புதுமலர் - உங்களது சொந்த ஊர் கல்வி மற்றும் தற்போது உங்களது குடும்பம் ஆகியவை பற்றிக்குறிப்பிடவும்.

வழக்கறிஞர் ஹென்றி திபேன் நிர்வாக இயக்குனர், மக்கள் கண்காணிப்பகம் - எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் அரி­சிப்பாளையம். அதுவரை மட்டும்தான் எனது முகவரி தெரியும். என்னை பெற்றெடுத்த அம்மா யார் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் பிரசவத்தின் போது என்னைப் பெற்றெடுத்த தாய் இறந்து விட்டார் என்கிற செய்தியை நான் பின்புதான் தெரிந்து கொண்டேன். நான் பிறந்த இதே காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டிஃபைன் என்பவர் சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மருத்துவச்சேவை செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அம்மா கும்பகோணத்திற்குச் சென்று பணி செய்துள்ளார். அப்போதுதான் 1956ம் ஆண்டில் அண்ணனைக் கும்பகோணத்தில் வைத்துத்தத்தெடுத்தார். அதன் பின்பு சேலம் மாவட்டத்தில் தொழு நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை செய்ய அம்மா வந்த பின்புதான் என்னையும் மகனாகத் தத்தெடுத்து அன்பு காட்டி வளர்த்தார். இன்று நான் வளர்ந்து சமூகத்திற்காகச் செயல்படுவதற்குக் காரணம் அவர்தான்.

எனக்குப் பின்பு நான்கு சகோதரிகள். மொத்தம் ஆறு நபர்களை அம்மா தத்தெடுத்து வளர்த்தார்கள். நாங்கள் ஆறு நபர்களும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளாகவே வளர்ந்தோம். எங்கள் ஆறு பேருக்கும் ஒரு பெற்றதாய் கொடுக்கக்கூடிய அனைத்து அன்பும் அரவணைப்பும், அம்மா டிஃபைன் எங்களுக்கு கொடுத்து வளர்த்தார். அம்மாவிற்குச் சேலத்தில் சொந்த வீடு இருந்தது. அப்போது அவருக்கு மாத வருமானம் ரூ. 600/- மட்டுமே. அதை வைத்துதான் எங்களை வளர்த்தெடுத்தார். ஆடம்பரமான வாழ்க்கை இல்லை. ஒரு எளிமையான வாழ்க்கைதான் எங்களுக்கு அமைந்தது. வாரத்தில் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் இலவச மருத்துவ சேவை செய்து வந்தார். அதிகாலை 6. 45 மணிக்கு கிளம்பி விடுவார். நோயாளிகளை அவர் சந்திக்கக்கூடிய இடம் சாலை ஓரங்களில் அமைந்துள்ள மரத்தடியில்தான். அதுதான் கிளினிக்காகச் செயல்படும். குறிப்பாக முன்னாள் முதல்வர் சொந்த ஊரான எடப்பாடியிலும் அம்மாவிடம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

எங்களுக்கு விடுமுறை நாள்களில் உதவிக்காக அம்மா, எங்களை அழைத்துச் செல்வார். எங்களது அம்மா மிகவும் கண்டிப்பானவர். தேவையான விஷயங்களுக்கு மட்டுமே அனுமதிப்பார். கல்வி சார்ந்த விஷயங்களில் கடினமாகவே நடந்து கொள்வார். அதற்காக நாங்கள் போதிய உணவு இல்லாமல் வாழவில்லை. போதிய உணவு, பாதுகாப்பான வாழ்க்கை மற்றும் நாங்கள் விரும்பிய கல்வியைக் கற்றுக் கொள்வதற்கும் எங்களுக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். என்னைப் பிரசவிக்கும் போதே என்னைப் பெற்ற தாய் இறந்து விட்டார். இந்தச் செய்தியினை பின்புதான் தெரிந்து கொண்டேன். அவர் சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர். அது மட்டுமல்ல எனது தாயைப் பற்றியும், தாய் சார்ந்த உறவினர்கள் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், நான் அதனைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. இதனால் நான் என்ன சாதியில் பிறந்தேன் என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. என்னைப் பெற்ற தாய் வேறு, என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் அதற்கான தேவையும், தேடலும் எனக்கு சிறுவயதில் ஏற்படவில்லை. மேலும் எந்த அடையாளத்திற்குள்ளும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் எனக்குத் தேவையான அல்லது ஒரு குழந்தைக்குத் தேவையான அனைத்தும் எனக்கு எனது அம்மா டிஃபைன் கொடுத்தார்கள். நான், தத்துப்பிள்ளை என்ற எண்ணம் எனக்கு இன்று வரையிலும் வந்ததில்லை. அதனால் என்னைப் பெற்றெடுத்த தாய் குறித்தும், அவர்களது உறவுகள் பின்னணி குறித்தும் அறிந்து கொள்வதற்கு எனக்கு அவசியமில்லாமல் போனது.

 எனது மனைவி பெயர் சிந்தியா. நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நான் மதுரையில் சட்டக் கல்லூரி படிக்கும் பொழுது, எங்களது திருமணம் திண்டுக்கல்லில் 1982 ஆம் ஆண்டு நடந்தது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் பெயர் அனிதா, தற்போது பேராசிரியராக பணியாற்றுகிறார். மற்றொருவர் பெயர் எலினா, பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். நான் சட்டக் கல்லூரி முடித்த பின்பு மதுரையில்தான் முழுமையாகத் தங்கி உள்ளேன். மதுரையில் இருந்துதான் இந்தியா முழுவதும் எனது பணிகளைக் கொண்டு செல்கிறேன்.

பள்ளி / கல்லூரிக் கல்வி ஆகிய உங்களது கல்வி குறித்து

ஹென்றி திபேன்: என் சிறு வயது முதலே ஆங்கிலக் கல்வி கிடைப்பதற்கு எனது அம்மா வாய்ப்பு ஏற்படுத்திச் சேலம் Holy Cross பள்ளியில் எனது பள்ளிக்கல்வி தொடங்கியது. சிறுவயதில் கொஞ்சம் சேட்டை செய்பவனாக, நான் இருந்ததால் எனது அம்மா ஏழாம் வகுப்பிற்குப் பின்பு என்னைப் புதுச்சேரியில் படிக்க வைத்தார். ஆகவே, மீதமுள்ள பள்ளிக் கல்வியைப் புதுச்சேரியில் முடித்தேன். எனது கல்லூரி வாழ்க்கை என்பது திருச்சி, புனித வளனார் கலைக் கல்லூரியில் ஆரம்பித்தது. நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் மருத்துவராக முடியவில்லை. கல்லூரியில் உயிரியல் பாடம் எடுத்துப் படித்தேன். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மாணவர் இயக்கத்தில் சேர்ந்து பணி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அகில இந்திய கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் (AICUF). இந்தக் காலக் கட்டத்தில்தான் நான் மார்க்சியத்தைத் தெரிந்து கொண்டேன். இடதுசாரி சிந்தனைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு தளம் எனக்கு இருந்தது.hendri tiben 500மார்க்சிய, இடதுசாரிச் சிந்தனைகளால், நான் அதிகமாக மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நான் மாணவர் சங்கத்தில் தேசிய அளவில் பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருந்தேன். சரியான நேரத்தில் களத்திற்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. மேலும் எனக்கு வழிகாட்டியவர்களும், என்னோடு படித்த சக மாணவர்களும், எனக்குள் சமூக சிந்தனை வளர்வதற்குக் காரணமாக இருந்தார்கள். கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் பலர் இடதுசாரிச் சிந்தனை உள்ளவர்களாக இருந்தார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் அன்றைய அரசியல் சூழல். இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் அறிவித்த அவசரகால நெருக்கடி நிலையின் காரணமாகத்தான், அதற்கு எதிரான இடதுசாரி சித்தாந்தங்கள் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனால்தான் எங்கள் தலைமுறைக்கு இடதுசாரிக் கருத்துக்களை உள்வாங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக என்னை உருவாக்கியதில் தற்போது ஐ. நா சபையின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்டுவரும் திரு. D.J ரவீந்திரன் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. மேலும் எனது அம்மா பிரான்ஸ் நாட்டில் இருந்து, இந்தியாவிற்குப் பணி செய்ய வருவதற்குக் காரணமாக இருந்தவர்கள் அருட்தந்தை ஜெராக் மற்றும் அருட்தந்தை அபேபியர் ஆகியோர்தான், பின்னாளில் நான், மாணவர் இயக்கத்தில் தேசிய அளவில் செயல்படக் காரணமாக இருந்தனர். இவரோடு அருட்தந்தை கிளாட் என்பவரும் என்னை ஊக்கப்படுத்தியதில் முக்கியமானவர். சமூகம் சார்ந்த சிந்தனை, இடதுசாரிச் சிந்தனை இதையெல்லாம் எனக்குக் கொடுத்தவர்கள் எனக்கு வழி காட்டியவர்கள் அனைவருமே நம்மூரைச் சேர்ந்தவர்களே!

எனது கல்லூரிப் பருவத்தில் அவசரக்காலம் தொடர்ந்து இருந்தது. இதன் காரணமாக உரிமையியல் பாதையில் நான் சிந்திப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் அது உதவியது. மேலும் அவசர நிலையை எதிர்த்துத் தீரத்துடன் போராடியவர்கள் சிறை சென்றதும் எனக்கு ஆழமான படிப்பினையாக மாறியது.

வழக்கறிஞராகப் பணியாற்றத் தேர்வு செய்த காரணம் மற்றும் தற்போது உங்களுடைய வழக்கறிஞர் பணி?

ஹென்றி திபேன் - நான் திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கத்தின் (AICUF) தேசிய அளவில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, முழு நேரப் பணியாளராகச் பணியாற்ற சென்னை சென்றேன். அப்போது திரு. I. பால்ராஜ் என்பவரும் முழுநேரப் பணியாளராக என்னோடு சென்னையில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், வேடசந்தூர் அருகாமையில் இருந்த அழகாபுரி அணை உடைந்து விட்டது. இந்த அணை உடைந்ததால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் இந்த நிகழ்வு பெரும் பேசு பொருளாக இருந்தது.

அணை உடைந்த செய்தி அறிந்தவுடன், அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று களப்பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஐ. பால்ராஜ் அவர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டது. அப்போது எங்களோடு இருந்த இன்னும் சிலர் அப்பகுதிக்குச் செல்ல முடியாது. பெரிய அளவில் வெள்ளம் அடித்து செல்கிறது. நீங்கள் செய்வது ஆபத்தான பணி. எனவே அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். நாங்கள் வேடசந்தூர் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு எங்களோடு இணைந்து பணியாற்றுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயலாற்றும் AICUF இயக்க மாணவர்களையும் இணைத்துக் கொண்டு செயலாற்றினோம்.

வேடசந்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றிய காலகட்டத்தில்தான், எனக்குச் சாதி குறித்த அறிமுகமும், புரிதலும் ஏற்பட்டது. என்னோடு இணைந்து பணியாற்றி கொண்டிருந்த ஐ. பால்ராஜ் அவர்கள், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால், இவர் சாதியச் சித்தாந்தத்தை எல்லாம் கடந்து சமத்துவத்தை நேசிக்கக் கூடிய ஓர் ஆளுமையாக இருந்தார். குறிப்பாக அவர் வழக்கறிஞர் எப்சிபாய் என்ற ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார். இதை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறேன் என்றால், மாணவர் பருவத்தில் இருந்து சாதிகளைக் கடந்து, பலர் செயலாற்றி வருகிறார்கள் என்பதை பதிவு செய்வதற்காகத்தான். மாணவர்களாகிய நாங்கள் மறுவாழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான், சாதியின் முரண்பாடுகளை பார்க்கவும், அனுபவிக்கவும் முடிந்தது. குறிப்பாக நாங்கள் எல்லாம் சென்னையில் இருந்து வந்து பணியாற்றும் மாணவர்கள் என்பதால், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் எந்தப் பாகுபாடும் இல்லை. எந்த அறிவுறுத்தல்களும் எங்களுக்குத் தரப்படவில்லை. நாங்கள் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பணியாற்றும்போதும், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பணியாற்றும்போதும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களோடு இணைந்து பணியாற்றிம் போதும் எங்களுக்கு எதிர்ப்பும் அறிவுறுத்தல்களும் வந்தது. குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலர், தங்களை உயர்சாதியினராக நினைத்துக் கொண்டு பணி செய்யவிடாமல் எங்களைத் தடுத்தனர். எங்களிடம் தலித் மக்களோடு இணைந்து அல்லது அந்தப் பகுதியில் சென்று பணியாற்றுவது ஆபத்தானது என்றும், சிரமங்கள் வரும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தினார்கள். இந்தச் செயல்பாட்டின் மூலமே, நாங்கள் சாதியப் பாகுபாட்டை, அதன் கூர்மையை மற்றும் சாதியப் பார்வையைப் புரிந்து கொண்டோம்.

அப்பகுதியிலேயே நாங்கள் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதனால் இளம் மாணவர்கள், இளம் மாணவிகள் ஒரே வீட்டில் கூட்டாக இணைந்து வாழக்கூடிய, குறிப்பாக பொதுவுடைமை (commune) வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். எங்களுக்குள் எவ்விதப் பாகுபாடுகளையோ, ஏற்றத்தாழ்வுகளையோ மற்றும் சிரமங்களையோ உண்டாக்காத அருமையானதோர் பொதுவுடமை வாழ்க்கையை வாழ்ந்த அனுபவம் அங்கு எங்களுக்குக் கிடைத்தது. அதே காலகட்டத்தில் இம்மக்களை சங்கமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் பணி என்பது, அப்போது சாதியத்துக்கு எதிரானதாக இல்லை. ஆனால், கூலி உயர்வு பேசக்கூடிய, கூலி உயர்வுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு சங்கமாக அது செயல்பட்டது. இதனால் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டங்கள் நடத்தவும், அதில் பங்கெடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த இரவு நேர சங்கக் கூட்டங்கள்தான் எங்களுக்குப் பல்கலைக்கழகங்களாக மாறின. மாலை ஆறு மணியிலிருந்து இரவு பன்னிரெண்டு மணி வரை வேடசந்தூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது பல்கலைக்கழகங்களில் படித்த போது கிடைத்த பல விசயங்களை, எங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தூக்கி எறிவதற்கான அனுபவமாக இருந்தது. இந்த கிராமங்கள்தான் எங்களுக்கு பெரிய அனுபவங்களைக் கொடுத்தது. ஒவ்வொரு கிராமத்திலும், எங்களது பயிற்சியின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட குழுக்களை உருவாக்கினோம். அப்படிக் குழுக்களை உருவாக்கும் பணிகளின் போதுதான் சகோதரி லூசி அறிமுகமானார். நாங்கள் உருவாக்கிய முக்கிய குழுவில் (Core Committee) அவர் பங்கேற்புச் செய்தார். இவர் பின்னாளில் மறைந்த பேராசிரியர் சேவியர் ஆரோக்கியசாமி அவர்களின் மனைவியானார். எங்கள் குழுவிலேயே சமூகப்பணி படித்த ஒரே நபர் சகோதரி லூசி அவர்கள்தான். இவர் ஒரு முழு நேரச் சமூகப் பணியாளராக மாறியதும், இதே வேடசந்தூர் பகுதியில்தான்.

இந்தக் காலகட்டங்களில் வேடசந்தூர் பகுதியில் விவசாயச் சங்கங்கள் வலுப்பெற்றன. விவசாயச் சங்கங்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்திற்குப் பின்பு எங்கள் குழுவினர் தொடர்ந்து விவாதித்தோம். குழு விவாதத்தில் குறிப்பாக ஐ. பால்ராஜ் அவர்கள் “இனிமேல் நாம் பொது வாழ்வில் பயணம் செய்ய வேண்டும் என்றால், உன்னைப் போன்ற நபர்கள் சட்டம் படிக்க வேண்டும். அதன் மூலம் காவல்துறையை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் அவசியம் நமக்கு ஏற்படும். அப்பொழுது சட்டப்படிப்பு நமக்குப் பாதுகாப்பாக அமையும்” என்ற கருத்தை முன் வைத்தார். இக்கருத்து என்னை சிந்திக்க வைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை காவல்துறையினரைச் சந்திப்பதற்கு, எந்த வாய்ப்போ, சூழலோ அமையவில்லை. நான் மாணவர் பருவத்திலேயே பொது வாழ்வில் தலையீடு செய்த பின்பு காவலர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடக்க காலத்தில் ஒரு வகையான அச்ச உணர்வு இருந்தாலும், நாம் செய்யக்கூடிய நேர்மையான பணியானது, மக்களுக்கான பணி என்பதால், அந்த அச்ச உணர்வு காலப் போக்கில் மறைந்துவிட்டது. இந்தச் சூழலில்தான், நாம் வழக்கறிஞராகப் படித்தால், மக்களுக்கு இலவசச் சட்ட உதவி வழங்க முடியும், போலீசாரையும் எதிர்கொள்ள முடியும் என்ற உணர்வு மேலோங்கியது. அதுதான் நான் வழக்கறிஞராகப் படிப்பதற்குக் காரணமாக அமைந்தது. இதனால் நான் மதுரைக்குச் சென்று சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்தேன். தற்போது காவல் சித்திரவதைக்கு எதிரான பல வழக்குகளில் நான் தலையீடு செய்து வருகிறேன். குறிப்பாகத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு, சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கு போன்றவை. இப்படித் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறக்கூடிய காவல் சித்திரவதைக்கு எதிரான வழக்குகளில் மக்கள் கண்காணிப்பகம் வாயிலாக இலவசச் சட்ட உதவி வழங்கக்கூடிய பணிகளைச் செய்து வருகிறோம்.

பொதுவாழ்விற்கு வந்த காரணம்

ஹென்றி திபேன் - நான் பொது வாழ்விற்கு வருவதற்கு மிக முக்கியக் காரணம் அம்மாவின் வாழ்க்கை. நான் எனக்கு விவரம் தெரிந்த நாள்கள் முதல் அம்மாவின் சமூக பணியைப் பார்த்தே வளர்ந்தவன். வாரத்தில் மூன்று நாள்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவப் பணி செய்வதற்காகச் சேலத்தைச் சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கு அதிகாலையிலேயே அம்மா கிளம்பிச் செல்வதைப் பார்த்தவன். பல நேரங்களில் அம்மாவோடு வெகு தூரங்களில் உள்ள கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களிடம் அம்மா காட்டிய அன்பும், கரிசனையும் என்னை இந்தப் பொது வாழ்விற்கு ஈர்த்தது.

அம்மா சில நேரங்களில் என்னிடமும், என்னுடைய சகோதர சகோதரிகளிடமும் ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்ப முன் வைப்பார். நான் மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். வாய்ப்பற்ற மக்களுக்காக நான் உதவி செய்து வருகிறேன். நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்பார். அந்தக் கேள்வி என்னைத் திரும்பத் திரும்ப சிந்திக்கச் வைத்தது.

பொது வாழ்விற்குப் பணி செய்ய வரும்பொழுது, நாம் குறைந்தபட்சம் ஒரு தகுதியோடு வர வேண்டும். இங்கு நான் தகுதி என்று குறிப்பிடுவது நமக்கான வாழ்வாதாரத் தேவைகளுக்காகப் பொருளை ஈட்டக்கூடிய ஒரு கல்வியை. அதற்கான வாய்ப்புச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதை அம்மா என்னிடம் அடிக்கடி அறிவுறுத்துவார். இதனடிப்படையில்தான் வேடச்சந்தூரில் நான் மூன்றாண்டுகள், முழு நேரமாகக் களப்பணி செய்தபின்பு, நான் என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது இந்த பணிக்கு ஏற்றாற் போல் ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நான் சட்டம் படிக்க ஏற்றுக் கொண்டேன். இந்த சிந்தனையானது எனது அம்மா எனக்கு ஒவ்வொரு முறையும் வலியுறுத்திய கருத்தாகும். குறைந்தபட்சம் சமூகப் பணிக்கு என்னை ஆயுத்தப்படுத்தி வந்த நிலையில்தான், இன்று பல அச்சுறுத்தல்கள், பல சவால்கள் எனக்கு எதிராக நிகழ்ந்த போதும் அதை எதிர்க்கத் தேவையான துணிச்சலைத் எனக்குக் தருகிறது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் (PUCL) உங்கள் செயல்பாடுகள்

ஹென்றி திபேன் - மதுரையில் நான் சட்டம் பயின்று கொண்டிருந்த பொழுது பல கசப்பான அனுபவங்கள் எனக்குச் சட்டக் கல்லூரியில் ஏற்பட்டது. ஏனென்றால், சட்டக் கல்லூரியின் கட்டமைப்பு அவ்வாறு இருந்தது. முறையான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாத சட்டக் கல்லூரியைப் பார்த்தேன். இதனால் நான் நாள்தோறும் கல்லூரிக்குச் செல்லக்கூடிய மாணவனாக இல்லை. எனக்கு அதில் உடன்பாடும் இல்லை. மேலும் கல்லூரி மற்றும் சுற்றுச்சூழல் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ஆதலால், நான் தேர்வு செய்த கல்வி தவறானதோ என்கிற ஒரு தயக்கமும் எனக்குள் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பியூசிஎல் (PUCL) அமைப்புப் பற்றி நான் அறிந்து கொண்டேன். நானே சிலரிடம் அறிவுரை பெற்று பியூசிஎல் அமைப்பைக் கட்டமைத்தேன். பியூசிஎல் அமைப்புதான் எனது மனித உரிமைப் பணிக்கு முழுமையான அடித்தளம் அமைத்தது. மதுரையைச் சார்ந்த அமெரிக்கன் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவரான பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள் தலைவராகவும், நான் செயலாளராகவும் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

இக்காலகட்டத்தில்தான் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் பிரேம்குமார் என்பவர் காவல் ஆய்வாளராகப் பணி செய்து வந்தார் அந்த சமயத்தில், நல்லகாமன் என்கிற ஒரு முன்னாள் இராணுவ வீரர் மீது நடத்திய காவல் சித்திரவதை நிகழ்வுதான் நான் செய்த முதல் கள ஆய்வுப் (Fact Finding) பணியாகும். இந்த கள ஆய்வானது எனது வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஏனென்றால் நான் தலையீடு செய்த இந்த வழக்கில் குற்றவாளியான காவல் ஆய்வாள பிரேம்குமார் என்பவர் பின்பு காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பொறுப்பேற்ற நிலையில், நான் தலையீடு செய்த வழக்கின் கீழ் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, பணிக்காலப் பலன்கள் எதையும் பெற முடியாமல், தண்டனை கிடைக்கப்பட்டு பின்னாளில் இறந்து போனார்.

நான் பியூசிஎல் அமைப்பில் பயணம் செய்த காலகட்டத்தில்தான் மதுரையில் 1982 ஆம் ஆண்டில் இரண்டு வார காலம் தொடர் நிகழ்வுகள் நடத்தினோம். குறிப்பாகக் காவல் சித்திரவதைக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக இதனை நான் பதிவு செய்கிறேன். அதில் குறிப்பாக சினிமா நடிகர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்புச் செய்தார்கள். எங்களது பிரச்சார இயக்கத்தின் நோக்கம் என்பது சட்ட விரோதமாகச் செயல்படும் காவலர்களை எதிர்த்துத்தான். சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரமாக எங்களுடைய பிரச்சாரம் நடைபெற்றது. குறிப்பாகப் பகல்பூர் சிறையில் அனந்த் பர்வர்தன் கண் பறிக்கப்பட்ட சம்பவத்தை முன் வைத்துப் பிரச்சாரங்களை மேற்கொண்டோம். சிறையில் நடைபெறக்கூடிய தாக்குதல்களைக் கண்டித்தும், தர்மபுரியில் நடந்த போலி மோதல் சாவுகளைக் (Encounter) கண்டித்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக நிறையப் படங்களை நாங்கள் காட்சிப்படுத்தியுள்ளோம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து வந்து உரையாட வைத்தோம். இதில் ஒன்றாக எங்கள் பிரச்சாரத்தின் இறுதி நிகழ்வாக 31ஆம் நாள் வாயில் கறுப்புத் துணி கட்டி, மௌன ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டிந்தோம். மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்­திலிருந்து பேரணி தொடங்கி, IMA அரங்கில் நிறைவு பெறுவதாகத் திட்டமிட்டிருந்தோம். இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர்கள் கே. ஜி. கண்ணபிரான், பி. வி. பக்தவச்சலம், நீதிபதி தார்குண்டே ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருந்தார்கள். நாங்கள் முன்னெடுத்த சித்திரவதைக்கு எதிரான பேரணி நடந்துவிடக்கூடாது எனத் திட்டமிட்ட காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதில் நீதிபதி உட்பட அனைவரும் அடித்து விரட்டப்பட்டார்கள். குறிப்பாக ஒருங்கிணைப்புப் பணி செய்த என்னை காவல்துறை­யினர் குறி வைத்து, என்னைத் தாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேடினார்கள். ஏனென்றால், நான் செய்யக்கூடிய அனைத்துச் செயல்பாடுகளும் மிக எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் என் தோற்றம் இருந்தது. என்னுடன் பணி செய்யக்கூடிய தோழர்களில் நான் உயரமானவனாக இருப்பேன். ஆகவே காவல் துறையினர் எளிமையாக அடையாளம் காணக்கூடிய நபராக எனது உயரம் என்னைக் காட்டியது.

மதுரையில் பியூசிஎல் தலைமையில் முன்னெடுத்த பேரணியில் நீதிபதி தார்குண்டே பங்கெடுத்த நிலையிலும் காவல்துறை தன்னுடைய வன்முறையை நிகழ்த்துவதற்குத் தயங்கவில்லை. இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது. காவல் வன்முறைக்கு எதிராகச் செயல்படுவதற்கு இந்நிகழ்வு அடித்தளமாக எனக்கு அமைந்தது. பேரணியில் பங்கேற்ற அனைவரும் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டு, பலர் இரத்தக் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்கள். நானும் வெவ்வேறு இடங்களில் போலீசாரின் கண்களிலிருந்து மறைந்து தப்பித்து ஓடி எனது இயக்கப் பணிகளை செய்து வந்தேன். இந்நிலையிலும் போலீஸ் நடத்திய தடியடியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகத் தமுக்கம் மைதானம் வழியாகச் சென்ற போதுதான், அன்றைய மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் எதிரே அவரது மெட்டலோ வேனில் வந்தார். அவர் என்னைப் பார்த்தவுடன் “உன்னைத்தான் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீ ஏன் இங்கு வந்தாய்?” எனச் சொல்லி அவருடைய வேனில் ஏற்றிக் கொண்டார். அவரது மெட்டலோ வேன் நேராக மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றது. அப்போது மருத்துவமனையைச் சுற்றி அனைத்து இடங்களிலும் காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள். இந்நிலையில், ஐயா பழ. நெடுமாறன் அவர்கள், “எக்காரணத்தைக் கொண்டும், எனது வேனை விட்டு கீழே இறங்கி விடாதே!” என்று தெரிவித்தார். “போலீசார் எனது வேனைச் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால் இது உனக்குப் பாதுகாப்பான இடம்” என்று சொல்லி வேனின் உள்ளேயே என்னை மறைத்து வைத்தார். அதன் பின்பு அங்கிருந்து என்னை அழைத்து வந்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார். மதுரையில் பியூசிஎல் சார்பாக முன்னெடுத்த போராட்டத்தின் போது, என்னைப் போலீசார் வலை போட்டுத் தேடினர். அப்போது என்னைக் காப்பாற்றியவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள்தான்.

மக்கள் கண்காணிப்பகம் தொடங்கிய வரலாற்றுப் பின்னணி என்ன?

ஹென்றி திபேன் - மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பு தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் மதுரையை மையமாக வைத்து 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளில் தொடங்கிய அமைப்பாகும். சமூகத்தை மேம்படுத்துவதற்காக சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) திட்டம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா நகரில், நடைபெற்ற இரண்டாவது அகில உலக மனித உரிமை மாநாட்டின் தாக்கம்தான் மக்கள் கண்காணிப்பகம் உருவாவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்த மாநாட்டில் நான் பங்கு எடுப்பதற்குத் திருமிகு. மாயா தர்வால அவர்கள்தான் எனக்குள் அழுத்தத்தையும், வாய்ப்பையும் உருவாக்கினார். ஆம், இந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காகப் பயணம் மேற்கொண்ட நான், தொடக்கத்தில் ஒரு பதட்டத்துடன், ஒருவகை பயம் கலந்த மனநிலையிலேயே அங்கு சென்றேன். அகில உலக இரண்டாவது மனித உரிமை மாநாட்டிற்குச் சென்ற பின்னர்தான், மாநாட்டின் வெளி அரங்குகளில் கிடைத்த அனுபவங்கள், மனித உரிமைப் பாதையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்ட மனித உரிமைத் தளத்தை நாம் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கட்டமைக்க வேண்டும் என்ற உந்துதலும், நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தென் மாவட்டக் கலவரங்கள், பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்தக் கலவரங்களைக் கண்காணிப்புச் செய்தது, அதில் கிடைத்த தரவுகள் ஆகியவைதான் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு மனித உரிமைக் களத்தில் மிக வலுவாகச் செயல்படுவதற்குக் காரணமாக அமைந்தது. சாதியத்திற்கு எதிரான, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான, குழந்தைகள் உரிமைகளுக்கான, சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஒரு வலுவான மனித உரிமைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்பட்டது. நாம் உருவாக்கும் கட்டமைப்பு என்பது ஒரு தரப்பினரால் உருவாக்கக்கூடிய, ஒரு சாராருக்காகப் பேசக்கூடிய, ஒரு சாராருடைய பிரச்சனையைக் கவனிக்கக் கூடிய, கண்காணிக்கக் கூடிய கட்டமைப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். நமது சமூகத்தில் எந்தத் தரப்பினர் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அவர்களுக்காகப் பேசக்கூடிய, அவர்களுக்காகப் போராடக் கூடிய, இலவச சட்ட உதவி தரக்கூடிய ஓர் அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. அதை மக்கள் கண்காணிப்பகம் இப்போதும் செய்து கொண்டிருக்கிறது.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உருவானதற்கான காரணம் மற்றும் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்களிப்பு

ஹென்றி திபேன் - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (Joint Action Against Custodial Tourture JAACT) என்பது தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களில் சித்திரவதைகளைத் தடுப்பதற்காகச் செயல்படும் கூட்டியக்கமாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவர் வெள்ளை நிறப் போலீஸ் ஒருவரால் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 22 ஜுலை 2021 அன்று தந்தை, மகன் இருவரையும் அடித்துக் கொலை செய்தனர். இவ்விரண்டு சம்பவங்களும் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைகளைத் தடுப்பதற்காகப் பல்வேறு உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாகக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது.

காவல் சித்திரவதைகளைத் தடுப்பதற்கு உரிமையும், கடமையும் நமது சமூகத்தில் அனைவருக்கும் உண்டு. அதனால் தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு அரசியல் கட்சிகள் இயக்கங்கள், அமைப்புகள் என 86 அமைப்புகள் கூட்டாக இணைந்து உருவாக்கிய கூட்டியக்கம்தான் ஜேக்ட் அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெரும்பான்மையான கட்சிகள், இயக்கங்கள் இதில் பங்கேற்றுச் சித்திரவதைக்கு எதிராகச் செயல்படுகின்றனர். மாநில, மாவட்ட அளவில் செயல்படுகின்ற பொறுப்பாளர்களுக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சிகள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தரநிர்ணங்கள், சட்டங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கி வருகின்றோம். சித்திரவதைகளை தடுத்து மனித உரிமைகளைப் பாதுகாத்து, வளர்த்து வரும் பணிகளை இணைத்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் செயல்பட்டு வருகிறது.

தலித்துகள் நலம் காப்பதில் மக்கள் கண்காணிப்பகம்

ஹென்றி திபேன் - மக்கள் கண்காணிப்பகம், பணி ஆரம்பித்த நேரத்தில் 1995 ஆம் ஆண்டில் தென் தமிழகத்தில் இருந்த சாதிய மோதல்கள்தான் இப்பணியில் எம்மை ஈடுபடச் செய்தது. அதிலும் அதிகமான படிப்பினைகள், குறிப்பாக SC/ST வன்கொடுமைச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படாத நிலை இருந்தது. தலித் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டுக் கொள்ளாமல் அரசு அமைதி காத்தது மிகவும் வியப்பாக இருந்தது. இப்படி ஒரு சட்டம் இருந்தும் காவல்துறை பாகுபாட்டோடு செயல்பட்டது. எங்கள் தலையீட்டில் கிடைத்த நேர்த்தியான அனுபவங்கள் மூலம் பெற்ற தரவுகளை வைத்து, தென் மாவட்டத்தில் நடந்த சாதிய மோதல் பின்னணியில் அறிக்கைகளை தயார் செய்தோம். அதே நேரத்திலே Amnesty International, Human Rights Watch போன்ற அமைப்புகளுக்குக் கடிதம் எழுதினோம். அந்த கடிதத்தின் தாக்கமாக நொறுக்கப்பட்ட மானுடம் (Broken People) என்ற Human Rights Watch-ன் அறிக்கை வெளியானது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை மையப்படுத்திப் பல மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று, களத்தில் பணி செய்தவர்களுடன் இணைந்து, நீங்கள் பரிந்துரை கொண்டு வந்தால்தான், பங்கேற்பு முறை சரியாக இருக்கும் எனக்கூறி அவர்களோடு விவாதித்தோம். இதனால் அமெரிக்காவில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தலைமையகத்தில் ஒப்புதல் பெற்று 1997 ஆம் ஆண்டு நாம் பரிந்துரை செய்த உறுப்பினர்களைப் பெங்களுரில் ஒன்றிணைத்து அந்த அறிக்கைக்கான பரிந்துரையை இறுதி செய்தோம். மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) செயலாக்கத்தில் இது போன்று ஒரு கூட்டத்தைக் கூட்டி விவாதித்துப் பரிந்துரையை இறுதி செய்தது வரலாற்றில் முதல் நிகழ்வாகும். இது ஒரு மிகப் பெரிய வெற்றியாகும். இவற்றையெல்லாம் மக்கள் கண்காணிப்பகம் என்ற பெயரில்தான் செய்தோம்.

இதே காலகட்டத்தில் உலகளாவிய பிரகடனம் அறிமுகமாகி 40 வருடங்கள் கடந்த நேரத்தில் தலித் உரிமைகளும் மனித உரிமைகளே என்பதை வலியுறுத்துகின்ற நாடு தழுவிய பரப்புரை தேவை என்ற கருத்தை, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேசிய அளவில் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் நான் தெரிவித்தேன். அந்த வேண்டுகோள்தான் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட தலித் மனித உரிமைப் பிரச்சாரம் (Campaign for Dalit Human Rights) உருவாவதற்கான முதல் கட்டமாக இருந்தது. தலித்துகளுக்காகத் தேசிய தலித் மனித உரிமைப் பிரச்சாரத்தினை (National Campaign for Dalit Human Rights-NCDHR) ஒரு தலித்தாகப் பிறந்தவர், முன்னின்று நடத்த வேண்டும் என்ற கருத்தை நான் முன் வைத்தேன். மற்றவர்கள் இதனைப் புரிந்து கொள்வதற்குக் கடினமான சூழ்நிலையிலும் உறுதியாக நான் நின்றது வரலாற்றில் முக்கியமானதாகும். அதனால்தான் மார்ட்டின் மக்குவா அவர்கள் தலைமையில் இப்பணிகளை அப்போது கொண்டுச் சென்றார்கள். அவ்வாறு பணிகள் மேற்கொண்ட போதுதான் தேசியக் குழு உருவாக்கப்பட்டது. இதை உருவாக்குவதில் மக்கள் கண்காணிப்பகத்திற்கு பெரிய பங்கும், பணியும் இருந்தது என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.

அதற்கு பின்பு டர்பன் மாநாடு வரை பல பணிகளில் தேசிய, சர்வதேசத் தலையீடுகள் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டர்பன் மாநாடு. அதற்குப் பின் தலித் மனித உரிமை சார்ந்த பயிற்சிகள் தேசிய அளவில் கொண்டு செல்லப்பட்டது. தலித் மனித உரிமை கண்காணிப்பு என்ற பணியை தொடங்குவதற்கு சுமார் 1000 நபர்களைத் தேசிய அளவில் தயார் செய்து, தயாரிப்புப் பணிகளெல்லாம் ஒவ்வொரு பயிற்சி முகாமாக பத்து நாள்கள் நடைபெற்றது. அதற்குப் பின்பு 1000 நபர்களில் குழுக்களாக தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு அறிக்கை எழுதுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டது. தேசிய அளவில் 10 பயிற்சிகள் நடந்திருக்கும். பின்னர் அதில் தேர்வு செய்யப்பட்ட, எனக்கு தெரிந்து ஒரு 66, 70 பயிற்சி மாணவர்கள், பத்து வாரங்கள் மதுரையில் நம்முடன் தங்கியிருந்தார்கள். இவர்களெல்லாம் முக்கியப் பங்காற்றியவர்கள். இன்று இந்தியா முழுவதும் தலித் மனித உரிமைப் பணியினை முன்னின்று செய்யக்கூடிய பலர் மக்கள் கண்காணிப்பகம் முன்னெடுத்த பயிற்சியில் பங்கு பெற்றவர்கள் என்று பெருமையுடன் கூறலாம்.

தலித் மனித உரிமைப் பணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கொண்டுச் செல்லப்பட்ட பணியாகும். இன்று தலித் மனித உரிமைக்காகச் செயல்படுவோர், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பயிற்சியில் பங்கேற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதனை மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் பெருமையோடு கூறலாம். தமிழ்நாட்டில் தலித் மனித உரிமைப் பணி குறித்து இரண்டு நபர்கள் மிகவும் சிறப்பாகச் சொல்வார்கள். திரு. தொல். திருமாவளவன் அவர்களை நான் சந்திக்கும் போது, பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தான அறிமுகமும் புரிதலும் உங்கள் மூலமே கிடைத்தது என்றும், நீங்கள் இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் குறிப்பிடுவார். இதேபோல் மறைந்த திரு. சந்திரபோஸ் அவர்களும் பெருமையுடன் கூறுவார். தலித் மனித உரிமை என்பது, பேசுகின்ற விசயமாக மட்டுமில்லாமல், செயல்படுகிற விசயமாகவும் மக்கள் கண்காணிப்பகம் மாற்றியது. தலித் மனித உரிமை சார்ந்து தேசிய அளவில் பல்வேறு பயிற்சிகளை நாம் முன்னின்று நடத்தியுள்ளோம்.

சிறுபான்மையோர் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்.

ஹென்றி திபேன் - சிறுபான்மையினர் உரிமைகளுக்காக மக்கள் கண்காணிப்பகம் குறிப்பிட்ட பிரச்சனைகளில் தலையீடு செய்து போராடியதாக என்னால் சொல்ல முடியாது. ஆனால் சிறுபான்மையினர் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்ககூடிய நபர்களாகத்தான் நாம் இருந்தோம். இதில் குறிப்பாக 1997 ஆம் ஆண்டு 58 பேர் படுகொலை செய்யப்பட்ட, 200 பேர் காயமடைந்த கோயம்புத்தூர் கலவரங்கள் ஏற்பட்டபோது, இசுலாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் துணிச்சலாகக் களத்திற்கு நாம் சென்றோம். அந்த களத்திற்குச் சென்றபோதுதான் தமுமுக தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் நமக்குமான நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அங்கே தாக்குலுக்கு உள்ளான கோட்டைமேடு பகுதிக்கு, ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளும் நினைவுக்கு வருகிறது. அக்கலவர நேரத்தில் கோயம்புத்தூருக்கு, எந்த வாகனத்திலும், எவரும் போக முடியாது. வழக்கறிஞராக, வழக்கு நடத்தப் போகிறோம் என்று சொல்லி, வழக்கு விவரங்களையெல்லாம் சொல்லி, கருப்பு கோட் எல்லாம் எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டுதான் எங்களால் கோயம்புத்தூர் நகரத்திற்குள் நுழைய முடிந்தது. ஏனெனில் போலீசார் வெளியாட்களைக் கோவை நகருக்குள் விடமாட்டார்கள். அத்தகைய சூழலில், முன்னெடுத்த கடினமான பணிகளை எந்நாளும் மறக்கமாட்டோம். அங்கு சென்று இசுலாமியர்களுக்காகத் துணிச்சலாகப் பேசினோம். அதற்குப்பின் தேசிய அளவில் இசுலாமியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தபோதெல்லாம், எந்நேரத்திலும், எப்பொழுதும் அவர்களுடன் நின்று பேசுகின்ற, அவர்களுக்குச் சாதகமாக நிற்கக்கூடிய ஒரு அமைப்பாகவே நாம் இருந்தோம்.

இதே போல் கிறித்தவர்கள் மத்தியிலும், இது போன்ற உரிமை சார்ந்த உணர்வுகளை எழுப்பகூடிய நபர்கள் இருந்தார்கள். எனக்கு இன்னும் நினைவு உள்ளது என்னவென்றால், அருட்பணி டைமன்ராஜ் அவர்கள் உயிரோடு இருந்தவரையில், மதுரையில் அனைத்துக் கிறித்தவ அமைப்புகள், இசுலாமிய அமைப்புகள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பை உருவாக்கினார். மதுரை உயர்மறைமாவட்ட ஆயர் தலைமையில் அவ்வமைப்பை நிறுவியிருந்தார். ஆனால், அருட்தந்தை. டைமண்ட் ராஜ் அவர்களது மறைவுக்குப் பின்னர், இது போன்ற பணியை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இதனால் கிறித்தவர்கள் மத்தியில் உரிமை சார்ந்த அரசியல் மேலோங்கி வளர முடியாத நிலை உள்ளது. இசுலாமியர்கள் போல அரசியல் ஆக்கபடாமல் கிறித்துவர்கள் உள்ளனர். கிறித்தவர்களை அரசியல்படுத்த வேண்டிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால் நம்முடைய பணிகள், வளங்கள், அழுத்தங்கள் அனைத்தும் வேறு பகுதிகளை நோக்கிய பணிகளாக இருந்ததால், இவ்விசயத்தில் நாம் பெரிய அளவில் பங்கு செலுத்த முடியாத நிலை உள்ளது. மணிப்பூரில் கிறித்தவர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைக்கு எதிராக அண்மையில் மதுரை கத்தோலிக்க மறைமாவட்டத் திருச்சபை தலையீடு செய்ய வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. பிறகு அதையொட்டி சி. எஸ். ஐ, பெந்தகொஸ்தே ஆகிய அமைப்புகளையும் இணைத்துக் கூட்டாக முன்னெடுத்த நிகழ்வு ஜுலை 16, 2023 அன்று நடைபெற்றது. மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் எனத் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் மதுரையில் அது வெற்றிகரமாக நடைபெற்றது. ஒரு வரலாற்றுச் சிறப்பாகும்.

மனித உரிமைப் போராளி ஸ்டேன் சாமி அவர்களோடான உறவு

ஹென்றி திபேன் - மனித உரிமைப் போராளி ஸ்டேன் சாமி அவர்களோடான உறவு என்பது எனக்கு ஒரு வித்தியாசமான சூழலில்தான் கிடைத்தது. வெவ்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்குச் சமூகப் பணி செய்வதற்காக வருகை தந்து தென்னகத்தில் வாழக்கூடிய தனித்து வாழும் பெண்கள் சுமார் 15 பேர் சங்கமாகச் செயல்பட்டு வந்தார்கள். ஆண்டுக்கு ஒரு முறையும், வாய்ப்பிருக்கும் நேரங்களில் கோடை காலங்களிலும் கூடுவார்கள். அவ்வாறு கூடும் போது கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள இந்தியச் சமூக நிறுவனத்தில் (Indian Social Institute-ISI) கூடுவார்கள். அப்போது அங்கு இருந்த அருட்பணி வோல்கன் அவர்கள் இக்குழுவினருக்கு ஒரு முன்மாதிரி வழிகாட்டியாக இருந்தார். அந்தக் கூட்டங்களுக்கு என் அம்மாவுடன் செல்கின்ற ஒரு மகனாகத்தான் நான் இருந்தேன். அப்பொழுது அம்மாவுடன் இருப்பதற்கு நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் அருட்பணி ஸ்டேன் சாமி அவர்கள் எனக்கு, என் சிறுவயதில் அறிமுகமானார். எங்களுக்குள் அப்போதிலிருந்துதான் நட்புறவு ஏற்படுகிறது. பின்னர் தொடர்ந்து ஸ்டேன் சாமி அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

ISI செல்லும் போதெல்லாம், எனக்கு மூத்த வழிகாட்டியாக, நண்பராக எனக்கு ஸ்டேன் சாமி அவர்கள் இருந்தார். பின்னர் ஸ்டேன்சாமி அவர்கள் ISI இல் இருந்து சென்ற பின்பு, எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருவாரோ, அப்போதெல்லம் அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர் பணிபுரிந்து வந்த பகைச்சா பகுதிக்கு செல்லக்கூடிய கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஸ்டேன் சாமி அவர்களோடு எப்போது பேசினாலும் தொலைபேசியில் அக்கறையோடு பேசுவார். தமிழ்நாட்டிற்கு வரும் போது நேரடியாக சந்தித்து பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. அதைப் போன்ற ஒரு தொடர் நட்பு எங்களுக்குள் இருந்தது. ஸ்டேன்சாமி அவர்கள் பியூசிஎல் பணிகளில் ஆர்வமாக இருந்தார். சர்வதேச அளவில் ஐ. நா சபையில் முன்னெடுக்கப்பட்ட UPR சார்ந்து இருக்க கூடிய விவாதங்களை அவரோடு கொண்டு செல்லும் போது அதிகம் சிரமப்பட்டு அவருக்கு நம்பிக்கையூட்டி அவரை அழைத்தோம். ஆதிவாசி பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் UPR அறிக்கையில் அவருக்கு ஒரு பங்கு இருந்தது. தேசிய மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு (HRDA) சார்பாக அவரது இடத்தில் பயிற்சிகள் நடத்தும் போது சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தார்.

கடந்த எட்டு ஆண்டுகள் ஸ்டேன்சாமி அவர்களை அதிகமாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜார்கண்டில் அவருக்கு எதிரான வழக்குகளிலும், அவருடனான நட்பின் காரணமாகத் தொடர்ந்து அவருக்கு சட்ட ஆலோசனை கொடுக்ககூடிய ஒரு நபராகவும் நான் இருந்தேன். மேலும் HRDA மூலமாக அவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். அவரது பாதுகாப்பு குறித்துப் பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் எல்லாம் தொடர்ந்து பங்கேற்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. தேசிய புலனாய்வு முகமை (NIA) ஸ்டேன் சாமி அவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, அவர்களின் நம்பிக்கை குறித்து, நேர்மை குறித்துக் கேள்வி எழுப்புவார். குறிப்பாகச் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கில் காவல்துறை சட்ட விரோதமாக ச் செயல்பட்ட விதத்தை அவர்களிடத்தில் தெரிவிப்பார். ஒரே ஒரு நம்பிக்கை அப்போது அவருக்கு இருந்தது. என்னவென்றால் அது உண்மை நிலையில் இருந்து அவர் எப்பொழுதும் மாறியது இல்லை என்பதுதான். அவர் என்ன நம்பினாரோ அதையே கடைசி வரையிலும் பதிவு செய்தார். அவர் எழுதிய மௌன சாட்சி அல்லேன் என்ற புத்தகத்தில் இதனைப் பதிவு செய்து உள்ளார்.

2018 ஆம் ஆண்டில் அவருடைய இடத்தை முதல் முறையாகச் சோதனை செய்ய, போலீசார் சென்றனர். அப்போது தகவல் அறிந்த நான் ஸ்டேன் சாமியிடம் உடனே பேசுவதற்குப் பல முயற்சிகள் எடுத்து, சுமார் 11 மணிக்குத்தான் தொலைபேசி மூலமாக அவரிடம் பேச முடிந்தது. அப்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாது. சோதனை செய்ய வந்த போலீசார் என்னிடமிருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் காலையில் கொஞ்ச நேரம், இளையராஜாவின் தமிழ்ப் பாட்டுக் கேட்பேன். அந்த குறுந்தகட்டையும் (CD) எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்றார்.

2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம்18 ஆம் நாள் மறுபடியும் தேசிய புலனாய்வு முகமை (NIA) செல்கின்றனர். ஏனென்றால் தேசிய புலனாய்வு முகமை ஏற்கெனவே கைப்பற்றிச் சென்ற கம்ப்யூட்டரில் அவர்கள் திட்டமிட்டுப் புகுத்திய ஆவணங்கள் இல்லை. இதனால் ஆத்திரத்தில், ஆதங்கத்தில்தான் ஸ்டேன்சாமியிடம் மீண்டும் சோதனை செய்யச் சென்றனர். தேசியப் புலனாய்வு முகமை ஸ்டேன்சாமியின் கம்ப்யூட்டரைக் கைப்பற்றியபோது அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஏனென்றால் தேசிய ப் புலனாய்வு முகமை கைப்பற்ற நினைத்த கம்ப்யூட்டரைப் பழுது நீக்க கொடுத்து விட்டார். இதனால் தேசியப் புலனாய்வு முகமையின் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாவது முறையாக வரும் போது ஸ்டேன் சாமியின் பழுது நீக்கத்திற்குக் கொடுத்த கம்ப்யூட்டரை தேசியப் புலனாய்வு முகமை கைப்பற்றிது. கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில்தான், தேசிய புலனாய்வு முகமை ஏற்கெனவே திட்டமிட்டுப் புகுத்தியிருந்த ஆவணங்களில் உள்ள கடிதங்களை வைத்துதான் வழக்குப் பதிவு செய்தனர்.

ஸ்டேன்சாமியிடம் இரண்டாவது முறை தேசியப் புலனாய்வு முகமை கம்ப்யூட்டரைக் கைப்பற்றிய அடுத்தநாள் 2019 ஜுன் 13 ஆம் நாள் அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் (NHRC) கூட்டம் நடைபெறுகிறது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் நான் Core Group உறுப்பினர் கிடையாது. என்றாலும் வெளியில் நான் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய சத்தத்தின் காரணமாக என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அதனால் நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டம் தொடங்கியவுடன் நான் அறிமுகம் கொடுப்பதற்கு முன்னதாகவே, இரண்டு விசயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று அதிக உணர்ச்சி வசப்பட்டுப் பேசத் தொடங்கினேன். ஸ்டேன்சாமி மேல் தேவையில்லாமல் புனே காவல்துறை கை வைத்துள்ளது. வழக்குப் போடுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையீடு செய்ய வேண்டும் என்றும், இது போன்ற ஒரு மனித உரிமைக் காப்பாளரைக் காவல்துறை பழி வாங்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்றும் ஏற்கெனவே சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய 80 சதவீத மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபா சிறையில் உயிரோடு இருப்பாரா என்கிற சந்தேகம் உள்ளது என்றும் அந்த கூட்டத்தில் நான் விளக்கமாகப் பேசினேன்.

எனக்குப் பின்னர் பேசிய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி தத்து அவர்கள் நீங்கள் நம்பிக்கை இழந்து போகாதீர்கள் என்றும், நாங்கள் உங்களோடு இருப்போம் என்றும், ஸ்டேன்சாமி சம்மந்தப்பட்ட வழக்குகளில் தலையீடு இருக்கிறது என்றும், அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இதில் முக்கியமாகப் பாராட்ட வேண்டிய செய்தி ஒன்று உண்டு, தேசிய மனித உரிமை ஆணையம் ஸ்டேன்சாமி வழக்கில் தலையீடு செய்யக்கூடிய பின்னணியில் சேசு சபையினர் செய்த இரண்டு முக்கியமான விசயங்களை நாம் பாராட்ட வேண்டும். ஸ்டேன் சாமியைப் பாதுகாப்பதில் மறைமுகமாக நமக்குப் பங்கு இருக்கலாம். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், ஸ்டேன்சாமி இறப்பிற்குப் பின்பு, இந்த வழக்கில் ஸ்டேன்சாமி 16 ஆவது குற்றவாளியாக இருந்தாலும், தொடர்ந்து இந்த வழக்கில் அவரது இறப்பைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்றும், இவ்வழக்கில் எஞ்சியுள்ள 15 நபர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகத் தேசிய, சர்வதேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்புகள் தொடர் ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு எடுத்தார்கள். இதன் மூலம் ஸ்டேன்சாமியின் கனவை நிஜமாக்க முயன்று வருகிறார்கள். 2021 ஜுலை 5 ஆம் நாள் கைதியாக மருத்துவமனையில் அவர் இறந்தார் என்ற செய்தியைக் கேட்டதும் அன்று மாலை 6 மணி அளவில் இரங்கல் கூட்டத்தை ஒருங்கிணைப்புச் செய்தோம். அதில் ஐ. நா சபையின் மனித உரிமைக் காப்பாளர்களுக்கான (HRD) சிறப்புப் பிரதிநிதி திருமிகு. மேரி லாலர் பங்கேற்றார். கூட்டத்தில் சேசு சபையினர் கொடுத்த முக்கிய அறிவிப்பு என்னவென்றால், ஸ்டேன்சாமியின் உடலைப் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியாது. எனவே அவரது உடலை எரியூட்டி, ஸ்டேன்சாமியின் எரியூட்டப்பட்ட சாம்பலை நாட்டின் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற முடிவினை சேசு சபையினர் அறிவித்தார்கள் என்பதைப் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.

 ஸ்டேன் சாமியின் சாம்பல் வந்தவுடன் கண்டிப்பாக அந்தச் சாம்பல் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல் ஆளாகப் பரிந்துரை செய்தேன். அதற்குப் பொறுப்பாக இருந்த ஜோ. சேவியர் அவர்களும் அவரது குழுவினரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்படும் ஸ்டேன்சாமியின் சாம்பலை என்னிடம் கொடுத்து, முன்னெடுக்கச் சொன்னார்கள். நான் உடனே மறுத்துவிட்டேன். ஏனென்றால் ஏற்கெனவே சி. பி. ஐ வழக்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆளாக்கபட்டிருக்கும் நிலையில், ஸ்டேன்சாமியின் சாம்பலைப் பாதுகாப்பற்கான ஆதாரம், பலம் எங்களிடம் இல்லை. அதனால் சேசு சபையினரே இந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன். ஆனால், சாம்பல் பயண நிகழ்வுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கூட்டாகப் பங்கெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சில இடங்களில் சாத்தியமானதாக இருந்தாலும், சில இடங்களில் நடைபெறவில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகள், பொது மக்கள் ஸ்டேன்சாமியின் சாம்பல் பவனி நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்காமல் இருந்தது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் ஸ்டேன்சாமியின் சாம்பல் பவனித் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியது மிகப் பெருமையாக உள்ளது.

காவல் நிலையங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்ன?

ஹென்றி திபேன் - காவல் நிலையங்கள், சிறைச் சாலைகள் போன்றவற்றில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்த வரையறைகள் எல்லாம் ஏற்கெனவே இருக்கிறது. புதிதான வரையறைகள் வந்துதான் இந்த நிறுவனங்களைச் சீர்த்திருத்த வேண்டும் என்ற தேவையில்லை. இருக்கக்கூடிய வரையறைகளை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. ஆனால் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதால்தான் காவல் நிலையங்கள் சட்ட விரோதமாகச் செயல்படக் காரணமாக உள்ளது. எடுத்துக் காட்டாக சிறையில் சி. சி. டி. வி கேமரா இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், அந்த சி. சி. டி. வி கேமரா பதிவுகளை யார் பார்ப்பது, அதை யார் கண்காணிப்பது என்ற முடிவு இதுவரையில் இல்லை. காவல் நிலையங்களைப் பொறுத்த வரையில் ஓரளவு நடைமுறைப்படுத்தியிருப்பதாக ஒரு தோரணை இருக்கிறது. அது குறித்தான பிரச்சாரங்கள் செய்வதால் காவல் நிலைய சி. சி. டி. வி குறித்துப் பொது வெளியில் பேசப்படுகிறது. ஆனால் சிறையைப் பொறுத்த வரைக்கும் சி. சி. டி. வி கேமரா வைப்பதே கிடையாது. சிறையைப் பொறுத்தமட்டில் Visitors, Non-Appointment official appointment செய்யப்பட வேண்டும். இன்றைய நாள் வரையிலும் தமிழ்நாட்டில் மட்டுந்தான் Visitors, Non-Appointment official appointment செய்யப்படவில்லை.

இவை எல்லாம் மாறுவதற்கு முக்கியமான காரணம் நமது நம்பிக்கை சார்ந்து உள்ளது. சிறைகளில், காவல் நிலையங்களில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை காவல்துறைப் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டும். சிறைக்கு வெளியே இருந்து அரசின் அங்கீகாரம் பெற்றுச் சிறையை கண்காணிக்கக்கூடிய அமைப்புகள் அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத காரணத்தினால்தான் சட்ட மீறல்கள் நடைபெறுகிறது. சிறைத்துறை என்பது முன்புபோல வெறும் தண்டிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் இருக்கக்கூடிய இடமாக மட்டும் இல்லை. இன்றைய நிலையில் சிறைத்துறை அற்புதமான பொருளாதாரம் ஈட்டக்கூடிய துறையாக மாறிவிட்டது. குறிப்பாகச் சிறையில் சிறிதளவு விவசாயம், தச்சு ஆகிய தொழில்கள் நடக்கின்றது. இது போன்ற நிறைய வேலை வாய்ப்பு தொடர்புடைய பயிற்சிகள், வாய்ப்புகள் வழங்கக்கூடிய இடமாக சிறைச்சாலை மாறிவிட்டது. இவற்றில் எல்லாம் சரியான கண்காணிப்பு இல்லையென்பதால்தான் ஊழல் நடந்து வருகிறது. இவையெல்லாம் சிறைத்துறைக்குள் வரவேண்டிய மாற்றங்கள்தான். அதனால் சிறைத்துறை குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டத்தில் இருக்கக்கூடிய முன்மாதிரிகள் எல்லாம் போதுமனாதாகத்தான் இருக்கிறது. ஆனால் மாற்றங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய கண்காணிப்புக் குழுவின் பணிதான் இப்போது மிகத் தேவையாக உள்ளது. அவ்வாறு இல்லையெனில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. காவல் நிலையங்களைப் பொறுத்த வரையில், அதே நிலைமைதான் இங்கு இருக்கிறது. போதுமான சட்டங்கள் இருக்கிறதே தவிர, அதிகாரத்தை நான் சட்டத்திலிருந்து பெறுகிறேன் என்பதை மறந்து, அதிகாரத்தைச் சீருடையிலிருந்து பெறுவது போன்ற, பதவியில் இருந்து பெறுவது போன்ற அளவுக்கு மோசமான முன் மாதிரிகள்தான் உள்ளன.

சிறைகளில், காவல் நிலையங்களில் பணி செய்வோருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது உண்மைதான். அவர்களுக்கான மன அழுத்தம் சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவர்களுக்கான நலத்திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். இந்த நிலையில் காவலர்களைக் குடும்பம் குடும்பமாக அழைத்து, உளவியல் பயிற்சி கொடுத்து, ஆற்றுப்படுத்துவதாக அரசு அறிவித்த நிலையில், அதற்கான விவரம் வெளிப்படையாக அரசு அறிவித்துள்ளதா? இந்த விவரத்தை பொது வெளியில் வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதோடு, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது போன்று மன அழுத்தத்தில் இருக்கக்கூடியவர்கள் காவல்துறையில் செயலாற்றும் போது, ஏகப்பட்ட தவறுகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் அதிகாரத்தைத் தவறாகக் கையாள்கிறார்கள். மன அழுத்தத்தில் இருப்பவர்களும், தவறு செய்பவர்களும் ஒரே துறையில் தொடர்ந்து செயல்படுவதால், இவர்களை இடமாற்றம் செய்யக்கூடிய உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், இவர்கள் தவறு செய்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

ஆனாலும் நாம் பேசுவது சட்டம் சார்ந்த விசயம். இதில் சிலர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நடவடிக்கைகள் தாமதமாகும்போதுதான் நமது சமூகத்தில் சித்திரவதைகள் மேலோங்குகிறது. திராவிட மாடல் அரசு என்று சொல்லப்படக்கூடிய, சமூகநீதியைப் போற்றும் அரசு எனக் கருதப்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறையில் சிறப்புக் கவனம் செலுத்தி, சித்திரவதைகளைத் தடுப்பதற்கு அதைக் குற்றமாக அறிவித்து, ஒரு சிறப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். இவை எல்லாம் தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய மிக முக்கியமான காவல்துறைச் சீர்திருத்தங்கள் ஆகும்.

உங்களது சர்வதேச மனித உரிமைச் செயல்பாடுகள், “சாதியப் பாகுபாடும், இன வேற்றுமையே” என்பது குறித்து எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் உலகளாவிய காலமுறை மீளாய்வு (Universal Periodic Review) போன்றவை குறித்த விளக்கமும் தேவை

ஹென்றி திபேன் - சர்வதேச அரங்குகளுக்கு நான் சென்ற முதல் கூட்டம் இரண்டாம் அகில உலக மனித உரிமை மாநாடு ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றதுதான். இரண்டாவதாக சர்வதேச அளவில் தலித் மனித உரிமைக்காக ஆதரவு கொடுக்கக்கூடிய, குரல் கொடுக்கக்கூடிய டர்பன் மாநாடு. இதேபோல் சர்வதேச அளவில் தலித் மனித உரிமைக்காக ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கினோம். 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த முயற்சிகளில் பலர் இருந்தனர். அந்தப் பலரில் ஒருவனாகத்தான் நானும் இருந்தேன். இது இன்று உருவாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அமைப்பினுடைய சர்வதேசத் தலைவராக இருக்கிறேன். அந்த அமைப்பின் பெயர் International Dalit Solidarity Network (IDSN) ஆகும். கடந்த 15 ஆண்டுகளாக ஐ. நா மன்றத்தில் மனு செய்து தொடர்ந்து போராடிதன் விளைவாகத்தான் IDSN அமைப்பிற்கு ஐ. நா சபையின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தை முறியடிக்கக்கூடிய வகையில் இந்திய அரசு சில அரசுகளை கூட்டாக இணைத்துக் கொண்டு செயல்பட்டது. இதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன். மேலும் ஒரே ஒரு நாடு IDSN அங்கீகாரம் குறித்து, 115 கேள்விகளை மீண்டும், மீண்டும் கேட்டது, இதனால் அங்கீகாரம் பெற 15 ஆண்டுகள் ஆனது. இறுதியாக என்ன நடந்தாலும் நடக்கட்டும் என முடிவு செய்து வாக்களிப்பதன் வாயிலாகத்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் நாம் பிரச்சாரத்தை முன்னெடுத்து, இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். இதுவே சர்வதேச அளவில் தலித் மனித உரிமைகள் அரங்கில் நான் பங்கேற்புச் செய்த மிக முக்கியமான, நிறைய விசயங்கள் கற்றுக் கொண்ட அரங்காக இருந்தது.

அடுத்து, தலித் உரிமைகளும், மனித உரிமைகளே என்ற முழக்கத்தை முன் வைத்து டர்பன் மாநாட்டிற்காக இந்தியாவில் தேசிய அளவில் தயாரிப்புப் பணிகள் மேற்கொண்டது. மாநாட்டில் பங்கேற்பு செய்தபின் IDSN மூலமாகப் பணிகள் கொண்டு சென்றது. இது ஒரு பக்கம் இதைத் தாண்டி பல மனித உரிமை அமைப்புகளில் மக்கள் கண்காணிப்பகம் உறுப்பினராக இருக்கிறது. எடுத்துக் காட்டாகச் சித்திரவதைக்கு எதிரான உலகளாவிய அமைப்பில் (OMCT) உறுப்பினராக இருக்கிறோம். சித்திரவதை சார்ந்த விசயங்களில் ஐ. நா சபைக்கு கொண்டு செல்வது போன்ற விசயங்களில் உதவி செய்யக்கூடிய அமைப்பாக அது இருக்கிறது. OMCT-இன் தலையீட்டின் காரணமாக நாம் பலருக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தோம். OMCT- அமைப்பு ஐ. நா சபையின் நிதி பெற்று வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த உதவி செய்திருக்கிறார்கள். சித்திரவதை சார்ந்த குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சார்ந்த பணிகளில் OMCT அமைப்பு இருந்தது. அதே போல், சித்திரவதைக்கு எதிரான உலகளாவிய மனித உரிமைக் கூட்டமைப்பு FIDH-லும் நாம் உறுப்பினராக இருக்கிறோம். அதனால் அவர்கள் உலக மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்றோம். பல விசயங்களில் FIDH உதவி செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர்கள் நமக்கு நிறைய விசயங்களில் உதவி செய்திருக்கிறார்கள். ஒன்று மனித உரிமைக் காப்பாளர் பணியில். இன்னொன்று தேசிய மனித உரிமை ஆணையங்கள் தலையீடு செய்வதற்காக அரசு சாரா அமைப்புகளுக்கான ஆசிய அளவில் ANNI என்ற தளத்தை உருவாக்கினார்கள். அந்தத் தளத்துடன் இந்தியாவில் நின்ற அமைப்பை நம்மால் உருவாக்க முடிந்தது.

அதனால் இந்தச் சர்வதேச அமைப்பில் நமது பங்கேற்பு முக்கியமானது. பலரைப் பயன்படுத்தியுள்ளோம். அதே போல் பல விசயங்களை கற்றுக் கொண்டு உள்ளே கொண்டு வந்து அமல்படுத்துவதற்குக் காரணமாக இருந்தது இந்த உலகளவிலான தளம்தான். ஒரு பெரிய வரலாறாக இது இப்போது நமக்கு எல்லா இடத்திலேயும் உள்ளது. ஆனால் பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் நாம் செய்யக்கூடிய பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

உங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய, சர்வதேசிய விருதுகள் பற்றியும், மனித உரிமைப் பணியில் மக்கள் கண்காணிப்பகத்திற்கு நேரிட்ட நெருக்கடிகள், அதனால் உங்களுக்கும், அமைப்பின் பணியாளர்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து விளக்கவும்.

ஹென்றி திபேன் - ஜெர்மனியை மையமாகக் கொண்டு செயல்படக் கூடிய ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு எனக்கு மனித உரிமை விருது வழங்கியது. இந்தச் சர்வதேச விருது என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை. மக்கள் கண்காணிப்பகம் செய்த பணிக்காக கிடைத்த அங்கீகாரமாக இது இருந்தது.

மக்கள் கண்காணிப்பகத்தின் நெருக்கடியான கால கட்டம் 2012 இல் தொடங்கி தற்போது 10 ஆண்டுகளைக் கடந்து விட்டது. 2012 ஜுலை காலகட்டத்தில் இருந்து இன்றைய நாள் வரையிலும் தொடர்ந்து பணிகள் செய்து கொண்டே உள்ளோம். அதற்குக் காரணம் ஒன்று மக்கள் கண்காணிப்பகத்தின் அறக்கட்டளையில் உள்ள அறங்காவலர்கள் எங்கள் பணிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கை. இது எங்கள் அமைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். இது பொதுவாக எல்லா அமைப்புகளுக்கும் கிடைக்காது. பாதிக்கப்பட்ட மற்ற அமைப்புகளின் அறக்கட்டளை அறங்காவலர் குழுவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தது எனக்குத் தெரியும். அது மக்கள் கண்காணிப்பகத்திற்கு ஏற்படவில்லை. என்னோடு பணியாற்றிய பலர் பணியில் இருந்து நின்றுவிட்டார்கள். பணியிலிருந்து நின்றவர்களுக்குப் பல சிரமங்கள் இருக்கும். குடும்பம் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் பல சிரமங்கள் இருந்தது. ஆனாலும் கடந்த 10 ஆண்டுகள் என்னோடு இருப்பவர்களை வைத்துத் துணிச்சலான நிலைப்பாடு எடுத்ததுதான் இந்த பணி தொடர்வதற்குக் காரணமாக இருந்தது.

மக்கள் கண்காணிப்பகத்தில் எந்த பணி நின்றுவிடும் என்று எதிர்பார்த்தார்களோ, அந்தப் பணி நிற்கவில்லை என்ற ஆதங்கத்தில் இன்றுவரை இருக்கின்றனர். எடுத்துக் காட்டாக சி. பி. ஐ வழக்கு சென்ற ஆண்டு எங்கள் மீது பதிவு செய்தார்கள். ஒரு வருடம் முழுமையாக எங்கள் அலுவலகத்தில் அமர்ந்து சோதனை செய்தார்கள். இந்த நிலையிலும் ஒரு நாள்கூட எவ்வித மாற்றமுமின்றி எமது பணிகளைத் தடையின்றி செய்து வந்தோம். இதே போல் சி. பி. ஐ இல் இருந்து வந்தவர்கள், அன்றாடம் சோதனை செய்ய வந்தவர்கள், சட்டப்பூர்வமாகவும், மரியாதையுடனும் எங்களிடம் நடந்து கொண்டார்கள் என்பதனையும் நான் இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன். நேர்மையாக இருந்ததன் காரணமாகத்தான் துணிச்சலாக இருக்க முடிந்தது. கடந்த ஒரு வருடம் முழுவதும் சி. பி. ஐ அதிகாரிகள் எங்கள் கணக்குகளைப் பார்வையிட்டுச் சென்ற பின்பு, மீண்டும் கடந்த வாரம் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார்கள். வந்த சி. பி. ஐ குழுவினர் 2008-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த வாகனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். எங்கள் அலுவலக வாகனங்களை விற்பனை செய்திருப்பேன் என்ற சந்தேகம் எழுப்பிய சி. பி. ஐ. அதிகாரிகளிடம் எங்களது ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம். இதன் மூலம் எங்களது வெளிப்படைத் தன்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளோம்.

சட்ட ரீதியாக இருக்கக்கூடிய FCRA (Foreign Contribution Regulation Act) சட்டத்தை, அரசின் விருப்பத்திற்கேற்ப முடக்குகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் மூன்று முறை எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரித்துச் சென்றிருக்கிறார்கள். அதன்பின்பு பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஓராண்டு முழுவதும் சி. பி. ஐ விசாரணை செய்தார்கள். தற்போது மீண்டும் சி. பி. ஐ விசாரிக்க வருகிறார்கள். விசாரணைக்கு வரும் அதிகாரிகள் என்னென் விவரங்கள் கேட்கிறார்களோ, அந்த விவரங்களை முழுமையாகக் கொடுக்கின்றோம். ஆனால் எங்கள் வங்கிக் கணக்கைத் தடை செய்த FCRA தொடர்பாகப் பதில் ஏதும் சொல்வதில்லை. மனித உரிமை அரங்கில் பணியாற்றுபவர்களை FCRA சட்டத்தைப் பயன்படுத்தி முடக்குகிறார்கள்.

இந்திய அரசின் அணுகுமுறை என்பது பாகுபாடு சார்ந்த அணுகுமுறையாக உள்ளது. குறிப்பாக நிதி சார்ந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கும் போது தொழில் நிறுவனங்களின் சட்ட திட்டங்களும், தொண்டு நிறுவனங்களுக்கான சட்ட திட்டங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது சமமற்ற நிலையில் பாகுபாடாக உள்ளது.

ஒரு தொழில் நிறுவனம் தவறு செய்தால், நோட்டீஸ் கொடுப்பார்கள். பழைய தரவுகளைக் கேட்பார்கள். ஆனால் உடனடியாக வங்கிக் கணக்கை முடக்கமாட்டார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் துறையில், சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட அமைப்பின் வங்கிக் கணக்கினை முடக்குவதையே முதல் திட்டமாகச் செயல்படுத்துகிறார்கள். இதன் மூலம் அரசின், பழிவாங்கும் நோக்கம் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் FCRA சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவங்களின் வங்கிக் கணக்கை முடக்கினார்கள். இந்த தாக்குதல்கள் தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம், தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களின் அமைப்பு, சுப. உதயக்குமார் அவர்களின் அமைப்பு மற்றும் மக்கள் கண்காணிப்பம் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை FCRA கொண்டு தடை செய்தார்கள். தடை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில், மேற்கண்ட அமைப்புகளின் குற்றத்தை நிரூபித்துள்ளார்களா? தவறுகள் நடந்துள்ளது என்பதை அரசு அறிவித்துள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. இது மட்டுமல்லாது இந்திய அளவில் இந்திரா ஜெய்சிங் அவர்களின் அமைப்பு, மார்ட்டின் மக்குவா சார்ந்திருக்கக்கூடிய அமைப்பு உள்ளிட்ட எந்த வழக்கிலும் நிரூபிக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஆனால் இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து, நாம் தொடர்ந்து மனித உரிமைக் களத்தில் பணி செய்து கொண்டுதான் இருக்கிறோம். முன்னெடுக்கும் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளோம்.

எந்தெந்த சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியாவின் ஒத்துழைப்புத் தேவை?

ஹென்றி திபேன் - சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்து நாம் பேசுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் ஐ. நா சபையோடு தொடர்பு வைத்திருப்பதும், பணி செய்வதும் இங்கு குற்றமாக்கப்படுகிறது. ஆனால் ஐ. நா சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறது. ஐ. நா. சபையில் செயல்படக்கூடிய சில அரங்குகளில் இந்தியாவின் பிரதமர் பேசுகிறார் என பெருமையாகச் சொல்கிறோம். ஆனால் உண்மையில் சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் பங்களிப்பு என்பது சொல்லக்கூடிய அளவில் இல்லை. ஐ. நா சபையில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க இந்தியர்கள் சென்றால், விமான நிலையத்திலேயே தடுத்து விடுகிறார்கள். அல்லது பங்கேற்றுவிட்டுத் திரும்பி வந்தால் விமான நிலையத்திலேயே கைது செய்து விடுகிறார்கள். சர்வதேச கூட்டங்களுக்கு வெளியே செல்கிறவர்களை உளவுத்துறையின் வா­யிலாக உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள். விமான நிலையத்தில் இமிகிரேசன் அதிகாரிகள் நமது நாட்டின் பாதுகாப்பைக் கருதி செய்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால், நமக்கு அதில் ஒரு கேள்வி உள்ளது. ஐ. நா சபை கூட்டத்திற்குப் போவதால் இந்த நாட்டிற்கு என்ன அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடப் போகிறது?.

இந்திய அரசு ஐ. நாவின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று பரப்புரை செய்கின்ற வேளையில், ஓர் இந்தியக் குடிமகன் ஐ. நா சபை சார்ந்த சர்வதேசக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தடுப்பது என்பது முரண்பாடாக இல்லையா? மக்கள் கண்காணிப்பகத்தின் மீதான தாக்குதலுக்கு சர்வதேச அரங்குகளில் மக்கள் கண்காணிப்பகம் பங்கேற்புச் செய்வதுதான் காரணம். குறிப்பாக ஐ. நா சபையின் மனித உரிமைக் காப்பாளர்களுக்கான சிறப்புப் பிரதிநிதி திருமிகு. மார்கரேட் செகாக்கியா இந்தியா வந்த போது அவருடன் இணைந்து முழுமையாகப் பணி செய்தோம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்து அவருக்கு உதவியாக இருந்தோம். 2012 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தின் சர்வதேச அங்கீகாரம் முதல் முறையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதனால்தான் மக்கள் கண்காணிப்பகத்தின் வங்கிக் கணக்கு FCRA வாயிலாகத் தடை செய்யப்பட்டது. மக்கள் கண்காணிப்பகத்தின் FCRA புதுப்பிக்காதற்குக் காரணமே, சர்வதேசத் தலையீடுகள்தான்.

இந்தியாவில் நடக்கக்கூடிய நல்ல விசயங்களைக் கூட வெளியே வந்து சொல்வதற்கு ஏன் இந்தியா தயங்குகின்றது? இந்தியா உலக அரங்கில் பேசக்கூடிய நல்ல எடுத்துக்காட்டுகளும் உண்டு. குறிப்பாக இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு, ஆதிவாசி மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. இப்படி ஒரு கட்டமைப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வாயிலாகக் கொண்டு வந்து செயல்படுகிறது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அது மாறிக் கொண்டே இருக்கிறது. இதுபோல் வேறு எந்த நாட்டையும் முன்னுதாரணமாகச் சொல்ல முடியாது. இது குறித்துப் பெருமையாக உலகளவில் பேசுவதற்கு இந்தியா ஏன் முன் வருவதில்லை. பெருமையாக நாம் சொல்ல வேண்டிய விசயங்களைச் சொல்வதற்குக் கூட ஐ. நா. சபையின் அரங்குகளைப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. நமது நாட்டில் தேசிய, மாநில மனித உரிமை நிறுவனங்கள் 170 உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. இது போன்று எந்த நாட்டிலும் இல்லை. இது குறித்துப் பேசுவதற்கு நிறைய உள்ளது. மனித உரிமையைப் பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை உருவாக்கியுள்ள நாடு இந்தியா என்று வெளியில் எங்கேயாவது பேசி இருக்கிறார்களா? இப்படிப்பட்ட ஆக்கரீதியான செய்திகளை எங்களைப் போன்ற சிவில் சமூகக் குழுக்கள்தான் பேசிக் கொண்டு உள்ளன.

மக்கள் கண்காணிப்பகத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் குறிப்பிடவும்

ஹென்றி திபேன் - மக்கள் கண்காணிப்பகம் ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என நினைப். து நல்லதல்ல. இன்றைக்கு வருகின்ற தாக்குதல்கள் மத்தியில் ஓர் அமைப்புத் தொடர்ந்து இருக்கிறது என்பதே பெரிய சவால்தான். மக்கள் கண்காணிப்பகத்தின் 30 ஆண்டு அனுபவங்களை மற்றவர்களுக்கு நாம் பகிர்கிறோமா? மற்றவர்கள் இந்த 30 ஆண்டு அனுபவத்தை உள்வாங்கக் காரணமாக இருக்கிறோமா? அதுதான் நமது பெரும் முயற்சியாக இருக்க முடியும். நம் பணிகளை மற்றவர்கள் வாயிலாகப் பரவலாக்குவது முக்கியப் பணி. குறிப்பாக நாம் செய்கின்ற பணி மனித உரிமைக் காப்பாளர்கள் சார்ந்து இருக்கக்கூடிய பணி. அப்பணிகளைத் தொடர்ந்து கொண்டு செல்வது, அதையொட்டி தேசிய அளவில் பணி செய்வது போன்றவை மற்றவர்களோ, தேசிய மனித உரிமை நிறுவனங்களோ செய்யாத பணிகளாகும் இதையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இது போன்ற பணிகளைச் செய்ய உள்ளூர் நிதியைத் திரட்டுவதன் மூலம் நிற்க இயலும் என்ற எடுத்துக் காட்டினை உருவாக்கக்கூடிய பொறுப்பு மக்கள் கண்காணிப்பகத்திற்கு இருக்கிறது. வெவ்வேறு நடவடிக்கைகள் நமது பேரில் இல்லாமல், வெவ்வேறு கூட்டு நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்கு மனித உரிமைப் பணியை வெவ்வேறு அரங்குகளில் மற்றவர்கள் வாயிலாக கொண்டு செல்கின்ற தகுதி நமக்குக் கிடைத்துள்ளது. நாம் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அமைப்புக்குத் தமிழ்நாட்டில், தேசிய அளவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதரவை நாம் பயன்படுத்திக் கொண்டு, கூட்டு நடவடிக்கைகள்தான் மனித உரிமைக்கு வழி என்பதை வலியுறுத்துகின்ற பல அரங்குகளில் பணிகளைக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மக்கள் கண்காணிப்பகத்திற்கு உள்ளது. இங்கே போட்டிக்கே இடமில்லை. இங்கு செயல்பட்டு வந்த பல அரசு சாரா தன்னார்வக் குழுக்கள் முடங்கியுள்ளன. ஆனால் வெளி அரங்குகளில் இதை கொண்டு செல்வதற்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம்.

இதுதான் நமது முக்கியமான பணியும், மிகப் பெரிய கனவுமாக உள்ளது. இந்த அனுபவங்களை எல்லாம் தொகுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு நாங்கள் நேரம் ஒதுக்கவில்லை. இந்த வரலாற்றை எழுதுவதற்கு நேரம் தேவை. இது சார்ந்த கல்வியை அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் முழுவதுமாகக் கொண்டு செல்வதற்கு, முயற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் முயற்சி எடுக்கவில்லை. இவை போன்ற கடமைகள் எங்கள் தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் அனைவரும் எப்போதும் அவர்கள் பணியை எடுத்துப் போகின்றனர். அப்போதுதான் தொடர்ந்து இந்த பணிகள் செல்லும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இதுதான் மக்கள் கண்காணிப்பகத்தின் குடிமைச் சமூக அமைப்பின் நன்கொடையாக இருக்கும்.

Pin It