கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் 1858ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை முதன் முதலில் தொடங்கப்பட்டது.தொழிற்புரட்சியின் போது ஆஸ்பெஸ்டாஸ் மிகவும் பிரபலமடைந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் 1866 ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.1874ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கப் பயன்படும்தாதுப்பொருள்ஆந்தோபிலைட்( Anthophyllite) ஆகும்.
இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான பூச்சுகள், கான்கிரீட்டுகள், செங்கல்கள், குழாய்கள், வெப்பம், தீ முதலியவைகள் தாக்காமல் இருப்பதற்கான கேஸ்கட்டுகள், குழாய்கள் பதித்தல், மேற்கூரை போடுதல், தீப்பிடிக்காத சுவர், தரை, கூரை அமைத்தல், சுவர்களை இணைத்தல் முதலியவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டன.
ஆஸ்பெஸ்டாஸ் தனியாகவும், சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக்குடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் கட்டுதல் மற்றும் அவற்றின் தரைப்பூச்சுகள், கொதிகலன்கள் அமைத்தல்,கொதிநீர்க் குழாய்கள், நீராவிக் குழாய்கள் அமைத்தல், மின் விநியோகத்தின் மின்சாரக் கம்பிகளின் காப்பு உறைகள், மோட்டார் வாகனங்களில் தடுப்புச் சப்பாத்துகள், கிளச் பட்டிகள், ஆடைத் தொழிலில் தீப்பிடிக்காத போர்வைகள், திரைச்சீலைகள் என்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன் படுத்தப்படுகிறது. மேலும், தொலைத் தொடர்புகள், அலைமின் நிலையங்கள், இரசாயணத் தொழிலகங்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.
குண்டு வீச்சு, சுனாமி, சூறாவளி, பூகம்பம் முதலிய இயற்கை இடர்பாடுகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடு கட்டுவதற்கு ஆஸ்பெஸ்டாஸ் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நாடுகளில் புதுப்பிக்கும் பணிகளில் உதவிக்கு வருகின்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும்,உலக வங்கியும் விற்பனை முகவர்களையும் விஞ்சும் அளவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பரிந்துரை செய்கின்றன.
இந்தியா, சீனா முதலான வளரும் நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் சிமிண்ட் சீட்டுகள் (Asbestos cement sheets or A/C sheets) மேற் கூரைகளுக்கும், பக்கச் சுவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மில்லியன்கணக்ககான வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுரிகள், கூடாரங்கள், தங்குமிடங்கள் முதலியவற்றுக்காக ஆஸ்பெஸ்டாஸ தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இ ந்தியாவில் கிராமப்புறங்களில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாக பயன்படத்த ஊக்குவிக்கப்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் அனைத்து வழிகளிலும், அனைத்து நிலைகளிலும் உடல் நலத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் கெடுக்கக் கூடியது.முதன் முதலில் 1906ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பாதித்து மரணம் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டது.சிறுவயது மரணம்,நுரையீரல் பாதிப்பு முதலியவைகள் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது என்பதை அமெரிக்காவில் ஆய்வு செய்து 1914 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.
‘மேசோதாலியமா’ என்னும் நோய் 1931 ஆம் ஆண்டு மருத்துவ உலகில் அறியப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் தான் இந்நோய் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டது. அப்பொழுது தான் அமெரிக்க அரசு பொது மக்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவித்தது. 1970 களில் நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகளினால் ஏற்படும் நோய்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் நாட்டில் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்காக, ஆஸ்பெஸ்டாஸ், அம்மோனியம் சல்பேட்டில் பயன்படுத்தப்பட்டது, மேலும், இரயில் ரோடு கார்கள் ( Rail Road cars) , கட்டிடங்கள், சுவர்கள் முதலியவற்றிற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.ஜப்பான் நாட்டில் 1974 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி மற்றும் பயன்பாடு உச்சநிலையை அடைந்தது.1990ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தது.
ஆஸ்திரேலியாவில் 1945 முதல் 1980 வரை கட்டிடப் பணிகளிலும், தொழிலகங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
உலகில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்களை வெட்டி எடுக்கும் நாடு கனடா ஆகும். கனடாவில் கிடைக்கும் ஆஸ்பெஸ்டாஸில் 95 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், ரஷ்யா, ஜிம்பாப்வே (Zimbabwe) முதலிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவை ஆஸ்பெஸ்டாஸைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றன.
ஆஸ்பெஸ்டாஸ் சந்தையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகவும் மோசமான பாதுகாப்பற்ற உற்பத்தி இடம்,முறைப்படுத்தப்படாத விதிமுறைகள், அமல்படுத்தப்படாத சட்டங்கள் முதலியவற்றால் மிகப்பெரும் அழிவுகள் நேர்கின்றன.
உலகத்திலேயே பழுதடைந்த கப்பல்களை உடைக்கும் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலோரம் ‘ஆலாங்கில்’ உள்ளது. இதில் 55,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அகமதாபாத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்கள் சுரங்கத்தில் வெட்டியெடுக்கும் போதும், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்களைத் தயாரிக்கும் போதும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போதும், கட்டிடங்கள் இடிக்கப்படும் போதும், கப்பல் உடைக்கும் தளங்களில் பழைய கப்பல்களை உடைத்து பிரிக்கும் போதும் ஆஸ்பெஸ்டாஸிசிலிருந்து நுண்ணிய துகள்கள் காற்றில் கலக்கின்றன.
காற்று , ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்களை அரித்து எடுக்கிறது. காற்றை நாம் ஏதோ ஒரு வகையில் தினமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.காற்று மூலம் ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்கள் நமது மூக்கின் வழியே உடலினுள் செல்கிறது. ஒரு கன மீட்டர் அளவில்,அதாவது ஒரு மணி நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து ஆஸ்பெஸ்டாஸ் நார்த்துகள்களாவது இருக்கும். நகர்புறத்துக் காற்றில் இந்த அளவு பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்று கணக்கிட்டுள்ளனர். மேலும், ஆஸ்பெஸ்டாஸைக் கையாளுகின்ற வேலைத் தளங்களில் 5 மில்லியன் துகள்கள் வரை கூடச் செறிந்த போய் இருக்கும்.
மூச்சுக் காற்றுடன் சுவாசப்பாதையினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடல் தன் பலத்தைப் பிரயோகித்து தும்மியோ,இருமியோ வெளியே தள்ளுவதற்கு முனையும். ஆனால் ,இந்தத் தள்ளு முள்ளுகளில் 5மைக்குரோன்கள் அல்லது அதனினும் பெரிய அளவு ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடலில் எதிர்ப்புப் பொறிகளினால் எதுவும் செய்துவிட முடியாது.அவை நுரையீரலின் ஆழமான பகுதிகளைச் சென்றடைந்து விடுகின்றன. மீண்டும், மீண்டும் ஆஸ்பெஸ்டாஸ் காற்றையே சுவாசிப்பவர்களின் நுரையீரல்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஒரு படையாகவே படிந்து விடுகிறது.இது நுரையீரலை இயல்பாகச் சுருங்கவோ, விரியவோ செய்யவிடாமல்,சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல்களை இயங்கச் செய்வதற்கு இதயம் அதிக அளவில் செயல்பட வேண்டியுள்ளது. மேலும், நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியவும் தொடங்குகிறது. இந்த நோயை மருத்துவர்கள் ‘ஆஸ்பெஸ்டாஸிஸ்’ (Asbestosis) எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த நோய்க்குத் தகுந்த சிகிச்சையும் சரியான மருந்து மாத்திரைகளும் இல்லாததால், நோய்வாய்ப்பட்டவர்கள் பெரும்பாலும் செயலிழந்து போவார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள்.
நுரையீரலினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் நுரையீரல் புற்று நோயை (Lung cancer) ஏற்படுத்துகிறது. ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயை விட நுரையீரல் புற்று நோய் அதிக அளவில் மனித உயிர்களைப் பறிக்கிறது.
ஆஸ்பெஸ்டாஸ் வெட்டியெடுக்கும் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் பணிபுரிபவர்கள், கட்டுமானப் பணியாளர்கள் முதலிய பிரிவினர்கள் நுரையீரல் புற்று நோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தப் புற்று நோயைவிடவும் நுரையீரலின் உட்பக்கத்தைப் போர்த்தியிருக்கும் மெல்லிய சவ்வில் ‘மீசோதீலியோமா’ (Mesothelioma) என்னும் கொடிய புற்று நோயையும் ஏற்படுத்துகிறது. மீசோதீலியோமா நோய் சுவாசப்பாதையில் மட்டுமின்றி, தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுநீரகங்கள் முதலியவற்றிலும் பாதிப்பை உருவாக்குகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் துகள்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளியாகும் கிருமிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் குடிநீர் விநியோகக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மூலமும் ஆஸ்பெஸ்டாஸ் உணவுக் குழாயை வந்தடைகிறது.இப்படி உணவுக் குழாயில் சேரும் ஆஸ்பெஸ்டாஸின் ஒரு பகுதி அங்கிருந்து குடற்சுவரின் இரத்த ஓட்டத்தினுள்ளும் நுழைந்து,இரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களை பாதிப்படையச் செய்கிறது.
ஆஸ்பெஸ்டாஸ் துகள்களைச் சுவாசிப்பவர்களுக்கு உடனடியாக நோயின் அறிகுறிகள் தெரிவதில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்பு கூட நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.
ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தோல் நோய், பல்முனேரி (Pulmonary) நோய், கர்ப்பப்பை புற்றுநோய் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. விலங்கினங்களுக்கு ‘டியூமர்’(Tumors) நோய் ஏற்படுகிறது. இயற்கை வளங்களையும், நீரையும் ஆஸ்பெஸ்டாஸ் மாசுப்டுத்துகிறது.
ஆஸ்பெஸ்டாஸ்சின் கொடிய தீய விளைவுகளைக் கருத்தில் கொண்டு, உலகின் பல முன்னணி நாடுகள் முற்றிலும் தடை செய்து உள்ளன. உலகில் சுமார் 52 நாடுகள் ஆஸ்பெஸ்டாஸை தடை செய்துள்ளன.ஜப்பான் நாடு ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிப்பதையும்,இறக்குமதி செய்வதையும் முற்றிலுமாகத் தடைசெய்துள்ளது. தென்னாப்பிரிக்காவும், ஐரோப்பிய குடியரசு நாடுகளும், ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் ஆஸ்பெஸ்டாஸை முற்றிலுமாக தடை செய்துள்ளன. வளர்ந்த நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸை பயன்படுத்தி புதிதாக ஆரம்பிக்கும் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆஸ்பெஸ்டாஸ் கட்டுப்பாட்டுச் சட்டம் 2006 (Control of Asbestos Regulation Act ) இயற்றப்பட்டு உள்ளது. அய்க்கிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) 1989 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
கேரள மாநில மனித உரிமை ஆணையம் சனவரி 2009 முதல், பள்ளிகளில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள ‘தேசிய தொழிலக சுகாதாரநிறுவனம் (NIDH) மேற்கொண்ட ஆய்வின்படி,“ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரையில் வாழ நேர்ந்தால், நுரையீரல் புற்று நோய், மீசாதீலியோமோ முதலிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது ”-என அறிவித்துள்ளது.
ஆஸ்பெஸ்டாஸின் தீமைகளை அறிந்த பின்பும் இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸைப் பயன் படுத்துவது மக்கள் விரோதச் செயலாகும். ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுவதுதொடர்கிறது.ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதி தாராளமாக நடைபெற்றும் வருகிறது.
ஆந்திராவில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடையில்லை, வளர்ச்சிக்கு அவசியம் எனக் கூறப்படுகிறது. காதம் விவேக்கானந்த் என்ற பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் 25 விழுக்காடு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்கிறார்.அவருக்கு எட்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளன.
“வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் (பயன்படுத்த இறக்குமதிக்கு தடை விதித்தல்) மசோதா 2009“– இராஜ்யசபாவில அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், தொழிலபதிர்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு, அறிவியல் தொழில் நுட்பக் குழு, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முதலியவற்றின் முட்டுக்கட்டையால் பாராளுமன்றத்தில் அம்மசோதா இன்றுவரை நிறைவேற்றப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது.
தமிழகத்தில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டிற்கு எவ்விதத் தடையும் கிடையாது. கும்பகோணத்தில் பள்ளியின் கூரையில் ஏற்பட்ட தீவிபத்தையடுத்து, பள்ளிகளின் கூரைகள் அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸின் தீமைகள்குறித்துபொதுமக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும்,மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளுக்குப் பதிலாக, செல்லுலோஸ் பைபர், பிரமிட் பைபர், இரும்புத் தகடு முதலியவற்றைப் பயன் படுத்தலாம்.மேலும், நமது முன்னோர்கள் பயன்படுத்தியது போல சுட்ட களிமண் ஓடுகளைப் பயன்படுத்தலாம்.
இந்திய அரசு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நமது சமுதாயத்தில் ஞெகிழிப் பொருட்களின் பயன்பாடு மக்களின் நுகர்வு கலாச்சாரமாகவும், நாகாரிகமானதாகவும் மாறியுள்ளது. ஆனால் ஞெகிழிப் பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், தீங்குகள் ஏராளமானவையாகும்.
நீர், நிலம், காற்று, தாவரம், விலங்கு என அனைத்தையும் சீர்கேடு அடையச் செய்யும் ஞெகிழிப் பொருட்கள் மனித குலத்தை அழிக்கக் கூடியனவாக உள்ளன.
நாம் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டன ஞெகிழிப் பொருட்கள். நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் தூரிகை-பற்பசை அடைப்பான்கள் ஞெகிழியால் செய்யப்படவை. பால் உறைகள் ஞெகிழியால் தயாரிக்கப்பட்டவை. தேநீர் வடிகட்டப் பயன்படும் வடிகட்டிகள் - குடிநீர்க் குழாய்கள் - நீர்த்தொட்டிகள்-வாளி-முகவை-வழலைப்பெட்டி (Soap box)– உடைகளை உலர்த்தப் பயன்படும் கயிறு-உடைகளைப் பிடித்திருக்கும் பிடிப்பான்கள் - சீப்பு-எண்ணெய்ப்புட்டிகள்-முகப்பூச்சு அடைப்பான்கள்-உணவு அடைப்பான்கள்-தேநீர், குளம்பி அருந்தும் குவளைகள்-பழச்சாறு, பனிக்குழைவு (ice creams) குவளைகள் அடைப்பான்கள், குளிர்பானங்களின் புட்டிகள், பொருட்கள் வாங்கப் பைகள், திருமணத் தாம்பூலப்பை, திருமண அழைப்பிதழ்கள், சாப்பாட்டு மேசை விரிப்புகள், சாப்பாட்டு இலைகள் என நம் வாழ்வில் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களாக ஞெகிழிப் பொருட்கள் உள்ளன.
ஞெகிழி தயாரிக்க 90 விழுக்காடு வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தியில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. ஞெகிழித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும், அருகில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஞெகிழியை மறு சுழற்சி செய்யும்பொழுது, வெளியேறும் வேதியியல் வாயுக்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஞெகிழி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் பலர் இறக்க நேரிடுகிறது.
ஞெகிழியை எரித்தால் வெளிவரும் புகையில் டையாசின், ப்யூரான் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறி காற்றில் கலந்து, எட்டாத தொலைவில் வசிக்கும் மக்களுக்குக் கூட புற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன.
மண்ணில் வீசப்படும் ஞெகிழிப் பொருட்கள் மட்குவதில்லை. மேல் மண்ணுக்கும் கீழ் மண்ணுக்கும் இடையில் ஒரு கண்ணாடிச் சுவர்போல இருந்து நீரோ, காற்றோ புக வழிவிடாமல் மண்ணை மூச்சுத் திணறச் செய்கிறது. மண்வளங்களான நுண் துளைகள், மண்ணின் நயம், நீர்ப்பிடிப்புத் தன்மை, மண்ணின் இயற்கைத் தன்மையினைப் பாதித்து மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. நிலத்தின் காற்றோட்டத்தைத் தடுக்கிறது. அதை மீறி எந்த விதையும் முளைப்பதில்லை. மண் மலடாகிறது. நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால் விவசாயம் நாசமடைகிறது.
அதிக அளவிலான கொழுப்பு அல்லது எண்ணெய் கூடுதலான வெப்ப நிலையில் வேகவைக்கப்பட்ட உணவில் ஞெகிழி கரைந்துவிடக் கூடியது. அந்த உணவுகளைச் சூடேற்றும் போதோ அல்லது அதே ஞெகிழியிலேயே நீண்ட நாட்கள் வைக்கும் போதோ ஞெகிழி கரைகின்றது. இதனால் நச்சுத் தன்மையுள்ள ஞெகிழியை உண்பதோடு, ஞெகிழியுடன் கூடிய வேதிக் கலவைகளையும் நாம் உண்ண வேண்டியுள்ளது. ஆனால், நாம் கவர்ச்சியான வண்ணமயமான அடைப்பான்களையும், உறைகளையும் பார்த்து, அபாயம் அறியாமல் வாங்கிப் பயன்படுத்துவதை நவ நாகாரிகம் என நினைக்கிறோம்.
கால்வாய்களில் ஞெகிழி கழிவுப் பொருட்களான பைகள், குவளைகள், புட்டிகள் ஆகியவற்றை போடுவதால்? அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கிவிடுகிறது. அண்மையில் மும்பை நகரில் பொழிந்த மழையின் போது அங்கு உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு உண்டாகி மாநகரமே மூழ்கும் அபாயநிலை உருவானது. மேலும், கால்வாய்களில் நீர் தேங்கி துர்நாற்றம் உண்டாகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களைப் பரப்புகிறது.
மலைப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்களால் கானுயிர்கள் (Wild Animals) பாதிக்கப்படுகின்றன.
கடற்கரையோரங்களில் மக்களால் தூக்கி வீசப்படும் ஞெகிழிப் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களான கடல் பறவைகள், கடல்நீர் நாய்கள் (Sea otters) கடற்பன்றிகள் (Porpoires) கடல் ஆமைகள், டால்பின்கள் ஆகியன இறந்துவிடுகின்றன அல்லது முடமாக்கப்படுகின்றன என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞெகிழிப் பைகளைத் தின்ற யானைகள், மாடுகள், ஆடுகள் போன்றவை இறந்துவிட்டன. அவற்றின் வயிற்றை அறுத்துப் பார்த்து ஆராய்ந்தபோது கிலோ கணக்கில் ஞெகிழிப் பைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஞெகிழிப் பொருட்களின் கழிவுகளால் மனிதர்களுக்கு தோல் நோயிலிருந்து புற்றுநோய்வரை பல்வேறு உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. சிலருக்கு ஞெகிழிப் பொருட்களைத் தொட்டாலும், பயன்படுத்தினாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஞெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் குழந்தைப் பிறப்பு பாதிப்புகள், மரபுத் தன்மையை உருவாக்கும் உயிரவில் மாற்றங்கள் ஏற்படுதல், ஆண்மை இழப்பு ஏற்படுதல், மூச்சுக் குழாயைத் தாக்குதல், குடல்புண், செரிமானமின்மை, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல், இரத்தம், சிறுநீரகம் மற்றும் உடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குலைத்தல் போன்ற கேடுகளை ஏற்படுத்துகின்றது.
இந்தியாவில் 1970-களில் அந்நியச் செலவாணியில் முப்பது விழுக்காடு சணல் தொழில் உற்பத்தியிலிருந்து கிடைத்து வந்தது. இன்றைய நிலையில் அது ஒரு விழுக்காடாக குறைந்துவிட்டது. சொல்லப்போனால் சணல் தொழில் ஒழிக்கப்பட்டுவிட்டது.
சுற்றுச் சுழலுக்கு பாதிப்பில்லாத நமது மரபு ரீதியான தொழிலான மரப்பொருட்கள் தயாரிப்பு நலிந்து விட்டது.
இந்தியாவின் மக்கள் தொகையையும், பரந்த சந்தையையும் பயன்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தியிலும், வணிகத்திலும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக வேதித் தொழிலகங்களின் உற்பத்திப் பொருட்களின் மீதான சுங்கவரி 130 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. இதனால் குறைந்த விலையில் ஞெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்து, மக்களிடம் அதிக நுகர்வை ஏற்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.
ஞெகிழிப் பொருட்களை, கழிவுகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
•ஞெகிழிப் பைகளுக்கு மாற்றாக சணல், உலர்ந்த இலைகள், தாள் பைகள், கண்ணாடி, துணிப்பைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
•உணவுப் பொருட்களை ஞெகிழிப் பைகள், அடைப்பான்களில் அடைத்துக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
•மேலை நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் ஒப்பந்தம் ‘பேசல் ஒப்பந்தம்’ ஆகும். அந்த ஒப்பந்தத்தை மீறி நச்சுத் தன்மையுள்ள ஞெகிழிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. நச்சுக் கழிவுகளின் இறக்குமதியைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
•ஞெகிழித் தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
•தேநீர், குளம்பிக் கடைகளில் ஞெகிழிக் குவளைகளுக்கு மாற்றாக வட மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள மண் குவளைகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•ஞெகிழிப் பொருட்களின் தயாரிப்புகளைக் குறைத்திட வேண்டும்.
•கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகள் எடுத்துச் செல்ல வேண்டும்.
•ஞெகிழிப் பொருட்களின் கேடுகள் குறித்து, அரசு மக்களிடம் தீவிரமான பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஞெகிழிப் பைகளின் கேடுகளையும், சுற்றுச்சுழல் பாதிப்புகளையும் உணர்ந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு சிம்லா நகரிரில் ஞெகிழிப் பைகள் உபயோகப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது. மேலும் கோவா, ஜம்மு காஸ்மீர், தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் தடைவிதிப்பு இருப்பினும் தீவிரமாக அமுல்படுத்தப்படுவதில்லை.
நாம் இன்று ஞெகிழிப் பொருட்களுக்குக் கொடுக்கும் விலை அதன் உற்பத்திக்கு மட்டுமே. ஆனால், அதனால் சுற்றுச்சுழலில் ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கான செலவை நாம் அதில் சேர்ப்பதில்லை. பாதிப்புகளையும், கேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஞெகிழிப் பொருட்களின் பயன்பாடு குறையும்.
இரண்டாவது உலகப்போரின்போது அதிக குண்டுகள் உண்டாக்கிய விளைவுகளைவிட ஞெகிழி இன்று அதிக அளவு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் அறுபது லட்சம் இராசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், மிகவும் ஆபத்தான இரசாயனம் ஞெகிழி என இன்று அறிவியல் உலகம் தெரிந்துள்ளது. அச்சமடைந்து தப்பிக்கவும் வழி தேடுகிறது.
ஞெகிழியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், சுற்றுச் சுழலைப் பாதுகாக்கவும் மனித குலம் வாழவும் பாடுபடுவோம்.
- விவரங்கள்
- பி.தயாளன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கணினிகள் , மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமிராக்கள், டேப்ரிக்கார்டர்கள், பென்டிரைவ்கள், பிளாப்பிகள், சிடிக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள், தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் மின்னணுத் தொழிற்சாலைகள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. நுகர்வோர்களை குறிவைத்து தயாரிப்புகள் செய்யப்பட்டன.
நோக்கியோ , சாம்சங் , சோனி எரிக்சன், மோட்ரோலா, சோனி முதலிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.
இந்தியாவில் எதிர்வரும் பத்தாண்டுகளில் 500% மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளின் அளவு இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டில் மட்டும் 1200 மெட்ரிக் டன்கள் எலெக்ட்ரானிக் கிராப் உருவாக்கப்படுகிறது. பெங்களுரில் மட்டும் ஆண்டுக்கு 8000 மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுகிறது.
சீனா, தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான மின்னணுப் பொருட்கள், இந்தியாவிற்குள் அதிக அளவில் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கப்படும் இப்பொருட்கள் குறைந்த காலங்களிலேயே மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன.
உபயோகமற்ற மின்னணுக் கழிவுகளிலிருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி, மனிதர்களுக்கு புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு முதலிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மின்னணுக் கழிவுகள் மண்ணையும் , நீரையும், காற்றையும் மாசடையச் செய்கின்றன.
மின்னணுக் கழிவுகளில் நச்சுத் தன்மையுள்ள காரீயம், பாதரசம், குரோமியம், இரும்பு, காப்பர், அலுமினியம், தங்கம் முதலிய உலோகங்கள் கலந்து உள்ளன.
காப்பரிலிருந்து ‘ டையாக்சின் ‘ என்னும் நச்சுப் பொருள் வெளியாகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் ‘டாக்சி சையனைடு‘ என்னும் நச்சுப் பொருளை வெறியேற்றுகிறது.
மின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம், மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலகீனப் படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது. கருவுருதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.
மின்னணுக் கழிவுகளில் கலந்து உள்ள ‘ சல்பர் ‘மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது.
புதுடெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை முதலிய பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கங்கை நதியும் மின்னணுக் கழிவுகளிலிருந்து தப்பவில்லை. மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. மின்னணுக் கழிவுகள் மக்கும் தன்மையற்ற திடக்கழிவுகளாக உள்ளதால் சுற்றுச் சூழலின் தன்மையையும், எழிலையும் சீரழிக்கிறது.
மின்னணு பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, இந்தியாவில் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
மின்கலம் (பேட்டரி) பயன்படுத்திய பின்னர் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. மின்கலத்தில் உள்ள உலோகத்துகள்களானது நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மின்கலங்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.
அய்ரோப்பிய யூனியன் 2005 ஆம் ஆண்டு ஒரு திடக்கழிவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களைச் சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது மற்றும் கழிவுகளை அகற்றுவது முதலியவைகளை, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாகும். மேலும், இந்தப் பணியை உள் நாட்டிலேயே செய்ய வேண்டும். இந்த அபாயகரமான மின்னணுக் கழிவுகளை, பயன்படுத்த முடியாத சாதனங்களை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் உலகத் தலைவனாக உள்ளது. மேலும், உலக அளவில் 80% மின்னணுக் கழிவுகளை அமெரிக்கா கொட்டுகிறது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகளை ஏற்படுத்துகிறது . அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் கணினிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலகில் பல நாடுகள் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தனது காலில் போட்டு மிதிக்கிறது. மென் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட அமெரிக்காவில் தான் மின்னணுக் கழிவுகள் சேருவதும் அதிகம். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்துள்ள அமெரிக்கா அதனை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச் சூழலை காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும். அறக்கட்டளைக்கும் உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு , இந்தியா போன்ற நாடுகளுக்கு பழுதடைந்த மற்றும் செயல்திறன் குறைந்த கணினிகளையும், பிற மின்னணுப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது. பேசில் ஒப்பந்தத்தில் (Basel Agreement) அமெரிக்கா கையொப்பமிட மறுத்துவிட்டது.
ஓரு கணினியில் 1000- க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. அதில் 50 பொருட்கள் நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களாலும், கலவைகளாலும் ஆனது. பழுதடைந்து கணினிகளிலிருந்தும், அதன் பாகங்களிலிருந்தும் நச்சு கசியத் துவங்குகிறது.
சென்னை துறைமுகத்தில் வருமானவரி அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், பல கன்டெயினர்களில் காலாவதியான கணினிகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் ஆஸ்திரேலியா , கனடா, கொரியா, புருனே முதலிய நாடுகளிலிருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டது.
இந்தியக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இந்தியாவை மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மேலை நாடுகள் மாற்றிவருகின்றன.
மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறு சுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்திட உபயோகிப்பாளர்களிடம் கணினிகளுக்கு 3.94% லிருந்து 5.95% வரையும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 3.4% லிருந்து 5% வரையும், செல் போன்களுக்கு 3.4% லிருந்து 5% வரையும் சேவைத் தொகை, விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஈடுபடுவதில்லை.
மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் புதுடெல்லியில் மட்டும் 30, 000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் இல்லாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், வெறுமனே சுத்தியல் , திருப்புளி கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடலில் காயங்கள் ஏற்படுதல், உடல் நல பாதிப்புகள் அடைதல், காற்றோட்டமில்லாத சூழல், முகம் மூடுவதற்கு மாஸ்க் , முகமூடிக்கவசம் முதலியவைகள் இல்லாதது. உயர் தொழில் நுட்ப நவீன கருவிகள் வழங்கப்படாதது முதலிய மோசமான நிலைமகள் நிலவி வருகிறது. மேலும், மின்னணுக் கழிவுகளிலிருந்து சில உலோகங்களைப் பிரிப்பதற்கு, சுத்தப்படுத்துவதற்கு வீரியமுள்ள அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலங்களினால் மனித உடலிலும், தோலிலும் பாதிப்புகள் உண்டாகிறது.
மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், நகராட்சி அமைப்பினர், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் , கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மின்னணுக் கழிவுகள் மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும். மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நச்சுத் தன்மையுள்ள மின்னணுக் கழிவுகள் குறித்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மனித உடலநலப் பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் குறித்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக ஏற்படுத்தப் படவேண்டும்.
மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட , மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் முதலியவற்றின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய சுற்றுச் சூழல் கட்டப்பாட்டு வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் உதவி புரிந்திட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு தேசிய, மாநில அளவிலான செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்.
இந்திய சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழிற்கழகம், தகவல் தொழில் நுட்பத் துறை, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் முதலிய அமைப்புகள் இணைந்து மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும் , மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் வழிகாட்டுதல் அளித்திட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும், மறு சுழற்சி செய்யவும், அதில் உள்ள உலோகப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கும், அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சியும், விழிப்புணர்வும் கிடைக்கச் செய்திட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய , மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்.
மின்னணுக் கழிவுகள் பிற நாடுகளிலிருந்த கடத்தி வரப்படுகிறதா? என்பதை நாட்டு எல்லைகளிலும், கடலோரங்களிலும் தீவரமாக கண் காணித்திட வேண்டும்
மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்களே முழு பொறுப்பாக்கப்பட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை அகற்றவும், அழிக்கவும் பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கும், மறு சுழற்சி செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
மின்னணுப் பொருட்கள் தயாரிப்புகளில், மிகவும் அதிக நச்சுத் தன்மை கொண்ட காரீயம், பாதரசம், காட்மியம், குரோமியம் முதலிய உலோகங்கள் பயன்படுத்துவதை குறைத்திட வேண்டும்.
பழைய மின்னணுப் பொருட்களை கொடுத்து, புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். பழைய மின்னணுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை அரசு அமைத்திட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்திடவும், அழித்திடவும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும்.
காரீயம் இல்லாத மின்னணு பொருட்கள், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து எந்த முறையிலும் மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யப்படுவதை முற்றும் தடை செய்திட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், அறக்கட்டளைகள், சமுதாய நல வளர்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிற்கு, வெளிநாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு 13-05-2010 அன்று முதல் தடை விதித்துள்ளதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
பெங்களுருக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி பணிமனையைப் போல் பிற இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .
மின்னணுக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படச் செய்திட வேண்டும். மின்னணுப் பொருட்கள் விற்பனை பொருட்காட்சிகள் நடத்திட விதிமுறைகள் கடுமையாக்கப் பட வேண்டும். மின்னணுக் கழிவுகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மின்னணுக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களை முறைப்படுத்த, பாதுகாத்திட முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
- பி.தயாளன் (
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
நாடு மிகப் பெரும் தண்ணீர்ச் சிக்கலை எதிர் கொள்ளப் போகிறது. இதுவரை காணாத அவலத்தை தமிழகமும் சந்திக்கவிருக்கிறது. கோடை காலம் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழகத்தைச் சூழும் தண்ணீர் ஆபத்து பல்வேறு விதமான சமூகப் பிரச்சனைகளுக்கு வித்திடப் போகும் ஆபத்தும் நெருங்கி வருகிறது. நீரின் அவசியத்தை உணர்ந்து அதனை பல்வேறு சடங்குகளிலும், பண்பாட்டிலும் முக்கியமான ஒன்றாக ஏற்றிப் போற்றிய தமிழர் மரபு இன்று பெரும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. 'நீரின்றமையாது உலகு' என்று பாடிய வள்ளுவப் பெருந்தகையின் வழியைப் பின்பற்றாது விலகிச் சென்று வாழ்கின்ற தமிழ்ப்பெருங்குடி இன்றைக்கு நீர்நிலைகளையெல்லாம் இழந்து கடுமையான வாழ்வியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலங்காலமாய் தமிழ் நிலத்திற்குள் ஓடி, இந்த மண்ணை வளப்படுத்திய ஆறுகள் எல்லாம் அண்டை மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய நீரை மட்டுமே தமிழகத்திற்குப் பிச்சையிடும் 'திராவிட' இனங்களின் சகோதரப் பாசம் வேறு புல்லரிக்கச் செய்கிறது. தமிழகத்திற்கு உரிமையான நீரை நடுவணரசு அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தரும் என்று நம்புவதற்கில்லை. தமிழகத்தின் பக்கமிருக்கும் நியாயத்தை ஓரளவேனும் உணர்ந்து பொறுப்புடன் நீதியை வழங்க நீதிமன்றங்கள் முயற்சி செய்தாலும், அதனை அந்த மாநிலங்கள் சற்றும் மதிக்காத போக்கே நிலவுகிறது. இந்நிலையில் தனக்கான தண்ணீர்த் தேவைக்கு தனது முயற்சி ஒன்றையே முழுவதும் நம்பத் தலைப்பட்டுள்ளான் தமிழன்.
'உலக நாடுகள் பலவற்றில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய நாடுகளில், இந்தியாவும் ஒன்று. எனவே, தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க, மாற்று வழிகள் குறித்து இப்போதே முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, கடல் நீரை குடிநீராக மாற்றுவது, மழை நீரை, குடிநீராகப் பயன்படுத்துவது, தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்வது, இருக்கும் நீரை சிக்கனமாக செலவிடுவது போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இது குறித்த நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும்' என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், திட்ட கமிஷனின் தற்போதைய உறுப்பினருமான, கே.கஸ்தூரிரங்கன் கூறியுள்ளார். இந்திய நாட்டின் தண்ணீர் எதிர்காலம் குறித்து விடப்பட்ட எச்சரிக்கையாக இருந்தாலும், எழுத்து மாறாமல் இது தமிழகத்திற்கும் அப்படியே பொருந்தும்.
தமிழகத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் இச்சராசரியை எட்டிப்பிடிப்பதே மிகவும் அதிசயம். கடந்தாண்டு, சராசரியில் பாதிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ள நிலையில், அணைகளின் நீர் இருப்பு கவலைக்குரிய வகையில் குறைந்து விட்டது. புதர்மண்டி தூர்ந்து கிடக்கும் நீராதாரங்களுக்கு நடுவில், நீரைத் தேக்கி வைப்பதற்காக இருந்த சில ஆயிரக்கணக்கான நீர்நிலைகளும் தற்போது நீரின்றி முற்றுமாக வறண்டு கிடக்கின்றன. சங்கிலித் தொடராய் நீர்நிலைகளை இணைத்த கால்வாய்களும் வன்கைப்பற்றலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மழையின்மையின் பக்க விளைவுகளாய் விளைச்சலின்மை, விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, இடப்பெயர்வு, நகர்ப்புற மக்கள் தொகைப் பெருக்கம், நிலத்தடிநீர்ச்சுரண்டல், ஏக போக தண்ணீர் வணிகம், சுற்றுச்சூழல் கேடு, இறையாண்மைக்குக் குந்தகம் ஆகிய தொடர் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் வருமாண்டில் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழகத்தில் 365 நாட்களில் சராசரியாக 35 நாட்கள் மட்டுமே 30 மணித்துளிகளில் 13 மி.ஹெக்டேரில் 923 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இது 120000 கனகோடி மீட்டராகும். இதில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் 32 விழுக்காடு மழையும் வடகிழக்கு பருவக்காற்று மூலம் 48 விழுக்காடு மழையும் கிடைக்கிறது. மீதி கோடை மழையாகப் பெய்வதன் மூலம் கிடைக்கிறது. இது இந்தியாவில் கிடைக்கும் நீரில் 3 விழுக்காடே ஆகும். கங்கையில் ஒரு ஆண்டுக்கு 5 நாள் ஓடும் வெள்ள நீரின் அளவு தமிழகத்தின் ஓர் ஆண்டு தேவையாகும். தமிழ்நாட்டில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 800 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி நபர் ஒருவருக்கு கிடைக்கும் அளவு 1000 கன மீட்டருக்குக் குறைந்தால், அது நீர் தட்டுப்பாடான பகுதி என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த கணக்குப்படி இந்தியா 2025ல் நீர் தட்டுப்பாடான பகுதியாக மாறும் என்றால் தமிழ்நாடு இப்போதே மிகவும் தண்ணீர் தட்டுப்பாடான மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20லிருந்து 25 ஆண்டுக்குள் இது மிகவும் மோசமடைந்து நீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது (நன்றி: திரு.சேதுராமலிங்கம், கட்டுரையாளர்)
உலகத்தில் நிலவும் தண்ணீர்ப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அய்.நா.அவை, 'வாழ்விற்கான தண்ணீர்' எனும் முழக்கத்தை முன் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடும் உலக தண்ணீர்ப் பேரவையும் கடந்தாண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் கூடியது. நீரியல் சார்ந்து பணியாற்றும் உலக வல்லுநர்கள் 800 பேருடன், உலக நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் 140 பேரும் இதில் பங்கேற்று கலந்துரையாடினர். இதன்போது அய்.நா.அவை வெளியிட்ட அறிக்கையில், 'உலகில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விசயமாக இருக்கும். 2050ம் ஆண்டளவில் உலகின் மக்கள் தொகை 900 கோடியாக உயரும். எனவே உணவுப் பொருள்களின் தேவை, கழிவறை வசதிகளின் தேவை அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். தற்போது 250 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அத்துடன், பத்தில் ஒருவருக்கு நல்ல குடிநீருக்கான வாய்ப்பும் கிடையாது. உலகில் ஏழு நாடுகளுக்கு ஒரு நாடு வீதம், தனது நாட்டின் தண்ணீர்த் தேவையில் 50 விழுக்காட்டுக்கு அண்டை நாட்டைச் சார்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 4,200 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் 82 விழுக்காட்டுத் தண்ணீர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில்தான் தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், உலகில் நிலத்தடி நீர்மட்டமும் கடந்த 50 ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது' என எச்சரித்துள்ளது.
இனி வரும் ஆண்டுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதும் கூட அரிதிலும் அரிதான விசயமாகும் ஆபத்தும் நெருங்கி வருகிறது. தூய்மையான தண்ணீர் என்பதை மனிதனின் அடிப்படை உரிமையாக அய்.நா. அவை அறிவித்திருந்தாலும், உலக நடப்பு அதற்கு மாறாகவே உள்ளது. ஜெர்மன் நாட்டின் தூதுவர் விட்டிங், 'ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் 2 மில்லியன் மக்கள் இறக்க நேரிடுகிறது. அதில் பெரும்பாலானோர் குழந்தைகளாக உள்ளனர். உலக அளவில் வாழும் 884 மில்லியன் மக்கள் நல்ல குடிநீரைப் பெறும் நிலையில் உள்ளனர். சுகாதாரக்கேடுகளால் 2.6 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்' என்கிறார். உலகிலுள்ள மொத்த நீர்வளமான 130 கோடி கனமீட்டரில் 97 விழுக்காடு, உவர் நீர். வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் இரண்டு விழுக்காடாக உள்ளன. மீதியுள்ள ஒரு விழுக்காட்டு நீரைத்தான் மனிதர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் பயன்படுத்த வேண்டும். கடந்த 1998ஆம் ஆண்டு கடுமையான நீர்ப்பஞ்சத்தை எதிர்கொண்ட நாடுகள் 28. இந்த எண்ணிக்கை வருகின்ற 2050இல் 56ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரை போதிய அளவு நீரில்லாத நாடுகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 131 மில்லியனிலிருந்து 817 மில்லியனாக அதிகரிக்கும் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. விரைவில் இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேரக்கூடும்.
தண்ணீர் குறித்த அச்சம் உலகளவில் கடுமையாக இருக்கும் சூழலில், இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கும் சராசரி நீரின் அளவு சற்றேறக்குறைய இரண்டாயிரம் கன மீட்டர். கிடைக்கும் மொத்த நீரிலிருந்து மக்கள் தொகையால் வகுத்தால் அதுதான் தனிநபரின் சராசரி. தமிழ்நாட்டையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், சராசரியாக வெறும் 650 கனமீட்டர் நீரே கிடைக்கிறது. நீர்த்தட்டுப்பாடுள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் மிக முக்கிய ஒன்றாகும். அதனால்தான் இங்கு தண்ணீருக்கான மோதல்களும், சண்டைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. காவிரியிலிருந்து முல்லைப் பெரியாறு வரை போராடிப் போராடியே தமிழகம் தனக்கான தண்ணீர் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திரா 4 ஆயிரம் டி.எம்.சி, கர்நாடகம் 2 ஆயிரம் டி.எம்.சி, கேரளம் ஆயிரம் டி.எம்.சி தண்ணீரை குடிமைப் பயன்பாட்டிற்கன்றி கடலில் கலக்கின்றன.
குடிநீருக்கே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், வேளாண்மை குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. நெல் சாகுபடிக்குத் தேவையான உயிர்நீர் இன்மையால், சரக்குந்துகளில் தண்ணீர் எடுத்துச் சென்று, கருகும் பயிர்களைக் காப்பாற்ற உழவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் இப்போது நாளேடுகளில் மிகச் சாதாரணமாக நிழற்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம். அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவற்றால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை. இதே நிலை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (நன்றி கட்டுரை: அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பழனியப்பன் கந்தசாமி)
தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் சற்றே குறைவான நீர்நிலைகள் உள்ளன. இதில் 26 ஆயிரத்து 300 நீர்நிலைகள் 100 ஏக்கருக்கும் குறைவான பாசன வசதியைக் கொண்டவை. பதின்மூன்றாயிரத்து 702 கண்மாய்கள், குளங்கள் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதியைக் கொண்டவையாகும். முன்னது ஊராட்சி அமைப்புகளின் கண்காணிப்பிலும், பின்னது பொதுப்பணித்துறையின் கண்காணிப்பின் கீழும் உள்ளன. பெரும்பாலான நீராதாரங்கள் ஏதேனும் ஒரு வகையில் வன்கைப்பற்றலுக்கு ஆளாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நீர்நிலை வன்கைப்பற்றலைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிமான்கள் எம்.யூசுப் இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பு சூழல் வரலாற்றில் மகத்தான ஒன்றாகும். வன்கைப்பற்றலுக்கு ஆளாகியுள்ள நீர்நிலைகளைக் கணக்கெடுத்து அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன் அந்நீர்நிலைகள் அனைத்தும் பழைய நிலைக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இதனைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது அவசியம் என்றும் தீர்ப்பளித்திருந்தனர். நமது நீர்நிலைகளைக் காக்கும்பொருட்டு அந்நீதிமான்கள் அளித்த தீர்ப்பு இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை தொடர்புள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது.
சோழர் காலத்தில் உருவாக்கப் பெற்ற வீரநாராயணம் (இன்றைய வீராணம்) ஏரி தமிழகத்தின் புகழ்பெற்ற நீர்நிலைகளுள் ஒன்று. 1923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவீட்டின்படி இவ்வேரியின் கொள்ளளவு 41 மில்லியன் கனமீட்டர். 1991ஆம் ஆண்டு 28 மில்லியன் கனமீட்டராகக் குறைந்து போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றுப் பெருமை மிக்க வீரநாராயணம் ஏரிக்கே இந்நிலையென்றால், தமிழகத்திலுள்ள பிற கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்து சொல்லத் தேவையில்லை. தற்போது பொதுப்பணித்துறையால் கணக்கெடுக்கப்பட்டுள்ள 39,202 கண்மாய்/ஏரி/குளங்களின் மொத்தக் கொள்ளளவு 390 ஆயிரம் மில்லியன் கன அடி. நீர்த்தேக்கங்களின் கொள்ளளவோ 248 ஆயிரம் மில்லியன் கன அடி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நீர்த்தேக்கங்களைக் காட்டிலும் நீர்நிலைகளின் பராமரிப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் அவசியம் என்பதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் சில நூறு எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் நீர்நிலைகளை பழுது பார்க்க முடிந்துள்ளதென்பதை அறியும்போது, நீர்நிலைப் பராமரிப்பில் நாம் காட்ட வேண்டிய அக்கறை இன்னும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை. இனி வருங்காலங்களில் புதிதாக நீர்நிலைகளை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் எஞ்சியிருக்கின்ற நீர்நிலைகளைக் காக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும் உறுதியான கொள்கை முடிவுகளை நடுவண்-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
உறுதியற்ற விலை, போதுமான மழையின்மை, கூலியாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய வேளாண்மை கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக தரிசாய்க் கிடக்கும் தங்கள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு விவசாயக் குடும்பங்கள் இடம் பெயர்கின்றன. விற்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் வீட்டடி மனைகளாக மாற்றம் செய்யப்பட்டு, அவ்விடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மாபெரும் மாளிகைகளும் முளைத்து வருகின்றன. ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. அரசும் தனது பல்வேறு தேவைகளுக்காக நிலங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தி வரும் நிலையில், 2010ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 580 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 150 பொருளாதார மண்டலங்களுக்கு உடனடி அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் இடங்களில் வேளாண் நிலங்களும் உட்படும். இவற்றில் எத்தனை நீர்நிலைகளும், விளைநிலங்களும் உட்படப்போகின்றனவோ தெரியவில்லை.
வரைமுறையின்றி உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவு வருமாண்டுகளில் மிக வேகமாகக் கீழே செல்லும் நிலை ஏற்படும். தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகி வருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் 3 ஆண்டுகளில் ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரே இல்லாமல் வறண்டு விடும். மழை பெய்யும்போது 16 சதவீத நீராவது நிலத்துக்குள் சென்றால் தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன பெருநகரங்களில் 8 சதவீத நீர் கூட நிலத்தடிக்குச் செல்லவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 451 நகரங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 மாதிரிகளில் உயர்ந்த அளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மதுரையில் பொதுப்பணித்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வில் கடந்த 2012ஆம் ஆண்டு சனவரியில் 69 ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 3.5 மீட்டருக்குள் இருந்ததெனவும், இந்தாண்டு சனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 9.2 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர் மேலும் கீழிறங்கியுள்ளதென்றும், வரும் மாதங்களில் பெய்ய வேண்டிய மழையும் பொய்த்துப் போகும் பட்சத்தில் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக மாறுமென்றும் தெரியவந்துள்ளது. இதே நிலைதான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. தமிழகத்திற்கு மழை தருகின்ற வடகிழக்குப் பருவ மழையும், தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்து விட்டது. இதனால் தமிழகத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்க்கொள்ளளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. அணைகளில் எஞ்சியிருக்கும் நீர் கோடைக்காலத்தின் குடிநீர்த் தேவைக்கே போதுமானதாக இல்லாத நிலையில், வேளாண் பணிகளுக்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. நிலத்தடி நீர் போட்டி போட்டு சுரண்டப்படுவதால், பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலையும் இனி சாத்தியமாகும். நிலத்தடியில் குறிப்பிட்ட அடிக்கு மேல் தண்ணீரில் ஆர்சனிக் என்றழைக்கப்படுகின்ற நச்சு வேதிப் பொருட்கள் அதிகளவில் கலந்திருக்கும். இதனால் எலும்புத் தேய்மானம், வயிற்றுக் கோளாறுகள், பல் நோய்கள், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் பழுதடையும் வாய்ப்பு அதிகமாகும்.
தமிழகத்தின் ஓராண்டு தேவைக்கான நீரின் அளவு 54 ஆயிரத்து 395 மி.க.மீட்டர். இதே அளவுடன் பெருகும் மக்கள் தொகையோடு கணக்கிட்டால் வரும் 2050ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 57 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாகத் தேவைப்படும் 3 மில்லியன் கன மீட்டர் நீருக்கும், பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் தேவைப்படும் நீருக்கும் இனிமேல் தமிழகம் என்ன செய்யப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மழை குறைவாகப் பெறப்படும் இஸ்ரேல் நாடு நீர்மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. தமிழகத்தின் சராசரியை விட ஆண்டிற்கு 425 மி.மீட்டர் மழையை மட்டுமே இந்நாடு பெறுகிறது. ஆனால், அங்கு தண்ணீர்ப் பிரச்சனைகள் எழவில்லை. காரணம், அங்கு பின்பற்றப்படும் நீர்மேலாண்மை உத்திகள். நீரை மேலாண்மை செய்கின்ற முறைகள் குறித்து நம் சங்க இலக்கியங்கள் பலவும் சிறப்புடன் பதிவு செய்துள்ளன. திருக்குறளில் வள்ளுவரும் நீர்ப் பயன்பாடு குறித்து விளக்கியுள்ளார். அவற்றைப் பின்பற்றி வாழத் தொடங்கினாலே எப்பேர்ப்பட்ட தண்ணீர்ச்சிக்கலையும் நம்மால் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் தண்ணீர் குறித்த பார்வையில் நமது மக்களுக்கு இன்னமும் 'அந்தக்கால' நினைப்பே உள்ளது. தண்ணீர்ச்சிக்கனம் இனி வருங்காலத்தில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அடிப்படை பண்புக்கூறாக மாற்றம் பெற வேண்டும். எரிபொருளுக்கு இணையாக நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால், தண்ணீரை வீணாக்கும் எவரும் மனித குலத்தின் முதல் எதிரியாகப் பார்க்கப்படுவர். நீராதாரங்களை வாழ்வியலுக்கான அடிப்படை ஆதாரங்களாகப் பார்த்தல் மிகவும் அவசியம்.
அரசுக்கு சில ஆலோசனைகள்
தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றால் பாசனம் பெறும் நிலங்கள், அந்நீர்நிலைகளின் வாயிலாகப் பயன் பெறும் குடும்பங்கள் குறித்து தனித்தனியாக புள்ளிவிபரம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
ஒவ்வொரு நீர்நிலைகளையும் பொதுச்சொத்தாக அறிவித்து, அதனால் பயன்பெறும் பயனாளிகளைக் கொண்ட உள்ளூர்க் குழுக்களை அமைப்பதுடன், ஊராட்சி நிர்வாகக் குழுவையும் அதனோடு இணைக்க வேண்டும்.
நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட வன்கைப்பற்றல்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரமிக்க ஒருங்கிணைந்த குழுவொன்று அரசால் உருவாக்கப்படுதல் வேண்டும்.
அரசால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளில் எந்தவிதத்திலும் நீர்நிலைகளோ, விளைநிலங்களோ இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனைக் கண்காணிப்பதும் அவசியம்.
வேளாண் பணிகள் நடைபெறாமல் புதர் மண்டியோ அல்லது தரிசாய்க் கிடக்கும் நிலங்களையோ அரசு கையப்படுத்தும் என்ற ஆணையினைப் பிறப்பிக்க வேண்டும்.
தமிழகத்தின் நீர்த்தேக்கங்களில் நடத்தப்பெற்ற ஆய்வொன்றில் 8 அணைகளில் 30 விழுக்காடும், இரண்டு அணைகளில் 50 விழுக்காடும், 4 அணைகளில் ஒரு விழுக்காடும் வண்டல் படிந்து நீர்க் கொள்ளளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வண்டல் மண்ணை எடுப்பதற்கான திட்டத்தை வகுப்பதுடன், அணையின் நீர்க்கொள்ளளவை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்வது அவசியம்.
அதேபோன்று நூறு ஏக்கருக்கும் மேல் பாசன வசதி கொண்ட பொதுப்பணித்துறைக் கண்மாய்கள் அனைத்தையும் தூர்வாரி செப்பனிடுதல் வேண்டும். அதிலுள்ள வண்டல் மண்ணை உள்ளூர் உழவர்கள் எடுத்துச் செல்வதற்குரிய நடைமுறைகளை அரசு எளிதாக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அரைப்பங்கு நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆணையாக்க வேண்டும்.
தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில் சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள உழவர்களின் நலன் கருதி பண்ணைக்குட்டைகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே போன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள உழவர்களுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்துத் தர தமிழக அரசு முன் வருதல் வேண்டும்.
வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பிற்கான திட்டத்திற்கு மிகுந்த முனைப்பு காட்டுவது மிகவும் அவசியம். அதற்குத் தமிழக அரசு கால வரையறையுடன் கூடிய அறிவிப்பினைச் செய்வது காலத்தின் கட்டாயம்.
- இரா.சிவக்குமார் (
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு