அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் 1858ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை முதன் முதலில் தொடங்கப்பட்டது.தொழிற்புரட்சியின் போது ஆஸ்பெஸ்டாஸ் மிகவும் பிரபலமடைந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் 1866 ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.1874ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கப் பயன்படும்தாதுப்பொருள்ஆந்தோபிலைட்( Anthophyllite)  ஆகும்.

 இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான பூச்சுகள், கான்கிரீட்டுகள், செங்கல்கள், குழாய்கள், வெப்பம், தீ முதலியவைகள் தாக்காமல் இருப்பதற்கான கேஸ்கட்டுகள், குழாய்கள் பதித்தல், மேற்கூரை போடுதல், தீப்பிடிக்காத சுவர், தரை, கூரை அமைத்தல், சுவர்களை இணைத்தல் முதலியவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டன.

 ஆஸ்பெஸ்டாஸ் தனியாகவும், சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக்குடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் கட்டுதல் மற்றும் அவற்றின் தரைப்பூச்சுகள், கொதிகலன்கள் அமைத்தல்,கொதிநீர்க் குழாய்கள், நீராவிக் குழாய்கள் அமைத்தல், மின் விநியோகத்தின் மின்சாரக் கம்பிகளின் காப்பு உறைகள், மோட்டார் வாகனங்களில் தடுப்புச் சப்பாத்துகள், கிளச் பட்டிகள், ஆடைத் தொழிலில் தீப்பிடிக்காத போர்வைகள், திரைச்சீலைகள் என்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன் படுத்தப்படுகிறது. மேலும், தொலைத் தொடர்புகள், அலைமின் நிலையங்கள், இரசாயணத் தொழிலகங்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.

 குண்டு வீச்சு, சுனாமி, சூறாவளி, பூகம்பம் முதலிய இயற்கை இடர்பாடுகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடு கட்டுவதற்கு ஆஸ்பெஸ்டாஸ் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நாடுகளில் புதுப்பிக்கும் பணிகளில் உதவிக்கு வருகின்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும்,உலக வங்கியும் விற்பனை முகவர்களையும் விஞ்சும் அளவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பரிந்துரை செய்கின்றன.

 இந்தியா, சீனா முதலான வளரும் நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் சிமிண்ட் சீட்டுகள் (Asbestos cement sheets or A/C sheets) மேற் கூரைகளுக்கும், பக்கச் சுவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மில்லியன்கணக்ககான வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுரிகள், கூடாரங்கள், தங்குமிடங்கள் முதலியவற்றுக்காக ஆஸ்பெஸ்டாஸ தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இ ந்தியாவில் கிராமப்புறங்களில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாக பயன்படத்த ஊக்குவிக்கப்படுகிறது.

 ஆஸ்பெஸ்டாஸ் அனைத்து வழிகளிலும், அனைத்து நிலைகளிலும் உடல் நலத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் கெடுக்கக் கூடியது.முதன் முதலில் 1906ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பாதித்து மரணம் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டது.சிறுவயது மரணம்,நுரையீரல் பாதிப்பு முதலியவைகள் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது என்பதை அமெரிக்காவில் ஆய்வு செய்து 1914 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.

 ‘மேசோதாலியமா’ என்னும் நோய் 1931 ஆம் ஆண்டு மருத்துவ உலகில் அறியப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் தான் இந்நோய் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டது. அப்பொழுது தான் அமெரிக்க அரசு பொது மக்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவித்தது. 1970 களில் நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகளினால் ஏற்படும் நோய்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் நாட்டில் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்காக, ஆஸ்பெஸ்டாஸ், அம்மோனியம் சல்பேட்டில் பயன்படுத்தப்பட்டது, மேலும், இரயில் ரோடு கார்கள் ( Rail Road cars)  , கட்டிடங்கள், சுவர்கள் முதலியவற்றிற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.ஜப்பான் நாட்டில் 1974 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி மற்றும் பயன்பாடு உச்சநிலையை அடைந்தது.1990ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தது.

 ஆஸ்திரேலியாவில் 1945 முதல் 1980 வரை கட்டிடப் பணிகளிலும், தொழிலகங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

 உலகில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்களை வெட்டி எடுக்கும் நாடு கனடா ஆகும். கனடாவில் கிடைக்கும் ஆஸ்பெஸ்டாஸில் 95 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், ரஷ்யா, ஜிம்பாப்வே (Zimbabwe) முதலிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவை ஆஸ்பெஸ்டாஸைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றன.

 ஆஸ்பெஸ்டாஸ் சந்தையில் இந்தியா  உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகவும் மோசமான பாதுகாப்பற்ற உற்பத்தி இடம்,முறைப்படுத்தப்படாத விதிமுறைகள், அமல்படுத்தப்படாத சட்டங்கள் முதலியவற்றால் மிகப்பெரும் அழிவுகள் நேர்கின்றன.

உலகத்திலேயே பழுதடைந்த கப்பல்களை உடைக்கும் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலோரம் ‘ஆலாங்கில்’ உள்ளது. இதில் 55,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அகமதாபாத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.

 ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்கள் சுரங்கத்தில் வெட்டியெடுக்கும் போதும், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்களைத் தயாரிக்கும் போதும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போதும், கட்டிடங்கள் இடிக்கப்படும் போதும், கப்பல் உடைக்கும் தளங்களில் பழைய கப்பல்களை உடைத்து பிரிக்கும் போதும் ஆஸ்பெஸ்டாஸிசிலிருந்து நுண்ணிய துகள்கள் காற்றில் கலக்கின்றன.

 காற்று , ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்களை அரித்து எடுக்கிறது. காற்றை நாம் ஏதோ ஒரு வகையில் தினமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.காற்று மூலம் ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்கள் நமது மூக்கின் வழியே உடலினுள் செல்கிறது. ஒரு கன மீட்டர் அளவில்,அதாவது ஒரு மணி நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து ஆஸ்பெஸ்டாஸ் நார்த்துகள்களாவது இருக்கும். நகர்புறத்துக் காற்றில் இந்த அளவு பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்று கணக்கிட்டுள்ளனர். மேலும், ஆஸ்பெஸ்டாஸைக் கையாளுகின்ற வேலைத் தளங்களில் 5 மில்லியன் துகள்கள் வரை கூடச் செறிந்த போய் இருக்கும்.

 மூச்சுக் காற்றுடன் சுவாசப்பாதையினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடல் தன் பலத்தைப் பிரயோகித்து தும்மியோ,இருமியோ வெளியே தள்ளுவதற்கு முனையும். ஆனால் ,இந்தத் தள்ளு முள்ளுகளில் 5மைக்குரோன்கள் அல்லது அதனினும் பெரிய அளவு ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடலில் எதிர்ப்புப் பொறிகளினால் எதுவும் செய்துவிட முடியாது.அவை நுரையீரலின் ஆழமான பகுதிகளைச் சென்றடைந்து விடுகின்றன. மீண்டும், மீண்டும் ஆஸ்பெஸ்டாஸ் காற்றையே சுவாசிப்பவர்களின் நுரையீரல்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஒரு படையாகவே படிந்து விடுகிறது.இது நுரையீரலை இயல்பாகச் சுருங்கவோ, விரியவோ செய்யவிடாமல்,சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல்களை இயங்கச் செய்வதற்கு இதயம் அதிக அளவில் செயல்பட வேண்டியுள்ளது. மேலும், நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியவும் தொடங்குகிறது. இந்த நோயை மருத்துவர்கள் ‘ஆஸ்பெஸ்டாஸிஸ்’ (Asbestosis) எனப் பெயரிட்டுள்ளனர்.

 இந்த நோய்க்குத் தகுந்த சிகிச்சையும் சரியான மருந்து மாத்திரைகளும் இல்லாததால், நோய்வாய்ப்பட்டவர்கள் பெரும்பாலும் செயலிழந்து போவார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள்.

 நுரையீரலினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் நுரையீரல் புற்று நோயை (Lung cancer)  ஏற்படுத்துகிறது. ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயை விட நுரையீரல் புற்று நோய் அதிக அளவில் மனித உயிர்களைப் பறிக்கிறது.

 ஆஸ்பெஸ்டாஸ் வெட்டியெடுக்கும் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் பணிபுரிபவர்கள், கட்டுமானப் பணியாளர்கள் முதலிய பிரிவினர்கள் நுரையீரல் புற்று நோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தப் புற்று நோயைவிடவும் நுரையீரலின் உட்பக்கத்தைப் போர்த்தியிருக்கும் மெல்லிய சவ்வில் ‘மீசோதீலியோமா’ (Mesothelioma) என்னும் கொடிய புற்று நோயையும் ஏற்படுத்துகிறது. மீசோதீலியோமா நோய் சுவாசப்பாதையில் மட்டுமின்றி, தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுநீரகங்கள் முதலியவற்றிலும்  பாதிப்பை உருவாக்குகிறது.

 ஆஸ்பெஸ்டாஸ் துகள்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளியாகும் கிருமிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் குடிநீர் விநியோகக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மூலமும் ஆஸ்பெஸ்டாஸ் உணவுக் குழாயை வந்தடைகிறது.இப்படி உணவுக் குழாயில் சேரும் ஆஸ்பெஸ்டாஸின் ஒரு பகுதி அங்கிருந்து குடற்சுவரின் இரத்த ஓட்டத்தினுள்ளும் நுழைந்து,இரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களை பாதிப்படையச் செய்கிறது.

 ஆஸ்பெஸ்டாஸ் துகள்களைச் சுவாசிப்பவர்களுக்கு உடனடியாக நோயின் அறிகுறிகள் தெரிவதில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்பு கூட நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.

 ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தோல் நோய், பல்முனேரி (Pulmonary) நோய், கர்ப்பப்பை புற்றுநோய் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. விலங்கினங்களுக்கு ‘டியூமர்’(Tumors)  நோய் ஏற்படுகிறது. இயற்கை வளங்களையும், நீரையும் ஆஸ்பெஸ்டாஸ் மாசுப்டுத்துகிறது.

 ஆஸ்பெஸ்டாஸ்சின் கொடிய தீய விளைவுகளைக் கருத்தில் கொண்டு, உலகின் பல முன்னணி நாடுகள் முற்றிலும் தடை செய்து உள்ளன. உலகில் சுமார் 52 நாடுகள் ஆஸ்பெஸ்டாஸை தடை செய்துள்ளன.ஜப்பான் நாடு ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிப்பதையும்,இறக்குமதி செய்வதையும் முற்றிலுமாகத் தடைசெய்துள்ளது. தென்னாப்பிரிக்காவும், ஐரோப்பிய குடியரசு நாடுகளும், ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும்  ஆஸ்பெஸ்டாஸை முற்றிலுமாக தடை செய்துள்ளன. வளர்ந்த நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸை பயன்படுத்தி புதிதாக ஆரம்பிக்கும் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவில் ஆஸ்பெஸ்டாஸ் கட்டுப்பாட்டுச் சட்டம் 2006 (Control of Asbestos Regulation Act ) இயற்றப்பட்டு உள்ளது. அய்க்கிய நாடுகள்  சுற்றுச் சூழல்  பாதுகாப்பு  அமைப்பு (EPA) 1989 ஆம் ஆண்டு  ஆஸ்பெஸ்டாஸ்  பயன்படுத்துவதற்கு  தடை விதித்துள்ளது.

 கேரள  மாநில  மனித உரிமை ஆணையம்  சனவரி 2009  முதல், பள்ளிகளில் கூரைகள் அமைப்பதற்கு  ஆஸ்பெஸ்டாஸ்  பயன்படுத்தக் கூடாது எனத் தடை  விதித்துள்ளது.

 அகமதாபாத்தில் உள்ள ‘தேசிய தொழிலக சுகாதாரநிறுவனம் (NIDH)    மேற்கொண்ட ஆய்வின்படி,“ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரையில் வாழ நேர்ந்தால், நுரையீரல் புற்று நோய், மீசாதீலியோமோ முதலிய  நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது ”-என  அறிவித்துள்ளது.

 ஆஸ்பெஸ்டாஸின் தீமைகளை  அறிந்த  பின்பும்  இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸைப்  பயன் படுத்துவது மக்கள் விரோதச் செயலாகும். ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கங்களிலிருந்து   வெட்டியெடுக்கப்படுவதுதொடர்கிறது.ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதி தாராளமாக நடைபெற்றும்  வருகிறது.

 ஆந்திராவில்  ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடையில்லை,  வளர்ச்சிக்கு  அவசியம்  எனக் கூறப்படுகிறது.  காதம் விவேக்கானந்த் என்ற பாராளுமன்ற  உறுப்பினர் இந்தியாவில்  25 விழுக்காடு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்கிறார்.அவருக்கு எட்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள்  இந்தியாவின்  பல மாநிலங்களில் உள்ளன.

 “வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் (பயன்படுத்த இறக்குமதிக்கு தடை விதித்தல்) மசோதா 2009“– இராஜ்யசபாவில அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால்,  காங்கிரஸ்  கட்சியின்   பாராளுமன்ற  உறுப்பினர்களாலும், தொழிலபதிர்களுக்கான  பாராளுமன்ற  நிலைக்குழு, அறிவியல் தொழில்  நுட்பக்  குழு, சுற்றுச் சூழல் மற்றும்  வனத்துறை  அமைச்சகம்  முதலியவற்றின் முட்டுக்கட்டையால் பாராளுமன்றத்தில்  அம்மசோதா இன்றுவரை நிறைவேற்றப் படாமல்  கிடப்பில்  போடப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது.

 தமிழகத்தில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டிற்கு எவ்விதத் தடையும் கிடையாது.  கும்பகோணத்தில் பள்ளியின் கூரையில்  ஏற்பட்ட தீவிபத்தையடுத்து, பள்ளிகளின் கூரைகள் அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால்  வேயப்பட்டுள்ளது.

 இந்தியாவில்  ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதிக்கு  முற்றிலும்  தடை விதக்க வேண்டும்.  ஆஸ்பெஸ்டாஸின் தீமைகள்குறித்துபொதுமக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும்,மாணவர்களுக்கும்  விழிப்புணர்வு  ஏற்படுத்திட வேண்டும்.

 ஆஸ்பெஸ்டாஸ்  தகடுகளுக்குப் பதிலாக,  செல்லுலோஸ்  பைபர்,  பிரமிட் பைபர், இரும்புத் தகடு  முதலியவற்றைப் பயன் படுத்தலாம்.மேலும்,  நமது முன்னோர்கள்  பயன்படுத்தியது போல சுட்ட களிமண் ஓடுகளைப்  பயன்படுத்தலாம்.

 இந்திய அரசு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கு முற்றிலும்  தடை விதிக்க வேண்டும்.

Pin It