கீற்றில் தேட

                பிற்காலப் பாண்டியரின் வீழ்ச்சியை அடுத்து டில்லி சுல்தான்களின் ஆட்சி மதுரையில் நிலை பெற்றது. பின்னர் விசய நகரப் படையெடுப்பால் சுல்தான்கள் ஆட்சி மறைந்து மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய மூன்று ஊர்களைத் தலைநகராக் கொண்டு நாயக்கர் ஆட்சி உருவானது. விஜயநகரப் பேரரசின் ஆளுநர்கள் போன்ற நிலையில் மூன்று நாயக்க மன்னர்களும் செயல்பட்டனர். இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட விசய நகரப் பேரரசின் நிர்வாக முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. நாடு என்ற பெயரிலான பெரிய பிரிவு மண்டலம் எனப்பட்டது. மண்டலம் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. பாளையக்காரர் என்பவர் பாளையங்களின் நிர்வாகியாக இருந்தார். குடிகளிடம் வரிவாங்கி நாயக்க மன்னர்களுக்கு அனுப்பி வைப்பது இவர்களது பொறுப்பாயிற்று தாங்கள் வாங்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கை நாயக்க மன்னருக்கு அனுப்பி வந்தனர்.

                பிற்காலச் சோழர் காலத்தைப் போன்று நன்செய், புன்செய் என நிலங்கள் தரம் பிரிக்கப்பட்டு நிலவரி வாங்கப்பட்டது. வீடு, காலி மனை, தோட்டம் என்பனவற்றிற்கும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. கருமார், தச்சர், கம்மாளர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஞர்களும் வண்ணார், நாவிதர் ஆகிய குடி ஊழியக்காரர்களும் மீன் பிடிப்போர் ஆடு வளர்ப்போர் ஆகியோரும் தனித் தனியாக வரி செலுத்தினர். பரத்தையர்களிடமும் தொழில் வரி வாங்கப்பட்டது! பிடாரி வரி என்ற பெயரில் கோவில் விழாக்களுக்கு வரி வாங்கப்பட்டது.

                பொது நீர் நிலைகளில் மீன் பிடிப்போர் ‘பாசை வரி’ என்ற வரியையும், மக்கள் ஆறுகளை கடப்பதற்கு உதவும் வகையில் ஓடம் அல்லது படகு விடுவோர் ‘வத்தை வரி’ என்ற வரியையும் செலுத்தினர். ஊர்க்காவல் செலவுக்காகப் பாடிகாவல் என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது.

                இவை தவிர உப்பு உற்பத்தி செய்வோரும் முத்து, சங்கு ஆகியனவற்றை கடலிலிருந்து எடுப்போரும் வரி செலுத்தினர். இவ்வரிகளில் நெல்லாக செலுத்தப்பட்டவை நெல் முதல் என்றும் பொன்னாக செலுத்தப்பட்டவை பொன் முதல் என்றும் அழைக்கப்பட்டன. 

                இன்றையக் கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள செங்கோட்டை நகரமும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களும் அன்றையச் சென்னை மாநிலத்திற்குள் இடம் பெறவில்லை. திருவனந்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் மன்னராட்சியின் கீழ் இப்பகுதிகள் இருந்தன. மக்களின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை இருந்ததன் அடிப்படையில் நிலவரி அரசின் முக்கிய வருவாய் இனமாக இருந்தது. நிலவரி தவிர வேறு சில வரிகளும் குடி மக்களிடம் இருந்து, குறிப்பாக அடித்தன மக்களிடமிருந்து வாங்கப்பட்டன. அவற்றுள் சில வருமாறு:

                தலைக்காணம் (தலைவரி – ஞழடட – வயஒ) என்ற வரி ஒருவன் நாட்டில் வாழும் காரணத்திற்காகவே வாங்கப்பட்டது. ‘குப்பக் காசு’ என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒலைச் குச்சில்களுக்கும் வரி வாங்கப்பட்டது. கள் இறக்குவோரிடம் ‘குட்ட நாழி’ என்ற பெயரில் கள்ளாகவே வரி வாங்கப்பட்டது. ஒரு பானைக் கள்ளிற்கு ஒரு நாழி என்ற அளவில் கள் இறக்குவோர் வரியாகச் செலுத்தியுள்ளனர். இதை விடக் கொடுமையாக, பனை ஏறப் பயன்படுத்ததும் சிறிய ஏணிக்கு ‘ஏணிக் காணம்’ என்ற பெயரில் வரி வாங்கப்பட்டது. மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. முடி வளர்க்கவும், மீசை வைக்கவும் கூட வரி செலுத்தியாக வேண்டும். தங்க அணிகலன்கள் அணிவோரிடமிருந்து ‘மேனிப் பொன்’ என்ற வரி வாங்கப்பட்டது. ஆளுவோர்கள் எவ்வளவு இழிவான முறையில் வரி விதிப்பார்கள் என்பதற்கு பெண்களின் முலை மீது விதிக்கப்பட்ட ‘முலை வரி’ என்ற வரி சான்றாகும்.

                ஒவ்வொரு குறிப்பிட்ட மீன் வகையைப் பிடிப்பதற்கு மீனவர்கள் வெள;வேறு வலைகள் வைத்திருப்பார்கள். இம் மீன் வலைகளுக்கும், கடலில் செல்லப் பயன்படுத்தும் பாய்மரத் தோணிகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் என்ற கடற்கரைக் கிராமத்தில் கிடைத்த 1494 ஆம் ஆண்டுக் கல்வெட்டு

                கடமை வகையில் மடிவலை

                ஒன்றும் வாளை வலை ஒன்றும்

                சாளை வலை ஒன்றும்

                சண வலை ஒன்றும்

                முட்டங் கோவை குளத்தில்

                ஏற்று இறக்க உரு ஒன்றுக்கு

                பணம் ஒன்றாகவும்

 என்று இவ்வரி விதிப்பைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வரி இனங்களில் நூறு வரியினங்களை நீக்கிய பின்பும் கூட 1864–65 இல் இரு நூறு வரிகள் வழக்கிலிருந்துள்ளதாக டி.கே. வேலுப்பிள்ளை எழுதியுள்ளார்.

தொடரும்…

Pin It

இ ங் கு

 தாமதமாகவேனும் இலக்கியா கவிழ்ந்து படுத்ததை எண்ணி மீனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. "நேத்தி தாங்க குட்டி தானே திரும்பி குப்புரகமுந்து படுத்தா", என்று ஒரு பள்ளிப் பெண்ணின் துள்ளலொடு தொலைபேசியில் அவள் சொன்ன போது, "அப்டியா, ஆனா கொழந்த தவழறதத் தான் எனக்குப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்குது மீனா", என்று நான் சொன்னதை தொலைபேசி மைக்கில் கேட்ட அம்மா, "கவுந்து படுக்குற பிள்ளையப் பார்த்தா மூஞ்சிய வேற பக்கம் திருப்பிக்கிடுவானான்னு கேளு", என்று நக்கலடிப்பதும் லேசாகக் கேட்டது. அந்த நக்கல் தான் அம்மா. அதில்லாவிட்டால் அம்மாவின் தனித்தன்மை ஏது?

 வீட்டின் நினைவுகளும் நாங்கள் அடித்த கும்மாளங்களும் நினைவில் சிறுசிறுமின்னல்களாய் வந்திட, "யம்மோவ், எம்பொண்டாட்டியயும் பிள்ளையையும் ஒழுங்கா பாத்துக்க, ஆமா சொல்லிப்புட்டேன்", என்று நான் அம்மாவை வம்பிற்கிழுத்ததுமே, அருகில் வந்து தோலைபேசியைக் கையில், "போதுண்டா, பெரிய இவனாட்டம். எப்படா வர? அதச்சொல்லுடா மொத. என்ன வேலையோ என்னவோ பெத்த பிள்ளையக் கூடப் பாக்க வராம,.. அப்றம், யார் கிட்டயும் பிள்ளைய விட மீனாவுக்கு பயம், எங்கிட்ட கூட விட்டுட்டுக் குளிக்கப் போவக்கூட பயப் படுதுடா. அவ பார்வையிலயே இருக்கணுமாம்", என்று சொன்னதில் எந்த விதமான குற்றம் சொல்லும் தொனியைக் காண முடியவில்லை. ஏதோ ஒரு வித ஆச்சரியமும் சுவாரஸியமும் சேர்ந்தாற்போலத் தோன்றியது. "இல்லங்க, அத்தை சும்மா கேலி பேசுறாங்க", என்றபடியே மீனா வந்தாள் மறுமுனைக்கு. நான் இன்னும் என் மகளைப் பார்க்காமலே இருக்கிறேன் என்பதில் அம்மாவுக்கு இருந்த ஆதங்கம் மிக அதிகம்.

 "மீனா இந்த 'மீகோரெங்' கையும் மத்ததையும் சாப்டுசாப்டு எனக்கு நாக்கு செத்தேப் போச்சு, போ. அம்மா சமையல் கூடவேணாம். உன்னோட சமையலாவது கெடைக்காதான்னு நாக்கு ஏங்குது. எனக்கும் வீட்டு நெனப்பாவே இருக்குது. ஒண்ணுலயும் மனசே பதிய மாட்டங்குது", என்று நான் சொன்னதைக் கேட்டு வெறுமே உம்கொட்டிக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைபேசி மட்டும் இல்லாதிருந்தால், என் வாழ்க்கையை நினைத்தும் பார்க்கமுடியவில்லை என்னால். கிட்டத்தட்ட நரகமாகிப் போயிருக்கும். 'இதோ தீபாவளிக்கு வருகிறேன்', என்று பலமுறை சொல்லி கார்த்திகை தீபமும் கூடக் கடந்து போனது.

 சித்திரையில் பிறந்திருந்தாள் குழந்தை. கனவும் நினைவும் சிந்தனையும் குழந்தை பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது முதல் இரு மாதங்களில். பிறகு போய்ப்பார்க்கும் ஆசையிலேயே நாட்கள் கடந்து போக ஆரம்பித்தன. ஒரு மாதம் முன்னரே குறைப்பிரசவமாகிப் போனதில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பற்றி மீனாவுக்குள் எப்போதும் ஒருவித பதட்டம் இருந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் அம்மா கூடவேயிருந்து அவளையும் குழந்தையையும் கவனித்துக் கொண்டிருந்ததில் குழந்தை ஆறாம் மாதத்தில் இருக்க வேண்டிய எடையைக் கிட்டத்தட்ட எட்டியிருந்தாள். பத்து நாட்களுக்கு மீனா பிறந்த வீட்டுக்குப் போனபோதும் அங்கு பெரியவர்கள் யாருமில்லை என்று அம்மா கூடவே போய் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள்.

 மீனாவுடன் நீண்ட நேரம் பேசிடும் மனநிலையிலிருந்த எனக்கு, "கொஞ்சம் இருங்க, ஒங்க தம்பி பேசணுங்கறாரு", என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்த போது ஒரே சலிப்பாக இருந்தது. இதோ போவோம் அதோ போவோம் என்று இலக்கியா பிறந்து ஆறுமாதமும் ஆகப்போகிறதே என்ற சுயபச்சாதாபமும் அக்கணத்தில் சலிப்புடன் சேர்ந்து எழுந்தது. வேறு நல்ல வேலையாவது கிடைக்கிறதா, ஹப்ஹத்ம் கிடைக்கிற பாடாய்த் தெரியவில்லை.

 இப்போதெல்லாம் மீனா 'கொழந்த அழுவுதுங்க', என்றோ, 'பால் குடுக்கணும்ங்க', என்று கிசுகிசுப்பாகவோ, 'தூங்க வச்சிகிட்டிருக்கேங்க', குழந்தையை எழுப்பிவிடாத கவனத்துடன் அடிக்குரலிலொ சொல்லிவிட்டுப் போகும் போகும் போது என்னில் சின்ன பொறாமை கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் நான் இப்போது இரண்டாம் பட்சமாகிப் போனேனோ. ஆனால், ஒரு நாளைக்குத் தொலைபேசாவிட்டாலும் அடுத்த நாள் பேசும் போது, "ஏங்க நேத்திக்கி போன் பண்ணல்ல?", என்றுகேட்டுத் துளைத்தெடுத்து விடுகிறாள்.
 
 ஒன்றரை வருடத்திற்கு முன் காரைக்குடியில் திருமணம் முடித்து விட்டு சிங்கப்பூருக்குக் கிளம்பும் நேரம். எனக்கு திரும்பிடும் டிக்கெட் இருந்தது. அதே விமானத்தில் மீனாவுக்குக் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் அவள் வர வேண்டியிருந்தது. அதற்கு, "என்னால உங்கள விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க முடியாதுங்க", என்று தனிமையில் ஒரு முறை பிழியப்பிழிய அழுதுவிட்டு, தான் கேலிக்குள்ளாவதையெல்லாம் பொருட்படுத்தாமல், விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை அழுது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தினாள். ஒரே வாரத்தில் பிறந்த வீடு இரண்டாம் பட்சமாகிப் போனதோ என்று சொல்லி அவர்கள் வீட்டில் கேலி செய்தனர்.

 ஒரு வாரம் முன்பு முருகனுக்கும் திருமணம் முடிந்திருந்ததால், 'புக்கித் பாத்தோக்' கில் மூன்று மாதங்களுக்கு ஒரு ஈரறை வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அடுத்த நாளுக்கு அடுத்த நாள் மீனா வந்த பிறகு நேராக அங்கே போய்விட்டோம். சாலைகளின் சுத்தம், வாகனங்களின் வேகம், வானுயர் கட்டங்கள், பல்லின மக்கள், சுற்றுலாத் தலங்கள், திடீரென்று பெய்து திடீரென்று நிற்கும் மழை என்றும் ஒவ்வொன்றையும் சிறுகுழந்தையின் ஆர்வத்துடன் வெகுளியாக ரசித்தாள். முடிந்த வரை சுற்றிக் காண்பிக்கவே செய்தேன். நான் வேலைக்குப் போயிருக்கும் போது மீனாவுக்குத் துணையானாள் முருகனின் மனைவி.

 வந்த இரண்டே மாதத்தில் மீனா கருவுற்றாள். அவள் மிகவும் பலகீனமாக இருந்ததாகவும் நல்ல சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். ஆனால், மீனாவோ வாய்க்குப் பிடிக்கவில்லை என்று வழக்கமான உணவையும் சாப்பிடாமல் அடம் பிடித்தாள். சாப்பிட்ட சொற்ப உணைவையும் அடிக்கடி வாந்தி வேறு எடுத்துக் கொண்டே இருந்ததால் ஏற்கனவே ஒல்லியாக இருந்தவள் மேலும் சோர்ந்து மெலிந்து போனாள். பேசாமல் ஊருக்கு அனுப்பினாலாவது அங்கிருப்பவர்கள் மீனாவைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்து சீக்கிரமே ஊருக்கு அனுப்பி விட்டேன். அப்பா தன் மருமகளை தாங்குதாங்கென்று தாங்கினார். ஒரு நாள் தவறாமல், பாதாம் ஊற வைத்து, அரைத்து பாலில் குங்குமப்பூவுடன் கலந்து மீனாவைக் கட்டாயப் படுத்திக் குடிக்க வைத்து உடலையும் எடையும் ஓரளவிற்கு தேற்றினார்.

 எ°பாஸத்ம், அடுத்த ஒரே மாதத்தில், நிரந்தரவாசமும் பெற்று விட்டதில் முருகனால் தன் மனைவியைக் கூடவே வைத்துக் கொள்ள முடிந்தது. "டேய், தினமும் போனுக்கு செலவு பண்ணின காசுல நீ ஊருக்கே ஒரு நட போயிட்டு வந்திருக்கலாம்டா", என்று அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்தது. என்றாலும், வேறு 'மெயிண்டனன்°' துறையிலொ அதற்கீடான வேறு ஒரு வேலை கிடைத்து விட்டால் நிம்மதியாகப் போய் வரலாமே ஊருக்குப் போவதைத் தள்ளிப் போடும் படியிருந்தது.

 நான்கு வருடங்களாகி விட்டதால், நிரந்தரவாசத்திற்கு விண்ணப்பித்து விட நண்பர்கள் பரிந்துரைத்ததில், அதற்கும் அரை நாள் லீவெடுத்துக் கொண்டு குடிநுழைவுத்துறை அலுவலகத்துக்குப் போய் வந்தேன். வேலை தான் கிடைக்கவில்லையென்றால், நிரந்தரவாசம் விண்ணப்பித்ததும் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்தது. இப்போதெல்லாம் கல்விச் சான்றிதழ்களின் பிரதிகளை கல்விக் கழகங்களுக்கே அனுப்பி நுணுக்கமாகச் சரி பார்த்து விட்டுத் தான் எ°பாஸோ நிரந்தரவாசமும் கொடுக்கிறார்கள். மேலும் சில மாதங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே வேலை பார்க்கலாம் என்று சொல்லி விட்டது தான் ஒரே நிம்மதி.

 முதல் முறை எனக்கு ஒன்றும் தெரியததால், "ஆபரேட்டர் வேலைக்கு ஒத்துக் கொள்கிறாயா?", என்று கேட்டதற்கு அதிகம் யோசிக்காது தலையை ஆட்டியதில் என் துறையே மாறிப் போனது. அக்கணத்தில் ஏnமூஜண்ட்டுக்குக் கொடுத்ததை ஈட்டிடும் ஒரே எண்ணம் மனதில். அது வரை நான் தென்னிந்திய வடஇந்திய நிறுவனங்களில் கிட்டியிருந்த ஆறுவருட அனுபவத்திற்குப் பயனில்லாதும் போனது தான் சோகம். இம்முறை கவனமாக ஏஜேன்ட் பிரச்சனைகளைத் தவிர்த்து விட்டு, நானே வேலை தேடிட முடிவெடுத்தேன்.

 

அ ங் கு

 

 அத்தைக்கு மகள் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவளாகவே என்னைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தங்கினார். "மீனா, கல்யாணம் ஆன புதுசுல அம்மியில நான் மிளகு அரைக்கும் போது சிந்தாம சிதறாம அரைக்கணும்னு எவ்வளவோ கவனமாத் தான் இருப்பேன். ஆனாலும், பழக்கமே இல்லாததால சிந்தாம அரைக்கவே தெரியாது. பொறந்த வீட்டுல ஒரே மகள்னு செல்லம். சமைக்கவே கத்துக்கிடல. கட்டி கொடுத்தப்ப பதினஞ்சு வயசு எனக்கு. இப்டி சிந்திகிட்டே அரைச்சா உனக்கு பொட்டப் புள்ள தான் பொறக்கும்னு எங்க மாமியார் சொல்லிட்டே இருப்பாங்க. சுள்ளுசுள்ளுன்னு பேசுனாலும் மனசு முழுக்க எம்மேல பாசம் தான். இதோ, இதே அம்மி தான் மீனா. அப்ப நாங்க அறந்தாங்கில இருந்தோம். இப்ப என் கைப்பக்குவம் ஒவ்வொண்ணும் எங்க மாமியார் சொல்லிக் கொடுத்தது. பின்னால, மூணு ஆம்பளப் பிள்ளைங்க பொறந்துச்சு, மூத்தது பொறந்து ரெண்டே நாள்ள செத்தும் போச்சினு வச்சிக்கோ. அப்பல்லாம் மாமியார் இல்ல. ப்ச்,.. பேரன்களப் பார்க்காமயே போய் சேர்ந்துட்டாங்கன்னு வைய்யேன். இங்க வந்தப்ப ரெண்டு பயலுகளும் நாலு வயசும் ஒரு வயசுமாயிருப்பானுக", என்பார்.

 இடையே புகுந்து, "ரெண்டு பேருல யாரு அத்தை அதிக வாலு?", என்று கேட்கும் போதெல்லாம், "ஒம்புருஷன் தான். வாயும் வாயி. கையும் கையின்னு வையி. ஊர் வம்பு வம்பையெல்லாம் வலுவில இழுத்துட்டு வந்தாலும் நல்லாப் படிப்பான். இப்ப நெனச்சாலும் சிரிப்பா வரும் என்ன நெனச்சு எனக்கே. பொம்பளப்பிள்ள வேணும்னு ஆசப்பட்டு நானா அம்மியில ஒரு கை மிளக வச்சி நாலாப் பக்கமும் சிதறியடிச்சி அரைக்கிறதப் பார்த்து நம்ம பக்கத்து வீட்டுப் பாட்டி சிரிக்கும். அதுப் பின்னாடி, பொண்ணும் பொறக்கல பையனும் பொறக்கலனு வச்சிக்க", என்று தன் கடந்த காலத்தின் இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது சொல்வார். தனக்குப் பேத்தி பிறந்ததில் அத்தையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருந்தது.

 தவழ்ந்திடும் குழந்தையைப் பார்க்க வேண்டுமாம் அவருக்கு. சரி, அந்த ஆசையிலாவது, இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தை தவழும் போது சிங்கப்பூரிலிருந்து வருகிறாரா பார்ப்போம் என்று தோன்றியது. "பொங்கல் உன் கூட தான் மீனா. நிச்சயமா வந்துடுவேன். மனசெல்லாம் எனக்கு அங்க தான் இருக்கு", என்று சொன்னார். ஆனால், மாசியே பிறந்து விட்டது. சமீபத்தில் பேசும் போது, "மூணு மாசம் வெயிட் பண்ணியாச்சு. கெடைச்சுடும்னு நெனச்சேன். ஆனா, எதிர்பார்க்கவேயில்ல, 'பீஆர்' ரிஜேக்ட் ஆயிடுச்சும்மா. எ°பாஸத்க்கு அப்ளை பண்ணிட்டு வரேன். என்ன?", என்று சமாதானம் சொன்னார்.

 குழந்தை பிறந்து மாதக் கணக்கில் பார்க்காமல் இருப்பது என்பது எத்தனை கடினம்? குளிக்கிற குழந்தையையோ குப்புரக் கவிழ்ந்து படுக்கும் குழந்தையைப் பார்க்கவும், தொட்டுத் தடவிடவும், தவழ்ந்திடும் குழந்தையைப் பார்த்துக் களித்தின்புறவும் அவருக்கு அதிருஷ்டமில்லாமல் இருப்பதை என்வென்பது? இதைச் சொன்னால், "அதான் இப்ப பார்க்காததுக்கெல்லாம் சேர்த்து வச்சி பார்க்கப் போறேனே. அதான் சீக்கிரமே இலக்கியாவுக்கு தம்பி ஒண்ணும் பெத்துகுடுக்கப் போறியே", என்கிறார் சீண்டலுடன். "என்னால ஆகாதுப்பா. இந்த ஒண்ணே போதும் நமக்கு", என்று நான் சொன்னது கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உண்மையிலேயே எனக்கு இன்னொரு குழந்தை பெற்றிடும் எண்ணமே இல்லை.

 விளம்பரங்கள் மற்றும் சினிமாவில் குழந்தைகளைப் பார்த்தாலும் ஏக்கமாக இருக்கிறதாம். "இங்க குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை 'கிடீ° பேல°'ஸத் தாண்டிப் போகும் போது, அங்க அழகழகா வச்சிருக்கற பொருட்களப் பாக்காறப்போ நம்ம கொழந்தை ஞாபகம் தான் வருது மீனா. நா வரும் போது வாங்கிட்டு வருவேன். குறிப்பா ஏதும் வேணும்னா சொல்லு மீனா", என்று அவர் சொல்லும் போது, "நீங்க வாங்க. அத விட வேற என்ன வேணும்", என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றியது. எனக்கு அவரைப் பார்த்திட இருந்த ஆசையை விட அவர் இன்னும் குழந்தையைப் பார்க்காமல் இருக்கிறாரே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது.

 ஆயுள் குறைந்து விடும் என்று சொல்லிச் சொல்லியே குழந்தையை வீடியோவோ போட்டோவோ எடுக்க அத்தை விடவில்லை. எல்லொரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் விட்டுக் கொடுத்திடத் தயாராய் இல்லை. ஒரு முறை திருட்டுத் தனமாக அத்தை வெளியே போயிருந்த நேரம் அவருக்குத் தெரியாமல் மச்சினன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தான். அதுவும் தெளிவாக வரவில்லை. ஆனாலும், அவரின் பார்ஸில் இடம் வைத்துக் கொண்டதாகத் தொலைபேசியில் சொன்னார். "அண்ணன் இன்னும் வந்து இலக்கியாவப் பாக்கல்ல. வேற சிங்கப்பூரு சிங்காரிய பிடிச்சிட்டாரோ என்னவோ? அண்ணி, எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருந்துக்கோங்க அண்ணி", என்று என்னைக் கேலி செய்தான் மச்சினன் ஒரு முறை. அருகில் இருந்த மாமா தான், "டேய் டேய், சும்மா இருடா. அது மாதிரியெல்லாம் செய்யற ஆளு அவனில்ல. அது உனக்கே தெரியுமில்ல மீனா", என்று கண்டித்து எனக்கும் சமாதானம் சொன்னார். மின்னஞ்சல் செய்திட மச்சினனின் சிநேகிதர் வீட்டுக்கு, மாயவரத்துக்குப் போக வேண்டும். கூட்டிப் போனான் மச்சினன் ஓரிரு முறை. எங்கள் கிராமத்தில் அந்த வசதியில்லை. அப்போது தான் ஒரே ஒரு முறை 'வியூகாம்' மூலமாக தன் மகளைப் பார்த்தார் அவர். அப்போது குழந்தை புது இடம் என்பதாலொ என்னவோ விடாமல் அழுது கொண்டிருந்தாள்.

 வருவோர் போவோர், தெரிந்தவர், அக்கம் பக்கம் எல்லொரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குழந்தையின் அப்பா வராததற்குக் காரணம் அறிந்து கொள்ள விழையும் ஆர்வத்துடனும் வம்புடனும் பேசிய போது, அத்தை பார்த்துக் கொண்டார். பெரியண்ணி அதிகம் பேச மாட்டார். சின்னண்ணி, "ஏன் மீனா, ஒம்புருஷனுக்கு கொழந்தையப் பாக்கக் கூட வர முடியாம வேலையா? அதுவும் மொதப் பிள்ள. இன்னும் பாக்கவல்லயே", என்று கேட்ட போது, " இந்த வொர்க் பெர்மிட் முடியிது. அவருக்கு வேற வேலை தேட வேண்டியிருக்கு. அதான். இன்னும் ஒரே வாரத்துல வரேன்னிருக்காரு", என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன். "ஒண்ர மாசத்துக்கு முன்ன நா உங்கண்ணனோட வந்தப்பவும் ஒரே வாரத்துல வாரதாத் தானே சொன்ன", என்றபோது நான் பேசாதிருந்தேன். என்ன தான் பேச? குழந்தை பிறந்து ஒரு வருடம் முடியும் நேரத்தில் யாருக்கும் தோன்றக் கூடியது தானே?

 அன்றிரவு எல்லொரும் கிளம்பிப் போனதும், சிங்கப்பூருக்குத் தொலைபேசி நடந்ததையெல்லாம் சொல்லி வீராப்பாகவும் கடுமையாகவும், "எனக்காகவோ உங்களுக்காகவோ இல்லன்னாலும் மத்த எல்லார் வாயையும் அடைக்கிறதுக்காச்சும் வந்துட்டு போங்க. ஒரே வாரம் இருந்தாக் கூட போதும்", என்று சொன்னேன். "மத்தவங்களுக்காக நாம ஆட முடியாது. இங்க பாரு, ஏப்ரல் மொத வாரம் நான் அங்க இருப்பேன். என்ன? நம்பல்லையா? நம்பு மீனா. அழுவுறியா என்ன? அழுவாதடி. பாப்பாவோட மொதப் பிறந்த நாளைக்கி நான் அங்க வல்லன்னா நீயே இங்க வந்துடு பாப்பாவத் தூக்கிட்டு. தம்பி ஏத்திவிடுவான். நா என்ன செய்ய, சொல்லு? ஏஜேண்ட் •பீ° மிச்சப் படட்டுமேன்னு நானே சொந்தமா வேலைக்கு முயற்சி பண்ணேன். கெடைக்கல்ல. இப்ப ஏஜேண்ட் கிட்ட சொல்லியிருக்கேன். கெடைக்கும். ஏஜேண்ட் •பீ° அழுது தான் ஆவணும்ன்றது என் விதின்னா யார் என்ன செய்ய? சரி, அதவிடு. சொல்லாம திடுதிப்புனு ஒம்முன்னால வந்து நிக்கறேனா இல்லையான்னு நீயே பாரேன்", என்று சமாதானம் செய்தார். அவர் நிலையை நினைத்துப் பார்த்தால், என் கோபம் அர்த்தமற்றதென்றே பட்டது.

 இன்னும் ஒரே வாரத்தில் இலக்கியாவுக்கு ஒரு வயது முடியவிருந்த போது தான் வந்துசேர்ந்தார். காதுகுத்து, முடியிறக்கம் என்று வீட்டில் அண்ணன்கள் அண்ணிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என்று கூடியிருந்தனர். அடுப்படியில் மெகாசீரியல்களாக காபியும் சமையலும் பரிமாறல்களுமாக சதா பாத்திரங்களின் ஓசை. அவ்வப்போது ஏலமும் முந்திரியும் மணத்தன. வீட்டின் குறுக்கும் நெடுக்கும் குழந்தைகளின் ஓட்டம். இன்னும் வர வேண்டிய விருந்தினர் இருந்தனர். சிங்கப்பூரில் எ°.பா°ஸத்க்கு விண்ணப்பித்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார். சிங்கப்பூரில் கிடைத்த வேலையைவிட இன்னும் நல்லவேலை ஒன்று இந்தோனீசியாவில் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கவே, அங்கு போய்விட்டு இந்தியா நேராக கிராமத்துக்கு வந்திறங்கினார். வந்திலிருந்து இலக்கியாவின் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார். "ஏம்மா, ஒரு வாரத்துக்குள்ள நடக்க ஆரம்பிச்சுட்டாளா", என்று கேட்டபடியே இருந்தார். "வேகவேகமா தவழும். நல்லா நடக்க வந்தவுடனேயே தவழறத நிறுத்திடுச்சு", என்றார் மாமா.

 வந்ததிலிருந்து இரண்டு நாட்களாக அவரைப் பார்த்தாலே புது ஆளைப் பார்க்கும் மிரட்சியில் அழுது கொண்டிருந்தவள் அவரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் வீரிட்டு அழுதாள். "குட்டி, அப்பாக்கு தவழ்ந்து காட்டுடா", என்று அவளை ஒவ்வொரு முறையும் உட்கார வைத்து தவழும் நிலைக்குக் கொண்டு வரும்போதும் அலறினாள். அத்தை வேறு, "தவழற கொழந்தைய நீ பார்த்ததேல்லயோ? ஏண்டா அவள இந்த இம்சை பண்ற?", என்று கேட்டு அவரைக் கடுப்படித்தார். தன் குழந்தையும் ஏதோ ஒரு குழந்தையும் ஒன்றா? குழந்தையோ புதிதாக நடக்கத் தெரிந்து கொண்ட பெருமையில் தவழ மறுத்து குடுகுடுவென்று ஓடிக் கொண்டேயிருந்தாள். "ஏம்மா இது இனி தவழாதா?"

Pin It

'வறுமையைப் போல் துன்பமானது எதுவென்று கேட்டால் அது வறுமை ஒன்றுதான்' என்றார் வள்ளுவர். வறுமையின் கொடுமையை இதைவிடச் சரியாகச் சொல்லிவிட முடியாது. 'கொடிது கொடிது இளமையில் வறுமை' என்று. இளமைப் பருவத்திற்கே உரிய இனிய அனுபவங்களையும் சுகங்களையும் வறுமை பறித்துவிடும் என்று அவ்வை உணர்த்துகிறார்.

இத்தகைய வறுமையில் துயரப்படுகிறவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஏராளம் கோடி.

'கரீபி ஹட்டோ! கரீபி ஹட்டோ!' - வறுமையே வெளியேறு! வறுமையே வெளியேறு! - என்று இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் நாடு முழுவதும் உரக்க முழக்கமிட்டனர். இவர்கள் போட்ட இந்த கோஷத்தினால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் (1977-ல் தேர்தலில் தோற்று) வெளியேறியதே தவிர வறுமை வெளியேறவில்லை!

இன்று மன்மோகன்சிங் அரசின் மத்திய திட்டக்குழு வெகுநாட்களாய்த் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு நாடு 'முன்னேற' ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அந்த அபாரக் கண்டுபிடிப்பு என்னவென்றால், வறுமைக்கோடுக்கான அளவுகோல்.

நகரத்தில் வசிப்பவர் தினமும் 32 ரூபாய் சம்பாதித்தால், கிராமத்தில் வசிப்பவர் தினமும் 26 ரூபாய் சம்பாதித்தால் இவர்களெல்லாம் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள். அதாவது, வறுமை இல்லாமல் வசதியாய் வாழ்கிறவர்கள்! குறைவாகச் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் - அதாவது வறுமையில் வாடுகிறவர்கள்.

இந்த 36 ரூபாயும் 26 ரூபாயும் கொண்டு ஒருவர் ஒரு கிரோ அரிசிதான் வாங்கமுடியும். இந்த ஒரு கிரோ ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையையாவது உணவுத் தேவையையாவது நிறைவு செய்யுமா? நகரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டால் ஒருவருக்கான மதிய உணவுக்காவது இந்த ரூ.35 போதுமா? அப்புறம் குடும்பத்திற்கான துணிமணிகள், மருத்துவம், கல்வி, வீட்டுவாடகை, மின்கட்டணம், போக்குவரத்து மற்றும் இதர கட்டாயச் செலவுகள் இவற்றையெல்லாம் அரசே இலவசமாய் வழங்கிவிடுகிறதா?

ஒரு பேச்சுக்காக.... இவற்றையெல்லாம் அரசாங்கமே இலவசமாக வழங்கிவிட்டால்கூட இந்த 32-ம் 26-ம் ஒருநாள் உணவுக்கே போதாதே!

'வாங்குற சம்பளம் வாய்க்கும் வயித்துக்குமே போதல' என்று மனம் நொந்துபோகும் ஏழைகளின் வேதனைக் குரலை உச்சிநிலை அதிகார வர்க்கம் கேட்டிருக்குமா... என்றாவது கேட்டிருந்தாலும் அது அவர்களது மனதைப் போய்த் தொட்டிருக்குமா....

இந்த அளவுகோலின் வருமானத்தைக் கொண்டு தினசரி வாழ்க்கையை நடத்தும் மக்கள் எப்படி வறுமையைக் கடந்தவர்களாக இருக்க முடியும் என்கிற - சாமான்ய குடிமகனுக்கும் தெரிந்த எளிய உண்மையானது மத்திய திட்டக்குழுவின் மகா மனிதர்களுக்கு ஏன் தெரியாமற்போனது?

அரண்மனையைவிட்டு வெளியவே போகாத ஒரு ராஜா மந்திரியைப் பார்த்து, "மதி மந்திரியாரே! நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று கேட்டாராம். இப்படிப்பட்ட ராஜாவைப் போல்தான், வெளியே மக்களின் நிலை அறியாத 'மகா மதியூகியாக' நம் மத்திய திட்டக்குழு உள்ளது!

அரிசி, கோதுமை, ஜீனி போன்ற உணவுப் பொருட்களையும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றையும் அரசாங்கத்தின் மானிய விலையில் பெறுகிற ஏழைகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்துவிடுவதற்கான இரக்கமற்ற ஏற்பாடுதான் இது.

நாள்தோறும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலையேற்றம் ஏழை - நடுத்தர மக்களையே வாட்டிவதைக்கிறது. உலகில் மேலும் 4 கோடியே 40 லட்சம் மக்கள் வறுமையினால் ஏழைகளாவார்கள் என்று சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்.) தெரிவித்துள்ளது.

இத்தகைய குழுவில்தான் மத்திய திட்டக்குழுவின் இந்த மகா புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. மக்களின் வாழ்நிலையையே அறிந்திராத இவர்கள் கிழிக்கும் வறுமைக்கோட்டு அளவுகோல் யதார்த்தத்திற்கோ, மக்களின் நிஜ வாழ்க்கை நிலைமைக்கோ பொருந்தாது!

Pin It

நாட்டிற்கு உள்ளேயும் நாடு கடந்தும் ஊடகங்களின் நிலை குறித்த ஒரு புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஊடகச் சுதந்திரம், நாட்டின் சுதந்திரப்போராட்ட வெற்றியோடு இணைந்தே நிலைநாட்டப்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தலைவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ, இரண்டுமேயாகவோ இருந்தவர்கள்தான். காந்தி தனித்திறமை வாய்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரே நேரத்தில் ‘இண்டியன் ஒப்பீனியன்,’ ‘ஹரிஜன்,’ ‘நவஜீவன்’ என பல பத்திரிகைகளுக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். அவரது ‘சத்தியாக்கிரகம்’ என்ற கோட்பாடு அவருக்குத் திடுதிப்பென ஒரு நாள் உதித்துவிடவில்லை. பத்திரிகையாளராகத் தொடர்ந்து எழுதிவந்த பின்னணியில், படிப்படியாகவே அந்தக் கோட்பாடு உருவானது என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாகச் சுழன்ற அந்தக் கோட்பாடு நாட்டின் சுதந்திரத்தை ஈட்டித்தந்தது.

இவ்வாறு அரும்பாடுபட்டு வென்றெடுத்த ஊடகச் சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் பல சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வந்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் பெரும் தாக்குதல் என்றால் அவசரநிலை ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு, மாநிலம் இரண்டிலுமே ஆட்சி நிர்வாகமும், சட்டமியற்றும் மன்றமும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுவர முயன்றதுண்டு. அப்போதெல்லாம் இந்திய மக்கள்தான் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் நடத்திய போராட்டத்தில் தோளோடு தோள் நின்று ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தார்கள். ஆம், இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கடுமையான போராட்டங்களின் பலனாகவே வென்றெடுக்கப்பட்டது.

யாரிடமிருந்து சுதந்திரம்?

இன்று நடப்பதென்ன? ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதா அல்லது ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் ஊடகங்கள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக எந்திரங்களாக மாறிவிட்டன.

ஊடகங்களின் பணி, குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் பணி தலைகீழாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று வெறும் விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். நிதி மூலதன காலகட்டத்தில் ஊடகங்கள், அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். கார்ல் மார்க்ஸ் கூறியதைப் போல, உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகிற, வளர்ச்சிப்போக்குகளில் உழைப்பாளிகளுக்குப் பங்கில்லாமல் போகிற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரு பெரிய கேள்வி எழுகிறது: ஊடகங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராடுவதா வேண்டாமா?

இந்த நிலை ஏற்பட்டதன் பின்னணியில் திட்டவட்டமான சூழல்களும் நிகழ்ச்சிப் போக்குகளும் உள்ளன. தொழிற்புரட்சிக் காலகட்டத்தைக் கண்ட உலகம், தகவல்தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. தொழிற்புரட்சியின் ஒரு முக்கிய வடிவமாக அமெரிக்காவின் டெட்ராயிட் நகரில் அமைந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையில் கொண்டுவரப்பட்ட தயாரிப்பு நடைமுறையைக் கூறுவார்கள். தொழிற்சாலையின் ‘அசெம்பிளி லைன்’ எனப்படும் எந்திர வரிசைப் பிரிவுகளில், காரின் பாகங்கள் ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு இறுதியில் முழு கார் வெளியே வரும். இதை அன்று சோவியத் யூனியனில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஸ்டாலின், சோசலிச தொழில் வளர்ச்சிக்கேற்ப ‘திட்டமிட்ட உற்பத்தி முறை’ என்ற வடிவில் பின்பற்ற நடவடிக்கை எடுத்தார். இந்தியாவிலும் இந்த உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தியைப் பொறுத்தவரையில், ‘அசெம்பிளி லைன்’ எந்திர வரிசையில் இந்த இந்த வேலைகளுக்கு இந்த இந்தத் தொழிலாளர்கள் என்று பிரிக்கப்பட்டுவிடுகிறார்கள்; தொழிலாளிகள் உயிரும் உணர்வுமற்ற கருவிகளாக  மாற்றப்படுகிறார்கள். தொழிலாளி இப்படி எந்திரத்தோடு எந்திரமாய், இறுதியில் என்ன பொருள் உருவாகிறது என்பதைக் கூட அறியாதவராய், மறையாணிகளை முடுக்கிக்கொண்டிருப்பதே  வாழ்க்கையாய் வார்க்கப்படுவதை, உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தமது புகழ்பெற்ற ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் தமக்கே உரிய நையாண்டியோடு சித்தரித்திருப்பார்.

தொழிற்புரட்சிக் காலகட்டத்தில், முதலாளித்துவ அமைப்பின் மிகச்சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டவரான ஹென்ரி ஃபோர்டு, “எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் வாங்குகிற கார் கறுப்பு வண்ணத்தில் இருக்கிற வரையில் அதை தான் விரும்புகிற எந்த ஒரு வண்ணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும்,” என்று கூறியதாகச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அப்போது அவருடைய தொழிற்சாலையில் உருவான கார்கள் எல்லாமே கறுப்பு வண்ணத்தில் மட்டுமே இருந்தன.

 தொழிற்புரட்சிக் காலகட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஹென்ரி ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஒரே வகையான கார் உற்பத்தி முறையின் இடத்தை, இன்று உலகந்தழுவிய அளவில் ரூபர்ட் முர்டோச் நிறுவியுள்ள ஊடக பேராளுமை பிடித்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவானாலும் சரி, உலகின் வேறு எந்த நாடானாலும் சரி, ஊடகம் ஒரே வகையான சரக்கை உற்பத்தி செய்யும் எந்திரமாக்கப்பட்டிருக்கிறது. செய்திகள், தகவல்கள் அனைத்தும் பொறுப்புணர்வற்ற பொழுபோக்குச் சரக்குகளாக்கப்படுகின்றன. அந்தச் சரக்கு உற்பத்தியின் நோக்கம், மாற்றங்களை ஏற்படுத்துவதல்ல, லாபத்தை அதிகரிப்பது மட்டுமே. நிதி மூலதன காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரே மாற்றம், அன்றைக்கு “ஃபோர்டியம்” என்பதாக இருந்தது இன்றைக்கு “முர்டோக்சியம்” என மாறியிருப்பது மட்டும்தான்.

இது ஊடகம் குறித்த மதிப்பீட்டிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் அரசு அதிகாரத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு பதிலளித்தாக வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மக்களைச் சந்தித்தாக வேண்டியர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதியைக் குற்றவாளியாக அறிவிக்க முடியும். அண்மையில் கூட, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை குற்றவாளியாக அறிவித்தது; அவர் பதவி விலகியதால் மக்களவையின் விசாரணைக்குத் தேவையில்லாமல் போனது.

நான்காவது தூணின் மவுனம்

இந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய சுதந்திர ஊடகம், எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!  சட்டப்பூர்வமாக ஊடகம் பதிலளிக்கக்கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அது சட்டப்பூர்வமானதாக இருக்குமானால், அதிகாரத்தின் மற்ற மூன்று கட்டமைப்புகள்தான் ஊடகத்தை விசாரணை செய்யும். ஆட்சியாளர்களுக்கு ஊடகம் கட்டுப்படுமானால் அங்கே ஊடகச்சுதந்திரம் பறிபோய்விடுகிறது எனக்கூறுவோம். நாடாளுமன்றம் கட்டுப்படுத்துமானால் அது ஊடகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்போம். நீதிமன்றம் கட்டுப்படுத்துமானால் அது நீதித்துறையின் தலையீடு என்று விமர்சிக்கப்படும்.

ஆனால், ஊடகம் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டாமா? அந்தப் பொறுப்பை ஊடகங்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டாமா?

அந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான ஊடகங்கள் தட்டிக்கழிக்கின்றன என்பதே என் குற்றச்சாட்டு. மக்கள் உரிமைகளின் காவலராய் இருப்பதற்கு மாறாக, முதலாளித்துவ சமுதாய அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் - சமுதாயத்தில் மிகச் சிறியதொரு பகுதியினரின் - நலன்களைப் பாதுகாக்கிற வேலையைத்தான் இந்த ஊடகங்கள் செய்கின்றன. நாட்டு மக்கள் மேலும் மேலும் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை விட, அவர்களை வெறும் வணிகச் சரக்கு நுகர்வோராக மாற்றுவதற்குத்தான் ஊடகங்கள் உதவுகின்றன. வணிக ஏடுகளுக்கு நாம் வாசகர்களல்ல, தொலைக்காட்சிகளுக்கு நாம் பார்வையாளர்கள் அல்ல, வானொலிகளுக்கு நாம் நேயர்களல்ல. மாறாக, நாம் வெறும் வாடிக்கையாளர்கள்தான், நுகர்வோர்தான். அப்படித்தான் ஊடகங்கள் நம்மை நடத்துகின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களை ஜனநாயகக் காவலர்களாக உயர்த்திப் பிடிக்கத்தான் வேண்டுமா?

வரையறுக்காத சட்டம்

ஊடகங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் என்பவை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்தவையேயன்றி, சட்டப்படி வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசமைப்பு சாசனத்தில் எங்கேயும் ஊடகங்களின் உரிமைகள் இவை என திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அப்படிப்பட்ட சட்டம் இருக்கிறது. அமெரிக்க அரசமைப்பு சாசனத்தில் நாடாளுமன்றம் ஒருபோதும் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதையும் நிறைவேற்றாது என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசமைப்பு சாசனத்தில் அவ்வாறு நேரடியாக இல்லை. அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில், 19 - 1 ஏ, ஜி ஆகிய உட்பிரிவுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் ஊடகச் சுதந்திரம் விளக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளோடு சுதந்திரம் அளிக்கும் பிரிவுகளில் ஒன்றாகவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் இருக்கிறது.

அரசமைப்பு சாசனத்தில் குறிப்பாக வரையறுக்கப்படாத ஒரு சுதந்திரத்தை ஊடகங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது எப்படி?  நாம் வழங்கிய  - இந்திய மக்கள் வழங்கிய - சுதந்திரம் அது. ஊடகங்களுக்கு அப்படி ஒரு அறம் சார்ந்த உயர்ந்த இடத்தை வழங்கியவர்கள் நாம்தான். சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தை மேம்படுத்தும், சுதந்திரமான ஊடகம்தான் ஜனநாயகத்தின் ரத்தமும் உயிர்த்துடிப்புமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அந்த உயர்ந்த இடத்தை ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

ஆனால் ஊடகங்கள் வெறும் லாப வேட்டை வர்த்தக நிறுவனங்களாக, விற்பனைச் சரக்கு உற்பத்திக் கூடங்களாக மாறியிருக்கிறபோது, இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தை வழங்கியது சரிதானா என்று நாம் கேட்டாக வேண்டியிருக்கிறது.

ஹசாரே சித்திரம்

ஊடகங்கள் எவ்வாறு வர்க்க நலன்களோடு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தையும், அதை இந்த ஊடகங்கள் எப்படி பெரிதுபடுத்தின என்பதையும் ஆய்வு செய்வோம். தலைநகர் தில்லியின் ராம்லீலா மைதானத்தில் அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில் ஊடகங்கள், இன்னும் குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் அந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன? ஏதோ அந்த மைதானத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

தில்லி தெருக்களில் பல மக்கள் இயக்கங்கள் லட்சக்கணக்கானோரைத் திரட்டியிருக்கின்றன. அண்மையில் கூட தொழிற்சங்க இயக்கங்கள் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம்  தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். ஆனால் அன்னா ஹசாரே இயக்கத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் போல இந்த நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்தியது உண்டா? ஏன்?

ஏனென்றால் இது அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு ஏற்பாடுதான். அன்னா ஹசாரே இயக்கத்தை ஊடகங்கள் குடிமைச் சமூகத்தின் இயக்கமாக சித்தரித்தன. குடிமைச் சமூகம் என்பது அதிகார அமைப்புக்கு அப்பாற்பட்டதல்ல, அதற்கு எதிரானதுமல்ல. அண்டோனியோ கிராம்ஷி கூறுவது போல அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம்.  ஒரே அமைப்பின் இரண்டு அங்கங்களில் ஏற்பட்ட பதற்றத்தைத்தான் நாம் கண்டோம். ஒரே குடும்பத்தில் நடக்கிற சண்டையைப் போன்றதுதான் அரசுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையே நடக்கிற மோதல். இரண்டுக்கும் ஒரே வர்க்க நலன்தான். இரண்டுக்கும் ஒரே குறுகிய சுயநல நோக்கம்தான்.

ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்டிருந்தவர்கள் யார்? அவரைப் பொறுத்தவரையில் ஒரு காந்தியவாதிதான், அவரது போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் குறுகிய நோக்கமுள்ள சக்திகளால் கடத்தப்பட்டதாகவே நான் பார்க்கிறேன்.  அவருக்கு ஆதரவாகக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவருக்கு நெருக்கமாக நின்றவர்கள் சாமியார்கள். பாபா ராம்தேவ்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீக்கள். ஒரு சுவாமியாக பார்க்கப்படாத சுவாமி அக்னிவேஷ் அங்கே இருந்தார். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த வேறு பல சாமியார்களும் மடாதிபதிகளும் அங்கே இருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாகத் தீவுகளையே வைத்திருப்பவர்கள், தங்களுடைய கணக்குவழக்குகளை ஒருபோதும் தணிக்கைக்கு உட்படுத்தாதவர்கள் இவர்கள்.

அடுத்து அங்கே தெரிந்த முகங்கள் திரைப்பட நட்சத்திரங்களுக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணம் தொடங்குவதே அவர்களிடத்தில் இருந்துதான். கறுப்புப் பணம் என்றாலே பொதுமக்கள் மனதில் திரைப்பட நட்சத்திரங்கள்தான் நினைவுக்கு வருவார்கள். திரைப்படத் துறையே கறுப்புப் பணத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட சாமியார்களும் நட்சத்திரங்களும்தான் ஊழலை எதிர்ப்பதாக, கறுப்புப் பணத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அங்கே கூடியிருந்தார்கள். அது உண்மையென நம்மை  நம்பவைப்பதற்கு இந்த ஊடகங்கள் முயன்றன. எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, பொய்மையான செய்திகளை அவை வெளியிட்டன என்பதைப் பார்த்தோம்.

இவை பெரிய ஊடகங்களா?

ஐந்து பெரிய ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த செய்திகளை வெளியிட்ட விதத்தைப் பார்த்தால், நாட்டில் மிகப் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகள் இவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படும். உண்மையில் இந்த ஐந்து பெரிய ஆங்கில செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உள்ள மொத்த பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் 12 விழுக்காடுதான். இவற்றில் எந்தவொரு நிறுவனத்திற்குமே ஒற்றை இலக்க விழுக்காட்டிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கிடையாது. மூன்று விழுக்காடு முதல் அதிக அளவாக ஐந்து விழுக்காடு வரைதான் சி.என்.என்., ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டீ டி.வி, என எந்த ஆங்கில தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் இதற்குமேல் அவர்களுக்குப் பார்வையாளர்கள் கிடையாது. ஆனால் “ தேசத்திற்கு நாங்கள்தான் இந்த செய்தியைக் கொண்டுவருகிறோம்” என்பதாக அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டார்கள்.

இதுதான் இந்த வர்த்தக ஊடகங்களுடைய, நிதிமூலதனத்தினுடைய அராஜகம். இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக இனி மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்களா? தங்களுடைய லாப அறுவடையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதை ஆதரித்து மக்கள் எதற்காக போராட வேண்டும்?

பெருகும் வதந்தி

தொலைக்காட்சி நிறுவனங்களின் இந்தப் பாதையை அச்சு ஊடகங்களாகிய பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. இந்திய பத்திரிகைகளுக்கு நுhறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களின் வர்த்தக வெற்றியைக் கண்டு தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவேதான் பத்திரிகைகளில் வதந்திகளை அதிகமாகவும், செய்திகள் குறைவாகவும் வருகின்றன. எந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தோடு போகிறார், மேலிடத்தில் நடப்பதென்ன, மது விருந்துக் கூடங்களில் என்ன நடக்கிறது, என்ற வகையிலான வதந்திகள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை. எப்போதாவது, பட்டினிச் சாவு போன்ற பரபரப்பான நிகழ்வுகள் வருகிற போது மட்டுமே இதைப் பற்றி ஓரளவு எழுதப்படும். ஒரு பெரிய இயற்கைச் சீற்றம், தீ விபத்து, ரயில் விபத்து என நிகழ்கிற போது இந்தப் பிரச்சினைகள் குறித்தும் எழுதப்படும்.

ஆனால் வறுமையின் கதையை, பட்டினியின் வரலாற்றை, சாதியக் கொடுமைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, பாலினப் பாகுபாடுகளை, குழந்தை உழைப்பு அவலங்களை, விவசாயிகளிக் வீழ்ச்சியை, நிலமற்ற உழவர்களின் ஆதரவற்ற நிலையை, அன்றாடக் கூலிக்காக நடக்கும் போராட்டங்களை இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் பிரதிபலிப்பதில்லை, பத்திரிகை ஊடகங்களும் வெளிப்படுத்துவதில்லை.

காலப் பெட்டகம்

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவுக்குப் பொருத்தமற்ற ஒரு செயலில் இறங்கினார். பல்வேறு செய்திகள், தகவல்கள், இலக்கியப் பதிவுகள், வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட காலப்பெட்டகம் ஒன்றை மண்ணில் புதைத்தார். பல ஆண்டுகள் கழித்து, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் சமுதாயம் அழியக்கூடுமானால், அதன்பின் வரக்கூடிய தலைமுறையினர் அந்தக் காலப்பெட்டகத்தை திறந்து பார்த்தால் நாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் நேரு குடும்பம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது என்று வருங்காலத் தலைமுறைக்கு சொல்கிற நோக்கம் அதற்குள் இருந்தது.

அதே போன்றதொரு காலப்பெட்டகம் இப்போது புதைக்கப்படுவதாக, இன்றைய தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளும் சித்தரிப்புகளும் அதற்குள் வைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐம்பது, நுhறு ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள்? 21 ஆம் நுhற்றாண்டின் தொடக்க கட்டத்தில் இந்தியாவில் பெரிய பெரிய நகரங்கள் மட்டுமே, உயரமான கட்டடங்கள் மட்டுமே இருந்ததாகத்தானே நினைப்பார்கள்? கிராமப்புற இந்தியா என ஒன்று இருந்ததாகவே தெரியாமல் போகும். கார்கள், இருசக்கர வாகனங்கள், சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான மருந்துகள்... என இந்திய மக்கள் வாழ்ந்ததாகத்தான் நினைப்பார்கள். இவையெல்லாம் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை. 70 முதல் 75 விழுக்காடு வரையிலான மக்கள் இந்த வட்டத்திற்கு வெளியேதான் வாழ்கிறார்கள் என்பது  காலப்பெட்டகத்தை பார்க்கிற எதிர்காலத் தலைமுறையினருக்கு இது தெரியாமலே போகும். இது அவர்களுடைய குற்றமா, இன்றைய ஊடகங்களின் குற்றமா?

இப்படிப்பட்ட ஊடகங்களின் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டுமா, அல்லது இப்படிப்பட்ட ஊடகங்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட வேண்டுமா?

அரசியல் முதலாளித்துவம்

இது ஒருபுறம் இருக்க, உலக அளவிலும் இந்தியாவிற்கு உள்ளேயும இன்னொரு அபாயகரமான நிகழ்ச்சிப்போக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் அரசியல் முதலாளித்துவம்.

இத்தாலியில் நடந்தது என்ன? அந்த நாட்டின் பிரதமர் குரோனி...... தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தின் பின்னணியில்தான் ஆட்சிக்கு வந்தார். அங்கே அவர் ஒரு பெரிய ஊடகப் பேரரசையே நடத்திக்கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்க்கோஸி, நேரடியாக ஊடகங்களை நடத்தவில்லை என்றாலும், ஊடக முதலாளிகளில் 85 விழுக்காட்டினர் வரையில் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அண்டை நாடான தாய்லாந்தில் தக்ஷின் சினாவாத்ரா தனது சொந்த ஊடக நிறுவனங்களின் பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அவருடைய சகோதரி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.

இவ்வாறு ஊடகங்களின் உடைமையாளர்களாக இருந்து அல்லது ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது என்பது பல நாடுகளில் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் நாடுகளில், முதலில் கைப்பற்றப்படுவது எது என்றால் ஊடக நிறுவனங்கள் தான். வானொலி நிலையங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் கைப்பற்றிய பிறகுதான் நாடாளுமன்றத்தையோ, அதிபர் மாளிகையையோ ராணுவம் கைப்பற்றுகிறது. ஊடகத்தின் பலம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். முதலாளித்துவ சமுதாய அமைப்பில் அரசியல்வாதிகள் ஊடகங்களை உடைமையாக்கிக் கொள்கிறபோது எப்படிப்பட்ட பன்பாட்டுத் தாக்கங்களை அது ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.

குழப்பும் தொலைக்காட்சிகள்

இந்தியாவிலும் - தமிழகத்திலும் - இதே போன்று நிகழ்வதைப் பார்க்கிறோம். தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த இரு நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் பார்வையாளர்களோடு பேசுவதைவிட தங்களுக்கிடையேயே பேசிக்கொள்வது போலத்தான் இருக்கிறது. வெளியே இருந்து வருகிற ஒருவர் இந்த இரு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை மாறி மாறிப் பார்ப்பார் என்றால் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற குழப்பம்தான் அவருக்கு மிஞ்சும்.

திமுக ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருப்பது போல் கலைஞர் தொலைக்காட்சியும், சன் குழுமத்தின் தொலைக்காட்சியும் சித்தரிக்கும். மழை வெள்ளம் ஏற்பட்டால் அரசு எப்படி அக்கறையோடும் விரைவாகவும் செயல்பட்டு மக்களை பாதுகாக்கிறது என்று இந்தத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டேயிருக்கும். ஜெயா தொலைக்காட்சி அரசாங்கத்தின் அலட்சியத்தால் எங்கும் சீரழிவுகளே நிகழ்வதாகக் கூறும். அதிமுக ஆட்சிக்கு வருகிறபோது இது அப்படியே இடம் மாறிவிடும்.  

ஊடக உலகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் என்ன சொல்கிறது என்பதை நம்ப வேண்டியவர்களாகத்தான் நாம் இருக்கிறோமேயன்றி, எது உண்மை என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. ஏனெனில் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் அந்தச் செய்திகளைத் தீர்மானிக்கின்றன.

வர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வருவாயில் 80 முதல் 85 விழுக்காடு வரை வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. பத்திரிகைகளுக்கு நீங்கள் தருகிற விலையில் இருந்தோ, தொலைக்காட்சிகளுக்கு செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்தோ கிடைப்பது 15 விழுக்காடுதான்.

யாருக்கு முக்கியத்துவம்?

ஆகவே ஊடக நிறுவனத்தைப் பொறுத்தவரையில் - அல்லது ஊடக முதலாளியைப் பொறுத்தவரையில் - யார் முக்கியமானவர்? சந்தா கொடுக்கிற வாசகரா அல்லது விளம்பரதாரரா என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உங்களுடைய தேவைகள், உங்களுடைய பிரச்சனைகள், உங்களுடைய கோரிக்கைள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

விளம்பரங்களைத் தருகிற உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் வர்த்தக நிறுவனங்கள், இந்திய மக்களின் வறுமை செய்தியாவதை விரும்புவதில்லை. வறிய நிலையில் மக்கள் வாடுகிறார்கள் என்ற செய்தியை வெளியிடாதீர்கள், எல்லாம் சுமூகமாக, சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்துங்கள் என்றுதான் அவர்கள் வற்புறுத்துவார்கள். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதே ஊடகங்களின் பணியாகிவிட்டது. இவ்வாறாக முன்பு ஊடகங்கள் எந்த நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனவோ அந்த நோக்கங்களில் இருந்து திசைமாற்றப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் அரசியல் முதலாளித்துவம்.

அரசியல் இயக்கங்கள் ஊடகங்களை நடத்தக் கூடாது என்பதல்ல எனது வாதம். ஆனால், வர்த்தகம், அரசியல் பின்னிப் பிணைந்த நோக்கத்தோடு, ஊடகத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிற சக்திகளாக அந்த நிறுவனங்கள் உருவெடுக்கிற போது செய்திகள் எப்படியெல்லாம்  திரிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம். வர்த்தக நோக்கம், அரசியல் முதலாளித்துவம் ஆகிய இரண்டு தீங்குகளுக்கும் இடையே நாம் மாட்டிக்கொள்கிறோம். அந்த நிகழ்ச்சிப்போக்கில் உண்மைத் தகவல்களிலிருந்து நாம் வெகுதொலைவுக்குக் கடத்தப்பட்டுவிடுகிறோம்.

தகவல் உரிமை

உண்மைத் தகவல்களைப் பெறுவது மக்களின் உரிமை. அவ்வகையில் நமது நாட்டில் நீண்டநெடும் போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசுத் துறைகளிடம் இருந்து, பொதுவாக எளிதில் கிடைக்காத பல தகவல்களைப் பெற முடிகிறது என்பது உண்மை. சிலர் இதைப் பயன்படுத்தி சில நல்ல திட்டங்களைக் கூட முடக்க முயல்கிறார்கள் என்பதும் நடக்கிறது. ஆயினும் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போலவே மக்களுக்கு இன்று மிகவும் தேவைப்படுவது என்னவென்றால் ஊடகங்களிடமிருந்து உண்மைத் தகவலை பெறுவதற்கான உரிமைதான். ஊடகங்கள் உண்மைத் தகவல்களைத் தரத் தவறுகின்றன என்றால், அவற்றை ஜனநாயகத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் செயல்படுகிற ஊடகங்கள் என்று இனியும் நாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாயாது.

விலகியது ஏன்?

ஊடகங்கள் தங்களது லட்சியப் பாதையிலிருந்து விலகியது ஏன்? காலையில் எந்தவொரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், எந்தவொரு பெரிய பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே மாதிரியான செய்திகளே ஆக்கிரமிப்பது எப்படி? அதுவும் ஒரே ஒழுங்குவரிசையில் தரப்படுவது எப்படி? இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அதற்காக ஊடக நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று கலந்தாலோசித்து ஒரே மாதிரியான செய்திகளைக் கொடுக்கின்றன என்றெல்லாம் நான் சொல்லவில்லை. விவிலியத்தில் மோசஸ் கடவுளின் பத்துக் கட்டளைகளோடு வந்தது போல, இன்றைக்கு இதுதான் தலைப்புச் செய்தி, இதுதான் அடுத்த செய்தி என்றெல்லாம் யாரும் தீர்மானித்துச் சொல்வதில்லை. ஆனால் ஊடகங்களுக்கிடேயே ஒருவகையான ஒருங்கிணைப்பு இருக்கிறது. நீ எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயோ அதற்கு நானும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. பத்திரிகையாளர் மன்றம் போன்ற இடங்களில் இயல்பாக அந்தக் கலந்துரையாடல் நடக்கும்.  அதைச் செய்யவில்லை என்றால், ஒரு செய்தியை ஒரு நிறுவனம் வெளியிடத் தவறினால் அந்தச் செய்தியை இன்னொரு நிறுவனம் வெளியிட்டுவிடும். 

தொலைக்காட்சியோ, பத்திரிகையோ அதன் ஆசிரியர் குழு கூட்டங்களில், தலைமையாசிரியர், விட்டுப்போன முக்கியமான செய்தியைக் குறிப்பிடும்போது “நாம் இந்தக் கதையை தவற விட்டுவிட்டோம்” என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுக்கு செய்திகள் வெறும் கதைகள்தான் - அதாவது ஸ்டோரிகள்தான். அப்படி அவர்கள் சொல்லிக்காட்டுகிற “தவறிப்போன” செய்தி என்பது, உலகத்தில் அல்லது உள்நாட்டில் எங்கெங்கோ நடந்திருக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகளை அல்ல. எங்கும் எப்போதும் ஏதாவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவை அனைத்தையும் செய்தியாக்கிவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். “நாம் தவற விட்டுவிட்டோம்” என்று அவர்கள் சொல்வது, வேறொரு ஊடகத்தில் இடம்பெற்ற செய்தியைத்தான்.

ஒரு ஊடகத்தில் வருகிற செய்தியை இன்னொரு ஊடகம் விட்டுவிடக் கூடாது என்ற நிலைபாட்டில் இருந்துதான் ஒரே மாதிரியான செய்திகள் வெளியாகின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பார்வையாளர்களாகிய நாம்தான் ஏமாளிகளாக ஒரே செய்தியை வெவ்வேறு அலைவரிசைகளில்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தனியார் வருகையால் மாற்றம் உண்டா?

ஒரு காலகட்டம் வரையில் இங்கு அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அதில் அரசாங்கத்திற்குச் சாதகமான, ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகின என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஊடகத்தில் அரசின் ஏகபோக ஆதிக்கம் என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால், இப்போது சுமார் 300 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளைத்தான் தருகின்றனவா? ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிகழ்ச்சிகளைத்தான் வெளியிடுகின்றனவா? அனைத்து தனியார் ஊடகங்களும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தக்கூட்டு போல அமைத்துக்கொண்டு செயல்படுவதுபோல இருக்கிறது. அதனால்தான் ஒரே மாதிரியான செய்திகள், ஒரே ஒழுங்குமுறையில் வருகின்றன. நாம் அந்தச் செய்திகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான் என்று நம்பவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

ஊடகங்களின் இந்தப் போக்கு இன்றைய நிதிமூலதனச் சூழலில் மேலும் மேலும் முற்றுகிறது. ஏனென்றால் ஊடகங்களும் வர்த்தகமயமாக்கப்பட்டு, நல்ல லாபம் ஈட்டியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் நிலைமை என்பதை நாம் புரிந்துகொள்வதும் முக்கியம்; அதே வேளையில் இந்த நிலைமையை மாற்றுவதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம். நிலைமையை ஆராய்கிற கட்டம் முடிந்துவிட்டது, அதை மாற்றுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்றார் கார்ல் மார்க்ஸ்.

மார்க்சியம் ஊடகச்சுதந்திரத்தை மறுக்கிறதா?

பொதுவாக மார்க்சியம் என்றாலே அது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற ஒரு தவறான சித்தரிப்பு பரப்பப்பட்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், ஊடகச் சுதந்திரத்திற்காக வாதாடியவர், போராடியவர் மார்க்ஸ். முதலில் அவரே ஒரு ஊடகவியலாளர்தான் - பத்திரிகையாளர்தான். தனது வருவாய்க்காக அவர் செய்த ஒரே தொழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியதுதான். அவர் ‘ரைனிஷ்சஸ் ஸெய்டுங்’ என்ற ஜெர்மன் மொழிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அது பிரஷ்ய அரசின் சர்வாதிகாரம் கோலோச்சிய காலம். கடுமையான தணிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்ட காலம். அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மார்க்ஸ். அதனாலேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர் அங்கேயும் ஒரு பத்திரிகையில் சிறிதுகாலம் பணியாற்றினார். லண்டனில் 1848ல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ ஆவணத்தை வெளியிட்ட பிறகு, திரும்பி வந்து ‘நியூ ரைனிஷ்சஸ் ஸெய்டுங்’ என்ற பத்திரிகையை அவரே தொடங்கி அதிலே எழுதிவந்தார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, அவரது உற்ற நண்பரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான ஃபிரடெரிக் எங்கெல்ஸ் உதவினார் என்ற அளவில்தான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் மார்க்ஸ் அப்போதும், அமெரிக்காவிலிருந்து வெளியான ‘நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்’ என்ற பத்திரிகைக்கு ஐரோப்பிய தலைமைச் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்போது ஸ்பெயின் உள்நாட்டுப்போர் பற்றி, லண்டன் தொழிலாளர் பற்றி, இந்தியாவைப் பற்றி, சீனாவைப் பற்றி... என ஏராளமான கட்டுரைகளையும் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். அப்போது அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் ‘ரெவல்யூசன் அன் கவுன்ட்டர் ரெவல்யூசன்’ (புரட்சியும் எதிர்ப்புரட்சியும்) என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

கார்ல் மார்க்ஸ் ஊடகக்காரராகப் பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், “தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்டப்பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும்,” (அப்போது பல நாடுகளில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது) என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார் மார்க்ஸ்.

உழைப்புச் சுரண்டல் பற்றியும், அதில் தொழிலாளி ஆன்மா இல்லாத சடப்பொருளாக அந்நியமாக்கப்படுவது பற்றியும், நிறைய எழுதிய அவர், “இதழியலாராகப் பணிபுரிகிறபோது இவ்வாறு அந்நியமாக்கப்படுவது நிகழ்வதில்லை. ஏனென்றால் இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல; அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது,” என்று கூறினார். ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை வலியுறுத்திய அவர், சுதந்திரமான இதழியலில் கிடைக்கிற சரக்கு மோசமானதாக இருந்தாலும் அது நல்லதுதான், ஆனால் தணிக்கை செய்து கிடைப்பது நல்ல சரக்கானாலும் அது மோசமானது என்றார். அதே வேளையில், மக்களுக்கான இதழியல் என்பதையே மார்க்ஸ் உயர்த்திப் பிடித்தார்.

ஊடகச் சுதந்திரத்தை அவர் இந்த அளவுக்கு வலியுறுத்தியபோதிலும் மார்க்சியம் அந்தச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரவியது எப்படி? சோவியத் புரட்சி வெற்றி பெற்று, போல்ஷ்விக்குகள் ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1920ம் ஆண்டுகளில், மக்களின் அரசு அமைக்கப்பட்டுவிட்டதால் இனி அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாக வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து உருவானது. அதனால் ஊடகச்சுதந்திரம் என்ற கண்ணோட்டம் அங்கே ஓரங்கட்டப்பட்டது. வரலாற்றின் ஒரு சந்திப்பு முனையில் ஏற்பட்ட ஒரு சூழல் அது. அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளித்துவ ஊடகங்கள் மார்க்சியத்தைப் பற்றிய தவறான சித்திரத்தைப் பரப்பிவிட்டன. சோவியத் யூனியன் அனுபவத்திலிருந்து உலகம் வெகுதொலைவு வந்துவிட்ட இன்றைய சூழலில் ஊடகம் குறித்த அப்படிப்பட்ட கண்ணோட்டம் தேவையில்லை என்று மார்க்சிய ஆசான்களான ரோஸா லக்ஸம்பர்க், அன்டோனியோ கிராம்ஷி உள்ளிட்டவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்திய ஊடகங்கள்

இந்தியாவில் ஊடக அரசியல் குறித்து விவாதிக்கிறபோது நாம் இங்குள்ள முதலாளித்துவ ஊடகங்களைத்தான் எடுத்துக்கொள்கிறோம். இவர்களுடைய வர்க்க நலனும் வர்த்தக நலனும் சார்ந்த வெளியீடுகளையும் சித்தரிப்புகளையும் திசைதிருப்பல்களையும் எதிர்கொள்ள, மார்க்ஸ் விரும்பியதைப் போல் மக்கள் ஊடகத்தை வளர்ப்பதே வழி. முதலாளித்துவ சக்திகளின் பிடியிலிருந்து ஊடகங்களை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகங்கள் மீண்டும் மக்களை பிரதிபலிப்பவையாக, மக்களின் குரலை எதிரொலிப்பவையாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் சுதந்திரமான ஊடகம் என்ற மார்க்சியக் கருத்தாக்கத்தை வலுவாக முன்வைக்கிறார் கிராம்ஷி.

முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமை இன்று மக்களின் கலை, இலக்கியம் அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது பற்றிப் பேசுவதாலும், கவலைப்படுவதாலும், விமர்சிப்பதாலும், விவாதிப்பதாலும் மட்டும் முதலாளித்துவத்தின் பண்பாட்டு ஆளுமையை எதிர்கொண்டுவிட முடியாது. ஒரு எதிர் ஆளுமையை - பாட்டாளி வர்க்கத்தின் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவ ஆளுமையை எதிர்த்திட முடியும். இந்தியாவின் பெரும் ஊடகங்களும் மக்களிடமிருந்து விலகி, மக்களின் உண்மை வாழ்க்கையிலிருந்து தொடர்பு அறுந்து போயிருக்கிற  நிலையில், ஊடகங்களின் வரலாற்று லட்சியங்களை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டியிருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிலேயே கூட அந்த லட்சியங்களை மறுபடியும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. ரோஸா லக்ஸம்பர்க் போன்றோர் முன்வைப்பது போல், ஊடகங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் மார்க்சிய மரபில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஆகவே, புதிய கண்ணோட்டத்தில் ஊடகச் சுதந்திரம் பற்றிய விவாதங்களை முற்போக்கு சக்திகள் நடத்தியாக வேண்டும். அந்த விவாதங்கள் நாடுதழுவிய அளவில் நடந்தாக வேண்டும். ஒரு நல்வாய்ப்பாக நாம் இன்று ஒரு கணினி சார் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ ஊடகக் கோட்டைவாசிகள் நம்மை அனுமதித்துவிட மாட்டார்கள். முதலாளித்துவ ஊடகங்களை நாம் நெருங்கிவிட முடியாது. மக்கள் கிளர்ச்சி, உள்நாட்டுப் போர் போன்ற சூழல்கள் ஏற்படுகிற இடங்களில் வேண்டுமானால் முதலாளித்துவ ஊடகங்களைக் கைப்பற்றுவதும் நடக்கும்.

டிஜிட்டல் புரட்சி

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கைப்பேசி குறுந்தகவல்களில் பரவுகிற செய்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், “டிஜிட்டல் புரட்சி” நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரப்புவதில் முன்போல வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லை என்பதையும் அண்மைக்கால அனுபவங்கள் காட்டுகின்றன. கணினியைக் கையாள்வது கூட அதற்கான வாய்ப்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது, ஆனால் கைப்பேசியை இன்று பெரும்பாலானவர்கள் கையாள முடிகிறது. ஊடகவியலின் பொருளே கூட பெருமளவுக்கு மாறியிருக்கிறது. ஊடகமொழி கூட வெகுவாக மாறியிருக்கிறது. தீக்கதிர் உள்ளிட்ட முற்போக்கான ஊடகங்கள் அந்தத் தொழில்நுட்ப வாய்ப்புகளைக் கைக்கொண்டு, வெகு வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். இந்தத் தொழில்நுட்பம் மலிவானது, ஜனநாயகப்பூர்வமானது, எல்லோருக்குக் கட்டுப்படியாகக்கூடியது, அனைவரும் பங்கேற்கக்கூடியது. இணைய வழி சமூகத் தொடர்புத் தளங்களில் பல தரப்பினரும் ஈடுபட முடிகிறது.

இந்த டிஜிட்டல் நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு வசப்படுத்துவதன் மூலம், சுதந்திர ஊடகத்தின் மாண்புகளை மீட்டெடுக்க முடியும். எங்கெல்ஸ் கூறுவது போல், முதலாளித்துவ ஊடகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட, மக்களின் சுதந்திர ஊடகத்தை உயர்ந்தெழச் செய்யமுடியும். முதலாளித்துவ ஊடகங்கள் நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்ற மாயைகள் தேவையில்லை. அவர்களுக்கு அவர்களது வர்த்தகமும் லாபமும்தான் இலக்கு. மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளையும் குரலையும்தான் அவர்கள் எதிரொலிப்பார்கள் - அன்னா ஹசாரே செய்திகளில் நாம் இதைத்தான் பார்த்தோம். மக்களின் உண்மையான வலியை, பசியை, வேதனையை, துயரத்தை, கண்ணீரை மக்களின் ஊடகம் மட்டுமே வெளிப்படுத்தும். மக்களின் ஊடகம் விளம்பர வருவாயை நம்பியிராமல், வாசகர்களின் ஆதரவைச் சார்ந்தே தழைத்திருக்க முடியும்.

உலகம் தொழில்புரட்சிக் காலத்திலிருந்து தகவல் தொழில்நுட்பப்புரட்சிக் காலத்திற்கு மாறியிருக்கிறபோது, முற்போக்கு சக்திகளுக்கும் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு ஆளுமையை நிலைநாட்டுவதற்கு தொழில்நுட்பப் புரட்சியைக் கைவசப்படுத்தியாக வேண்டும் என்று கருதுகிறேன். மார்க்கியப் பார்வையில் இன்று பண்பாட்டு ஆளுமை என்பது பொருளாதார ஆளுமையைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஊடகம் உண்மையைச் சொல்லவில்லை என்றால், மக்களின் உண்மை வாழ்க்கையைச் சொல்லவில்லை என்றால் அது வெறும் பொழுதுபோக்காக, நுகர்பொருளாகவே முடிந்துவிடும். ஊடகத்தின் உண்மையான மாண்பையும் மரபையும் மீட்கிற கனவு மக்கள் ஊடக இயக்கத்தினால் மட்டுமே மெய்ப்படும்.

(விருதுநகரில் செப்.16 முதல் 18 வரை நடைபெற்ற தமுஎகச 12வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் ஆசியா ஊடகவியல் கல்லூரி இயக்குநர் சசிகுமார் ஊடக அரசியலைப் புரிந்துகொள்வது குறித்து நிகழ்த்திய உரை இது. தமிழில்: அ.குமரேசன்)

Pin It

இரா.இராஜேந்திரன், கடலூர்

"மதக் கலவரத் தடுப்பு மசோதா"வில் பொதுவுடைமைவாதிகளின் நிலைபாடு என்ன? ஜெயலலிதா மசோதாவை எதிர்ப்பதால் மவுனம் காக்கப் போகிறார்களா?

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இது பற்றி ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய மசோதாவின் அவசியத்தை அது வலியுறுத்தியுள்ளது. விஷயம் என்ன வென்றால், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எதிலும் தங்கள் குறுக்குப்புத்தியைக் காட்டுவார்களே என்பதுதான். மதவெறியர்களை ஒடுக்குகிறேன் என்று மாநில அரசின் உரிமைகளில் கை வைத்துவிடக் கூடாது என்று மட்டுமே அது எச்சரிக்கை செய்கிறது. அப்படி கை வைக்காத மதக்கலவரத் தடுப்பு மசோதாவை அது உற்சாகமாக வரவேற்கிறது. ஜெயலலிதாவின் நிலைபாடு இதுவல்ல. அவர் மாநில உரிமை பறிபோகிறது என்று மதக் கலவரத் தடுப்பு மசோதாவே வேண்டாம் என்கிறார். கூட ஓடி வருகிறவரை இடித்துத் தள்ளாமல் திருடனைப் பிடி என்பதற்கும், கூட ஓடி வருகிறவரை இடித்துத் தள்ளி விடுவோம். ஆகவே திருடனைப் பிடிக்க வேண்டாம் என்பதற்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லையா? இந்த முக்கியமான வேறுபாட்டுக்குப் பெயர் மவுனமா?

ரெ.மருதசாமி, மயிலாடுதுறை

வெங்கட்சாமிநாதன் நூலுக்கு வெளியீட்டு விழா நடத்துவதற்குக்கூட ஆள் இருக்கிறதே?

சரியாப் போச்சு! அவருக்குத் தான் இங்கே ஆதி நாளிலிருந்து அதிக ஆட்கள் உண்டு. மார்க்சியவாதிகளைக் கரித்துக் கொட்டுவதே அவருக்குத் தொழிலாக இருந்தது. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரை விதவிதமாகத் திட்டினார். "மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்று வக்கிரமாகக் கூடக் கைலாசபதியைத் தாக்கினார். ஆனால் இதே நபர் "வெறும் கோமாளி என்று ஒதுக்கப்படும் சோஷிடம் தான் வீரத்தையும் விவேகத்தையும் காண்கிறேன்" என்றும் எழுதினார். இதிலிருந்தே இவர் யார் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். அப்படியும் இவரைத்தான் பிரமாதமான இலக்கிய விமர்சகர் என்று கொண்டாடுகிறது ஒரு கூட்டம்.

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்

உலகமெல்லாம் பொதுவுடைமை வந்தால் கழிப்பிடத்தைத் தங்கத்தில் கட்டலாம் என்று மாமேதை லெனின் சொன்னாரே..?

பவுன்விலை 21 ஆயிரம் ரூபாயை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அதை நினைவுபடுத்துகிறீர்களே! தங்கமும் ஓர் உலோகமே, ஏன் இவ்வளவு மதிப்பு? அழகுணர்ச்சி மட்டுமா காரணம்? இல்லை, அதுவொரு முதலீட்டு சமாச்சாரமாகிப் போனது. நிச்சயமற்ற முதலாளித்துவ உலகில் பங்குச் சந்தையை நம்புவதை விட தங்கச் சந்தையை நம்புகிறார்கள் சாதாரண மக்கள். முதலாளித்துவ சமூகம் மறைந்து பொதுவுடைமைச் சமூகம் பிறக்கும் போது அங்கே எதிர்காலம் உறுதியானதாக இருக்கும். உயிரற்ற உலோகங்களை நம்புவதை விட உயிருள்ள சக மனிதர்களை நம்புவார்கள். இதுதான் லெனின் சொன்னதன் தாத்பரியம்.

அண்ணாதுரை, அன்னா ஹசாரே-ஒப்பிடுக?

எல்லாரும் இரண்டு சுழி "ன" போட்டுக் கொண்டிருக்க தினமணி ஏடு மட்டும் மூணு களி "ண" போட்டது ஹசாரேக்கு. தமிழர்களுக்கு நன்கு தெரிந்த அண்ணாவின் இடத்தில் அவரை அமர்த்துவது அதன் நோக்கம் போலும். இருக்கட்டும். ஒப்பீட்டுக்கு வருவோம். பெயரில் தான் ஒரு மாதிரியான ஒற்றுமை இருக்கிறதே தவிர, இருவரும் எடுத்துக் கொண்ட விஷயங்கள் வேறானவை. அண்ணா பேசியது வருணாசிரம ஒழிப்பு சமூக நீதி, ஹசாரே பேசுவது ஊழல் ஒழிப்பு அரசியல் நீதி. அண்ணாவின் வாரிசுகளுக்கு ஊழலை எதிர்க்கும் அருகதை இல்லாமல் போனது. ஹசாரேயின் குழுவினரோ வருணாசிரம எதிர்ப்பு பற்றி இதுவரை வாயைத் திறக்கவில்லை.

எஸ்.கே.மகாலிங்கம், திருத்துறைப்பூண்டி

2 ஜி அலைக்கற்றை ஊழலில் ப.சிதம்பரத்தின் பெயரும் அடிபடுகிறதே..?

அன்றைய நிதி அமைச்சர் இப்போது சிக்கியிருக்கிறார். கொஞ்சம் பொறுங்கள். மன்மோகன் சிங்கும் சிக்குவார். அவ்வளவு பெரிய கொள்கை முடிவை ஆ.ராசா எடுத்ததற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பிரதமர் கூறுவது சிறிதும் நம்பக்கூடியதாக இல்லை. குறைந்தபட்சம் அவர் தார்மீகப் பொறுப்பாகிலும் ஏற்க வேண்டும்.

மெ.ப.சுந்தரம், பாளையங்கோட்டை

சமச்சீர் கல்வி எப்படி இருக்கிறது?

அம்மாவுக்குப் பிடிக்காத பெண்ணை பிள்ளை திருமணம் செய்து கொண்டுவிட்டான். அந்த மருமகளின் நிலை புகுந்த வீட்டில் எப்படி இருக்கும்?

எஸ்.கே.நூர்ஜஹான், வாணியம்பாடி

அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டாலும் அதன் உலக நாட்டாமைத்தனம் குறைய வில்லையே, எப்படி?

அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டங்காணுகிறது. இரண்டு, அமெரிக்காவின் அதீத ராணுவ பலம். எனினும், ராணுவ பலத்தின் அஸ்திவாரம் பொருளாதாரத்தில் இருப்பதால் அமெரிக்காவின் ஆலவட்டம் நாலாவட்டத்தில் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு ரஷ்யா-சீனா- இந்தியா எனும் மூன்று நாடுகளின் பலமும், ஒற்றுமையும் பெருகுவது அவசியமாகும்.

கி.ராஜாங்கம், மதுரை

அதிகம் புத்தகம் படிப்பது இளைஞர்களா, மூத்தவர்களா?

ஆங்கில நூல்களை அதிகம் படிப்பது இளைஞர்கள்; தமிழ் நூல்களை அதிகம் படிப்பது மூத்தவர்கள். தமிழ் பழைய தலைமுறையினரின் பழக்கமாகிப் போகுமோ என்று பயமாக இருக்கிறது. இது சட்டென்று படுவது. எவரேனும் முறையான ஆய்வு செய்து சொன்னால் நன்றாக இருக்கும்.

என்.சீனிவாச ராகவன், சென்னை

பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுச்சட்டை போட்டவுடனேயே சேற்றைப் பூசிக் கொண்டாயிற்று. ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு இப்படியொரு அசிங்கம். ஏதோ சில தலித்துகள் கூடி மறியல் செய்திருக்கிறார்கள். தங்கள் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார்-வம்படியாக-என்று கேள்விப்பட்டால் அதுகூடச் செய்ய மாட்டார்களா? ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றதும் கல்லூரிப் பேருந்தைக் கொளுத்தி, மூன்று மாணவிகளைக் கொள்றார்களே அதிமுகவினர், அப்படியா நடந்து கொண்டார்கள்? இல்லையே. ஆனால், பரமக்குடியில் தேவையே இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். காவல்துறைக்குள்ளேயும் ஆதிக்கச் சாதிவெறி புகுந்திருக்கிறது என்பது பச்சையாகத் தெரிகிறது. மறியல் செய்தவர்கள் வேறு சாதியினர் என்றால் இவ்வளவு சாதாரணமாகத் துப்பாக்கிகள் வெடிக்குமா? தீண்டாமை என்பது அரசு நிர்வாகத்திலும் உள்ளது. காவல்துறையின் இந்த அக்கிரமப் போக்கை ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லையென்றால், அவர் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவரும் தீண்டாமையை ஒரு மாதிரியாக ஒப்புக் கொள்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டிவரும். அவர்களைப் பதவியில் வைத்துக் கொண்டே விசாரணை என்பது ஊரை ஏமாற்றும் வேலை.

எஸ்.கே.ஆதிமூலம், தஞ்சாவூர்

ஊழலின் ஊற்றுக்கண் பேராசைதானே..?

நிச்சயமாக. ஆசையிலும் ஆசை பதவி ஆசை. அதற்காகத் தேர்தலில் பணத்தைக் கொண்டு விளையாடும் ஆசை. முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தனது ராஷ்டிரபதி பவனத்து அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். அதில் இப்படிக் கூறியிருக்கிறார்- "மரியாதை நிமித்தமாக என்னைச் சந்திக்க ஜே.ஆர்.டி. டாட்டா வந்திருந்தார். நான் திட்டக் குழுவில் இருந்த காலத்திலிருந்தே நாங்கள் ஒருவரையொருவர் அறிவோம், காலப்போக்கில் பரஸ்பர மதிப்பு மிகுந்தது. போபர்ஸ் விவகாரமாக நாடாளுமன்றத்தில் ராஜீவ் அறிக்கை தாக்கல் செய்தது பற்றி டாட்டா குறிப்பிடும் போது இப்படிக்கூறினார் : பீரங்கி விவகாரத்தில் ராஜீவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எதையும் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி கமிசன் எதையும் பெற்றிருக்காது என்று கூறுவது கடினம். 1980 முதல் அரசியல் நன்கொடை கேட்டு தொழிலதிபர்கள் அணுகப்படவில்லை. ஆகவே, அந்தக் கட்சியானது இத்தகைய பேரங்களில் கமிசன் பெறுகிறது என்கிற பொதுவான உணர்வு அவர்கள் மத்தியில் இருக்கிறது." முதலாளித்துவ அரசியல் கட்சிகள் முதலாளிகளின் பணத்தில் நடக்கிறது. அப்படி நேரடியாக வாங்கவில்லை என்றால் நிச்சயம் ஊழல் பணத்தில்தான் நடக்கிறது! இதற்கு டாட்டாவே சாட்சி!

எஸ்.மனோகரி ரத்தினம், திருப்பூர்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே..?

மனித முயற்சியால் எட்டப்படும் எந்த வளர்ச்சியும் இயற்கைச் சூழலைப் பாதிக்கவே செய்யும். பெரிய அளவுக்கு பாதிக்காதபடி வளர்ச்சியைக் காணுவதே இலக்காக இருக்க வேண்டும். அணுகுண்டுகளை வீசி ஜப்பானியர்களைக் கொன்றுகுவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அணுசக்தியை மின்சாரத் தயாரிப்பு உள்ளிட்ட ஆக்கத் தொழிலுக்குப் பின்னர் பயன்படுத்தியது உலகம். விபத்துக்களின் காரணமாக இதில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி இப்போது கவலை அதிகரித்திருக்கிறது. அது நியாயம் தான். ஆனால் அணுசக்திக்குப் பதிலாக வேறு எந்த சக்தியைக் கொண்டு இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று எவரும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். மின்வெட்டு பற்றி சலித்துக் கொண்டு ஆட்சியிலிருந்தோரைத் தூக்கி எறிந்ததும் தமிழர்கள் தாம், இப்போது கூடங்குளம் மின்நிலையம் வேண்டாம் என்பவர்களும் தமிழர்கள் தாம். அதிலும் குழந்தை பிறக்கப் போகிற நேரத்தில் கலைக்கச் சொல்லுகிறார்கள்! அதில் போட்ட ரூ.13 ஆயிரம் கோடி பணம் என்னாவது? ஏற்கனவே, சேது சமுத்திரத் திட்டத்தை கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டி விட்டார்கள் சங்பரிவாரத்தினர். இப்போது இது. தென் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் அவ்வளவு எளிதில் வராது போலும். மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது போல இந்தத்திட்டம் பற்றி சந்தேகம் கொண்டுள்ள பொது மக்களிடம் அதைப்போக்கும் பணியில் ஈடுபடுவது தான் மத்திய அரசின் உடனடி வேலையாக இருக்க வேண்டும். அவர்களது ஒப்புதலோடு மின் திட்டத்தைத் துவக்குவதுதான் புத்திசாலித்தனம்.

Pin It