சம்சாரம் அது மின்சாரம் என்பதில் சம்சாரத்தைப் பற்றி ஓரளவாவது(!) அறியும் நமக்கு மின்சாரத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இந்த சிந்தனையில் விளைந்ததே இந்த சிறு கட்டுரை. சில அடிப்படை விஷயங்களோடு தொடங்குவோம்.

மின் அழுத்தம் (voltage), மின் ஓட்டம் (current), மின் தடை (resistance).

நம் வீட்டிலுள்ள எல்லா மின்சார சாதனங்களிலும் (230V, 5A) என்பது போன்று குறிக்கப்பட்டிருப்பதை அநேகம் பேர் பார்த்திருப்போம். இதில் உள்ள V உணர்த்துவது voltage, A என்பது ampere என்பதின் சுருக்கம்.
மின்னோட்டத்தை கணக்கிட உதவும் அலகு ampere. மின்னழுத்தத்தை அளவிட volts. இதோடு மின் தடை (resistance).

இந்த மூன்றையும் ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயல்வோம். காலையில் எழுந்ததும் நாம் பல் விளக்கப் பயன்படுத்தும் பற்பசை குழாயை எடுத்துக்கொள்வோம். அதனுள் இருக்கும் பற்பசையை மின்னோட்டம் (current) என்று வைத்துக்கொள்வோம். அந்த பசை வெளிவர நாம் கொடுக்கும் அழுத்தம்தான் மின்னழுத்தம் (voltage). பசை வெளியேற ஒரு எதிர்ப்பை அந்தக் குழாய் கொடுக்குமே அதுதான் மின் தடை (resistance).

அழுத்தம்(voltage) அதிகமாய் கொடுத்தால் அதிக அளவில் பசை (current) வெளியே வரும். அப்படி வெளிவரும் அளவு அந்த குழாய் தரும் எதிர்ப்பையும் சார்ந்த ஒன்று தானே? இப்போது இந்த மூன்று காரணிகளையும் இணைக்கும் வாய்ப்பாடு (formula) ஒன்றைப் பார்ப்போம்.

V = I x R
அதாவது,

மின்னழுத்தம் = மின்னோட்டம் x மின் தடை

இதை முன்னிறுத்தி மின்னியலின் ஆதாரமான அடிப்படை விதி (Ohms law) ஒன்று உள்ளது.

["At constant temperature, the current flowing through a conductor is directly proprtional to the voltage difference between its ends"]

"ஒரு கடத்தியின் (conductor or wire) வழியே செல்லும் மின்னோட்டம் (current) அதன் இரு முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தத்தை (voltage) நேரடியாகச் சார்ந்தது."

இந்த கட்டுரையின் புரிதல் மற்றும் தெளிவு பற்றிய உங்களின் கருத்துகளைப் பார்த்தபின், அடுத்த பகுதியில் இன்னும் சற்று முன்னெடுத்துச் செல்ல விருப்பம்.

- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Pin It