பொன்னியாறு பெருகியோடி பொன்விளைத்துக் கொடுக்கும்
புதுநெல்லின் எழுகுவியல் பொன்மலையாய்மினுக்கும்!
மின்னிவயல் வரப்பதனில் வஞ்சிமகள் நடக்கும்
 மெல்லிடையும் ஒடியுமென கஞ்சிக்கலயம் சுமக்கும்!
 
வளமண்ணின் உயிர்நாதம் வண்டலெனச் சேரும்
வயல்வீதித் தேரெனவே வரும்கலப்பை ஏரும்!
களத்துமேட்டுக் கண்டுமுதல் கழிஉவகை யூட்டும்
கனவுகளின் மூட்டைகளை கண்களிலே ஏற்றும்!
 
வரப்புகளில் நின்றுகுடை பிடித்திருக்கும் பண்ணை
வளர்களையைப் பறிப்பவள்மேல் வைத்திருக்கும் கண்ணை!
வரப்பினிலே தலைசாய்க்கும் தங்கசம்பாக் கதிரும்
வீடுவந்து சேரும்போது விழிமணிகள் உதிரும்!
 
வயலோடி மண்வெட்டி வரப்புகளை மாற்றும்
வழக்குமன்றக் கூண்டுகளில் உழவனையே ஏற்றும்!
புயல்வெள்ளம் இடையிடையே புகுந்துசெய்யும் கேடு
பொறுமையுடன் கடந்துவரும் வேளானுயிர்க் கூடு! 
 
உரமிட்டுப் பயிர்வளர்க்கும் உயர்தொழிலின் ஆளும்
ஒருநூறு முறைவரப்பில் நடந்திருப்பான் நாளும்!
சுரந்தோடும் வியர்வைதனில் தழைப்பதுவே வாழ்க்கை
சாமிபூமி வயல்வரப்பு காப்பதவன் வேட்கை!
 
வரப்பென்னும் நரம்போடும் வயலுடல்தான் நிலமே
வடித்தெடுத்த நல்லுணர்வு வழிநடத்தும் நலமே!
வரமென்று வரப்பிருந்து வயலினையே வணங்கும்
வாழ்வுடையோன் அவனால்தான் வையமதும் இயங்கும்!

 - வெற்றிப்பேரொளி

Pin It