இன்று நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அழித்து, கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான மெகா திட்டங்களையும் குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் எதிர்த்து போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை சமர்பிக்க வேண்டி இந்தத் திட்டங்களை ஆய்வு செய்யும் தேசிய அளவிலான ஆய்வு நிறுவனங்களும் தேசிய அளவிலான விஞ்ஞானிகளும் சில சமயங்களில் மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அதிகாரிகளும், 'மக்கள் எதிர்த்துப் போராடும் திட்டங்களினால் யாருக்கும் எந்த பாதிப்புகளும் இல்லை; சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர். அந்த அறிக்கைகளில் தங்களின் கூற்றுகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் வாதிடுகின்றனர். பின்னர் மக்கள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆய்வுகளிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும், அந்த விஞ்ஞானிகளின் அறிக்கைகளுக்கு மாற்றான அறிக்கைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தவுடன் இந்த அறிக்கைகள் போன இடம் தெரிவதில்லை. உதாரணங்களாக இறால் பண்ணைகள் குறித்து நீரி அமைப்பின் அறிக்கை சேது சமுத்திரத்திட்டம் குறித்த அதே அமைப்பின் அறிக்கை என்று பலவற்றை சுட்டிக்காட்டலாம். ஏன் இவ்வாறு நிகழ்கின்றன? இந்த விஞ்ஞானிகளின் பார்வை சரியில்லையா? அல்லது விஞ்ஞானமே தவறாக உள்ளதா? என்பதை அறிய சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

sterlite_factory_380கடலூர் சிப்காட் பாதிப்புகளின் அறிக்கைகளிலிருந்து நமது ஆய்வைத் தொடங்குவோம். சிப்காட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிப்காட்டிலுள்ள பல தொழிற்சாலைகளிலிருந்து பல்வேறு கடுமையான, பொறுத்துக் கொள்ள முடியாத துர்நாற்றங்கள் வருவதாகப் புகார் கூறி வந்தனர். இன்று நேற்றல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அந்தத் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியதிலிருந்தே மக்கள் புகார் கூறி வருகின்றனர். ஸ்பிக் பார்மா என்ற தொழிற்சாலையிலிருந்து மலத்தின் துர்நாற்றம் வருவதாகவும், டாக்ரோ என்ற தொழிற்சாலையிலிருந்து மருத்துவமைனையின் நாற்றம் வருவதாகவும், சாசுன் என்ற தொழிற்சாலையிலிருந்து அழுகிய முட்டையின் துர்நாற்றம் வருவதாகவும், பயனீர் மியாகி என்ற தொழிற்சாலையிலிருந்து அழுகிய பிணத்தின் வாடை அடிப்பதாகவும், ஆசியன் பெயின்ட்ஸ் தொழிற்சாலையிலிருந்து அழுகிய பழங்களிலிருந்து வீசும் துர்நாற்றம் வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதே போல நகப்பூச்சு, வெல்லப்பாகு மற்றும் பொது கழிப்பறையிலிருந்து வரும் துர்நாற்றங்கள் வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2004ல் இந்தப் புகார்களை ஆய்வு செய்தபோது கிட்டத்தட்ட 36 வகை துர்நாற்றங்கள் வீசுவதாக கண்டறியப்பட்டது. அந்தப் பகுதியில் வீசிய காற்றை ஆய்வுக்குட்படுத்தியபோது புற்றுநோயை உருவாக்கும் 8 வகை கார்சினோஜென்கள் உட்பட 22 வகை நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்திருப்பது தெரிய வந்தது. இதில் 13 வகை இரசாயனங்கள் இத்தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுபவை. ஒட்டு மொத்தமாக இந்த ஆய்வாளர்கள் இந்த நச்சுப் பொருள்கள் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுப்பொருட்களாகவும் தொழிற்சாலை இயங்கும்போது வெளியே சிதறியவை அல்லது கசிந்தவை என்று உறுதிப்படுத்தினர். இதில் முக்கிய விசயமே இந்த ஆய்வுகளை எல்லாம் மாசுக் கட்டுபாட்டு வாரியம் மேற்கொள்ளவில்லை. தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அதிகாரிகளும் அறிவியல் ஆய்வாளர்களும் நேரடியாக சென்று பார்த்து விட்டு கிராமத்து மக்களின் புகார்களை நிரகரித்து விட்டனர். அது மட்டுமின்றி இது போன்று துர்நாற்றம் என்பது சிறிய அளவிலான தொந்திரவுதான் என்றும் கூறிவிட்டனர். அப்படியானால் இந்த ஆய்வுகளை மேற்கொண்டது யார்? சாதாரண மக்கள்தான்.

2004ல் துர்நாற்றம் குறித்து சாதாரண மக்களின் பிரதிநிதியாக செயல்பட்ட ஒரு மீனவர், ஒரு ஆலைத் தொழிலாளர், ஒரு மின்சாதனப் பழுதுபார்ப்பவர், ஒரு பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த குழாய்த் தொழிலாளர், சேமியா விற்கும் ஒரு சிறிய வியாபாரி ஆகியோரைக் கொண்ட‌ ஒரு குழுதான் இந்த விஞ்ஞான ஆய்வை மேற்கொண்டு பல வலிமையான ஆதாரங்களுடன் மக்கள் முன் சமர்ப்பித்தது. இத்தனைக்கும் தமிழகத்தின் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் 182 அறிவியல் ஆய்வாளர்களும் 143 பொறியாளர்களும் உள்ளனர். மக்களின் புகார்களை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதற்காக ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. ஆனால் ஆய்வு செய்வதற்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாதவர்கள் அதற்கான தனியான மேற்படிப்பும் படிக்காதவர்கள் எந்த நிபுணத்துவமும் இல்லாதவர்கள் மிகவும் அறிவுப்பூர்வமாக இந்த ஆய்வறிக்கையை பாதிக்கப்பட்ட தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து தயாரித்துள்ளனர்.

அவர்களின் அறிக்கையின்படி இந்த துர்நாற்றங்களில் அழுகிய முட்டையிலிருந்து வீசும் துர்நாற்றம் ஹைடிரஜன் சல்பைடு வாயுவிலிருந்து வருவது என்றும் நகப்பூச்சு துர்நாற்றம் ஆசிடோன் வேதியல் பொருளிலிருந்து வருவது என்றும் மெதில் அழுகிய காய்கறிகளிருந்து வீசும் துர்நாற்றம் போன்று வருவது மெர்கேப்டன் என்ற வேதியல் பொருளிலிருந்து என்றும் வரிசைப்படுத்தி அனைத்து துர்நாற்றங்களுக்கும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும், இடையிலான உறவை ஆணித்தரமாக நிறுவியிருந்தனர். ஆனால் அரசோ மெத்தப் படித்த நிபுணர்களோ விஞ்ஞானிகளோ இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் மெத்தப் படித்த விஞ்ஞானிகள் நிபுணர்கள் நிரம்பியிருக்கும் தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் அங்கீகரித்தால் மட்டுமே பொது மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையும் அறிவியல்பூர்வமாக முடியும். இல்லாவிட்டால் தங்களைப் பாதிக்கும் எந்த பிரச்சினையையும் சாதாரண எளிய மக்கள் முன்வைத்தால் அறிவியல் பூர்வமானது அல்ல என்று நிராகரிப்பார்கள். ஏனெனில் அறிவியல் ஆள்பவர்களின், ஆளும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தையும் மற்றும் அவர்களின் அரசு கட்டமைப்பின் அதிகாரத்தையும் நிறுவுவதற்கான கருவியாக தொன்று தொட்டு எப்போதுமே செயல்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் வருகிறது. இதன் தொடர்ச்சிதான் இது.

 இன்னொரு பிரச்சினையையும் உதாரணமாக பார்ப்போம். கொடைக்கானலில் ஹெச்.யூ.எல் என்ற நிறுவனம் பாதரசத்தைக் கொட்டிய வழக்கு. கடந்த 2001ல் கொடைக்கானலில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் லீவர் தொழிற்சாலையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்துஸ்தான் லீவர் கம்பெனி பாதரசத்தில் இயங்கும் தெர்மோமீட்டரை உற்பத்தி செய்து வந்தது. அந்த தொழிற்சாலையின் அருகிலிருந்தவர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் தொழிற்சாலையானது டன் கணக்கில் பாதரசக் கழிவைக் கொட்டி நிலங்களையும் சுற்றுச்சூழலையும் எப்படி நாசப்படுத்தியிருந்தது என்பதை பல வகைகளிலும் அம்பலப்படுத்தி போராடி வந்தனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது பயிற்சியோ அளிக்கப்படவில்லை என்பதும் முக்கிய விசயம்.

அந்த தொழிற்சாலை மூடப்படும்போதே தாங்கள் நரம்பு மண்டலத்தை கடுமையாகப் பாதிக்கும் நச்சுப்பொருளை கையாண்டிருக்கிறோம் என்பதைத் தொழிலாளர்களும் உணர்ந்தனர். அதற்குள் பல தொழிலாளர்களுக்கு நரம்பு தளர்ச்சி, நடுக்கம், வலிப்பு, சிறுநீரகப்பாதிப்பு, கட்டிகள், தோல் நோய்கள் மற்றும் மனநோய்களாக மனச்சிதைவு நோய்கள், நினைவு இழத்தல் போன்றவை ஏற்பட்டன. இதைக் கண்ட ஏற்கனவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உடனடியாக ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் இறுதியில் பாதரசத்தினை எந்த வித பாதுகாப்பும் இன்றி கையாண்டதால், பல தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான கடுமையான நோய்கள் ஏற்பட்டன என்பது தெரிய வந்தது. அந்த தொழிற்சாலை மூடப்பட்டதிலிருந்து வெகு விரைவில் இன்னும் பலர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததும் கண்டறியப்பட்டது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நட்டஈடும் மருத்துவ சிகிச்சை உதவி கோரியும் வழக்கு தொடந்தனர்.

நீதிமன்றம் சும்மா இருக்குமா? நீதிமன்றம் வழக்கம்போல கற்றறிந்த நிபுணர்களின் கருத்துகளைத்தானே கேட்கும்? இதற்கிடையில், வழக்கு தொடரப்பட்டவுடன் யூனிலிவர் கம்பெனி நாட்டின் உயர்தர நிபுணர்களும் அறிவியலாளர்களும் அடங்கிய தேசிய தொழிற்சாலை நஞ்சியல் ஆராய்ச்சி மையத்தையும், தேசிய பணி சுகாதரா நிறுவனத்தையும், அனைத்திந்திய மருத்துவ நிறுவனத்தையும் நிபுணத்துவக் கருத்துகளுக்கு அணுகியது. இந்த மூன்று நிறுவனங்களும் கடுமையான வாக்கியங்கள் அடங்கிய அறிக்கைகளை அளித்தன. பாதரசத்திற்கும் தொழிலாளர்களின் ஆரோக்கியப் பிரச்னைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொழிற்சாலையே மூடப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்டதால் இனி எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இத்தனைக்கும் ஒரு தொழிலாளர் கூட விசாரிக்கப்படவில்லை.

சில மாதங்களுக்குப் பின்னர், இதே அமைப்புகளின் நிபுணர்கள் கொண்ட ஒரு நிபுணர் குழுவை உயர்நீதி மன்றமும் அமைத்தது! எந்த அமைப்பு கம்பெனிக்கு நற்சான்றிதழ் அளித்ததோ அதே அமைப்பான தொழிற்சாலை நஞ்சியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். ஏ.கே.சீனிவாசனை தலைவராகக் கொண்டு அந்த குழு அமைக்கப்பட்டது. பிறகென்ன அந்தக் குழு யூனிலீவர் கம்பெனியை வழக்கிலிருந்து விடுவித்ததோடு பாராட்டும் தெரிவித்தது. கம்பெனியில் சுகாதார நடைமுறைகள் நன்றாக கடைப்பிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பும் பிரமாதமாக கடைபிடிக்கப்பட்டதாகவும் பாதரசத்தினால் எந்த தொழிலாளரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அந்த கம்பெனியே எதிர்பார்க்காத அளவுக்கு பாராட்டுகளை அள்ளி வழங்கியது. இதன் பின்னர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற தகவலின் அடிப்படையில் அந்தக் கம்பெனி அது தொடங்கிய நாளிலிருந்து கடந்த 18 ஆண்டுகளாக எந்த ஒரு பாதுகாப்பு முகமூடியும் தொழிலாளர்களுக்கு வாங்கியதில்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் கொடைக்கானலில் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏதாவது ஒரு நிறுவனத்திடம் உதவி கேட்டபடி உள்ளனர். இதுவரை ஒருவர் கூட உதவவில்லை.

இன்னொரு அனைவரும் அறிந்து உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் கம்பெனியின் நச்சுக் கழிவுகளுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முதலில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பின்னர் திறக்கப்பட்டு இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான கைங்கரியத்தை செய்தது வேறு யார்? தேசிய சுற்றுச் சூழல் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனமான நீரிதான். இதில் நீரி அடித்த பல்டிகள், செய்த தில்லுமுல்லுகள் ஏராளம். அதை இங்கு பார்ப்போம்.

1998ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக் கழிவுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உயர் நீதிமன்றம் நீரியை, ஸ்டெர்லைட்டின் செயல்பாட்டை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்திரவிட்டது. இந்த உத்திரவின்படி நீரி அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையில் ஆலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தவறான இடமாகும்; ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு நீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படவில்லை; இதன் விளைவாக நிலத்தடி நீர் அசுத்தமாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட உத்திரவிட்டது. ஆனால் அடுத்த ஆண்டே நீரி அடுத்த அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் பாதுகாப்பான முறையில் உள்ளதாக நற்சான்றிதழும் அளித்தது.

இரண்டாவதாக அளித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை, அதன் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை சிறப்பாக செயல்படுத்துவதாகவும், அதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் ஆர்செனிக், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற வேதியியல் மற்றும் கழிவு உலோகப் பொருள்களின் அளவு குறைந்துள்ளதாகவும் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் நிர்ணயித்தபடி இருந்ததாகவும் கூறியிருந்தது. ஆனால் அந்த அறிக்கையின் இணைப்பிலோ கரையக்கூடிய திடப்பொருள்களான குளோரைடு, சல்பேட்டுகள், ஆர்செனிக், செலினியம், குரோமியம் மற்றும் துத்தநாகம் போன்றவை மாசுக்கட்டுபாட்டு வாரியம் நிர்ணயித்த அளவுகளை விட அதிக அளவில் இருந்தது. இதன் பின்னணியில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் வெளியானது. தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி நீரியிடமிருந்து பெற்ற தகவலின்படி ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து நீரி அமைப்பு 1.22 கோடி ரூபாயை ஆய்வுகளுக்காக பெற்றிருந்தது தெரிய வந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

பிரச்சினை என்னவெனில் இது எப்போதுமே சாதாரணமாக நடைபெறும் நிகழ்வாகும். தேசிய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட நிறுவனங்கள் தனியார் கம்பெனிகளின் நிதியைக் கொண்டே இயங்குகின்றன. அவர்களைச் சார்ந்து அவர்களின் நிதியில் இயங்கும் நிறுவனம் அவர்களின் ஆலைகள் அல்லது கம்பெனிகள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்கின்றன. அதை அரசு முக்கியத்துவமாக எடுத்துக்கொள்கிறது. இந்த அறிக்கைகள் ஒருதலைப்பட்சமாகவே இருக்கும் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இந்த அறிக்கைகள் தான் நீதிமன்றங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் இவை அறிவியல் பூர்வமானவையாம். ஆனால் அதே சமயத்தில் மக்கள் தங்கள் சொந்த அறிவிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் தயாரிக்கும் அறிக்கைகள் அறிவியல் பூர்வமற்றவையாம்.

எது அறிவியல் பூர்வமானது? என்ற பிரச்சினை காலனிய காலத்திலிருந்தே தொடங்குகிறது. தொழிற்புரட்சி தொடங்கிய பின் முதலாளிய பொருளாதாரம் தழைத்தோங்கிய பின்னர், அவர்கள் ஏராளமான அறிவியல் பரிசோதனை ஆய்வுக் கூடங்களை நிறுவினர். இந்த பரிசோதனைக்கூடங்களில் சோதனை செய்து நிரூபிக்கப்பட்டவையே அறிவியலானது. மக்களின், விவசாயிகளின், தொழிலாளர்களின், பெண்களின், பல்வேறு தேசிய இனங்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் சொந்த அனுபவங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற அறிவு மாபெரும் வளமாகும். இந்த தொன்மையான அறிவு, அறிவியல் இல்லை என நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால்தான் காலனியாதிக்கத்தினால் வாழ்வு பெற்ற ஆங்கிலம் சார்ந்த மருத்துவமுறைகள், விவசாய முறைகள், உணவு முறைகள் மற்றும் தொழில்கள்தான் இன்று மிகப்பெரும் முதலீட்டின் பின்னணியில் அறிவியலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் ஆங்கிலேயக் கல்வி முறையில் ஒரு முனைவர் பட்டம் பெற்றால் மட்டும் போதுமானது. அவர் அறிவியலாளராக அவர் கூறும் எல்லாவற்றையும் விமர்சனப் பார்வையின்றி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வந்து விடுகிறது. இந்த காலனிய மனப்பாங்குதான் மக்களின் அறிவை அறிவியல் அல்ல என்றும், சில சமயம் மூட நம்பிக்கை சார்ந்தது என்றும் எள்ளி நகையாடுகிறது. இதே அடிப்படையில்தான் விதிவிலக்காக ஒரு சிலர் தவிர்த்து பெரும்பாலான அறிவியலாளர்களும், நிபுணர்களும் மக்கள் விரோதமாக செயல்படுகிறார்கள்; ஆய்வுகளை வெளியிடுகிறார்கள். இதன் தவிர்க்க முடியாத விளைவாக மக்களுக்கு எதிரணியில் நின்று கொண்டிருக்கிறார்கள். மக்களின் அறிவு எப்போது அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்படுமோ அப்போதே பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

- சேது ராமலிங்கம்

Pin It