கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சேது ராமலிங்கம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தக்காளிக்குள் மீனின் மரபணு
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தக்காளியில் மீனின் மரபணுவும் உள்ளது. நீங்கள் வெஜிடேரியனா? சிகிச்சை மற்றும் பல காரணங்களுக்காக புலால் உணவு தவிர்ப்பவரா? அப்படியானால் இன்னுமொரு கூடுதல் அதிர்ச்சியும் காத்திருக்கிறது. தக்காளிக்குள் தவளையின் மரபணுவும் உள்ளது. இந்தத் தகவல் உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தினாலும் அதிர்ச்சியில் மயக்கமே வந்தாலும் இது தான் உண்மையாகும். எந்த உண்மையும் சற்று கசக்கவே செய்யும் என்பார்கள். ஆனால் இந்த உண்மை கசக்க மட்டும் செய்யாது பலவீனமானவர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தும்.
இவையெல்லாம் மரபணு தொழில்நுட்பம் என்ற பெயரில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்திகள். இந்தத் துறையில் இன்னும் நடைபெறப்போகும் சில உண்மைகளைக் காண்போம். நீங்கள் உங்கள் நண்பரின் பிறந்த நாள் பரிசாக பூங்கொத்து ஒன்றைக் கொடுக்கும்போது அதை மல்லிகை மணம் கொண்ட பச்சை வண்ணத் தாமரை மலராகக் கூட கொடுக்கலாம். அந்த நண்பரின் விழாவில் விருந்தாக பழங்களும் உணவு வகைகளும் சதுரமாகவும் நீளமாகவும் வழங்கப்படலாம். விழா வானவில்லின் ஏழு நிறங்களான புல் தரையில் கூட நிகழலாம். மூன்று மாதங்களுக்கு முந்தைய தக்காளியில் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம். அந்தத் தக்காளியும் தற்போது பறித்ததுபோல் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். அதே சமயம் வனங்களுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் அங்கே தேளின் கொடுக்கை கொண்ட யானையைப் பார்க்கலாம். பறக்கும் எட்டுக்கால் பூச்சியை நீங்கள் பார்க்க நேரிடலாம். இவை எல்லாம் காமிக்ஸ் படங்களில் வருவது போன்று அதிசயமாக இருக்கலாம். இன்னும் எவ்வளவோ வியப்புகள் உள்ளன. இவற்றை நிகழ்த்தி வருவது மரபணு பொறியியல். இப்படி ஆராய்ச்சிக்கூடங்களில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் (செடிகள் உள்ளிட்ட பல வகை தாவரங்கள், விலங்குகள்) மரபிணி மாற்ற உயிரினங்கள் (genetically modified organisms) என்றழைக்கப்படுகின்றன.
தக்காளியில் தவளையும் மீனும் வருவது எப்படி? காய்கறிகளையும் பழங்களையும் சதுரமாகவும் நீளமாகவும் எப்படி உருவாக்குகிறார்கள்? எதற்காக உருவாக்குகிறார்கள்? ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் காண வேண்டுமானால் நீங்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக மரபணு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மரபணு தொழில் நுட்பம் என்றும் மரபணு பொறியியல் என்றும், உயிரியல் தொழில்நுட்பம் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும் இலாப நோக்கத்திற்காக இப்படிப்பட்ட விபரீதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு காய்கறிகளிலும் தாவரங்களிலும் விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டிற்காக சந்தையில் விடப்பட்டுள்ளன. முதலில் மரபணு தொழில் நுட்பம் மிக முன்னேறிய தொழில் நுட்பம் என்றும் மனிதனுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உயிர் வாழும் உரிமைக்கும் இயற்கைக்கும் எதிரானதாக மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.™ எனவே சமூக மாற்றத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் பாடுபடுபவர்கள் மரபணு தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மரபிணிகள் (Genes) எனப்படுபவை உயிரினங்களின் மரபியல் பண்புகளைத் தலைமுறை தலைமுறையாக சுமந்து வரும் தூதர்கள் ஆகும். உயிரினங்கள் அமீபா போன்ற ஒரு செல் நிலையில் தொடங்கி மக்கள், யானை, திமிங்கலங்கள் போன்ற பல கோடி செல்களைக் கொண்டதாகப் பல உயிரினங்கள் உள்ளன. இந்த செல்களை உயிரினங்களின் அடிப்படை அலகுகள் என்று கூறலாம். செல்களுக்குள் உட்கரு (nucleus) எனப்படும் ஒரு பகுதி உள்ளது. அதற்குள் குருமேனியன்கள் எனப்படும் குரோமோசோம்கள் உள்ளன. இவை குச்சி வடிவத்தில் காணப்படும். குரோமோசோம்களை உள்ளடக்கிய டி.என்.ஏ அமைப்பு உள்ளது. இந்த டி.என்.ஏவில் உள்ளதுதான் மரபிணிகள் ஆகும். மரபிணிகளைக் கொண்ட டி.என்.ஏ வில் குறியன்கள் எனப்படும் (codens) பண்புக்கூறுகள் உள்ளன. இவைதாம் உயிரினங்களின் உடலியல் கூறுகளைத் தீர்மானிப்பவையாகும். வம்சாவழித்தகவல்களை சுமந்து வருபவையும் இவைதான். மரபிணிப் பொறியியல் என்பது ஏற்கனவே கூறியுள்ள குறியன்கள் எனப்படும் மரபிணிக் கூற்றை மாற்றியமைப்பதாகும். அதாவது ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. (மாங்கொட்டையிலிருந்து மாமரம் வளர்வதுபோல) இவை மரபிணிகளின் அமைப்பிற்கு ஏற்ப உருவாகின்றன. ஆனால் அறிவியலாளர்கள் உயிரினங்களின் தனித்தன்மையான பண்புகளைக் கூட மாற்றி வெவ்வேறு உயிரினங்களில் அமைத்து விடுகின்றனர்.
டி.என்.ஏ விலுள்ள ஒரு மரபுக்கூற்றைத் தனியே பிரித்தெடுத்து அதே இனத்திலோ அல்லது மற்றொரு இனத்திலுள்ள மரபுக்கூற்றில் பொருத்தி புதியதொரு மாற்று மரபு கொண்ட உயிரினத்தை உருவாக்குவதாகும். மரபணு பொறியியலின் மூலம் நாம் விரும்புகின்ற உயிரினத்தையோ தாவரத்தையோ உருவாக்க முடியும். அதே போல நாம் விரும்பாத பண்பை நீக்கி விட்டு ஒரு உயிரினத்தை உருவாக்கிட முடியும். இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்டதல்ல. இந்த வரலாறு அறிவியல் பல மைல்கல்களை கொண்டது.
1957ல் கிரிகர் மெண்டல் என்ற துறவியார் பட்டாணிச் செடிகளில் பல ஆய்வுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவர் நிறம், உயரம் போன்றவை அடுத்தடுத்த தலைமுறைச் செடிகளுக்கும் கடத்தப்படுவதை கண்டறிந்தார். மெண்டல் அதை மரபியல் காரணிகள் என்று கருதினார். ஆனால் அவருடைய ஆய்வுகள் அப்போது யாராலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் 1940களில் கனடா நாட்டு மருத்துவர் ஆஸ்வால்ட் ஆவரி, மெண்டலால் கண்டுபிடிக்கப்பட்ட மரபியல் காரணிகளை டி.என்.ஏ என்று தெளிவாக நிறுவினார். அவரும் அவருடன் உடன் பணிபுரிந்த அறிவியலாளர்களும் ஒரு நுண்ணுயிரிலிருந்து மற்ற உயிரினத்திற்கு அதை மாற்ற முடியும் எனவும் கண்டறிந்தனர். 1953ல் வாட்சனும் கிரிக்கும் முப்பரிமான டி.என்.ஏ அமைப்பை இரட்டைத்தன்மை வடிவமுள்ளதாக கண்டறிந்தனர்.
1950முதல் 1960களுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிவியலாளர்கள் மரபினிச் செய்திகள் எவ்வாறு பொதிந்துள்ன? எவ்வாறு பெருக்கமடைகின்றன? தலைமுறைக்கு தலைமுறை எவ்வாறு கடத்தப்படுகின்றன? என்பனவற்றை தெளிவாகக் கண்டறிந்தனர். 1970களிலிருந்து 1980கள் வரை மரபணுவை ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரினத்திற்கு மாற்ற முடியும் என்பதை நிருபித்தனர். இதற்காக கட்டுப்பாட்டு நொதிமங்கள் (restriction enzymes) கண்டுபிடிக்கப்பட்டன. இது அறிவியலாளர்களுக்கு மாபெரும் கருவியாக அமைந்து விட்டன. இப்போதுள்ள பல்வேறு நுண்ணுயிரிகள் இப்படிப்பட்ட நொதிமங்கள் மரபிணிக் கத்திரிகளாக உள்ளன. இவை குறிப்பிட்ட மரபினிகளை அவை சூழ்ந்துள்ள டி.என்.ஏவில் இருந்து வெட்டி எடுக்க உதவுகின்றன. பல நூறு நொதிமங்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. மரபினிப் பொருட்களை ஒரு புதிய ஓம்புநர் உயிரிக்கு (host) மாற்றும்போது ஓட்டுதல் பணி குறிப்பிட்ட ஒரு நொதிமத் தொகுப்பால் நடைபெறுகின்றது. 1970களில் முதல் வணிக உயிரி நுட்ப மருந்து இம்முறையில் கண்டறியப்பட்டது. மனிதரின் மரபினி இன்சுலின் சுரப்பிற்கு ஒரு நுண்ணுயிரில் செலுத்தப்பட்டு புதிய வகை இன்சுலின் உருவாக்கப்பட்டது.(இப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் விலங்குகளின் இன்சுலின்தான் விற்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்க)
நுண்ணுயிரிகளில் மரபினி மாற்றம் நடத்தியவுடன் அறிவியலாளர்களின் கவனம் செடிகளுக்கு சென்றது. செடிகளில் மரபினி மாற்றப் பணி கடுமையாக இருந்தது. முதலில் சிறு நுண்ணுயிரிகளை விடக் கூடுதலான வகை மரபினிகளை அவை கொண்டிருந்தன. மேலும் இவற்றின் இவற்றின் செல்களின் சுவர்கள் ஊடுருவதற்கு கடினமாக இருந்தன. ஆனால் இயற்கையே இதற்கு ஒரு தீர்வையும் வழங்கியது. அகரச்குச்சில் (agrobacterium)என்னும் நுண்ணுயிரிச் செடிகளின் மரபினியில் இயற்கையாகவே ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. இருப்பினும் அகரச்குச்சிகளால் அனைத்துச் செடிகளையும் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. இதற்கும் தீர்வாக நச்சுயிரிகளில் இருந்து மரபினிகளைப் பெறுகின்றனர். இதன் உச்சகட்டமாக மரபினித் துப்பாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் எந்த செடியையும் எந்த உயிரினத்தையும் நேரடியாகத் துளைக்க முடியும் அதாவது வைரஸ் மூலமாக விரும்புகின்ற மரபணுவை மரபினி துப்பாக்கியின் மூலமாக செலுத்தி உயிரினத்தில் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின்னர் இலாப நோக்கிலும் பல விபரீதங்களைத் தொடங்கினர். ஏனெனில் இந்த மரபினித் துப்பாக்கியின் உரிமையை டூபாண்ட் என்ற பன்னாட்டு நிறுவனம் வைத்துள்ளது.
விலங்குகளின் கருமுட்டையிலேயே உள்ள மரபணுவை மாற்றத் தொடங்கினர். இதன் அடிப்படையில் புதிய இன சுண்டெலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நுண் ஊசி வழியாக சுண்டெலியின் கருவில் ஒரு மரபணுவைப் புகுத்தி மைந்து சுண்டெலி என்ற புதிய இன சுண்டெலி உருவாக்கப்பட்டது. இதே போல பிரிட்டானிய அறிவியலாளர்கள் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் இணைத்து வெண்மறி ஆட்டை உருவாக்கினர்.
கடையில் இருக்கும்போது தக்காளி நீண்ட நாட்களுக்கு மிகவும் கனிந்து அழுகிப்போகாமல் இருக்க வேண்டும். அது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் அது விரைத்துப் போய் உடைந்து விடாமல் இருக்க வேண்டும். செடியிலிருந்து பறித்த பின்னரும் அது நீண்ட நாட்களுக்கு உறுதியாகவும் புதிதாகவும் அப்போது பறித்தது போன்று பளபளப்பாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?. அதற்கு கண்டுபிடித்த வழிமுறைதான் மீனின் மரபணுவை தக்காளியில் புகுத்துவது ஆகும். கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் நீரில் இருக்கும் உயிரினங்களின் மரபணுவை தக்காளியில் சேர்ப்பது. பிளவுண்டர் என்ற ஆர்டிக் உறைபனி சமுத்திரத்திலுள்ள மீன் வகையானது இயல்பிலேயே எவ்வளவு குளிரிலும் விரைத்து விடாத தன்மையுடையது. இதனால் இம்மீன்களின் விரைத்து விடாத தன்மையைக் கொண்ட அந்த மரபணுவை தனியே பிரித்தெடுத்து தக்காளியின் டி.என்.ஏவில் சேர்த்து அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் விரைத்துவிடாத தன்மைகொண்ட தக்காளியாக மாற்றுகின்றனர். இதே போல கத்திரிக்காய், அரிசி, சோயா பீன்ஸ், காபி மிளகு, காலி பிளவர் முட்டைக்கோஸ் பட்டாணி, முலாம்பழம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, வெண்டை, வள்ளிக்கிழங்கு, கூவைக்கிழங்கு, ஏலக்காய், மொச்சை, மாதுளை பருத்தி, சணல், உதட்டுச்சாயத்திற்கான செவ்வண்ணம் தரும் உலர் குசும்பப்பூ போன்று மரபணு ரீதியான மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் நீளுகிறது. அடுத்த முறை நீங்கள் காய்கறி கடைக்குச் செல்லும் போது பளபளப்பாக அழகாக இருக்கும் காய்கறிகளைக் கண்டு மயங்கி விடாதீர்கள் எச்சரிக்கை. இந்த அழகுக்கு பின்னேதான் ஆபத்து மறைந்து கிடக்கிறது. அது என்ன ஆபத்து?
பகுதி-2
உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்டவை காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்கள் மட்டுமல்ல, பல புதிய தாவர அடிப்படையிலான இனிப்பூட்டிகளும் இந்த பட்டியலில் உள்ளன. இவை சந்தைக்கு வர அணி வகுத்து நிற்கின்றன. இந்த இனிப்பூட்டிகளில் தவ்மாட்டின், மோனெல்லின், ஹெர்னாண்டல்சின், ஸ்டீவியோசை, மிராக்குலின், பிரேஸியன் போன்றவை அடங்கும். இவையெல்லாம் சக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைப் போல ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாக இனிப்பூட்டுபவை. தாவரங்களிலிருந்து இந்த இனிப்பூட்டிகளை பிரித்தெடுப்பதற்கு அதிகமாக செலவாகும். எனவே, இந்த மரபினிகளைத் தனிமைப்படுத்தி அவைகளை பாக்டீரியாவாக மாற்றுவதை நோக்கிய ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகின்றன. மரபினிப் மாற்றப்பயிர்களினால் பாதிப்புகள் இல்லையா? அந்த பாதிப்புகளை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை.
மரபினிப் மாற்றப் பயிர்கள் மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியம், மண் வளம், சூழல் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை காண்போம். முதலாவதாக மரபணுக்கள் ஒரு உடலிலுள்ள சூழலிருந்து மற்றொரு சூழலுக்கு மாற்றப்படுவதால், மாற்றப்படும் புதிய சூழலுக்கு ஒத்துப் போவது மிகவும் குறைவாகும். அங்கிருந்தே பிரச்சினைகள் தொடங்குகின்றன. செம்மறி ஆட்டையும் வெள்ளாட்டையும் இணைத்து புதிய வெண்மறி ஆட்டை உருவாக்கியது குறித்த பரபரப்பான செய்திகள்தான் ஊடகங்களில் வந்தன. ஆனால் அந்த ஆடு மலடாகி குருடாகிப்போனது பற்றி எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை. பிரிட்டனிலுள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் எட்டுக்கால் பூச்சிக்கு பறவையின் மரபணுவை செலுத்தினர். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பூச்சி இறந்து விட்டது. இயற்கையின் வரம்புகளை மீறினால் இப்படித்தான் நடக்கும்.
வட அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் தனது அறிக்கையில் மரபினிப் மாற்ற பயிர்கள் உணவில் எதிர்பாராத அழற்சிப் பொருட்களையும் நச்சுப்பொருட்களையும் உண்டாக்கும் ஆற்றல் பெற்றவை என்றும் அவை கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளையும் கட்டுப்படுத்தாத உயிரிகளையும் மண்ணிலுள்ள உயிர்மங்களின் மீது தீய விளைவுகளையும் உண்டாக்கும் ஆற்றலையும் பெற்றவை என்றும் கூறுகின்றது. பூச்சி எதிர்ப்பு என்ற பெயரில் மரபணுப் பொறியியல் முறையில் தயாரிக்கப்பட்ட பி.டி பயிர்களை சுவீடன் நாட்டின் இரண்டு விஞ்ஞான பரிசோதனைக் கூடங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வில் மரபணுப் பொறியியல் முறையில் நோவர்ட்டீஸ் என்ற சோள வகைப் பயிரிலிருந்து சோளத்தை உட்கொண்ட பசுமை நாடாப் பூச்சிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் இந்த பயிர்களில் உள்ள பி.டி நஞ்சானது மற்ற உயிரினங்களைக் கொல்வதோடு நாம் உண்ணும் உணவிலும் நுழைந்து விடும் என்பதும் இதன் தொடர்ச்சியாக உண்ணும் உணவின் மூலம் நமது உடலில் இருக்கும் பி.டி நஞ்சானது நமது நோய்களுக்கு எந்த ஆன்டிபயோடிக் மருந்தை உட்கொண்டாலும் அதை செயல் இழக்கச் செய்து விடுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
கூடுதலாக, மரபணுப் பொறியியல் முறையில் உருவான பூச்சி எதிர்ப்பு நஞ்சினைத் தாவரங்களாவது தங்கள் பாகங்கள் முழுவதும் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெறுகின்றன. இதனால் இப்பயிர்கள் அறுவடைக்குப் பின்னர் கழிவாகிப் புதைவதனால் மண் முழுவதும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நச்சுத்தன்மையையும் அப்பயிர்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அது மற்ற உயிரினங்களான மனித குலத்திற்கு சேவை செய்யும் தேனி, சுருள் பூச்சி, வண்ணத்துப் பூச்சி மற்றும் முக்கியமாக விவசாயிகளின் நண்பனான மண் புழு ஆகியவற்றைக் கொன்று விடும். இது மட்டுமின்றி அந்த நிலங்களில் மேயும் ஆடு மாடுகள் மற்ற உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடியை சாப்பிட்ட 1500க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து விட்டன. ஆந்திராவில் கரீம் நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள மாமிடலப்பள்ளி கிராமத்தில் பி.டி பயிரிடப்பட்ட நிலத்தில் மேய்ந்த 12 மயில்கள் இறந்து விட்டன.
எந்தப் பூச்சிக்காக இப்பூச்சி எதிர்ப்பு நஞ்சுடன் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றனவோ, அந்தப்பூச்சிகள் தங்களின் உடலில் இந்த நஞ்சிற்கு எதிர்ப்பு சக்தியையும் நாளடைவில் வளர்த்துக் கொள்கின்றன. அந்தப் பூச்சியானது 3லிருந்து 5 ஆண்டுகளுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது. மண்ணின் உவர் நிலைமையை சகித்துக் கொள்ளும் மரபணுக்கள் பொருத்தப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுவதால் பகுதியின் சூழல் மாசாவதோடு உவர் மண்ணுக்கேற்ப இயற்கையாக விளையும் பயிர்களுக்கு இடமில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
ஒரு முறை மரபணுப் பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்களையும் தாவரங்களையும் மீண்டும் கட்டுபடுத்த முடியாது. அவை எங்குள்ளது என்பதையும் கண்டுபிடிக்காத அளவில் பெருகி விடும். இந்த முறையில் தயாரிக்கப்படாத உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றுடன் அவை இணைந்து பரவி விடும். ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மரபணுப் பொறியியலுக்கு உட்படுத்தி வளர்க்கப்பட்ட பயிர்கள் 200 மீட்டர் வரை பரவியுள்ளதை கண்டுபிடித்தனர். அமெரிக்காவிலும் நார்வேயிலும் சால்மன் மீன் வகைகளில் மிக நீளமாகவும் அதிக எடையுடன் வளர்வதற்கு மரபணுக்கள் பொருத்தப்பட்டன. இம்மீன்களுக்கு இருந்த எடையுடன் 5 மடங்கு அதிகரித்தது. ஆனால் மிக வேகமாக பரவி இத்தொழில் நுட்பத்திற்குள்ளாகாத மீன்களை விட ஒன்றுக்கு 5 மடங்கு விகிதத்தில் அதிகரித்து விட்டன. இதே போல் பயோ டெக்னிக்கல் இன்டர்நேசனல் என்ற பன்னாட்டு நிறுவனம் சோயா பீன்ஸ்களுக்கு இந்த உற்பத்தி முறையைக் கடைபிடித்தது. தொடர்ந்து கண்காணித்ததில் 4 ஏக்கரில் இதே பயிர்கள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாசினாலும் காடுகளை அழிப்பதாலும் அழிந்து வருகின்றன. ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது 75 விழுக்காடு மரபணு பெருக்கமானது இந்த நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது என்றும் இதற்கு முக்கிய காரணமாக தாவரங்களின் பன்முகத்தன்மையை அழித்து செயற்கையான மரபணுப் பொறியியல் முறையில் ஒருமைத் தன்மையுடன் (mono culture) வளர்க்கப்படுவதே என்று கூறியுள்ளது.
மரபணு பொறியியல் மூலம் ஒரே தன்மை கொண்ட ஒரே பயிர்கள் வளர்க்கப்படுவதால் அவை ஒரு நோய் தாக்கினாலே விரைவாக அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் பன்முகத் தன்மையுடன் பல வகைப் பயிர்கள் வளர்க்கப்படும்போது அவை எந்த வகை நோயையையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. மெக்சிகோவிலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னதில் 300 வகையான பயிர்களும் வளர்க்கப்பட்டதால் இவ்விரு பகுதிகளும் அனைத்து விதமான பூச்சிகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. மரபணு பொறியியலின் இன்னொரு பாதக விளைவாக ஒரு பகுதியின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப விளையும் பயிர்களை அழிப்பது உள்ளது.
சில காலத்திற்கு முன்னதாக மான்சான்டோ என்ற பன்னாட்டு கம்பெனி மரபணு பொறியியல் மூலமாக தயாரிக்கப்பட்ட பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும் என்ற இந்த கம்பெனியின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் அதிக கடன் வாங்கி இந்த விதைகளை பயிரிட்டனர். ஆனால் இவை மறுபடியும் பயிரிட முடியாத மலட்டு விதைகள் என்பதாலும் அதிக மகசூல் கிடைக்காததாலும் விவசாயிகள் ஆயிரக்ககணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்திய அரசு இப்போது இந்த கம்பெனியின் விதைகளுக்கு மட்டுமல்ல ஏறத்தாழ 144 கம்பெனிகளின் விதைகளை இந்திய மண்ணில் பரிசோதித்து பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. நமது நாட்டின் இறையாண்மை தன்னிறைவான உணவு உற்பத்தியில் உள்ளது. விவசாயத்தை அழிப்பது நாட்டின் இறையாண்மையை அழிப்பதாகும். நமது நாட்டின் அடிப்படை ஆதாரமாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கப்படும் இந்த நாசகரமான போக்கை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?
துணை நின்றவை:
1. The Ecologist vol 3&4,june &july 1997
2. Hungry corporations by Helena paul and ricarda steinbrecher,zed books
3. Biodiversity,social and ecologica perspectives by world rainforest movement,Malaysia
4. Overcoming illusions about biotechnology by nicanor perlas,other india press
5. Down to Earth may16-31,2011
6. மரபினி மாற்ற உணவும் பட்டினியும்,தேவிந்தர் சர்மா,தமிழில் கோச்சடை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக உயிரினங்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கு வளமான இருப்பாய்த் திகழ்வது, மலைகள், காடுகள், செழிப்பான நிலங்கள், ஆறுகள், வளி, காற்று ஆகியவற்றைக் கொண்ட இந்த இயற்கைச்சூழல்தான். ஒன்றைச் சார்ந்து மற்றொன்று, மற்றொன்றைச் சார்ந்து பிறிதொன்று என உயிர்களின் வாழ்க்கைச் சங்கிலி பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. பெருவெடிப்பிலிருந்து தோன்றிய இந்தப் பிரபஞ்சம், கோடானுகோடி ஆண்டுகள் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதெனில் இயற்கையின் அசைக்க முடியாத சக்தியை வியக்காமல் எங்ஙனம் இருக்க முடியும்? கற்பனைக்கே எட்டாத இப்பேரண்டத்தின் மிகச் சிறிய துளிதான் நாமிருக்கும் பூமி.
தற்போது 600 கோடிக்கும் மேல் மனித எண்ணிக்கையைக் கொண்டுள்ள நமது புவியில், கோடிக்கணக்கான உயிரினங்களும் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மனிதனோடு எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நெடும் போராட்டத்தினிடையே நுகர்வு வெறி பிடித்து அலையும் மனித இனம், ஒட்டு மொத்த இயற்கையையும் சூறையாடி, தனக்கு மட்டுமே என்ற இறுமாப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. இறுதியில் வெற்றி பெறப்போவது இயற்கைதான் என்பதை அறியாதவனாய், தனது பொறுப்பற்ற தன்மைக்கு, தனக்குத்தானே நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறான் மனிதன். தனது தேவைக்கும் மேலாக இயற்கையை உறிஞ்சத் துடிக்கும் மனித இனத்தின் பேராசைக்கு, இந்த பூமி இலக்காகி கொஞ்சம், கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே இன்றைய இயல்பு.
மலைகள், காடுகள், விலங்கு-பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கென்றே நம் முன்னோர்கள், கடவுள், தெய்வம் என காப்பாளர்களை உருவாக்கி, அங்கெல்லாம் கோவில்களைக் கட்டியெழுப்பினர். அக்கோவில்களில் உறையும் கடவுளர்களை நினைத்தவண்ணமே, அங்குள்ள இயற்கைச் செல்வங்களையும் பாதுகாக்க முனைந்தனர். இதனால்தான் மலைகளிலும், அடர்ந்த வனங்களிலும் தெய்வங்கள் வாழும் கோவில்கள் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எந்த இயற்கையைப் பாதுகாப்பதற்காக இறை உருவங்கள் உருவாக்கப்பட்டனவோ, அவ்விறைக் கோவில்களின் பெயரால் இன்றைக்கு இயற்கையைச் சீரழிக்கும் முரண் நிலை தோன்றத் தலைப்பட்டிருக்கிறது. சபரிமலையிலிருந்து, திருப்பதி வரை எவ்வளவோ முன்னுதாரணங்களை இதற்கு சுட்டிக் காட்டலாம். அதைப் போன்ற இயற்கையின் வியக்கத்தக்க உட்கூறுகளையும், தாவர, செடி, கொடி வகைகளையும், நீராதாரங்களையும் கொண்டுள்ள இடமே சதுரகிரி என்றழைக்கப்படும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்களை உள்ளடக்கிய மலைத்தொடர்கள்.
அடர்ந்த மலைக்காடுகளைக் கொண்டுள்ள சதுரகிரி, நமது மின்னணு ஊடகங்களின் பொறுப்பற்ற பரப்புரையால், இன்றைக்கு மிகப் பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கொரு முறை ஆடி மாத கார்உவா (அமாவாசை) நாளன்று, இம்மலையில் உருக்கொண்டிருக்கும் கடவுளர்களை வணங்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆடி மாத கார்உவா நாளன்று இம்மலையில் கூடிய மக்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய பத்து இலட்சம் பேர் என்றால், இம்மலைக்காட்டின் சூழல் கேடு எந்தளவிற்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். இயற்கையின் அத்தனை அழகும் கொட்டிக்கிடக்கும் இம்மலையின் அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவில் வரை நடந்து பயணம் செய்வதன் மூலம், மகிழ்ச்சியான உணர்வையும், ஒருமித்த சிந்தனையையும், உடல் நலத்தையும் பெற முடியும். எழுத்தில் வடிக்க இயலாத அவ்வுணர்வைக் குறித்து, அங்கே தொடர்ந்து பயணம் செய்து, கோவில்களுக்குச் சென்று திரும்பும் இறைப் பற்றாளர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் கேட்டால் தெரியும்.
மூத்த இதழாளர்களோடு சதுரகிரி மலைக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அண்மையில் கிடைக்கப் பெற்றோம். ஆடி அமாவாசைக்குப் பின்னர் அம்மலையின் சூழல் கேட்டை அளவிடுவதற்கும், தொடர்ந்து அங்கே நிகழும் இயற்கை அத்துமீறல்களைக் கண்டறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்மலை நோக்கிய எங்களின் பயணம் தொடங்கியது. தாணிப்பாறை அடிவாரத்திலுள்ள ஸ்ரீலஸ்ரீகாளிமுத்து சுவாமிகள் மடத்திலிருந்து அதன் பல்லாண்டுப் பணியாளர் திரு.இராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் எங்களது மூட்டை முடிச்சுகளோடு மலையேறத் தொடங்கினோம். மலைக்குக் கீழே இருக்கும் கருப்பசாமி, வனப்பேச்சியம்மன் கோவிலில் வணங்கி வழிபாடு நடத்திய பின்பு பயணம் தொடர்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியல், வளங்குன்றா வளர்ச்சி, பொருளியல், சித்தர் வாழ்வியல் போன்ற பல்வேறு கலந்துரையாடல்கள் நடைப்பயணத்தில் எங்களுக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டன.
பயணத்தினூடே மலைகளைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த இதழாளர் ஒருவர் மலையின் பண்டைய சூழல் குறித்து விளக்கிக் கொண்டே வந்தார். சிறிது தூரம் வரை சமதளமாகச் செல்லும் மலைப்பாதை ஓரிடத்திலிருந்து சற்றே உயரத் தொடங்குகிறது. 'வழுக்குப் பாறை என்றழைக்கப்படும் இச் சிறிய பாறையைக் கடப்பது ஒரு காலத்தில் மிகவும் சிரமமாக இருக்கும். காரணம், எப்போதும் இப்பாறையில் தண்ணீர் நிறைந்து வழிந்தோடிக் கொண்டிருக்கும். ஆனால், இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் அது போன்ற காட்சியைக் காண இயலும்' என்றார் இராமமூர்த்தி. தொடர்ந்து அவர், 'மலையின் போக்கில் பல்வேறு காட்டாறுகள் கோடைக்காலத்திலும் கூட, குறுக்கிட்டு ஓடிக் கொண்டேயிருக்கும். இப்போதெல்லாம் அந்தக் காட்சியைப் பார்ப்பது அரிதிலும் அரிதான ஒன்றாகிவிட்டது' என்றார் மிகுந்த வேதனையுடன்.
அத்திகிரி சித்தர் வாழ்ந்த பகுதியைக் கடக்க முற்பட்டோம். அது காட்டாற்றுப் பாதை என்பதால், அதனைக் கடந்து செல்வதற்காக இரு பாறைகளுக்கிடையே சங்கிலி ஒன்றைக் கட்டியிருப்பதைக் கண்டு அதற்கு விளக்கம் கேட்டோம். வெள்ளக் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, அதனைக் கடந்து செல்வதற்காக இந்த இரும்புச் சங்கிலியைக் கட்டி வைத்துள்ளனர் என்று விளக்கம் கிடைத்தது. அப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் பளிங்காகக் காட்சியளித்தாலும், அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிப் பைகளின் எண்ணிக்கை, நம்மை கிறுகிறுக்க வைத்துவிட்டது. ஆசை தீர அள்ளிக் குடிக்க வேண்டும் என்று நம் மனம் நினைத்தாலும், ஒருவேளை உடம்பிற்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்..? சற்றே பின்வாங்கி, அந்த உயரமான பாறையை அடி மேல் அடியெடுத்து நடந்து கடந்தோம்.
முன்னும் பின்னுமாய் ஆட்கள். ஆன்மீக நோக்கிலும், மலையேறும் ஆவலிலும் நிறைய பேர் சென்ற வண்ணம் இருந்தனர். சதுரகிரியில் வாழ்ந்த சித்தர்கள் குறித்து குழுவொன்று கலந்துரையாடிக் கொண்டே சென்றது. 'சித்தர்கள் எப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரிவார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?' என்று ஆவல் மிகுதியால் சில இளைஞர்கள் நச்சரித்துக் கொண்டே சென்றதையும் கண்டோம். 'மக்களுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நல்லது செய்கின்ற அனைவருமே சித்தர்கள்தான். நீங்களும், நானும் ஒரு வகையில் சித்தர் பரம்பரைதான். ஆகையால், வெற்றுப் பரபரப்பிற்காக செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்துவிட்டு இது போன்ற கேள்விகளையெல்லாம் தயவுசெய்து கேட்காதீர்கள். ஒருமித்த சிந்தனையில் மெய்யுணர்வோடு பயணம் செய்து பாருங்கள். அப்போதுதான் சித்தர்கள் என்ற நம் முன்னோர்களை உணர்ந்தறிய முடியும்' என்று மிகப் பெரிய ஆன்மீக விளக்கமளித்தார் வழக்குரைஞர் மகாராஜன். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சதுரகிரிமலைக்குத் தொடர்ந்து வந்து செல்லும் இறைப் பற்றாளர். இந்து சமய அறநிலையத்துறைக்காக பல்வேறு சிக்கல்களில் நேர்நின்று வாதாடியவர்.
அவர் மேலும், 'இயற்கை எண்ணற்ற அருட்கொடையை இந்த மலையில் புதைத்து வைத்திருக்கிறது. அதுமட்டுமன்றி, தனக்கு ஏற்படும் சீரழிவுகளைத் தானே சரி செய்து கொள்ளும் வல்லமை இந்த மலைக்கு உண்டு. ஞெகிழிப்பைகள் உள்ளிட்ட குப்பை கூளங்களை அடித்துப் பெய்யும் ஒரு மழையின் மூலமாக தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. இருந்தபோதும், இயற்கையே அதனைச் செய்யும் என எண்ணாமல் இந்த மலைகளை தூய்மையோடு பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்' என்று இயற்கை நேயராக நமது கேள்விகளுக்கும் விளக்கமளித்துக் கொண்டே வந்தார்.
மிகக் கடுமையான வளைவினைக் கொண்ட கோணத்தலைவாசல் ஏறிய பிறகு சிறிது இளைப்பாறினோம். பின்னர், மறுபடியும் நமது பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியெங்கும் மதுப்புட்டிகள் உடைந்தும், உடையாமலும் ஆங்காங்கே பரந்து கிடந்தன. 100 மிலி குடிநீர்ப்பைகள், ஒன்றரை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் என பாதை நெடுகிலும் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே முளைத்திருந்த சிறிய கடைகளைக் கூட, அழகிய கூடாரமாய் அமைத்து, அங்குள்ள மரங்களில் கயிற்றைக் கட்டி, சூழல் நேயத்தோடு உருவாக்கியிருந்தனர். 'ஆமாங்க இதுக்காக, இங்குள்ள மரங்கள வெட்டி அந்தக் கட்டையப் பயன்படுத்தணுமா என்ன? நமக்கு எப்படி இந்த இயற்கை உதவுதோ, அதே மாதிரி எல்லாத்துக்கும் உதவணும். அதுக்கு நாம வழி செய்யணும்' என்றார் அங்கே கடை வைத்திருந்த உள்ளூர்க்காரர் ஒருவர். இந்த சிந்தனை இங்கே வருகின்ற எல்லோருக்கும் இருந்துவிட்டால் எப்படியிருக்கும்? என்று எண்ணிக்கொண்டே சென்றபோது, எதிர்த்தாற்போல் நான்கைந்து ஆண்களும், பெண்களும் தலையில் ஆளுக்கொரு மூட்டைச் சுமையோடு இறங்கிக் கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபோது, மலையில் ஆங்காங்கே கிடக்கும் செருப்பு, உடைகள், பைகள் மற்றும் சில பொருட்களைச் சேகரித்து, மலைக்குக் கீழே கொண்டு செல்வதாகக் கூறினர். நாளுக்கு இருமுறை இது போன்று செய்வதாகவும், குறிப்பாக மக்கள் அதிகமாக வருகின்ற வெள்உவா (பௌர்ணமி), கார்உவா (அமாவாசை) நாளுக்கு மறுநாள் இதுபோன்ற சேகரிப்புப் பணியில் ஈடுபடுவதாகவும் கூறினர்.
'ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்து, சூரிய ஒளியே படாதவாறு மலையில் எப்போதும் குளுமை நிறைந்திருக்கும். பச்சைப் பட்டாடை போர்த்தியது போல், பார்க்கும் திசையெங்கும் பசுமையாய்க் காட்சியளிக்கும். ஆனால் இப்போது நிலைமை மிகவும் மாறிவிட்டது. வனத்துறைக்குத் தெரியாமல் உள்ளே புகுந்து மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல், இந்த மலையை சுத்தமாய் மொட்டையடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போது வனத்துறை மிகக் கடுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பயணிகளாக வரும் சிலர் அத்துமீறி, காப்புக் காடுகளுக்குள் புகுந்து மூலிகைச்செடிகளை நாசம் செய்து விடுகின்றனர். இதனை ஒன்றும் செய்ய இயலவில்லை. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செடி, கொடிகள் கூட, இந்த மலையின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உண்டு. தவசிப்பாறைக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு, வனத்திற்குள் சிலர் புகுந்துவிடுகின்றனர். கரடி உள்ளிட்ட விலங்குகளால் தாக்கப்பட்டு, உயிர் பிழைக்க ஒடி வந்தவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த மலையின் அருமை தெரிவதில்லை. அதன் புனிதமும் புரிவதில்லை' என்கிறார் மகாலிங்கம் கோவிலின் பூசகப் பொறுப்பிலுள்ள ஒருவர்.
காராம்பசுத்தடம், கோரக்கர் குகை என வழி நெடுக சில முக்கியமான இடங்கள் உண்டு. இவற்றிலெல்லாம் தங்கி இளைப்பாறிச் செல்லலாம். அதிலும் கோரக்கர் குகை அருகே சிற்றோடை ஒன்று செல்கிறது. அது முற்றிலுமாய் தூய்மைக்கேடடைந்து காணப்படுகிறது. அவ்வோடைக்கு சற்றே மேலேறிச் சென்றால்தான் நல்ல தண்ணீரைப் பருக முடியும். 'இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில்தான் மான் ஒன்று செத்துக் கிடந்தது. வனத்துறையினர் எதனால் இறந்தது என்பதைக் கண்டறிவதற்காக, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது உட்கொண்ட ஞெகிழிப் பொருட்கள்தான் காரணமென்று. வயிறு மிகப் பெரிதாய் ஊதி, செத்துக் கிடந்த இந்த மானைப் போன்று இன்னும் எத்தனை விலங்குகள், பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை' என்று அப்பகுதியில் கடை வைத்திருந்த ஒரு பெண்மணி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
ஓரிடத்தில் மரங்கள் அனைத்தும் கருகி, காடே அழிக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் காணப்பட்டது. 'இந்த இடத்துலதான், போன ஆடி அமாவாசைக்கு வந்த ஒரு சிலர் தீ வைச்சிட்டாங்க. மலையில தீப்பிடிச்சு எரியுதுன்னு கேள்விப்பட்டு, மலைக்கு வந்த நிறைய பேரு, அடிவாரத்தோட திரும்பிப் போயிட்டாங்க. அவங்களா தீ வெச்சாங்களா, இல்ல அவங்க கொண்டு வந்த பொருட்களால தீப்பிடிச்சதான்னு முழுமையா தெரியல. இருந்தாலும், நம்ம மேல தப்பு இருக்குங்க. மலைப் பகுதிகளுக்கு வரும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள யாரும் பயன்படுத்தக்கூடாதுன்னு, எச்சரிக்கைப் பலகை வச்சிருந்தும் கூட நம்ம மக்கள் கேட்கமாட்டேங்குறாங்க' என்றார் நம்மோடு வந்த உள்ளூர்ப் பத்திரிகையாளர்.
நாவல்ஊற்று என்ற இடத்தினருகே வந்தோம். விரிந்து நிழல் பரப்பியுள்ள நாவல்மரத்தின் வேர்ப்பகுதியில் அமைந்துள்ள அச்சிறிய ஊற்றுநீர், பயணிகளின் தாகம் தணிப்பதற்காகவே இயற்கை அளித்துள்ள அருங்கொடை. அந்த ஊற்றுக்குள்ளும் ஞெகிழிப்பைகள் காணப்பட்டன. பிஸகெட் டப்பாக்களும் அதற்குள் ஊறிக் கிடந்தன. நீளமான குச்சி ஒன்றை எடுத்து, அதிலுள்ள கூளங்களை எடுத்துப் போட்டு, இயன்றவரை தூய்மை செய்தோம். கலங்கிய தண்ணீர் நன்றாய்த் தெளிந்தபின்னர், கையோடு கொண்டு போயிருந்த பாட்டிலில் நீரை நிரப்பி தாகம் தீரும் வரை அள்ளிக் குடித்தோம். சுவையாக இருந்தது. அந்நீரின் மருத்துவ குணம் குறித்த அறிவிப்புப் பலகையொன்று அம்மரத்தினடியிலேயே தொங்கவிடப்பட்டிருந்தது. பச்சரிசிப்பாறை என்ற இடத்தைக் கடந்த பின்னர், காட்டாறு ஒன்று குறுக்கிடும் இடத்தில் வனதுர்க்கைக்கு கோவில் ஒன்று உள்ளது. அடர்ந்த மரங்களைக் கொண்ட அப்பகுதியில் சில் வண்டுகள் எழுப்பும் ஒலி மனதுக்கு மிக இதமாக உள்ளது. சின்னப்பசுக்கிடை, பெரிய பசுக்கிடை என்ற பகுதிகளைக் கடந்து செல்லும்போது, 'அந்தக் காலத்துல உள்ளூர்க்காரவுங்க தங்களோட மாடுகள இந்த மலையிலதான் மேய்ச்சலுக்கு விடுவாங்க. ஒரு வாரம், ரெண்டு வாரம்னு தங்கி மாடுகள மேய்ச்சலுக்கு விடுறவங்க, இந்த ரெண்டு இடங்கள்லதான் கிடை போடுவாங்க. இன்னைக்கி மேய்ச்சலுக்கு ஒரு ஆடு, மாடுகளக்கூட பாக்க முடியல' என்றார் இராமமூர்த்தி.
அதனைக் கடந்து சென்றதும் நம் கண்களில் தெரிவது பிலாவடிக்கருப்பர் ஆலயம். ஆறு ஓடி வரும் பாதையில், பலா மரத்தின் அடியில் அமைந்துள்ளது கருப்பசாமி கோவில். இங்கே வருகின்ற பக்தர்கள் அனைவரும் கருப்பசாமிக்கு தேங்காய் உடைக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், அவ்விடம் முழுவதும் தேங்காய்ச் சிரட்டைகளால் நிறைந்து காணப்படுகின்றது. அவையெல்லாம் அழுகிய நிலையில், பெரும் துர்நாற்றத்தோடு கிடக்கின்றன. இவ்விடத்தைக் கடந்து செல்லும் தண்ணீரும் கூட, எண்ணெய்ப்பிசுக்கோடு ஏதோ ஒரு நிறத்தில் காணப்படுகிறது. அக்கோயிலைச் சுற்றி குரங்குகள் நிறைய வாழ்கின்றன. அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்கள். அக்கோவிலை ஒட்டி ஓடும் சிற்றோடை, மனிதக் கழிவுகளால் மிகப் பெரும் தூய்மைக்கேடு அடைந்துள்ளது. சில ஆயிரம் பேர் வந்து செல்லும்போதே, இப்படியொரு நிலையெனும்போது, பத்து இலட்சம் பேர் வந்து சென்ற ஆடி கார்உவா நாளில் எப்படியிருந்திருக்கும் என்பதை வாசிப்போரின் கற்பனைக்கே விட்டுவிடலாம். அப்போது அவர்கள் பயன்படுத்திய இயற்கைக்சூழலுக்கு ஒவ்வாத பொருட்கள், கழிவுகள் என்று கணக்கிட்டுப் பார்த்தால், சதுரகிரியின் தூய்மை எந்த அளவிற்கு பாழாகியிருக்கும்..? இந்த அழகில் புதிதாய் வருகின்ற சிலர் மலையேறும்போதே மேலே தங்கும் விடுதிகள் உள்ளனவா..? சுற்றுலா வழிகாட்டிகள் உண்டா..? 'சிறப்பு பானங்கள்' கிடைக்குமா..? என்றெல்லாம் கேட்டு தங்களது பயணத்தைத் தொடங்குபவர்களை என்னவென்று சொல்ல..?
இறைத்தேடலோடு வருவோர், வசதிகளை நினைத்துக் கொண்டு வரக்கூடாது. இயற்கை என்ன வழங்கியிருக்கிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்களுக்காக வனத்துறையால் வழங்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தற்போது பார்த்தீனியச் செடிகளும் பரவியிருக்கின்றன. இச்செடிகளின் பரவல், சதுரகிரியின் வனவளத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் மனிதர்களின் அத்துமீறல், மற்றொரு புறம் பார்த்தீனியச் செடிகளின் பெருக்கம். இவற்றையெல்லாம் தாண்டி சதுரகிரியின் வனவளத்தையும், சூழலையும் பாதுகாக்க வேண்டிய கடமை, வனத்துறைக்கும், அறநிலையத்துறைக்கும் மட்டுமன்றி, அங்கே பயணம் செய்யும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த நவம்பர் மாத பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் கட்டுரையாளர் திரு.தங்கப்பாண்டியன் கூறியதுபோல், சதுரகிரியும், மற்றுமொரு சபரிமலையாய் உருவெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே உறுதியான உண்மை.
- இரா.சிவக்குமார் (
- விவரங்கள்
- வேணு சீனிவாசன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காடுகள் அழிப்பு
தொழிற்சாலைகளிலும், உற்பத்தி நிலையங்களிலும், வீடுகளிலும் பலவகையான எரிபொருட்கள் நாள்தோறும் எரிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் நாள்தோறும் டன் கணக்கில் நிலக்கரி எரிக்கப்பட்டு வெப்பமும், புகையும் காற்றில் கலக்கிறது. காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளும் சுவாசித்து தீர்த்து விடுகின்றன. மரங்கள் மட்டும் தான் காற்றில் கலந்த கார்பன்டை ஆக்சைடு வாயுவை கிரகித்துக்கொண்டு, சுவாசிப்பதன் மூலமாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. இவைகள் காற்று மண்டலத்தில் இருந்து உறிஞ்சிக் கொள்ளும் கரியமிலவாயு உணவு தயாரிப்பில் உபயோகப்படுகிறது இதனால் சுற்றுப்புறக் காற்றின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
ஆனால் ஒரு நாளில் தொழிற்சாலைகளும், மனிதர்களும், விலங்குகளும் வெளிவிடும் கார்பன்டைஆக்சைடு முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு உலகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை. நாம் தான் நமது சுயத்தேவைகளுக்காக, லாப நோக்கத்திற்காக, அறியாமையின் காரணமாக கண்ணில் பட்ட மரங்களை எல்;லாம் வெட்டி சாய்த்து வருகின்றோமே . இவ்வாறு அதிகப்பரப்பில் இருந்த காடுகள் சென்ற நூற்றாண்டின் இறுதிக்குள் பாதிக்கு மேல் அழிந்து விட்டன.
மரம் என்றால் உயிர், இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கும் விலங்கு பறவைகளுக்கும் வாழ்வாதாரம். சிலபேர் நினைக்கிறார்கள் , காடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம்? மரங்களை வெட்டி விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். காடுகளை அழித்து குடியிருப்புக்களைக் கட்டினால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்த எண்ணம் தவறானது , இது போன்ற தவறான எண்ணத்தினால் தான் இதுவரையில் உலகத்தில் உள்ள காடுகளில் பாதிக்குமேல் அழிந்து விட்டது. காடுகள் சோலைவனங்கள் இந்த சோலைவனங்கள் அழியுமானால் நாம் பாலைவனத்தில் தான் வசிக்க வேண்டும்.
ஒரு காடு அழியும் போது வெறும் மரங்கள் மட்டும் அழிவதில்லை, அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது.
சிலர் காடுகளை அழித்து மரம் செடிகொடிகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், இன்னும் சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் கொம்பு, தந்தங்கள், தோல் ஆகியவற்றை விற்று பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மிருகங்களும், பறவைகளும் அழிவதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. காடு அழிவதால் சுற்றுச்சூழல் அழிகிறது, பருவநிலையில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்
மண் அரிப்பு - தற்பொழுது காடுகளின் அழிவின் காரணமாக மண்அரிப்பு தவிர்க்க இயலாத பிரச்சினையாக மாறிவருகிறது. மண் அரிப்பு ஏற்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிப்பு அடையும். வருடந்தோறும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மண்அரிமானத்தின் காரணமாக எதுவும் விளையாத வறட்டு நிலமாக மாறிவருகிறது.
பாலைவனங்கள் உருவாதல் - காடுகளின் அழிப்பினால் நிலத்தில் எந்;த உயிரினமும், நுண்ணுயிர்களும் வாழ முடிவதில்லை. மண்ணின் உயிரியல் வளம் அழிவதால் அந்த நிலம் எதற்கும் பயன்படாமலும், எதுவும் விளையாமலும் பாலைவனமாக மாறுகிறது.
மழைபொழிவு பாதிப்பு - மரங்களின் அழிவால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகமாகிவிடுகிறது இதனால் மழை குறைந்து வறட்சி ஏற்படுகிறது.
குறைந்து வரும் மரத்தின் அளவு - தொழில்களுக்குத் தேவைப்படும் மரத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களான நாற்காலி, மேசை, கட்டில், பீரோ போன்றவை செய்யும் தொழில்கள் நலிந்து விட்டன.
வறட்சி - மழை பொழியும் பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால் ஓடைகள் வறண்டு விடுகின்றன. ஆறுகளில் வறட்சிக் காலங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இந்தக் காரணங்களினால் வறட்சிக்கு வழி ஏற்பட்டு விடுகிறது.
வண்டல் - மலைகளில் இருந்து அரித்துக்கொண்டு வரப்படும் மண் நீர்த்தேக்கங்களிலும், ஆற்றுப்படுககைகளிலும் குவிக்கப்படுகிறது. மலையில் இருந்து வரும் மழைநீரைத் தடுப்பதற்கு காடுகள் இல்லாத காரணத்தினால் இந்த அவலநிலை ஏற்படுகிறது. ஆகவே வண்டல் மண் தேவையில்லா இடங்களில் சேமிக்கப்பட்டு வீணாகிறது. அதுமட்டும் இல்லாமல் மின்சக்தியின் தயாரிப்பும் குறைகிறது.
மண்ணின் தன்மையை அழிக்கிறது - காடுகள் மண்ணின் தன்மை கெடாமல் பாதுகாத்து வருகின்றன. காடுகளும் மரங்களும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள மண்ணின் தன்மையை மண்அரிமானம் ஏற்படாமல் காப்பதன் மூலமாக பாதுகாத்து வருகின்றன. காடுகளை அழிப்பதால் மண்அரிமானம் ஏற்படுகிறது இதனால் மண் அதன் தன்மையை இழந்தும் விடுகிறது.
பல்லுயிரின மாறுபாட்டின் இழப்பு- ஒரு தாவரம் அழிக்கப்பட்டால் அதை நம்பி வாழும், அண்டி வாழும் நாலுவகை உயிரினங்களின் அழிவுக்கு காரணமாக அமைந்து விடும். சீனக் காடுகளில் மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் பாண்டா கரடிகள் தற்போது அரிதாகிவிட்டன இதன் காரணம் என்ன ? மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு விட்டது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் - காடுகளின் அழிப்பினால் காடுகளை நம்பிவாழும் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதனால் இவர்களும் வேலைதேடி நகரத்திற்கு வருகின்றனர். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த உயிர்க்கோளமான பூமிக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சிமலை, மற்றும் இமயமலைக்காடுகள் ஆகியவை உலகின் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதல் பெரும்;பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளை காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து உயிர்களையும், பயிர்களையும் காப்பாற்ற முடியும்.
- வேணு சீனிவாசன் (
- விவரங்கள்
- உதயகுமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை