விடுதலை சிறுத்தைத் தோழர்களுடன் கழகத்தினர் பங்கேற்பு
மனுசாஸ்திரம் பெண்கள் மீது சுமத்தும் இழிவைக் கண்டித்துப் பேசிய வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் மீது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்தும் மனு சாஸ்திரத்தை தடை செய்யக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
அய்ரோப்பிய ஒன்றிய பெரியார் அம்பேத்கரிய தோழர்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த மாதம் 26.09.2020 அன்று ‘பெரியாரும் இந்திய அரசியலும்' என்ற இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் ‘சனாதனத்தைப் புரிந்து கொள்ளாமல் பெரியாரைப் புரிந்து கொள்ள முடியாது' என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
உரையில், மனுசாஸ்திரத்தில் பெண்களை இழிவாக குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். 40 நிமிடங்களுக்கு மேல் பேசிய உரையிலிருந்து 1 நிமிடமாக வெட்டி, ஒட்டி திருமாவளவன் பெண்களை இழிவு படுத்திவிட்டார் என்று பாஜக,ஆர்எஸ்எஸ் - காரர்கள் பிரச்சாரத்தில் இறங்கினர். காவல் நிலையத்தில் புகார் தந்தனர். 6 பிரிவுகளில் காவல்துறை வழக்கும் பதிவு செய்தது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதும் மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி 25.10.2020 கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
திருமாவளவனின் அறிவிப்பைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழகமும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் என்று அறிவித்தார். 25.10.2020 அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் விசிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, கடலூர், சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் சேலம் மாவட்டத் தோழர்கள் சேலத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலம் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உடன் கலந்து கொண்டனர். 100- ற்கும் மேற்பட்ட விசிக, திவிக தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னையில் மாலை 3 மணியளவில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத் தில் உரையாற்றிய திருமாவளவன், திருமாவளவன் பெண்களை கொச்சைப் படுத்தி விட்டான் என்று கூறுகிறார்கள். நான் கூறுகிறேன் மனுநூல் தான் பெண்களை கொச்சைப்படுத்துகிறது.
வாருங்கள் விவாதிப்போம்.
இவர்கள் நினைக்கிறார்கள் வழக்குப் பதிவு செய்தால் திருமாவளவன் பின்வாங்கி விடுவார் என்று. ஆனால், இது என்னை இன்னும் ஒரு ஆயிரம் அடி முன்னால் கொண்டு போகும். அவர்கள் நினைத்தார்கள் ‘இல்லை நான் அந்த கருத்தை கூறவில்லை’ என்று பின்வாங்குவேன் என்று எண்ணியிருந்தார்கள். மனுதர்மம் தான் கூறியது என்று இன்றைக்கு தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை வைத்து கூறியிருக் கிறோம்.
“நான் இதை கர்வத்தோடு பேசுகிறேன் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. தன்னம்பிக்கை யோடும், நெஞ்சுரத்தோடும் பேசுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளையும், தந்தை பெரியாரின் கொள்கைகளையும் உண்மையாக உணர்ந்து உள்வாங்கியிருப்பதால்; மாமனிதர் மார்க்ஸ் கொள்கைகளையும் அறிந்திருப்பதால் நான் இந்தக் கொள்கைகளை தன்னம்பிக்கையோடும், தைரியத் தோடும் பேசுகிறேன்.
சமூகத்தை சீரழிக்கும் இந்தக் கோட்பாடுகளை பற்றிப் பேசாமல் எப்படி பின்வாங்க முடியும். நான் கேட்கிறேன் அம்பேத்கர், பெரியாருக்குப் பின் தானே பெண்கள் இங்கே படிக்க முடிந்தது.
மனுநூலுக்கு எதிரான போராட்டம் தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் போராட்டம். மனுதர்மத்திற்கு எதிரான போராட்டம் தான் புரட்சியாளர் அம்பேத்கரின் போராட்டம். நாம்இதை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கரின் பெரியாரின் பேரர்களாகிய நாங்கள் மனுசாஸ்திர எதிர்ப்பை முன்னெடுத் திருக்கிறோம்” என்று உரையாற்றினார்.
- திருமாவளவன்