பெரியார் பல்கலைக்கழகத்தின் தொடர் இந்துத்துவப் போக்கினை இன்னொரு நிகழ்வு வழியாகவும் வெளிக்காட்டி இருப்பதை சுட்டிக்காட்டுவதும், அதற்கான எதிர்வினைகளைப் பற்றி சிந்திக்கக் கோருவதும் தான் இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக 14.9.2022 அன்று ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

அந்த அறிக்கையில் அன்று அனைவரும் வாசிக்க வேண்டிய செய்திகளையும் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடங்குகிற போது திருமூலரின் ஒரு பாடலோடு தொடங்குகிறது. அந்தப் பாடலில் உள்ள பொருளைச் சொல்லி இருந்தாலும் பெரியாரின் தத்துவ பார்வையும், அறிவுக்கான தேடலும், சமூக விடுதலைக்கான அணுகுமுறையும் போர்க்குணம் மிக்க அறிவுத் தேடல் ஆகும் - என்ற செய்திகளுடன் முடிகிறது முதல் பத்தி.

ஏதேனும் ஒரு மேற்கோள் காட்டியாக வேண்டும் என்று விரும்பி இருந்தால் திருக்குறளில் இருந்து, எப்பொருள் எத்தன்மைத்தாயினும் - அல்லது - எப்பொருள் யார்யார் வாய் உரைப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு போன்ற குறள்களையோ,

வயதில் அறிவில் முதியார் வாய்மை போருக்கு என்றும் இளையார் உயர் எண்ணங்கள் மலரும் சோலை போன்ற பாடல் வரிகளையோ பயன்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் ஏற்கனவே இந்துத்துவ வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அவரைச் சார்ந்த கூட்டத்தினர் மீது திறனாய்வுகள் செய்யப்படும் நிலையில் இவ்வாறான முயற்சியை - எந்த செயல் திட்டமானாலும் அதில் எங்கள் இந்துத்துவ சிந்தனையைத் திணிப்போம் என்ற திமிர்த்தனமான பல்கலைக் கழக துணைவேந்தரின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வாய்ப்பு இருக்கிற தோழர்கள், மாணவர்கள் அந்த நிகழ்வில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்தும் இம்மாதிரியான இந்துத்துவ 'சில்லுண்டி' வேலைகளில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபடாமல் இருப்பது தான் நல்லது என்பதையும், அதுவே ஒரு கல்வியாளரின் சரியான போக்கு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியதும், அந்த திசை நோக்கி அவரைத் திருப்புவதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் தங்கள் வழிமுறைகளில் இது குறித்து தொடர் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற கடமையையும் இவ்வேளையில் அன்புடன் நினைவூட்டுகிறோம்.

கொளத்தூர் மணி

Pin It