Indian military brutality in kashmirதடுப்புக் காவல் சட்டம் நாட்டுப் பிரிவினையின் போது வன்முறையினாலும் இடப்பெயர்வினாலும் எதிர்கொண்ட சவால்களைச் சமாளிப்பதற்காக ஒரு தற்காலிக நடவடிக்கையாகக் கொண்டு வரப்பட்டது. குற்றம் சாட்டப்படாமலேயே ஓராண்டுவரை தனி நபர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு அதிகாரமளித்தது.

தற்காலிகமாக 12 மாதகாலத்திற்குத் தடுப்புக் காவல் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, நீடித்த காலத்திற்கான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு நிரந்தரத் தடுப்புக் காவல் அதிகாரங்கள் குறித்துத் "தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது'' என்று அப்போதிருந்த உள்துறை அமைச்சர் கூறினார்.

இருப்பினும், அந்தச் சட்டம் ஆண்டுதோறும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்து, இறுதியாக 1969 இல் காலாவதியாவதற்கு விடப்பட்டது.

நாகலாந்தில் பிரிவினைவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்காக ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 இல் இயற்றப்பட்டது. அது காவல் துறையுடன் இணைந்து "கலவரப் பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுவதற்கு இராணுவத்திற்கு அதிகாரமளித்தது, அதேநேரத்தில் காவல்துறையை விட குடிமக்களுக்கு எதிராக பெரும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் படைவீரர்களுக்கு அனுமதியளித்தது.

1972 இல் அந்தச் சட்டம் வடகிழக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டது, 1977க்கும் 1983 க்கும் இடையில் அந்தச் சட்டம் பஞ்சாபில் நடைமுறைப்படுத்தப்பட்டது, 1990 இல் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசுப்படைகள் செய்த மனித உரிமை மீறல்களுக்கு நிறுவன ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நிரூபித்துள்ளது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் அது நாட்டின் பல பகுதிகளில் குடிமக்களின் பல தலைமுறைகளின் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

நேருவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நிறைவேற்றிய போது, ஒரிசாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேந்திர மொஹந்தி பாராளுமன்றத்தில், "நாம் சுதந்திர இந்தியாவை விரும்புகிறோம். ஆனால் முள்வேலி சூழ்ந்த, வதைமுகாம்களைக் கொண்ட, ஒரு சார்ஜன்ட் கண்ணில் படும் எந்த நபரையும் சுடமுடிகிற அதிகாரம் கொண்ட, ஒரு சுதந்திர இந்தியாவை நாம் விரும்பவில்லை'' என்று கூறினார்.

அரசாங்கம் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழிருந்த தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றித் தந்துவிட்டது. அந்தச் சட்டம் அமைப்புக்களை ‘சட்ட விரோதமானவை' என்று அறிவிக்கவும், அவற்றின் உறுப்பினர்களை வரையறைக்கு உட்படுத்தவும் விசாரணைக்கு உட்படுத்தவும் அதிகாரத்தை அளித்துள்ளது.

"சட்டவிரோதம்' என்ற சொல்லாக்கம் தொடக்கத்திலிருந்தே தெளிவற்றமுறையில் வரையறுக்கப்பட்டு, அரசு தொல்லையாகக் கருதும் பரந்துபட்ட பல நடவடிக்கைகளைக் குற்றமயமாக்குவதற்கு வழிவகை செய்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பிணை பெறுவது மிகமோசமான வகையில் கடினமாக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே ஆறுமாதங்கள் வரை காவலில் வைக்கப்படலாம். கொலைக் குற்றங்களில்கூட, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முழுவிவரங்களும் தரப்படவில்லை என்றால் மூன்று மாதங்களில் பிணை பெற்றுவிட முடியும்.

ஒரு தடுப்புக் காவல் சட்டமாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பலநேரங்களில் மிகவும் மோசமான வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்ட தடுப்புக் காவல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. தடுப்புக்காவல் சட்டத்தைப் போல அல்லாமல் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் குறிப்பிட்ட கால அளவில் மறு பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய பிரிவை அகற்றிவிட்டது. இவ்விதமாக, அது பாராளுமன்றம் திரும்பப் பெற்றுக் கொள்ளாதவரை காலவரம்பின்றி நீடித்துக் கொண்டிருக்கும்.

1969 இல் தடுப்புக்காவல் சட்டம் காலாவதியானதுமே உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் ("மிசா') கொண்டுவரப்பட்டது. பழைய சட்டத்தின் தடுப்புக் காவல் அதிகாரம் புதிய பெயரில் நிறுவப்பட்டு, 1975 இல் இந்திராகாந்தி அரசாங்கம் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தபோது பலப்படுத்தப்பட்டது.

மிசா சட்டம் அரசாங்கத்தை எதிர்த்த அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் குடிமைச் சமூகக் குழுக்கள் ஆகியோருக்கு எதிராக மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. 1977 இல் காங்கிரஸ் அரசாங்கம் தோற்றுப்போனபோது, திரும்பப் பெறப்பட்டது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் 1980 இல் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்புச் சட்டமாகும், அது, "வக்கீல் இல்லை, அப்பீல் இல்லை, வாதம் இல்லை'' என்று பேசப்பட்ட சட்டமாகும். அதன் தடுப்புக் காவல் அதிகாரங்களில், அது தடுப்புக் காவல் சட்டமும் மிசா சட்டமும் போன்றதாகவே இருந்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு நெருக்கமானதாக இருந்தது. இதிலும் மோசமான மனித உரிமைப் பிரச்சனைகள் இருந்தபோதும், இதுவும் மறுபரிசீலனைக்கு இடமற்றதாகவே இருந்தது.

இந்தச் சட்டம் மத்திய, மாநில அரசாங்கங்களுக்குத் தனிநபர்களை அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலுக்குக் காரணம் என்ன என்றுகூட பத்துநாட்கள் வரை குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. ‘பொதுநலன்' அடிப்படையில், தடுப்புக் காவலுக்கு ஆதரவாக தகவல் தராமல் இருப்பதற்கும், இந்தக் காலகட்டத்தில் தடுப்புக் காவலில் இருப்பவர் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளக்கூட அனுமதிக்காமல் இருப்பதற்கும் அரசாங்கத்துக்கு அதிகாரம் இந்தச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மிகவும் கொடூரமான சட்டங்களில் ஒன்றாகும். அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எளிதாக இடமளிப்பதாகவும் இருக்கிறது.

1980களின் மத்தியில், பிரிவினைவாத இயக்கங்கள் நாட்டில், குறிப்பாகப் பஞ்சாபில் ஆதரவைப் பெற்றபோது, பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (தடா) கொண்டு வரப்பட்டது. "செயலாலோ, பேச்சாலோ அல்லது எந்த ஒர் ஊடகம் வழியாகவோ சீர்குலைவு நடவடிக்கைகள்'' என்ற ஒரு தெளிவற்ற வரையறையே இதில் கொடுக்கப்பட்டிருந்தது, அதில் எந்த வடிவத்திலான எதிர்ப்பு உட்பட, மிகவும் பரவலான பல்வகை நடவடிக்கைகள் அடங்கியிருந்தது.

"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்'' என்று தேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக, இந்தச் சட்டத்தின் கீழ் "தடா' சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.

தடா சட்டம் புதிய குற்றச் செயல்களை உருவாக்கியது, காவல்துறையின் அதிகாரங்களை அதிகரிக்கச் செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இருந்த சட்டப் பாதுகாப்பைக் குறைக்கச் செய்தது. தடா சட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலங்கள் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. அது காவலில் உள்ளவர்களைத் துன்புறுத்தவும் சித்திரவதைக்கு உள்ளாக்கி வாக்குமூலங்கள் பெறுவதற்கும் வழிவகுத்தது.

பயங்கரவாதத்தை எதிர்த்த நடவடிக்கை என்ற பெயரில், இந்தச் சட்டம் விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. தடா சட்டம் நடப்பிலிருந்த 1985 இலிருந்து 1995 வரை 76,000 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதுகளில் தண்டனை விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் இருந்தது. அதன் பொருள் பல்லாயிரக்கணக்கானோர் தவறான வகையில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பதாகும்.

அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக முன்மொழிந்தது. இந்த சட்ட வரைவு, குடிமைச் சமூகத்தின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா), தடா சட்டத்தின் பல பிரிவுகளை மீண்டும் சேர்த்துக்கொண்டு, பாதுகாப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்ந்தது. பொடா சட்டம், தடா சட்டத்தின் அதிகரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரங்களைச் சேர்த்துக் கொண்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இருந்த சட்டரீதியான உரிமைகளைக் குறைத்து, காவலில் வைத்துப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சியமாக ஏற்றுக் கொள்ளவும் சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவும் வழிவகை செய்தது.

அதற்கு முந்தைய சட்டங்களைப் போலவே, பொடா சட்டமும் ‘பயங்கரவாதம்', ‘பயங்கரவாத நடவடிக்கைகள்' ஆகிய சொற்களுக்குத் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை. இது இந்தச் சட்டத்தைப் பாகுபாடான முறையில் பயன்படுத்துவதற்கு இடமளித்தது.

எடுத்துக்காட்டாக, சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்பட்ட இந்து தேசியவாதக் குழுக்களுக்கு எதிராக பொடா சட்டம் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே தேசியப் புலனாய்வு முகாமை சட்ட வரைவு 2008 இல் நிறைவேற்றப்பட்டது. இந்த என்.ஐ.ஏ. சட்டம் நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத வழக்குகளில் புலனாய்வு செய்வதற்கு ஒரு மைய முகாமையை தேசியப் புலனாய்வு முகாமையை அமைப்பதற்கு அனுமதியளித்தது.

அது வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அதிகாரமளிக்கிறது. தடா சட்டத்தில் கண்டது போலவே இதிலும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான அடிப்படைகள் இருக்கின்றன. அதற்கும் மேலாக, என்.ஐ.ஏ.வில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களின் பட்டியல் 1967 இன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலிருந்தவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இது 1967 சட்டத்தின் குற்றங்களையும் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வழி ஏற்படுத்தியுள்ளது.

1967 சட்டத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் விதிமுறை இல்லை. தேசியப் புலனாய்வு முகாமை நடவடிக்கைகளின் கீழ் (முந்தைய தடாவைப் போல) சாட்சியங்களின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படலாம், அதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக குறுக்கு விசாரணைக்கான வழி அடைக்கப்படுகிறது.

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்த மக்கள் இயக்கங்களால் 2004 இல் அது திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், ஒட்டுமொத்த தடுப்புக் காவல் சட்டமாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967 சட்டத்தை அரசாங்கம் திருத்தியது.

திருத்தப்பட்ட அந்தச் சட்டம் "சட்டவிரோத நடவடிக்கை' என்பதற்கான வரையறையில், திரும்பப்பெறப்பட்ட பொடா சட்டத்திலிருந்து "பயங்கரவாதச் செயல்' மற்றும் "பயங்கரவாத அமைப்பு' ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் திருத்தப்பட்டது.

2008 நவம்பர் 26 இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பொடா மற்றும் தடா ஆகியவற்றுக்கு இணையான கூடுதல் பிரிவுகள், அதாவது, அதிகபட்ச காவல் விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே சிறையில் அடைத்தல், பிணையில் விடுவதற்கான கட்டுப்பாடுகள் ஆகியவை இத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எதிர்பார்த்த அச்சுறுத்தல் இல்லையென்றால், ஓர் அசாதாரணச் சட்டம் நீடிக்கத் தேவையில்லை என்ற ஒரு பிரிவும் இதில் அடங்கும். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போல, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இப்பிரிவு இல்லை.

காலனிய காலத்திலிருந்து சமகாலம் வரை

காலனிய காலம்:

1818 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வங்காள ஒழுங்குமுறைச் சட்டம்தான் காலனிய இந்தியாவின் முதலாவது தடுப்புக் காவல் சட்டம் ஆகும். அரசின் பாதுகாப்பை பாதுகாப்பது என்ற பெயரில், அது தனிநபர்களை தனிப்பட்ட கட்டுப்பாடின் கீழ் வைத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளித்தது.

"எந்த நீதி விசாரணைக்கும் போதுமான காரணங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை.'' 1818 ஒழுங்குமுறைச் சட்டம் இறுதியாக இந்தியா முழுமைக்கும் விரிவாக்கப்பட்டு, 1927 வரை நடப்பில் இருந்துவந்தது.

அது விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் தேசியவாதத்தின் மீது அனுதாபம் கொண்டவர்களைக் காவலில் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

சமகாலம்: இந்தியாவில் உள்ள அனைத்துத் தடுப்புக்காவல் சட்டங்களும் எதிர்ப்பைச் குற்றச் செயலாக்கும் இந்த ஒழுங்குமுறைச் சட்டத்தின் கோட்பாடுகளையே பிரதிபலிக்கின்றன. இன்றைய சாதாரண சட்டத்தில் சந்தேகத்துக்கு இடமிருந்தால் குற்றம் நிரூபணமாகாது என்ற பிரிவு அதில் இல்லை.

காலனிய காலம்: இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 1919 - 1935 (1946 இல் காலாவதியானது) பிரிட்டனிலிருந்து போர்க்கால அவசரச் சட்டங்களாக இருந்தன. இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்திலேயே, அரசாங்கம் "பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பராமரிப்பது, இந்திய அரசுகள் அல்லது அன்னிய நாடுகளுடன் மாட்சிமை தங்கிய மன்னரின் உறவுகளைப் பராமரிப்பது, பழங்குடிப் பகுதிகளில் அமைதியைப் பராமரிப்பது, அல்லது போரைத் திறம்பட நடத்துவது ஆகியவற்றுக்குப் பங்கம் விளைவிக்கும் செயலில்'' ஈடுபடும் எவரையும் தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது.

சமகாலம்: சுதந்திர இந்தியா 1962 இல் அதன் சொந்த இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தை வரைவு செய்தது. இந்த போர்க்கால அவசரநிலை தடுப்புக் காவல் சட்டம் இரண்டாம் எழுத்திலும் உணர்விலும் உலகப்போரின் போதான 1939 ஆம் ஆண்டின் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்துடன் ஒத்திசைந்ததாகவே இருந்தது.

1962 ஆம் ஆண்டின் சட்டம் சீன வமிசாவழி இந்தியர்களுக்கு எதிராக, பெரும்பாலும் மேற்கு வங்கவாசிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒருமாதம் வரை நீடித்தபோதிலும், அப்போது சிறைவைக்கப்பட்டவர்கள் அதற்குப் பிறகும் பலமாதங்கள் சிறையிலேயே கழித்தனர்.

காலனிய காலம்: ரௌலட் சட்டம், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை, குறிப்பாக, ‘பாதிக்கப்பட்ட பகுதிகள்' என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், இரண்டு ஆண்டுகள் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு அதிகாரம் அளித்தது, ஆனால் அந்தச் சட்டம் "அராஜகவாத மற்றும் புரட்சிகர இயக்கங்களைக்' கட்டுப்படுத்துவதற்கு என்று அறிவிக்கப்பட்டாலும், அதற்கு எந்த வரையறையையும் குறிப்பிடவில்லை.

மேல் முறையீடு செய்யவோ, வழக்கறிஞர் மூலம் வாதிடவோ அந்தச் சட்டத்தின்படி உரிமை இல்லை. அந்தச் சட்டத்தின் போர்க்கால கொடூரமான அதிகாரங்களை சாதாரண காலத்திற்கும் விரிவாக்கியது. 1920 களில் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ரௌலட் சட்டம் இட்டுச் சென்றது.

சமகாலம்: ரௌலட் சட்டத்தில் உள்ளடங்கிய அதிகாரங்களும், அது இயற்றப்பட்ட சூழ்நிலைகளூம் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் (19851995), பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (20012004) ஆகியவற்றுகுப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. ‘அராஜகவாத மற்றும் புரட்சிகர இயக்கங்கள்' என்பதற்கு ரௌலட் சட்டம் விளக்கம் அளிக்காதது போலவே, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலும் "சட்டவிரோத' என்பதற்கு போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அதன் ‘பாதிக்கப்பட்ட பகுதிகள்' என்பது எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்வதற்கு வழிவகுத்தது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், தடா சட்டம் ஆகியவற்றுக்கு ரௌலட் சட்டமே முன்னோடியாக இருந்துள்ளது.

காலனிய காலம்: குடிமக்களின் 1930 களின் கீழ்ப்படியாமை இயக்கத்தின் போது, காவல்துறையின் அடக்குமுறை அதிகாரங்கள் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுத் தீவிரப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்ட அமைப்புக்களைத் தடை செய்யும் அதிகாரமளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்ற ஆணையின்றித் தேடுதல் நடத்துவது, காலவரம்பின்றி காவலில் வைத்திருப்பது, தேசியவாதச் செய்தித் தாள்களைத் தடை செய்வது, சட்டவிரோதமானது என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சங்கங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது ஆகியவற்றுக்கும் இந்தச் சட்டங்கள் அதிகாரமளித்தன.

சமகாலம்: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மேற்கண்ட சட்டங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இது சில அமைப்புக்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், தடை செய்யவும், குடிமக்களின் சில சங்கங்களைத் தேர்ந்தெடுத்து மறுபரிசீலனைக்கு வாய்ப்பின்றித் தடை செய்யவும் அதிகாரம் அளிக்கிறது.

காலனிய காலம்: காலனி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரைதன்னாட்சி அதிகாரம் கொண்ட மாகாண அரசாங்கங்களை நிறுவி, அவற்றுக்குத் தடுப்புக் காவல் சட்டங்கள் இயற்றும் அதிகாரத்தை அளித்தது. தொடக்கத்தில், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் அத்தகைய சட்டங்கள் இயற்றுவதை எதிர்த்தன. ஆனால் இறுதியாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பிரிட்டிஷ் வழியையே சார்ந்திருந்தன.

இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 1939 காலாவதியான பிறகு, மாகாண அரசாங்கங்கள் அதே சட்டத்தை ‘பொதுமக்கள் பாதுகாப்பு சட்டங்கள்' என்ற பெயரில், அவசரநிலை இல்லாத நேரங்களிலும் தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரம் கொண்டவையாக இயற்றிக்கொண்டன.

"அரசாங்கத்தைத் தூக்கியெறியும் நோக்கத்துடன் வன்முறையில் ஈடுபடும், சதிசெய்யும், தயாரிப்புச் செய்யும், அல்லது வன்முறையில் ஈடுபட முயற்சி செய்யும் எந்த நபரையும்'' கையாளுவதற்கான எந்த அவசரச் சட்டத்தையும் அறிவிக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டின் சட்டத்தின்படி தலைமை ஆளுனருக்கு (கவர்னர் ஜெனரல்) அளிக்கப்பட்ட இந்த விரிவான அதிகாரங்கள் "முசோலினியையே பொறாமைப்பட வைப்பவை'' என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ்பெற்ற விமர்சனத்திற்கு இட்டுச் சென்றன.

சமகாலம்: காலனிய அரசு ஒவ்வொரு இந்தியனும், ஆட்சியைச் சீர்குலைக்கும் குற்றச்செயலில் ஈடுபடக் கூடியவனாகவும் "சட்டவிரோதியாகவும்'' இருப்பான் என்றே கருதியது. இந்த மனபோக்கு விடுதலைக்குப் பிந்திய இந்தியாவிலும் மிகவும் மோசமாகத் தொடர்கிறது.

காலனிய காலம்: இந்தியாவின் வைசிராயாக இருந்த லின்லித்கௌ பிரபு, காந்தி தொடங்கிய "வெள்ளையனே வெளியேறு'' இயக்கத்தை நசுக்குவதற்கு, 1942 ஆகஸ்டு 15 அன்று ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பிறப்பித்தார். அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்தச் சட்டம் தெரிவித்ததாவது: "எந்த ஒரு நபருக்கு எதிராகவும் வன்முறையைப் பயன்படுத்துவதில், கைது செய்யும், காவலில் வைக்கும், கைது செய்யும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவிக்கும் அதிகாரம் உள்ளது.''

சமகாலம்: விடுதலைக்குப் பிறகு 1954 இல் நாகா கிளர்ச்சி தொடங்கியது. அந்த இயக்கத்தை நசுக்குவதற்காக 1958 இல் நேருவின் அரசாங்கம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. "எங்குமே பலமற்ற அரசாங்கம் செயல்பட முடியாது.

எங்கு வன்முறை இருக்கிறதோ, என்ன காரணமாக இருந்தாலும் சரி, அது அரசாங்கத்தால் அடக்கப்படவேண்டும்'' என்று சர்ச்சில், லின்லித்கௌ ஆகியோரின் கூற்றுக்களையே நேருவும் எதிரொலித்தார்.

நாகலாந்தில் இந்தியப் படைவீரர்கள் கட்டவிழ்த்துவிட்ட கொடுஞ்செயல்கள் பிரிட்டிஷ் படைகள் இந்தியாவில் புரிந்த அதே அளவுக்கு இரக்கமற்ற கொடூரத்தன்மை கொண்டவையாக இருந்தன. அப்போதிருந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு, பஞ்சாப், மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நன்றி: scroll.in

பகவதி பிரசாத்

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It