இந்தியாவுக்கு விசுவாசமின்றி அமெரிக்காவிடம் மட்டுமே தேசப்பற்று காட்டுவோம் என்று உறுதிப் பத்திரம் தந்து, அமெரிக்க குடிமக்களாகப் பதிவு செய்த பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதிப் பிரிவினர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தினார்கள். மோடியின் பார்வையில் இவர்கள் ‘தேச விரோதிகள்’ என்றாலும் பார்ப்பனர்களாக இருப்பதால் தேசபக்தர்களாகி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்பி ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம்.
டிரம்ப் - மோடி பங்கேற்ற அமெரிக்காவின் ஹுஸ்டன், டெக்சாஸ் மாநிலங்களில் நடந்த பேரணி யில் (மக்கள் கூடுகை) 50,000 அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப், மோடியின் அரசியல் கொள்கை ஒரு பகுதி அமெரிக்க இந்தியர்களுக்கு உற்சாகம் தரலாம். ஆனால் பெரும் பான்மை மக்களுக்கு நெருக்கடியை உருவாக்குவ தோடு அவர்களுக்கிடையே சமூகத்தில் பிளவுகளை கூர்மைப்படுத்தும் ஆபத்தும் அடங்கியுள்ளது.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும் பான்மையான அமெரிக்க இந்தியர்கள் யார்? அமெரிக்காவின் குடிமக்களாக தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அமெரிக்கக் குடிஉரிமைக்கு உரிமை கோர வேண்டுமானால் அவர்கள் ஒரு உறுதி ஏற்றாக வேண்டும். இது அமெரிக்காவின் சட்ட நடைமுறை. அமெரிக்கக் குடிமகனாக/குடிமகளாக/ நான் மாறியப் பிறகு வேறு நாட்டோடு இருந்த ஈடுபாடு, விசுவாசத்தி லிருந்து முற்றும் முழுவதுமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன். (Absolutely and entirely renounce and abjure all allegiance and fidelity to any foreign state )
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் போனவர்கள் இப்படி உறுதி மொழியேற்று இந்தியாவின் மீது விசுவாசமோ ஈடுபாடோ கொள்ள மாட்டேன் என்று உறுதி ஏற்றவர்கள்தான் இந்தப் பேரணியில் பங்கேற்ற பெரும்பான்மையினர். பங்கேற்ற மற்றவர்கள் இப்படி ஒரு உறுதியை ஏற்கும் நல் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்திருப் பவர்கள். அதாவது அமெரிக்கக் குடிமகன் / குடிமகள் உரிமைக்காகக் காத்திருப்பவர்கள். இவ்வளவுக்குப் பிறகும் மோடியின் முன் ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று முழங்கினார்கள். ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினார்கள். கடந்த முறை மோடி அமெரிக்கா வந்தபோது, இவையெல்லாம் அரங்கேறின.
ஒரு நாட்டின் குடிமகன் வேறு ஒரு நாட்டுக்கு விசுவாசமாக இருப்பது கூடாது; அது தேச விரோதம் என்ற கருத்து இயல்பாக ஏற்கப்படுகிறது என்றாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை ‘இரட்டைக் குடியுரிமை’யும் அனுமதிக்கப்படுகிறது. ஒருவரே இந்தியக் குடியுரிமையோடு அமெரிக்கக் குடியுரிமை யும் பெறலாம். ஆனால் இந்தியாவில் இந்த உரிமை கிடையாது. ஆனாலும் இரண்டு நாடுகளுமே பல்வேறு கலாச்சாரங்களை ஏற்றுள்ள பன்முகத் தன்மைக் கொண்ட நாடுகள். இதற்கு நேர்மாறாக டிரம்ப் - மோடி இருவருமே பன்முகக் கலாச்சாரத்தை அழித்து ஒற்றைத் தேசமாக்க வேண்டும் என்ற இனத் தூய்மை கொள்கையை நடைமுறைப்படுத்தத் துடிப்பவர்கள்.
இதற்காக இரு நாடுகளின் அரசுகளும் மக்களை மத, இன அடிப்படையில் தனிமைப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், அடையாளங்களை அழித்தல், குடி உரிமை மறுத்தல் போன்ற தீவிர செயல்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. இந்தியாவை ‘இந்துத்துவா’ நாடாக மாற்ற ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே மதம் என்று வேகம் வேகமாக செயல்படும் மோடியும் - அதே கொள்கையை அமெரிக்காவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக செயல்படுத்தி வரும் டிரம்பும், மைனாரிட்டி எதிர்ப்பு, மைனாரிட்டி அடையாள சிதைப்புகள் வழியாக தங்களை செல்வாக்கு மிக்க தலைவர்களாக அடையாளப்படுத்தி வருகிறார்கள்.
சொந்த நாட்டில் ‘தேச பக்தி’ பேசும் மோடி, அமெரிக்காவின் இந்தியர் களிடையே இரு நாடுகளிடமும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். வெளிச்சம் போடும் விழாக்களில் பங்கேற்பது வழியாக அமெரிக்க குடிமக்களிடையேயும் தனது செல் வாக்கை நிலைநிறுத்த விரும்புகிறார். அமெரிக்காவில் தனக்கு மிகப் பெரும் வரவேற்பும் புகழ் மாலைகளும் கிடைப்பதைக் காட்டி, இந்தியாவில் தனது புகழும் செல்வாக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். அதேபோல் அமெரிக்க இந்தியர்கள் வழியாகத் தனக்குக் கிடைக்கும் புகழ், ஆதரவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் தனது இனவாதக் கொள்கைக்கு வலிமை சேர்க்க டிரம்ப் விரும்புகிறார்.
இந்துத்துவா கொள்கையை அழுத்தமாக ஆதரித்து வரும் அமெரிக்க இந்தியர்களில் பெரும் பான்மையினர் உயர்ஜாதிக்காரர்கள் (பார்ப்பனர்கள்). இவர்கள் அமெரிக்காவில் தங்களுக்கான ‘மைனாரிட்டி’ உரிமைக்கு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக ‘இந்துத்துவா’ பேசும் மோடியின் கொள்கையையும் முழுமையாக ஆதரிக்கிறார்கள். இவர்களே வெள்ளை யர்களே உயர்வானவர்கள் என்ற டிரம்பின் நிறவெறி கொள்கையால் இந்தியர்கள் தாழ்வுக்குள்ளா கிறார்கள் என்றும் குமுறுகிறார்கள். டிரம்பின் இந்த நிறவெறிக் கொள்கையால் தங்களுக்கான ‘குடி உரிமை’ வழங்குவதிலும் பாஸ்போர்ட் வழங்குவதி லும் பாகுபாடு காட்டப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
மோடி, இவர்களின் கோரிக்கை நியாயம் என்று கூறி தனது ஆதரவை வெளிப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கான பேச்சு வார்த்தைகளில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்து கிறார். அதே நேரத்தில் அமெரிக்க ஜனநாயக சக்திகள் இந்தியாவில் காஷ்மீரில் வாழும் மக்கள் உட்பட பல்வேறு இனப் பிரிவினரின் ஜனநாயக உரிமைகளை மறுக்கக் கூடாது என்று கூறினால் அமெரிக்காவின் உயர்ஜாதி இந்தியர்கள் (பார்ப்பனர்), இந்தியாவைப் பற்றி பேச உங்களுக்கு உரிமையில்லை; வாயை மூடுங்கள் என்று கடுமையாக எதிர்க்கிறார்கள். இத்தனைக்கும் இந்தியாவில் புறக்கணிப்புக்கு உள்ளா கும் சிறுபான்மையினர், இந்த அமெரிக்க வாழ் உயர் ஜாதியினரைப்போல் அமெரிக்க ‘விசுவாச’ உறுதி மொழியை ஏற்காதவர்கள்; இந்தியாவுடனேயே தங் களை குடிமக்களாக இணைத்துக் கொண்டவர்கள்.
அமெரிக்க காங்கிரசில் கலிபோர்னியா மாநிலத்தின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட ரோகன்னா (Rokhanna) வை குறி வைத்து அமெரிக்க வாழ் ‘இந்துத்துவா’வாதிகள் தாக்குகிறார்கள். அமெரிக்காவின் பன்முகக் கலாச்சாரம் பாதிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தும் இவர், இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்றப்படுவதைக் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார்.
பல்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள், இணைந்து வாழ்கிறார்கள் என்பது தன் முதிர்ச்சியான ஜனநாயக நாட்டுக்கான பெருமை, சமூகத்தைப் பாகுபடுத்துவது அல்ல; இந்தியாவில் வேத காலத்துக்குப் பிறகு குடியேறியவர்கள் ஆரியர்கள். ஆரியர் குடியேற்றத்துக்கு முன்பே ஹரப்பா, மொகஞ்சதாரோவில் பூர்விகக் குடிகள் தனித்த அடையாளங்களுடன் வாழ்ந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.
பூர்வீகக் குடிகளின் அடையாளங்களை சிதைத்த ஆரியர்கள், இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்கிறார்கள். பிற மத இன அடையாளங்களோடு வாழ்வோர் உரிமைகளை மறுக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்காவில் தங்களுக்கு சிறுபான்மை யினருக்கான உரிமை வேண்டும் என்கிறார்கள். சிறுபான்மையினர் அடையாளத்தை அழிக்கும் மோடிக்கு பேராதரவை வெளிப்படுத்து கிறார்கள். பிறந்த நாடான இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களும் இவர்கள்தான்.
செப். 21, 2019 ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வர்கீஸ் கே.ஜார்ஜ் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.
தமிழில் ‘இரா’