கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
கொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.
வாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்களுக்கு ஊறு விளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது இது செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. எது இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.
பூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத் தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்து விடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
"நீங்க என்ன பாத்திரம் கழுவுற சோப் உபயோகிக்கிறீங்க? இப்படி பாத்திரம் பளபளப்பாக பிசுக்கில்லாமல் புத்தம் புது சில்க் துணிபோல இருக்கிறதே!''
"சோப்பா! சும்மா தண்ணீரிலே கழுவினாலே போதும் ஒரு சொட்டு எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் பாத்திரம் புத்தம் புதிதாகிவிடுகிறது... இது புதுவித பாத்திரம் எண்ணெயில் அப்பளம் பொரித்தாலும் பாத்திரத்தில் எண்ணெய் ஒட்டுவதில்லை'' என்று பதில் வந்தால் அதை நம்ப கஷ்டமாக இருக்கிறது அல்லவா!
உண்மைதான், இன்டியானா பல்கலைக்கழக பண்டவியல் துறை அறிஞர்கள் பிளாஸ்ட்டிக், உலோகம் போன்ற பொருள்களுக்கு மேலே, முடியைவிட 1000 மடங்கு மெலிதான ஒரு கெமிக்கல் பூச்சு கொடுக்கிறார்கள். அது எண்ணெயை பாத்திரத்தில் ஒட்ட விடாமல் பார்த்துக்கொள்கிறது.
வெறும் தண்ணீரில் கழுவினாலே போதும், சோப்பு அரப்புத் தூள் எதுவுமில்லாமல் எண்ணெய்ப்பிசுக்கு வழுக்கி ஓடிவிடுகிறது. பாத்திரத்தின் பரப்பில் பாலி எத்திலீன் கிளைக்கால் என்ற தண்ணீர் உறிஞ்சும் பொருள் பூசப்படுகிறது, அதற்கு மேலே டெஃப்ளான் போன்ற ஒரு பூச்சு கொடுக்கப்படுகிறது. இதனால் பாத்திரத்தின் பரப்பு தண்ணீருக்கு உறவாகவும் எண்ணெய்க்குப் பகையாகவும் மாறிவிடுகிறது. எண்ணெய் ஒட்டுவதேயில்லை. காந்தல், கரி, பிசுக்கு எது இருந்தாலும் குழாயில் காட்டினாலேபோதும் தேய்க்காமலே கழன்றோடிவிடுகிறது. இது வேலையை சுலபமாக்குவதுடன், சுற்றுச் சூழலை பாதிக்கும் சோப்பின் தேவையைக் குறைக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள் வெகு சீக்கிரமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடுகிறது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பிசாசு நகம் (Devil Claws) என்றொரு செடி உண்டு. இதன் வேரில் காணப்படும் (iridoid glycosides, harpagoside and harpagide) இரிடாய்டு கிளைக்கோசைடு, ஹார்ப்பபோசைடு மற்றும் ஹெர்ப்பகைடு போன்ற மருந்துப் பொருட்கள் ரூமட்டாய்டு ஆர்த்திரிட்டிஸ் என்ற முடக்குவாதம், மூட்டிவலி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. உலகில் 25 விழுக்காடு மக்கள் முடக்கு வாத நோயால் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல மருந்து இன்னமும் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் பிசாசு நகம் செடியின் வேர்களுக்கான டிமான்ட் பல மடங்காகிக்கொண்டிருக்கிறது. ஆனால் மோசமான வானிலையினாலும், பொய்த்துக்கொண்டிருக்கும் மழையினாலும் இந்தச் செடி அழிந்து மறைந்து போகும் நிலையில் இருக்கிறது.
மிலன் கியார்கிவ் என்பவர் இதற்கு ஐடியா வழங்கியிருக்கிறார். இந்த செடியின் வேர்களை செயற்கையாக கண்ணாடிக் குடுவைகளில் வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார். ஹேரி ரூட் வளர்ப்பு முறை ஒரு நூதன முறை. அக்ரோ பேக்டிரியம் ரைசோஜென்ஸ் என்றொரு பேக்டிரிய கிருமி, வேர்களில் வளரக்கூடியது. இது வளரும் வேர்கள் மெல்லிய முடி போல ஆகிவிடும்; ஆனால் வேகமாக மளமளவென்று வளர்ந்துவிடும்.
என்ன ஆச்சரியம்! பிசாசு நகச் செடியின் கூந்தல் வேர்கள் குடுவைகளில் வேகமாக வளருவதுடன் மருந்து கெமிக்கல்களையும் குறைவில்லாமல் சுரந்தனவாம். இதை பயோஃபேக்டரி என்று அழைக்கிறார்கள். எதிர்காலத்தில் கூந்தல் வேர் வளர்ப்பு முறை மூலிகைகளை பாதுகாக்கவும், இயற்கையில் அவற்றைத் துன்புறுத்தாமல் இருக்கவும் இந்த பயோஃபேக்டரிகள் உதவுமல்லவா.
- முனைவர் க. மணி, பயிரியல்துறை, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
எத்தனையோ மைக்ராஸ்கோப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பைக்கூட பார்த்திருக்கலாம். உங்களில் ஒருசிலர் அதை உபயோகித்துமிருக்கலாம். மூலக்கூறுகளை வருடிப்பார்த்து அதன் உருவத்தை படம்பிடிக்கும் மைக்ராஸ்கோப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஐ பி எம் (IBM) கம்பெனி அப்படி ஒரு மைக்ராஸ்கோப்பைத் தயாரித்திருக்கிறது. அதை அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ராஸ்கோப் என்கிறார்கள்.
இது அதீத வெற்றிடத்தில் வேலைசெய்யும். இதில் லென்ஸ் எதுவும கிடையாது. ஒரு ஊசிதான் இதன் வருடும் பகுதி. இந்த ஊசியின் முனை ஒரே ஒரு கார்பன் மோனாக்ஸைடு மூலக்கூறு கொண்டது. இந்த முனை கவனிக்க வேண்டிய பொருளுக்கு ஒரு சில நேனோமீட்டர் தூரத்தில் இருந்து கவனிக்கும். இதனால் ஒரு தனி மூலக்கூறினைக்கூட கவனிக்க முடியும். மூலக்கூறுகளின் அணுக்களிலிருந்து வெளிப்படும் மின்புலத்தை இது நெருங்கும்போது பாதிப்படையும். அந்த பாதிப்பு வரைபடமாக வெளிப்படுத்தப்படுகிறது.
ஃபெயின்மேன 1959 இல் "ஒரு காலம் வரும், அன்று விஞ்ஞானிகள் அணுக்களையும் மூலக்கூறுகளையும் எடுத்து அடுக்கி உருவங்களை செய்வார்கள். அது நேனோநுட்பம் என்று அழைக்கப்படும்' என்றார். அவர் சொல் பலித்துவிட்டது.
படம்: பென்ட்டாசீன் மூலக்கூறு 3டி படமாக உள்ளது. மேலே காண்பது அதன் நிஜமான மூலக்கூறு வடிவம். அதற்கும் மேலெ தொங்குவது மூலக்கூறுகளைத் தொடாமலே வருடிப் பார்க்கும் அணுவிசை மைக்ராஸ்கோப்பின் நுனி.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்