அது, கொரோனா தாண்டவமாடிய 2020-21 காலம். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறுகடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், திரையரங்குகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டிருந்த நெருக்கடியான சூழல். வெளியில் நடமாடினால்கூட காவல்துறைக்கு தண்டம் கொடுக்க வேண்டியிருந்த கொடுமையான நிலை. நான், கொரோனாவால் தாக்கப்பட வில்லையென்றாலும், கொரோனா விதித்தத் தடைகளால் தாக்கப்பட்டேன்.

கொரோனாவுக்கு அஞ்சி அரசாங்கம் அறிவித்த முதல் ஊரடங்கின் தொடக்க நாளான 2020, மார்ச் 23-க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நல்வாய்ப்பாக, படப்பிடிப்பு முற்றுப் பெற்றது. தப்பித்தோம், பிழைத்தோம் எனும் மகிழ்ச்சி ஒருபுறம். பின்தயாரிப்புப் (Post production) பணிகள் செய்வதற்கு ஏதுவாக ஊரடங்கு எப்போது முடிவுக்கு வருமோ எனும் கலக்கம் மறுபுறம். நீண்டுகொண்டே போனது ஊரடங்கு. இடையில் ஒருசில தளர்வுகள். மீண்டும் கடுமைகள். எந்தத் தளர்வும் திரைத்துறையை எட்டிப் பார்க்கவில்லை.

director rudranஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு, திரைப்படங்களின் பின்தயாரிப்புப் பணிகளைக் குறைந்த அளவு ஆட்களை வைத்து செய்துகொள்வதற்கு அரசு அனுமதித்தது. நான், 2020 செப்டெம்பரில் இந்தப் பணிகளைத் தொடங்கும்போதே, 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக படத்தை வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனென்றால்,’₹2000’ திரைப்படத்திற்கும் தேர்தலுக்கும் ஆழமான தொடர்பு இருப்பதை அறிந்திருந்தேன். பாஜக அரசின் மக்கள் விரோத அரசியலையும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளையும் படத்தின் கதையோட்டத்தில் சேர்த்திருந்தேன்.

ஒரு 2000 ரூபாய் தாளினை வைத்திருந்தும், அதனை செல்லுபடியாக்க முடியாமலும் தனது பச்சிளங் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க இயலாமலும் அக்குழந்தையை சாவுக்குக் கொடுக்கும் ஏழை விவசாயி ஒருவர், ஒன்றிய அரசின் மீது கொலைக்குற்ற வழக்குத் தொடுத்து, அரசுக்கு தண்டனைப் பெற்றுத் தருவதுதான், கதை. இதனூடாக, மோடி அறிவித்த, ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை’யின் தீய விளைவுகளும் நாட்டில் நடந்த அலங்கோலங்களும் அம்பலப்படுத்தப் படுகிறது. கூடவே, சாதிய வேரினைத் தீக்கிரையாக்கும் கிளைக்கதையும் உண்டு.

திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 2021ல் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட தனது குழுவினருடன் படத்தைப் பார்த்த சென்னை மண்டலத் தணிக்கை வாரியத்தின் தலைமை அலுவலர் லீனா மீனாட்சி, என்னிடம் எதுவும் விவாதிக்காமலேயே, ஒரே வார்த்தையாக, “படத்திற்குத் தடை விதிக்கிறேன்“ என்று சொல்கிறார். நான், “நன்றி” என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறேன்.

படத்தை மறுஆய்வுக் குழு (Revising Committe)விடம் கொண்டுபோவதற்கான பணிகள் முடிந்தபோது, தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கிறது. மறுஆய்வுக் குழுவின் தலைவர் நடிகை கவுதமி, பாஜக-வுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்தான் அவரால் படம் பார்க்க இயலும் என்னும் தகவலைத் தணிக்கை வாரிய அலுவலகம் தெரிவிக்கிறது. இவ்வாறு, தேர்தல் காலத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்னும் திட்டம் சிதைக்கப்பட்டது.

ஒருவழியாக, தேர்தல் முடிந்த மூன்றாவது நாளில், பத்துபேர் கொண்ட தனது குழுவினருடன் நடிகை கவுதமி படத்தைப் பார்த்தார். இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தைப் பார்த்துவிட்டு மூன்றரை மணி நேரம் அவர்களுக்குள்ளாகவே விவாதித்தனர். நான் வெளியே காத்திருந்தேன். 2 1/2+3 1/2=6 மணி நேரத்திற்குப் பிறகு நான் அழைக்கப்பட்டேன்.

படத்தின் தலைப்பான, ‘₹2000’ என்பதற்குக் கீழே சிறிய எழுத்தில் போடப்பட்டிருந்த, ‘காகிதம்‘ என்னும் துணைத் தலைப்பினை நீக்கவேண்டும் என்பதிலிருந்து தொடங்கியது, வெட்டுகளின் பட்டியல். பள்ளிக் குழந்தைகள் வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போல மண்டல அலுவலர் லீனா மீனாட்சி வெட்டுகளை சொல்லச் சொல்ல, அவைகளுக்கான காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தார், கவுதமி. நான் வினா எழுப்பினாலோ அல்லது விளக்கம் அளிக்க முனைந்தாலோ, “அதெல்லாம் வேணாங்க சார். இதையெல்லாம் நீக்குங்க, அவ்ளதான்.” எனும் வார்த்தைகள் மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. கூடவே, “எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது பிஜேபி. அந்தக் கட்சியையும் அதனுடைய ஆட்சியையும் விமர்சிக்கிற காட்சிகள என்னால எப்படி அனுமதிக்க முடியும்?” என்னும் கேள்வியைக் கேட்டு தன்னைத்தானே கவுதமி வெளிப்படுத்திக் கொண்டார்.

ஒரு கட்டத்தில், ‘முன்முடிவோடு இருக்கும் இவர்களோடு பேசிப் பயனில்லை’ என்னும் முடிவுக்கு வந்த நான், அமைதியாக, லீனா மீனாட்சி சொல்லும் வெட்டுகளைக் குறித்துக் கொள்பவனாக ஆகிப்போனேன். அதன் பிறகு, கவுதமியின் பேச்சுகளை நான் பொருட்படுத்தவேயில்லை. இறுதியாக, நூற்றுக்கும் அதிகமான வெட்டுகள். மட்டுமன்றி, வசனவொலி நீக்கங்கள் சில. ஆக, படம் குதறப்பட்டு விட்டது. ‘₹2000’ திரைப்படம், அதன் மீதான கருத்தியல் வன்முறையால் அதன் இயல்பினை இழந்துவிட்டது. கூட்ட அரங்கிலிருந்து நான் வெளியேறும்போது கவுதமி சொன்னார் : “சார், படத்துல நல்ல கருத்த சொல்லியிருக்கீங்க. சில காட்சிகளப் பாக்கறப்போ, நானே சில புதிய கருத்துகள தெரிஞ்சி கிட்டேன். இந்தப் படம் மக்கள் கிட்ட போய்ச் சேரணும். வாழ்த்துகள்.”

2000‘மக்கள் கிட்ட சேர்க்கிறதுக்கு என்ன விட்டு வெச்சிருக்கீங்க?’ என உள்ளுக்குள் எரிந்தபடி, “நன்றி” சொல்லி வெளியேறினேன்.

தணிக்கைத் துறை சொல்லியவற்றையெல்லாம் நீக்கினால், இரண்டரை மணி நேரப் படம் ஒரு மணி நேரம்கூட மிஞ்சாது. காட்சிகளில் தொடர்ச்சியும் இருக்காது, காட்சிகளுக்கு இடையிலான தொடர்பும் இருக்காது. மொத்தத்தில், படத்தின் கரு கலைக்கப்பட்டு விட்டது, படம் சீரழிக்கப்பட்டு விட்டது.

இனி, கதைக்கான ஆதாரங்களையும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கான ஆவணங்களையும் திரட்டிக் கொடுத்து வெட்டுகளைக் குறைத்தாக வேண்டும். அதுதான் இப்போது இருக்கும் ஒரே வழி. கதை மற்றும் காட்சிகளுக்கான ஆதாரங்கள் ஏற்கெனவே என்னிடம் இருப்பதால் அதற்கான தேடல் அவசியமில்லை. ஆனால், வெட்டுகளைத் தவிர்ப்பதற்கு என்ன செய்வது...

குறிப்பாக, வழக்காடு மன்றத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அம்பேத்கர் நிழற்படத்தை நீக்கவேண்டும் என்கிறார்களே! அந்த நிழற்படத்தையும் அது தெரியும் காட்சித் துணுக்கு (shots)களையும் எப்படிக் காப்பாற்றுவது... திருக்குறளை உச்சரிக்கக் கூடாது என்கிறார்களே, அதை எப்படி மீட்டெடுப்பது... ஒன்றிய அரசின் நிதியமைச்சரையும் ரிசர்வ் வங்கியின் தலைவரையும் சாட்சியம் சொல்வதற்காக வழக்காடு மன்றத்திற்கு அழைக்கும் அதிகாரம் வழக்காடு மன்ற நடுவருக்கு இல்லை என்கிறார்களே, அதனை எப்படி முறியடிப்பது... ‘கடவுள்’, ‘கோயில்’, ‘சனாதனம்‘,’பார்ப்பனியம்‘, ‘கார்ப்பரேட்‘ ஆகிய சொற்களை நீக்கவேண்டும் என்கிறார்களே, இவைகளை நிஜ வாழ்க்கையிலிருந்து நீக்கவேண்டும் என்றால் ஏற்கலாம். ஆனால், படத்தில் தக்கவைத்தாக வேண்டுமே, அதற்கு என்ன செய்வது...

படத்தில் தோழர் ஓவியா நடித்திருந்ததால், அவரால் உணர்வு பூர்வமாக உதவ முடியும் எனக் கருதி, அவருடன் தொடர்பு கொண்டேன். அவர், ஓய்வுபெற்ற நடுவர் அரி பரந்தாமன் அவர்களிடம் சொல்லி ஆவன செய்வதாக சொன்னார். மறுநாள் தொடர்புக்கு வந்த தோழர் ஓவியா,

“நீங்கள் கம்யூனிஸ்ட் என்பதால் உங்களுக்கு உதவ முடியாது என்று சொல்லிவிட்டார். பெரியாரியத்தோடு அவர் நின்று கொள்கிறாராம். இப்படி அவர் சொன்னதில் எனக்கு வருத்தம்தான், தோழர் “ என்றார். “எனக்கு உதவிட நினைத்ததற்கு நன்றி, தோழர் “ என சொல்லிவிட்டு யோசிக்கத் தொடங்கினேன்.

தோழர் தியாகு அவர்கள் நினைவில் வந்தார். படத்தில் அவரும் நடித்திருந்தார். அவருடன் தொடர்பு கொண்டேன். தான் வெளியூரில் இருப்பதாகவும், ஆவணங்களைத் தேடிக் கண்டெடுத்து இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அடுத்து தோழர்-வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களை சந்தித்தேன். விரிவாகவும் விளக்கமாகவும் பேசிய அவர், அம்பேத்கர் நிழற்படத்தை ஷிஙிமி வங்கியில் வைத்ததற்காகத் தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளான ஒருவர் தொடுத்த வழக்கில், அம்பேத்கர் நிழற்படத்தை வைத்தது தவறில்லை என்னும் அரசாணை கிடைத்திருப்பதாகவும், இதுகுறித்து மேலதிக விபரங்கள் தனது ஜூனியர் வழக்குரைஞர் ரமேஷிடம் கிடைக்கும் என்றும் சொல்லி, வழக்குரைஞர் ரமேஷ் அவர்களின் அலைபேசி எண்ணினைக் கொடுத்தார். நான், வழக்குரைஞர் ரமேஷ் அவர்களுடன் பேசினேன். வழக்குத் தொடுத்திருந்த வங்கிப் பணியாளர் கவுரிசங்கர் அவர்களிடமிருந்து அரசாணையைப் பெற்று அனுப்பி வைத்தார்.

அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட சில அரசியல் மற்றும் அரசுத் தலைவர்களின் நிழற்படங்களை வைப்பதற்கான உரிமை, குடியரசுத் தலைவர் உள்பட அனைவரையும் வழக்காடு மன்றத்திற்கு அழைப்பதற்கான நடுவரின் அதிகாரம் ஆகியவைகள் குறித்த ஆவணங்களையும் அரசாணைகளையும் தோழர் தியாகு அனுப்பி வைத்தார். இந்நிலையில், தோழர்-வழக்குரைஞர் பாவேந்தன் அவர்களும் சில சட்டக் குறிப்புகளை அனுப்பியிருந்தார்.

இவ்வாறாக, ஆதாரங்கள், அரசாணைகள், ஆவணங்கள் ஆகியவை அடங்கிய 35 பக்கங்கள் கொண்ட தொகுப்பு, தணிக்கை வாரியத்திற்கு கொடுக்கப்பட்டது. இத்தகைய நிரூபணங்கள் கொடுக்கப்பட்டால், UA சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை வாரியம் உறுதி அளித்திருந்தது. ஆபாசம், கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை எதுவுமில்லாத நிலையில், U சான்றிதழ் பெறுவதற்கு முழுத்தகுதி பெற்ற திரைப்படத்திற்கு UA சான்றிதழ் கொடுப்பதற்கு, தணிக்கை வாரிய சட்டத்திற்குப் புறம்பாக தணிக்கை வாரியம் முடிவு செய்தது. இத்தகைய சூழலில், புதுடில்லியில் இயங்கும் ஒன்றிய தீர்ப்பாயம் (Tribunal) மட்டுமே உச்சபட்ச போக்கிடமாக இருந்தது. அதற்கான நடைமுறைகளைத் தொடங்கினோம். கெடுவாய்ப்பாக, ஓரிரு நாட்களுக்குப் பிறகு, தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அந்த நேரத்தில், பல்வேறு துறைகள் சார்ந்த தீர்ப்பாயங்களைக் கலைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டிருந்தது. இனி மிச்சமிருக்கும் ஒரேவழி, வழக்காடு மன்றத்தை நாடுவதேயாகும். ஆனால், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தாமதம், தணிக்கைத் துறையால் உருவாக்கப்பட்ட காலவிரயம் ஆகியவைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், வழக்குத் தொடுப்பதால் ஏற்படும் கால நீட்டிப்பினைத் தாங்குகிற நிலையில் இல்லை. எனவே, UA சான்றிதழைப் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இழுத்தடிப்பு, அலைக்கழிப்பு போன்ற தந்திர உத்திகளால் சோர்வினை உண்டாக்கினால், தாம் சொல்வதையெல்லாம் கேட்கும் வகையில் சரணாகதி அடையவைத்துவிடலாம் என்னும் தணிக்கை வாரியத்தின் கணக்கு, தப்புக் கணக்காகிப் போனது. சமரசமற்ற தொடர் முயற்சிகளுக்குப் பிறகு- ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பின்னர், தணிக்கை வாரியத்திலிருந்து தகவல் வந்தது :

“UA சான்றிதழுக்கான உத்தரவு வந்துவிட்டது. ஆனால், ஒரு சிக்கல். படத்தின் தலைப்பான ‘₹2000’ என்பதில் உள்ள, ‘₹’ குறியீட்டினைப் பொருத்த முடியவில்லை. மும்பை அலுவலகத்திற்கு செய்தி அனுப்பியிருக்கிறோம். அங்கிருந்து பதில் வந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.”

இனியும் பொறுப்பதற்கில்லை என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன்.“ ₹2000 என ரூபாய் தாளினை அச்சடிக்கும் ஒன்றிய அரசால், ‘₹‘ என்னும் குறியீட்டினைப் பொருத்த இயலாது என்று சொல்வது வேடிக்கையானதும் முட்டாள்தனமானதும் மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதுமாகும்“ எனக் கடுமையாகவே பேசினேன். “இத்தனைக் காலம் பொறுத்திருந்தீர்கள், இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள்” என தணிக்கை வாரிய அலுவலகம் கேட்டுக்கொண்டது.

ஒரு வாரத்திற்குப் பிறகு தொடர்பு கொண்டேன். “சான்றிதழில் ‘₹‘ குறியீட்டினைப் பொருத்து வதற்கு சாத்தியம் இல்லை என மும்பை அலுவலகமும் சொல்லிவிட்டது. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறோம்.” என சொல்லப்பட்டது. “மும்பையே கைவிட்ட பிறகு சென்னையால் ஒன்றும் சாதிக்க முடியாது” என்று சொன்ன நான், ஒரு தீர்வினை முன்வைத்தேன். ‘₹‘ என்பதைப் பேனாவால் எழுதும்படி சொன்னேன். பேனாவில் எழுதி சான்றிதழ் கொடுப்பது முறையல்ல என தணிக்கை வாரியம் தெரிவித்தது.

“முறையற்றது என எதிர்க்க வேண்டியவன் நான்தான். நானே சம்மதிக்கும்போது நீங்கள் தயங்கவேண்டாம். ஏற்கெனவே எனது அரை வருடத்தை விழுங்கி விட்டீர்கள்.” என்றேன். கூடவே, இதையும் சொன்னேன் : பேனாவில் எழுதப்படும், ‘₹‘ குறியீட்டின் அருகில், மண்டல அலுவலர் லீனா மீனாட்சியின் கையொப்பமும் தணிக்கை வாரியத்தின் முத்திரையும் இடம்பெற வேண்டும்.”

எனது ஆலோசனை குறித்து மண்டல அலுவலரிடம் பேசிவிட்டு தொடர்பு கொள்வதாக சொல்லப்பட்டது. அடுத்த நாள், நேரில் வந்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும்படி அழைப்பு வந்தது.

நான் அறிந்த வரையில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் (இந்தியத் திரைப்பட வரலாற்றில் எனக் குறிப்பிட்டாலும் தவறாகாது என கருதுகிறேன்), பேனாவில் எழுதப்பட்டு, சான்றிதழில் இரண்டு இடங்களில், அதாவது, மேல்பகுதியில் படத்தின் தலைப்பு இருக்கும் இடத்திலும், கீழ்பகுதியில் வழக்கமான இடத்திலும் மண்டல அலுவலரின் கையொப்பமும் வாரிய முத்திரையும் இடம்பெற்ற திரைப்படம், ‘₹2000‘ படமாகத்தான் இருக்கும்.

இவ்வாறுதான், நீண்ட நெடிய, சமரசமும் பின்வாங்கலும் அற்ற போராட்டத்தின் மூலம் நரேந்திர மோடியின் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் திட்டமிட்ட தடைகளை வென்று, ‘₹2000‘ படம், திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

பின்குறிப்பு : இத்திரைப்படம் தொடர்பான மேலும் சில அனுபவங்களை, வாய்ப்பிருப்பின், எழுதுவேன். அந்தப் பதிவுகளில், காட்சி ஊடகம், அச்சு ஊடகம், சமூக இயக்கங்கள், முற்போக்கு மற்றும் புரட்சிகர அமைப்புகள், கலை-இலக்கிய சங்கங்கள் ஆகியவைகளின் ‘₹2000’ திரைப்படம் மீதான திட்டமிட்ட புறக்கணிப்பையும், உள்நோக்கம் கொண்ட பாராமுகத்தையும் அம்பலப்படுத்துவேன். கூடவே, மக்களுக்கான திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என முழங்கிக் கொண்டிருக்கும் விமர்சன ஜாம்பவான்களின் இந்தப் படம் மீதான கள்ளமவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குவேன்.

இயக்குனர் ருத்ரன்

Pin It