poor man 666இந்தியக் கூட்டாட்சி எனும் போலிக் கூட்டமைப்பினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி திணறிக் கொண்டிருக்கின்றன தமிழ்த் தேசிய இனமும், இந்திய ஒன்றியத்தின் இதர தேசிய இனங்களும். இந்த நோய்த் தொற்றை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது இந்த ஆரிய பார்ப்பனியக் கட்டமைப்பு. தேசிய இனங்கள் தன்னிச்சையாக தம் மக்களின் பாதுகாப்பை முன்னெடுக்க இயலாத சூழலையே இந்திய ஒன்றியம் தேசிய இன மக்கள் மீது திணித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி தனது அதிகாரத்தைக் குவியப்படுத்தி, வலுப்படுத்தி இருக்கிறது. மேலும், தனது பெருவணிக நிறுவனங்களின் நிதி நெருக்கடியைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை மோடி திடீரென அமல்படுத்தியதிலிருந்து, ஏழைகள் துவக்கிய வீடு நோக்கிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. சமூகப் பரவலைத் தடுப்பதற்காக மோடியின் இந்திய அரசு அறிவித்த நடவடிக்கைகள் பெரும்பான்மை ஏழை மக்களுக்கு எதிரானதாகவே சென்றிருக்கிறது. ஒரு பெரிய மனித அவலமே நிகழ்வதை உலக ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக பதிவு செய்தன. இலட்சக்கணக்கில் மக்கள் தங்கள் வீடுகளை, ஊர்களை, மாநிலங்களை நோக்கி பீதியுடன் கூடிய பயணத்திற்குத் திரண்டதை உலகமே மிரட்சியுடன் பார்த்தது.

மனித நெருக்கம் அதிகம் இருக்கக் கூடிய இந்த ‘சமூக விலகல்’ என்பது குறித்தான எவ்விதப் பயிற்சியும், தெளிவுபடுத்தலும் இல்லாமல் இந்த ஊரடங்கு திடுமென மக்கள் மீது திணிக்கப்பட்டது. 2020 மார்ச் மாதத்தின் முதல் 2 வாரங்கள் வரை எவ்வித முக்கிய அறிவிப்பையும் மோடி அரசு அறிவிக்கவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என்று மக்களிடத்தில் பரவிய கொரோனா குறித்த தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர். ஒரு தொற்றுநோய்க் குறித்த மக்களுக்கு அறிவுறுத்தல் என்பது இந்தியா போன்ற நாடுகளில் நீண்ட நாள் தேவைப்படும் பயிற்சி. இது சமூக சிக்கல் நிறைந்ததும் கூட. தொற்றுநோய் என்பது சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்ல, அது அடிப்படையில் பொருளாதாரப் பிரச்சனையும் கூட. இப்படியான பல்வேறு பரிமாணம் கொண்ட தொற்றுநோய் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி காலம் கடத்தியது மோடி அரசு.

சீனாவின் வூகான் மாகாணத்தில் நோய் கடுமையாக பரவிய காலத்தில் இந்தியாவில் தொற்றுநோய் பற்றிய முன்னெச்சரிக்கைப் பிரச்சாரம் எதுவும் முன்னெடுக்கப் படவில்லை. நோய்த் தொற்று பரவும் பட்சத்தில் நோயாளிகளைக் காப்பதற்குரிய எவ்வித முன்திட்டமிடல் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப் படவில்லை.

இந்தியாவுக்குள் வந்த லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளைக் கண்காணிக்க, தனிமைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. சீனாவும், பின் இத்தாலியும், இங்கிலாந்தும் திணறிக் கொண்டிருந்ததை நன்கறிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததற்குக் காரணம் என்னவென ஆராயப்பட வேண்டும். இது எதேச்சையானதாகவோ, வெறும் அலட்சியப் போக்கானதாகவோ எடுத்துக் கொள்ளத் தக்கதல்ல.

கொரோனா தொற்றினால் உருவாகும் பொருளாதார நெருக்கடியும், மனித அவலமும் நன்கறியும் திறன் இருந்தும் இந்த நோய்த் தொற்று இந்தியாவிற்குள் ஏன் அனுமதிக்கப்பட்டது என்பதற்கான விடையை நாம் கண்டறிந்தாக வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம் அறியப்பட்ட காலத்தில் மோடி அரசு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. இதற்காக பெரும்தொகையை மோடி அரசு செலவு செய்தது. ஏழை மக்கள் வசிக்கும் பகுதி ட்ரம்ப்பின் கண்களில் படாமல் இருப்பதற்காக பெரும்சுவர்களை மைல்கணக்கில் எழுப்பிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் டில்லியில் வன்முறை வெறியாட்டமும், இசுலாமியர் மீதான இனப்படுகொலையையும் அமித்ஷா தலைமையில் கட்டவிழ்க்கப்பட்டது. இதே காலத்தில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளும், மானியங்களும் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் சிறுகுறு தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் எதிரான பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருந்தன. இப்படியான சூழலிலேயே இந்த கொரோனா தொற்று இந்தியாவில் வந்திறங்கியது.

இது ஏற்கனவே சீரழிக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களை நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். உயர்தட்டு அல்லது விமானப் பயணிகளின் வழியாக பரவும் ஒரு தொற்று நோயை எளிமையாக கடந்த காலத்தில் (சார்ஸ், எச்1என்1 போன்று) தடுத்ததைப் போல ஏன் தற்போது அரசு தடுத்து நிறுத்தவில்லை. அதே நேரம் இது சமூகப் பரவல் நிகழும்வரை அரசு அமைதி காத்தது ஏன் என்பது போன்ற கேள்விகள் தவிர்க்க இயலாதவை.

மோடி அரசு ஊரடங்கு அறிவித்தபின் நடந்த மனித அவலம் இந்தியாவின் மோசமான மக்கள் விரோத அரச முடிவுகளைக் காண்பித்தது. நாக்பூர் நகரிலிருந்து நாமக்கல் நோக்கி நடந்து வந்த 21 வயது மாணவர் பயணத்திலேயே இறந்து போனார். இது போல இந்தியா முழுவதும் கிட்டதட்ட 22க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாகி இருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கைத்தட்டல், பத்திரங்களைத் தட்டுதல், இரவு விளக்கை அணைத்து கைவிளக்கை ஏந்துதல் என பலவேறு ஆரிய மூடப்பழக்கங்களை இந்நிலையிலும் பாஜக அரசு மக்களிடத்தில் திணிக்கிறது. தொடர் சோதனை செய்வதை கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான வழியாக ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு பரிந்துரை செய்ததை இந்தியாவின் ICMR இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மார்ச் மாதத்தின் 18 ஆம் நாள் நிராகரித்தது.

இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு குறித்தோ, வேலைப் பாதுகாப்பு குறித்தோ, ஆரோக்கியப் பாதுகாப்பு குறித்தோ எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் மார்ச் மாதத்தில் மோடி அரசு வேலை செய்தது. மார்ச் மாத இறுதி வரை தொடர் சோதனை என்பதைப் பற்றிய அறிவிப்பே இல்லாமல் அரசின் செயல்பாடு தொடர்ந்தது. மேலும் இந்த நாடு தழுவிய ஊரடங்கை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே மோடி அரசு சர்வாதிகாரத்தனமாக மேற்கொண்டது. நிர்வாகம் என்பது மாநிலங்களையே சார்ந்திருக்கும் சூழலில் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் எதேச்சதிகாரத்தனத்தோடு மோடி அரசு முடிவெடுத்தது. இந்தக் காலத்தில் மாநிலங்கள் இந்திய அரசின் உதவியை எதிர்கொண்டு நின்றன.

மாநில அரசிற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை இந்திய அரசு இதுநாள் வரை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. மேலும், நெருக்கடி நிலையை சமாளிக்க நிதி உதவி வேண்டி தமிழ்நாடு மக்களிடம் கையேந்த வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. இதே காலத்தில் மோடி அரசும் தனியே நிதி உதவி வேண்டி மக்களிடத்தில் கோரிக்கை வைத்தது. ஏற்கனவே உள்ள பிரதமர் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் பணம் செலுத்த இக்கோரிக்கை எழுப்பப்படாமல், புதிதாக தனித்த வங்கிக் கணக்கு மோடிக்கே உரிய அற்ப விளம்பரம் தேடும் நோக்கில் தொடங்கப்பட்டு அதில் பணம் செலுத்தக் கோரப்பட்டது.

இதே நேரத்தில் மற்றொரு புறம் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு காவல்துறை அதிகாரத்தைத் தன்னிச்சையாக மக்கள் மீது பயன்படுத்தி வருகிறது. ஊரடங்கை மீறியதாகச் சொல்லி வெகுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது. சிறுகடைகள், தெருவோர வணிகர்கள், அன்றாட வேலைகளில் ஈடுபடுபவர்கள் என்பதிலிருந்து மருத்துவப் பணியாளர்கள் வரை காவல் துறையின் லத்தி நீண்டது. தூய்மைப் பணியாளர்களிலிருந்து, செவிலியர், மருத்துவர் என எவருக்கும் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படாமலேயே கொரோனா தடுப்புப்பணி என்பது துவங்கியது. முகக் கவசத்தின் தேவை குறித்து கேள்வி எழுப்பிய அரசு மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது போன்ற நிகழ்வுகள் அரசின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. மத்திய அரசு எதேச்சையாக நடந்து கொள்கிறது; மாநில அரசுகள் நிதி இன்றியும், வழிகாட்டுதல் இன்றியும் தங்களது எல்லையைப் பாதுகாக்க வழியின்றியும் தவிக்கின்றன.

இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்கள் முறையாக மத்திய அரசினால் கண்காணிக்கப்படவும் இல்லை; தொற்றைத் தவிர்க்கும் முயற்சியை இந்நிலையங்களில் ஏற்படுத்தவும் இல்லை. இந்தியாவின் கூட்டாட்சி முறையின் கேலிக்கூத்து இம்முறை கொரோனா தொற்றைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. மாநிலங்களின் உரிமையை முற்றிலுமாக பறித்துக் கொள்வதும், அவர்களது அதிகாரங்களைக் குறைப்பதுமான சூழலில் கொரோனா தொற்று போன்றவற்றிற்கு தமிழர்கள் பலியாவதன் அடிப்படைக் காரணியாக அமைவது இந்திய அரசின் எதேச்சதிகாரமும், நிர்வாகக் கையாலாகாத் தன்மையுமே.

உலக அளவில் முதலாளித்துவ நாடுகள் கொரோனா தொற்றினை எதிர்கொள்ள இயலாமல் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. இத்தாலி நாட்டில் 19,000 மக்களுக்கும் மேலானவர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில் மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பினைக் கொண்டிருந்ததே வளர்ந்த நாடான இத்தாலியின் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கிறோம். ஐரோப்பாவின் தனியார்மயமும், தாராளவாதக் கொள்கையும் அம்மக்களுக்கு தேவையான கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி இருப்பதை கொரோனா தொற்று அம்பலப்படுத்தி இருக்கிறது.

இந்த கொரோனா தொற்று பல்வேறு கேள்விகளை மனித சமூகத்தின் முன் எழுப்பி இருக்கிறது. உலகின் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு, சமூக மருத்துவக் கட்டமைப்பின் பலவீனம், உலக முதலாளித்துவக் கட்டமைப்பு, உலகமயம், நிதிமூலதனம், சாதிய- வர்க்க முரண்கள், சமூக ஏற்றத் தாழ்வு, மத மூடநம்பிக்கைகள், வலதுசாரி அரசியல், தனியார்மயம் என்பன உள்ளிட்டு, மேலும் தேசிய இனங்களின் விடுதலை என பல அரசியல் விவாதத்திற்கு வழி வகுத்திருக்கிறது. தேசிய இனங்களாக தம்மை விடுவித்துக் கொண்டவையும், தாராளமயவாதம் எனும் தனியார்மயத்திற்கு அடிபணியாத நாடுகளும் தம்மக்களை ஆளுமையுடன் பாதுகாத்துக் கொள்வதையும், வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் தோல்வியுறுவதையும் மீண்டுமொரு முறை உலகம் பார்க்கிறது.

“சிறும் புயலால் மெலிந்தவருக்குச் - சர்க்கார்
செஞ்ச உதவிகள் என்ன மச்சான்?

அங்கு-
நாளும் பிணத்தைப் புதைப்பதற்கு - நம்ம
நாணய சர்க்கார் உதவுமடி”

என்ற பாரதிதாசன் பாட்டை ஒருமுறை நினைவுப்படுத்திக் கொள்வோம்

- மே 17 இயக்கக் குரல்

Pin It