கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஜெருசெலேம் ஹிப்ரூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூக்களில் வாசனையை கூட்ட, குறைக்க, புதிதாக உண்டாக்க, இல்லாமல் செய்ய மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழிவகைகளை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரினங்களின் வாழ்க்கையில் வாசனைக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. வாசனையைப் பார்த்துத்தான் நாம் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள் இவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கைத் துணையைக்கூட வாசனையைப் பார்த்துத்தான் உயிரினங்கள் தேர்ந்தெடுக்கின்றன. மூக்கினால் அறிவது மட்டும் வாசனை அல்ல. நாவினால் அறிவதும் வாசனைதான் என்கிறார் பேராசிரியர் அலெக்ஸாண்டர் வெயின்ஸ்டீன். உணவை தரப்படுத்துவதில் வாசனைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
தாவரங்களிலும், பூக்களிலும் உள்ள வாசனைதான் மகரந்தச் சேர்க்கையை ஊக்கப்படுத்துகிறது. பூக்களின் வாசனை பல காரணிகளைச் சார்ந்தது. குறிப்பிட்ட நாளின் நேரம், காலநிலை, பூவின் வயது, பூவின் இனம் இவற்றையெல்லாம் சார்ந்ததுதான் வாசனை. ஒரு பூவின் வாசனையை பத்துமடங்கு அதிகரித்து இரவு பகல் எல்லா நேரமும் வாசனை வீசுமாறு செய்யமுடியும் என்று பேராசிரியர் வெயின்ஸ்டீன் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து பயிரிடப்பட்ட பூச்செடிகளில் வாசனை குறைந்து விடுகிறதாம். புதிய தொழில் நுட்பம் மூலம் வாசனையின் பகுதிகளுக்கு புத்துணர்வு ஊட்டமுடியும் என்கிறார் விஞ்ஞானிகள். உலகிலேயே பேராசிரியர் வெய்ன்ஸ்டீனின் ஆராய்ச்சிக்கூடம் மட்டுமே பூக்களின் வாசனையையும் நிறத்தையும் மாற்றியமைக்கும் ஆய்வுகளைச் செய்து வருகிறது. பூக்களில் மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தி வடிவம், நிறம், வாசனை இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் இந்த ஆய்வுக்கூடம் ஈடுபட்டுவருகிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
வாழ்வின் நிறைவு மரணம் எனப்படுகிறது. மரணம் ஏற்பட்டவுடன் இதயத்துடிப்பு நின்று, மூச்சடைத்து, மூளை செயலிழந்து விடுகிறது. இதுவே உடல் ரீதியான மரணம் எனப்படுகிறது.
மூன்று அல்லது நான்கு மணிநேரம் கழிந்த பின்னர்தான் மூலக்கூறு ரீதியான மரணம் ஏற்படுகிறது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ பல சந்தர்ப்பங்களில் காலம் தாழ்ந்துவிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் மனித உடலின் மாண்பைப் பாதுகாக்க Mortuary Box என்னும் குளிர்சாதனப்பெட்டி பயன்படுகிறது.
இறந்தவரின் உடலை வீட்டிலேயே 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு Mobile Mortuary Box என்னும் சாதனம் பயன்படுகிறது.
இறந்தவர் உடலை பலநாட்கள் பாதுகாக்க வேண்டியிருந்தால் மருத்துவமனையில் உள்ள Fixed Mortuary Boxல் வைத்து பாதுகாக்கலாம். 0 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பெட்டிகளில் பராமரிக்கப்படும்.
இறந்தவரின் உடலை விமானம் அல்லது கப்பல் மூலமாக எடுத்துச் செல்லவேண்டுமானால் tinfoil பயன்படுத்தி 'சீல்' செய்துதான் அனுப்ப முடியும். இந்த நடை முறைக்கு embalming என்று பெயர்.
Embalming வசதிகள் பெரிய மருத்துவமனைகளிலும், பெருநகரங்களிலும் கிடைக்கின்றன.
நன்றி: கலைக்கதிர்
தகவல்:மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது.
ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறைகிறது. இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருக்குமானால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். எப்படி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு? காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு!
ஹைட்ரஜன் பெராக்சைடை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் டிரை அசிடோன் டிரை பெராக்சைடு (TATP) வெடிகுண்டுகளைத்தான் பயங்கரவாதிகள் இப்போது பயன்படுத்தி வருகின்றார்கள்.
"சார், என்னுடைய டூத்பேஸ்ட்டில்கூட பெராக்ஸைடு சேர்க்கப்பட்டிருக்கிறது. என்னையும் விமானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிடுவார்களா?" என்றொரு குரல் கேட்கிறது. இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் "சில்"லு புத்திசாலித்தனமானதாம். வெடிகுண்டில் சேர்க்கப்பட்டுள்ள பெராக்ஸைடை மட்டும்தான் அடையாளம் காட்டுமாம்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.
ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.
இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?
அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு. பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்து பார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.
பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது. படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம். கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச் செய்யுமாம். பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதும்தான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.
பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்; பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம் என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறதா?
- மு.குருமூர்த்தி
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?
- காற்றாடி விமானம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை