கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த ஓராண்டில் இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையினரின் வாழ்க்கை என்பது உறக்கங்களற்ற இரவாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது.

தான் பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும் மோடி, அங்கு வாழும் மக்களுடைய அடையாளமான பாரம்பரிய உடையணிந்து விருந்துகளில் கலந்து கொள்வதை நம் ஊடகங்கள் முக்கியச் செய்தியாக வெளியிடுவதை நாம் அனைவரும் கண்டிருப்போம்.

ஆனால், நம்முடைய நாட்டில் வாழும் மதச் சிறுபான்மையினரின் அடையாளங்களை அழிப்பதில் தன்னுடையக் கட்சியினரும், சங்பரிவாரக் கும்பலும் காட்டும் அக்கறையை இதுவரை பெயரளவில்கூடக் கண்டிக்காத உன்னதமான பிரதமராக ஆர்.எஸ்.எஸ்.க்கு சேவையாற்றி வருகிறார் மோடி.

கிறிஸ்துவத் தேவாலயங்களின் மீதான தாக்குதல், கிறிஸ்துவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நடத்தப்படும் தாக்குதல்கள் என இந்துத்துவக் கும்பல்கள் நடத்தும் அட்டூழியங்கள் ஒருபுறமென்றால், கிறிஸ்துமஸ் திருநாளை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க, பா.ச.க. மூத்த தலைவர்களான வாஜ்பாய், மதன்மோகன் மாளவிய ஆகியோரைப் பெருமைப்படுத்தும் விதமாக சிறந்த நிர்வாகத்திற்கான நாளாகக் (GOOD GOVERNANCE DAY) கொண்டாட அறிவித்து கிறிஸ்துவர்களின் குரல்வளையில் கைவைத்தது ஒருபுறம்.

அதுவும், மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் ஸ்மிர்த்தி ராணி, “இந்து மகாசபையின் தலைவரான மதன் மோகன் மாளவியாவும், மூத்த பா.ச.க தலைவர் வாஜ்பாயும் தான் டிசம்பர் 25-ஆம் தேதியின் நட்சத்திரங்கள்; இயேசு கிறிஸ்து அல்ல” என்று கூறி அரசு அதிகாரமும், ஆட்சியும் காவிக் கும்பலின் கையாளாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தினார்.

‘சேவை அமைப்பு’ என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத், “ இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தான், இப்போது பிற மதத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து மதம் மாறியவர்களே “ என்று பேசியுள்ளார்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தும் காவிப் பாசிசக் கும்பல் மக்களவையில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பா.ச.க. ஆட்சி அமைத்ததும் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த மதவாத வன்முறைகளைப் பின்னிருந்து நடத்தும் சங்பரிவார அமைப்புகள் மோடியின் ஆட்சியில் எவ்வித தடைகளுமின்றி தங்களது நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தி வருகின்றன.

மொஹ்ஷின் ஷேய்க் சாதிக் என்னும் இசுலாமிய இளைஞரின் கொலையோடு தொடங்கிய காவிக் கும்பலின் வெறியாட்டம், மத வெறுப்பை உமிழும் பல்வேறு நடவடிக்கைகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரியானாவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தைச் சூறையாடி, அங்கு அனுமார் சிலையை வைத்தது, ’கர் வாப்சி’ என்னும் தாய்மதம் திரும்பும் நிகழ்வை நடத்தி சிறுபான்மையினரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்வது, தில்லியில் உள்ள கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது, ஆக்ராவில் தேவாலயம் சூறையாடப்பட்டது என வெறியாட்டம் இன்னும் ஓயவில்லை.

கடந்த நவம்பர் மாதம், நாகலாந்து சென்ற பிரதமர் மோடியிடம், நாடெங்கிலும் கிறிஸ்துவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்தனர் கிறிஸ்துவ அமைப்பினர். அதற்கு மறுநாளே, இந்தியத் தலைநகரத்தில் உள்ளப் புனித செபஸ்டியன் தேவாலயம் அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது.

சரஸ்வதி படங்களைக் கிறிஸ்துவப் பள்ளிகளில் வைக்கச் சொல்வதும், கிறிஸ்துவ பள்ளிக் கூடங்களின் தலைமை ஆசிரியர்களைக் “குருஜி” என்று அழைக்க மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது என மாணவர்களின் மத்தியிலும் மதவாத நஞ்சை விதைக்கும் செயலைத் தொடர்ந்து செய்கிறது இந்த அரசும், காவிக் கும்பலும்.

இவ்வாறு, வன்முறையில் ஈடுபட்டு நாட்டு மக்களிடையே மதவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் இவர்களின் செயலுக்கு தத்துவார்த்தப் பின்புலம்தரும் வேலையைச் செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். அதேபோல, இந்த செயல்களுக்கு சட்டங்களின் மூலம் வெளிப்படையான அங்கீகாரத்தை வழங்கி வருகிறது மோடி தலைமையிலான அரசு. மதவாத வெறியாட்டம் போடும் காவிக் கும்பலின் கொட்டம் அடக்கவும், மோடி தலைமையிலான மக்கள் விரோத அரசின் அராஜக போக்கை நிறுத்தவும் சனநாயக ஆற்றல்கள் இணைந்து செயல்பட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம்.

Pin It