பெரிய கடினம். அதிலும் குறிப்பாக அமைச்சராக அங்கம் வகிப்பது யாவருக்கும் அன்றைக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதிலும் குறிப்பாக சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராகவும், இருந்த பதவியை துச்சமென தூக்கி எறிந்தவர் தான் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

மக்கள் நலனுக்காக தான் இந்த பதவியே ஒழிய தன்னுடைய நலனுக்கு ஒருபோதும் அல்ல. மக்களுக்காக கொண்டு வந்த இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பிறகு இனி இந்த சட்டத்துறை அமைச்சர் பதவி எதற்கு என்ற கொள்கை கோட்பாடு கொண்டவர்.

ஒரு சாதி இந்துவின் நிலைமை என்னவாக இருக்க முடியும். அது அடிமையாகத்தான் இருக்க முடியும் என்பதை ராஜாஜி, பட்டேல், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரின் மனோநிலை.

பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் பொழுது பண்டிட் ஜவஹர்லால் நேரு எவ்வளவோ சமாதானம் செய்தும் டாக்டர் அம்பேத்கர் கேட்கவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தார். அப்பொழுது அவருக்கு எழுதிய ஒரு கடிதம் அத்துணை வரலாற்று சிறப்புமிக்க கடிதமாக அமைந்துள்ளது.

அதில் நேருவைப் பார்த்து இப்படி எழுதியிருந்தார்… சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கும் போது தாங்கள் வாய்மூடி மௌனியாக இருந்தது எனக்கு வேதனை அளித்தது,  இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததை காட்டிலும் ஒரு சோஷலிசவாதியாக, முற்போக்காளராக, அறியப்பட்ட தாங்கள் அமைதி காத்தது என்னால் ஜீரணிக்க முடியவில்லை, தாங்கள் கொடுத்த வாக்குறுதி மற்றும் நம்பிக்கையின் பேரிலேயே நான் முழுமனதுடன் இந்த செயலில் ஈடுபட்டேன்.  இந்த தேசத்தின் பெண்களின் நலன்களை காக்கின்ற ஒரு மாபெரும் முயற்சியில் நீங்கள் என்னை தோல்வியின் விளிம்பில் நிறுத்திவிட்டீர்கள்.  இதற்கு மேலும் இந்த அமைச்சரவையில் என்னால் எப்படி நீடிக்கவியலும். சுயமரியாதையை விரும்பும் எந்த மனிதனும் இனி அங்கு இருக்க முடியாது.  அதையே நானும் செய்கிறேன். இதுகாரம் தாங்கள் எனக்கு கொடுத்து ஒத்துழைப்பும்,  என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் எனது நன்றி.

பெண்களின் உரிமைக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும். ஏனென்றால் இது கால மாற்றத்தின் ஒரு அங்கம். வரலாற்றுத் தேவை ஒருவேளை அப்படி நிகழாமல் போனால் இந்த சமூகம் காட்டுமிராண்டிகளின் சமூகமாக மாறிவிட்டது என்று பொருள். இது நான் விடுக்கும் சாபம் அல்ல. வரலாற்றுப் படிப்பினை இப்படி எழுதி அனுப்பினார்.

இக்கடிதம் இன்றைக்கு எல்லா வகையிலும் சாட்சியாக அமைகிறது.

எண்பதுகளில் இறுதியில், 90களின் தொடக்கத்திலும் பெருங்கனவு வெடிக்கத் தொடங்கியது. சாதி விடுதலை, பெண் விடுதலை, பாலின சமத்துவம் உள்ளிட்ட கொள்கை, கோட்பாடுகள் பேசுபொருளாக விடுதலைக்கான பாதையை நோக்கி பயணப்பட தொடங்கி விட்டனர். யாவற்றுக்கும் பாபாசாகேப் அம்பேத்கர் என்றென்றும் தேவையாகவுள்ளர்.

- பேரா. எ.பாவலன்

Pin It