'கார்போஹைட்ரேட்' என்பது தான் சரியான பதில்.
காரின் எஞ்சினுக்கு பெட்ரோல் எப்படியோ அப்படித்தான் உடல் என்கிற எந்திரத்திற்கு கார்போஹைட்ரேட் என்கிற உணவுப் பொருள். குளுகோஸ் என்பதுதான் எளிமையான கார்போஹைட்ரேட். இது ரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலந்து உடல் வேலை செய்வதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. பட்டினியாய் கிடப்பவன் சோர்ந்து போவதும், உணவு சாப்பிட்டவுடன் உடலுக்கு சுறுசுறுப்பு ஏற்படுவதும் இதனால்தான்.
நீங்கள் தண்ணீரில் குளுகோசை கரைத்துக் குடித்தால் உங்களுடைய செரிமான உறுப்புகள் வழியாக குளுகோஸ் நேரடியாக இரத்தத்தில் கலந்து சக்தி கிடைத்துவிடுகிறது. குளுகோஸ் மூலக்கூறில் கார்பன் அணுக்களும், நீர் மூலக்கூறும் அடங்கியிருக்கின்றன. ஒரு குளுகோஸ் மூலக்கூறில் ஆறு கார்பன் அணுக்களும், ஆறு நீர் மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.
குளுக்கோஸ் ஒரு எளிமையான சர்க்கரைப்பொருள். இதனால்தான் நாக்கில் பட்டவுடன் இனிக்கிறது. குளுக்கோஸின் வேறொரு வடிவம் ஃப்ரக்டோஸ். இது பழங்களில் இருக்கிறது. ஃப்ரக்டோஸும், குளுக்கோஸும் ஒரே மாதிரியான மூலக்கூறுகள்தான். ஆனால் அணுக்களின் அமைப்பில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. நம்முடைய கல்லீரல் ஃப்ரக்டோசை குளுக்கோசாக மாற்றுகிறது. இதேபோல் நாம் சீனி என்றழைக்கும் சுக்ரோஸ், பாலில் மறைந்துள்ள லாக்டோஸ், மாவில் மறைந்துள்ள மால்டோஸ் என்பவையும் குளுக்கோசின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும்.
குளுக்கோசும், ஃப்ரக்டோசும் நேரடியாக ரத்தத்தில் கலந்து கொள்ளக்கூடியவை. ஆனால் லாக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் இவையெல்லாம் என்சைம்கள் உதவியால் மாற்றமடைந்து ரத்ததில் கலக்கப்படுகின்றன. அடுத்தமுறை பாக்கெட் உணவை வாங்கும்போது கார்போஹைட்ரேட் என்கிற தலைப்பில் என்னென்ன உள்பிரிவுகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
மிகவும் சிக்கலான குளுக்கோஸ்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்களும், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் சிக்கலான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை என்சைம்களின் உதவியால் சிதைவடையச் செய்து எளிமையான குளுக்கோஸாக உடல் உறுப்புகள் மாற்றுகின்றன.
சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சிதைவடைந்து இரத்தத்தில் கலப்பதற்கு கூடுதல் நேரம் பிடிக்கும். ஒரு இனிப்பான சோடவைக் குடித்தால் ஒரு நிமிடத்திற்கு 30 கலோரிகள் என்ற வீதத்தில் குளுக்கோஸ் இரத்தத்துடன் கலந்து விடுகிறதாம். ஆனால் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஒரு நிமிடத்திற்கு 2 கலோரிகள் என்ற வேகத்தில் இரத்தத்துடன் கலக்கிறதாம்.
- மு.குருமூர்த்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
உடலுக்கு எரிபொருள் எது?
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்