"குமுகியம் தோற்று விட்டதாகச் சொல்கிறீர்களே, முதலியம் எங்கே வெற்றி பெற்றுள்ளது, காட்டுங்கள்." - பிடல் காஸ்த்ரோ. (குமுகியம் = சோசலிசம்)

முதலியம் மீளவொண்ணா நெருக்கடியில் சிக்கியிருப்பதை முதலியப் பொருளியல் அறிஞர்களே ஒப்புக் கொள்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்று, உலகெங்குமே! (முதலிய = முதலாளிய, முதலாளித்துவ)

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதியின் முதல் தலைமைப் பொருளியல் அறிவுரைஞராக இருந்து விலகி விட்ட அரவிந்த் சுப்ரமணியம் சொல்கிறார்: இந்தியப் பொருளியல் பெரும் சுணக்க நிலையில் உள்ளது. அது தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

modi and nirmala sitharaman 403இந்தியப் பொருளியல் ஆழமான நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொல்கிறார் யஷ்வந்த் சின்கா. இவர் 1998-2002 காலத்தில் வாஜ்பாய் ஆட்சியில் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். 2019-20 இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க வளர்ச்சி 4.5 விழுக்காடாகச் சடசடவென சரிந் திருப்பதை அரசு வெளியிட்டுள்ள தரவுகளே காட்டுகின்றன. இந்த வீழ்ச்சியை மறைத்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதிகாரிகளும் அடுத்த காலாண்டில் நிலைமை சீர்பட்டு விடும் என்று ஆருடம் சொல்வதும் வீறாப்புப் பேசுவதும் மக்களை முட்டாளாக்கும் செயல் என்கிறார் சின்கா.

முன்னாள் நிதியமைச்சர் இப்போதைய நிலைமையை வேண்டலின் சாவு என்று வண்ணிப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சந்தையில் பண்டங்கள் வேண்டும் நிலை மறைந்து விட்டது, மக்களின் வாங்குந்திறன் செத்து விட்டது என்று பொருள். வளர்ச்சி என்பதெல்லாம் வறுமையின் வளர்ச்சியே என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த வேண்டலின் சாவு ஊர்ப்புறத்தில் வேளாண் துறையில் தொடங்கி நாடெங்கும் பிற துறைகளுக்கும் பரவி வருகிறது என்கிறார் யஷ்வந்த் சின்கா.

இந்தியப் பொருளியல் சந்தித்து வரும் நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அண்மையில் ஆளுங்கட்சியின் வசவை வாங்கிக்கட்டிக் கொண்ட ஒருவர் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி. அவரும் அங்காடியில் வேண்டல் சரிந்திருப்பதை நெருக்கடிக்கான முதன்மைக் காரணியாக எடுத்துக்காட்டு கிறார். மோதி அரசின் பணமதிப்பு நீக்கம். சரக்கு சேவை வரி ஆகியவற்றால் ஏற்பட்ட நெருக்கடியை எடுத்துக்காட்டும் போது, ஊரக வறுமைதான் அடிப்படைக் காரணம் என்கிறார். சிற்றூர்களின் உழவர்களின் வாழ்க் கைத் தகைமை வீழ்ச்சியுற்றதால் அவர்களின் வாங்குந்திறன் வற்றி அதனால் அங்காடி காய்ந்து அனைத்துத் துறைகளும் தாக்குண் டிருப்பதாக விளக்குகிறார்.

வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளியலை நான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் காப்பாற்றினேன் என்று இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி மார்தட்டிக் கொள்வது அவரது கிச்சு கிச்சு முயற்சிகளில் ஒன்றாகவே அறியப் படும். 2014 பொதுத் தேர்தலில் மோதியின் முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்று வேலைவாய்ப்பைப் பெருக்குவதாகும். நேர் மாறாக சென்ற ஐந்தாண்டு காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகவில்லை என்பதை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களை மறைப்பது எப்படி என்பதுதான் சென்ற தேர்தலின் போது மோதியின் குறி ஆயிற்று. கடைசியாக வந்துள்ள செய்திகள் பெரிதும் கவலைக்குரி யவை. கடுமையான பொருளியல் சுணக்கம் நிலவுவதால் அடுத்த ஆண்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பில்லை என்று பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தியப் பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தியும் இதே கருத்தைச் சொல்கிறார். வேலைவாய்ப்புச் சந்தையிலும் வேண்டல் செத்து விட்டது என்பதே இச்செய்திகளின் சாறம்.

வேலையில்லாதாரை உழைப்பின் சேமப் பட்டாளம் என்று கார்ல் மார்க்ஸ் சொல்வார். சேமப்பட்டாளம் பெருகுவது செயல் முனைப்பான உழைப்புப் பட்டாளத்தின் நிலைமை மீது எதிர்மறைத் தாக்கம் ஏற் படுத்தும். அதாவது தொழிலாளர்களும் பணியாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படு வார்கள்.

தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அவர் கள் மீதான பணிச்சுமையை ஏற்றவும் கூலி யைக் குறைக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும். இது வெறும் கோட்பாடன்று. இந்தியாவெங்கும் தொழில்துறை யில் இப்போதைய நடப்பு இதுவே.

பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு தொடங்கி விட்டது. ஊர்தித் துறையில் மட்டும் 3.5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட் குறைப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இது முதலியத்தின் உலகமயக் காலம் என்பதால் நெருக்கடிகளும் உலகமயமாகியுள்ளன. முதலியத்தின் தலைமையிடமாக மதிக்கப் படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளே ஆழமான, நீடித்த பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. முதலியத்தை நிலைபேறுடையதாகக் கருதப் பழக்கப்பட்டுள்ள அமெரிக்க அறிவாளர்களில் ஒருசிலரே இப்போது முதலி யத்துக்கு நேரிட்டுள்ள நெருக்கடி பற்றிக் கூசாமல் பேசுகின்றனர்.

2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முயன்று தோற்றவரும் மீண்டும் 2020 தேர்தலிலும் அதே முயற்சியில் ஈடு பட்டிருப்பவரும் ஆகிய பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க முதலியத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி அடிக்கடிப் பேசி வருகிறார். அமெரிக்கப் பொதுவாழ்வில் இவ்வளவு முக்கிய இடம் வகிக்கும் ஒருவர் முதலியத் தின் அழிவு பற்றிப் பேசி வருவது முதலியத் தின் அழியாத்தன்மை பற்றிய மயக்கம் அமெரிக்காவிலேயே கலையத் தொடங்கி யிருப்பதைக் காட்டும். அமெரிக்க சனநாயகம் பற்றிப் பேசும் போது அமெரிக்கப் பணநாயகம் கோலோச்சுவதாகவே சாண்டர்ஸ் வெளிப்படையாகப் பேசுகிறார். வால் தெருவில் நின்று கொண்டு இந்த நாட்டை ஆள்வது இங்கே தலைமையகம் வைத்துள்ள பெருங் குழுமங்களே என்று பேசுகிறார். அமெரிக் காவில் குடியரசுத் தலைவர் பதவிக்கு சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முன்னிற்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு டைய ஒருவர் முதலியப் பெருங்குழுமங் களின் வல்லாளுமை குறித்தும் முதலியப் பொருளியல் நெருக்கடி குறித்தும் பேசுவது ஒரு பத்தாண்டு முன்பு கூட எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகவே இருந்த்து.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முதலிய உலகெங்கிலும் காணப்படும் பொருளியல் நெருக்கடி சுணக்கம் என்றோ சுணக்கம் நோக்கிய சரிவு என்றோ வண்ணிக்கப்படு கிறது. இது பொருளியல் வரலாற்று மாணவர் களுக்கு 1930களில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் முதலிய உலகையும் கவ்விய பெருமந்தத்தை நினைவுபடுத்தும். உலகம் மீண்டும் ஒரு பெருமந்தம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படு வதாக வல்லுநர்கள் கருதுகின்றார்கள். இது உண்மையானால் வரவிருக்கும் நீடித்த பெரு மந்தம் மக்களின் பொருளியல் வாழ்வில் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்விலும் ஏற் படுத்தக் கூடிய இடர்கள் துயரமிக்கவையாக இருக்கும். இந்த முறை ஒரு புதிய காரணியாக சூழலியல் வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களையும் பேரிடர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முதலிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பது இருக்கட்டும், இதனைப் புரிந்து கொள்வதற்கே மார்க்சிய ஆய்வுமுறை தேவைப்படுகிறது.

முதலியப் பொருளாக்க முறையின் நெருக்கடிகளையும், அவற்றுக்கான தீர்வையும் மார்க்சியப் பொருளியல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உலகக் குமுகிய சோசலிச முகாமில் 1980களில் ஏற் பட்ட நெருக்கடியும் கூட வரலாற்று நோக்கில் முதலிய நெருக்கடிகளின் மறிவினைதான். அவற்றைப் புரிந்து கொண்டு தீர்வு காண் பதற்கான குடியாட்சியம் அந்த நாடுகளில் இல்லாது போயிற்று. அந்தப் படிப்பினை களைக் கற்று உலகக் குமுகியம் புத்துயிர் பெற்றெழுவது ஒரு வரலாற்றுத் தேவை. முதலிய முகாமில் முற்றி வரும் நெருக்கடியை மறைக்கக் குமுகியத்தின் சரிவு அல்லது வீழ்ச்சியை இனியும் பயன்படுத்த இயலாது. மார்க்சியப் பொருளியல் என்பது அடிப் படையில் முதலியப் பொருளியலையும் அதன் முரண்பாடுகளையும் விரித்துரைப்பதுதானே தவிர அது குமுகிய அமைப்புக்கான சமையல் குறிப்பன்று. இதை நான் பல இடங்களில் சுட்டியுள்ளேன். கார்ல் மார்க்சின் பெரும் படைப்பாகிய மூலமுதல் அடிப்படையில் ஒரு பொருளியல் நூல். இந்த நூலின் நோக்கம் என்ன? புதுக்காலக் குமுகத்தின் இயக்க விதியைத் தோலுரித்துக் காட்டுவதே என்றார் மார்க்ஸ். முதலியப் பொருளியல் அமைப்பு தவிர்க்கவியலாதவாறு நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்வதை மார்க்ஸ் தமது ஆய்வில் மெய்ப்பித்தார்.

முதலியம் வளர்ந்து செல்லும் போது பொது ஈட்ட வீதம் சரிந்து செல்லும் போக்கினை மார்க்ஸ் கண்டறிந்தார். ஏனைய காரணிகள் மாறாதிருக்க பொது ஈட்ட வீதம் சரிந்து செல்லும் போக்கினை ஈடு கட்டும் பொருட்டு மென்மேலும் ஈட்ட அளவைக் கூட்டிச் செல்ல ஈட்டம் = இலாபம் முதலியமும் அதன் கைக்கருவியான அரசும் முயல்கின்றன. மிகைமதிப்பு உயராமல் ஈட்டம் உயராது. மிகைமதிப்பு உயர வேண்டுமானால் உழைப்பை இன்னும் கடுமையாகச் சுரண்ட வேண்டியிருக்கும். அதாவது தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் வறுமைப் படுகுழியில் தள்ளப்படும் போக்கு தீவிர மடையும். இதனால் அவர்களின் வாங்குந் திறன் சுருங்கிப் பொருளாக்கம் தேக்கமுறும். இதையே பொருளியல் நெருக்கடி என்கிறோம்.

தொழிலாளர்களின் கூலியை (பெயர்க் கூலியை அன்று, உண்மைக் கூலியை) குறைக்க முதலாளர் வகுப்பு ஓயாமல் முயல்வதும், அந்தக் கூலியைக் குறையாமல் தக்கவைத்துக் கொள்ளவும், இயன்றால் உயர்த்திக் கொள்ளவும் (இவ்வாறு தன் வாழ்க்கைத் தகைமையைக் காத்துக் கொள்ளவும்) தொழிலாளர் வகுப்பு ஓயாமல் முயல்வதுமே வகுப்புப் போராட்டத்தின் (வர்க்கப் போராட்டத்தின்) பொருளியல் அடிப்படை ஆகும். பொதுவாகத் தொழிலாளர்களின், உழைக்கும் மக்களின் நிலைமை மோசமாகிச் செல்வதால் அவர்கள் தங்கள் தேவைகளை முழுமையாக அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறை நுகர்வுப் போக்கை வளர்த்து விடுகிறது. குறை நுகர்வு மிகைப்பொருளாக்க நெருக்கடிக்கு வழிசெய்கிறது. இந்த மிகைப் பொருளாக்கம் சார்பியலானதே தவிர அறுதியானதன்று. அதாவது குமுகத் தேவைக்கு மேல் அன்று, அங்காடி வேண்டலுக்கு மேல் இது மிகை யாகிறது. தேவைக்கும் வேண்டலுக்குமான இந்த முரண்பாட்டை முதலியப் பொருளியல் அமைப்புக்குள் தீர்க்க முடியாது.

பிரெடெரிக் எங்கெல்ஸ் சொன்னார்: பெருந்திரளான மக்களின் குறைநுகர்வு, அதாவது பெருந்திரளான மக்களின் பேணுகைக்கும் மீளாக்கத்துக்கும் தேவையான அளவுக்கு அவர்களின் நுகர்வைக் குறுக்கி விடுவது ஒரு புதிய நிகழ்வன்று. பெருந்திரளான மக்களின் குறைநுகர்வு என்பது சுரண்டலை அடிப் படையாகக் கொண்ட அனைத்துக் குமுக வடிவங்களுக்கும், ஆகவே முதலிய வடிவத் துக்கும் தேவையான நிலைமை ஆகும். ஆனால் முதலியப் பொருளாக்க வடிவம்தான் முதலில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. ஆகவே பெருந்திரளான மக்களின் குறைநுகர்வு என்பது நெருக்கடிகளுக்கு முன்தேவை ஆகிறது. நெருக் கடிகளில் அது வகிக்கும் பங்கு நெடுங்கால மாகவே அறிந்தேற்கப்பட்டுள்ளது. ஆனால் நெருக்கடிகள் இன்று நிலவுவதும் முன்பு நிலவியதும் ஏன் என்று அது நமக்குச் சொல் வதில்லை.

குமுகத்தில் வறுமை தலைவிரித்தாடுவது நெருக்கடிகள் நிலவுவதன் வெளிப்பாடே தவிர காரணம் அன்று. காரணம் எதுவென்றால் முதலியப் பொருளாக்க குறையே. முதலியப் பொருளாக்க முறையிலான நெருக்கடிகள் முற்றி வருவதை மார்க்சியப் பொருளியலின் அளவுகோல்கள் நமக்கு உணர்த்துவதோடு தீர்வுக்கும் வழி சொல்கின்றன.

முதலியப் பொருளாக்க நெருக்கடிகளுக்கு இறுதித் தீர்வு என்பது அந்தப் பொருளாக்க முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே. உடனடித் தீர்வு என்பது என்பது அந்த்த் திசையில் முன்னேறிச் செல்வதே. தொழிலாளர் வகுப்பு விடுதலை பெற விரும்பினால் அது குமுகம் முழுவதையும் விடுதலை பெறச் செய்ய வேண்டும். அனைத்து வகைச் சுரண்டலி லிருந்தும் அனைத்து வகை ஒடுக்குமுறையி லிருந்தும் விடுதலை பெறச் செய்ய வேண்டும். இது மார்க்சியம் காட்டும் அரசியல் வழி.

(இந்தியப் பொருளியல், முதலிய உலகப் பொருளியல் ஆகிய இரு நோக்கிலும் முற்றி வரும் பொருளியல் நெருக்கடி தொடர்பான ஒரு கோட்பாட்டுப் பகுப்பாய்வுக்கான கருது கோள்களையே இந்தக் கட்டுரையில் என் னால் தர முடிந்தது. இவற்றுக்கான தரவு களைத் திரட்டித் தரும் முயற்சியில் மார்க்சியப் பொருளியல் மாணவர்கள் ஈடுபட்டால் இம்முயற்சி நிறைவு பெறும்.)

தியாகு

Pin It