கேரளாவில் நடந்திருக்கும் கொடுமையான பாலியல் வன்புணர்வு மீண்டும் இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. கேரளா, பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி தலித் மாணவி, தன்னுடைய வீட்டில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, முலைகள் அறுக்கப்பட்டு, அடிவயிற்றில் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது குடல் உறுவி வெளியே எறியப்பட்டுள்ளது. அவர் உடம்பில் 30 இடங்களில் காயங்கள் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இது முதல் நிகழ்வு அல்ல. தினந்தோறும் இந்தியாவில் 93 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண மேலாண்மை ( National Crime Records Bureau -NCRB) தெரிவிக்கின்றது. அதே போன்று 2012 ஆம் ஆண்டு 24,923 என்று இருந்த பாலியல் வன்புணர்வு குற்றங்கள் 2013 இல் 33,707 என்று உயர்ந்துள்ளது.
டெல்லியில் நடந்த நிர்பாய பாலியல் வன்முறைக்குப் பின் நடந்த அத்துணை போராட்டங்களுக்குப் பின்னும் இன்றும் புதுடெல்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாகவே இருக்கின்றது. 2012 இல் 585 ஆக இருந்த பாலியல் குற்றங்கள் 2013 இல் 1441 ஆக டெல்லியில் உயர்ந்துள்ளது. டெல்லியைத் தொடர்ந்து மும்பை, ஜெய்பூர், புனே போன்றே நகரங்களும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் என்று பட்டியளிடப்பட்டுள்ளது.
அதே போன்று மத்திய பிரதேசத்தில் மற்ற மாநிலங்களை விட 2013 இல் 4335 பாலிய குற்றங்கள் நடைபெற்றதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. ஒன்றை நாம் மறந்து விட முடியாது. தலித் மற்றும் பழங்குடி பெண்கள் மீது தான் இந்த நாட்டில் அதிக அளவு பாலியல் வன்புணர்வுகள் நிகழ்த்தப்படுகின்றது.
2014 இல் இதே மத்திய பிரதேசத்தில் 14 வயதுடைய தலித் சிறுமியை, ஐந்து பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். அதே போன்று அதே ஆண்டு அந்த மாநிலத்தில் பழங்குடி இனப் பெண் ஒருவரை பத்து பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி இனப் பெண்கள் தொடர்ந்து கொடுமையான பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் டெல்லி நிர்பயா மாணவிக்கு கொடுத்த அந்த போராட்டக் குரலை ஏன் ஊடங்கங்கள் பாதிக்கப்பட்டவர் தலித் மற்றும் பழங்குடி இனப் பெண்களாக இருக்கும்போது தருவதில்லை? கேரளாவில் நடந்திருக்கும் இந்த கொடுமையான சம்பவம் 10 நாட்களுக்கு மேலாகியும் ஊடங்கங்களின் கவனத்திற்கு ஏன் வரவில்லை ?
இன்றும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண் மட்டுமே குற்றவாளி என்று தான் இந்தச் சமூகம் அவளை குற்றம் சுமத்துகின்றது. ஒரு பெண்ணின் உடை, அவள் இரவு தனியேச் செல்வது, ஆண் துணை இன்றி வாழ்வது என்று இவையே அவளுக்கு எதிரான குற்றங்களின் காரணிகளாக கூறப்படுகின்றன. இப்படி புரையோடிக் கிடக்கும் அழுக்குகளைக் கொண்டச் சமூகத்தில் பெண்களுக்கான சம நீதி என்பது எப்படி கிடைக்கும் ?
சாதியக் கலவரம், மதக் கலவரம் என்று எது நடந்தாலும் அங்கே பெண்ணின் மீதான பாலியல் வன்முறைகள் தான் அதிகம் நடக்கின்றது. தன் ஜாதித் திமிரை, மதத் திமிரை காட்ட மாற்று ஜாதி பெண்கள், மாற்று மதப் பெண்களின் முலைகள் அறுக்கப்படுவதும், அவளின் பிறப்புறுப்பு குத்திக் கிழிக்கப்படுவதும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் மனப்பிறழ்வு நோய்.
மனு தான் இந்த இந்தியச் சட்டங்களையும் அதிகாரத்தையும் இன்றும் ஆள்கின்றது என்பது தான்உண்மை. தலித் மற்றும் பழங்குடி பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் இந்தச் சமூகத்தால் மிக விரைவில் கடந்து போய்விட முடிகின்றது. எவ்வளவு கடுமையான சட்டங்கள் வந்தாலும் சட்டத்தின் ஓட்டைகள் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே செய்கின்றன. புகார் தரப்படும் பல பாலியல் குற்ற வழக்குகளில் சிலவற்றில் தான் குற்றவாளி தண்டனை பெற முடிகின்றது என்பதே நடைமுறை உண்மை. இனி அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி தந்து, குறிப்பாக தலித் பெண்களுக்கு தங்களை காத்துக் கொள்ள துப்பாக்கி தர வேண்டும். வெறும் ஏட்டுச் சட்டங்கள் எந்த பயனையும் தரப்போவதில்லை. பெண்கள் தங்களை பாலியல் வன்புணர்வில் இருந்து காத்துக் கொள்ள கையில் ஆயுதம் ஏந்தினால் மட்டுமே இதற்கு விடிவு !!
- ம.வீ.கனிமொழி