சாதிய, பெண்ணிய அநீதி என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் “இராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க்” (RSS). நால்வருணக் கோட்பாடும், மனுஸ்மிருதியும் இதற்கு அடிப்படை மூலம். இந்த மனுஸ்மிருதியை இந்தியாவின் சட்டமாக மாற்றத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் கருவிதான் பாஜக. மனுஸ்மிருதி பெண்களின் அடிப்படை உரிமையையும் சுதந்திரத்தையும் சனாதன தர்மம் என்கிற பெயரில் தடை செய்கிறது.

எடுத்துக்காட்டாகப் பெண்களை வழக்குகளுக்குச் சாட்சியாக கூட ஏற்க கூடாது என்கிறது மனுஸ்மிருதி. ஆர் எஸ் எஸ், பாஜக இரண்டும் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தைச் சபரிமலை விவகாரத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம். இயற்கை நிகழ்வான மாதவிடாய் என்னும் கருப்பை சார்ந்த சாதாரண உடல் இயக்கத்தைத், தீட்டு என்னும் பெயரால் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துச் சபரிமலை ஐயப்பன் பெயரால் மறுக்கிறது பார்ப்பனியம். 

brahmin and womanகாலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என்ற பெயரில் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது என்றார் ஆர்எஸ்எஸ்ஸின் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி 2016-ஆம் ஆண்டு. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் பக்தர்களின் உணர்வை, நீதிமன்றத் தீர்ப்பு என்ற பெயரால் புண்படுத்தக் கூடாது என மாற்றிப் பேசுகிறார். மாற்றிப் பேசுவதும் மன்னிப்பு கேட்பதும் ஆர்எஸ்எஸ்ஸின் அடையாளங்களில் ஒன்றாகவே இருக்கிறது.

 ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், வெற்றியாளர்களாக ஆண்கள் இருப்பதுடன் அவர்களுக்குப் பெண்கள் பணிவிடை செய்ய வேண்டும் என்றும், அத்தகைய கடமைகளிலிருந்து தவறும் பெண்களைக் கணவர்கள் கைவிடலாம் என்றும், மேற்கு உலக நாகரிகமே பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்றும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

 கே.பி ஹெட்கேவரால் 1925-இல் உருவாக்கப்பட்ட இந்த ஆர்எஸ்எஸ் இல் இந்துப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண்கள் அடிப்படையில் விபச்சாரக் குணம் உடையவர்கள் என்ற மனுஸ்மிருதியின் அடிப்படையில் பெண்களை நிராகரிக்கிறார்கள்.

 இலட்சுமிபாய் கேல்கர் என்பவரின் தொடர் முயற்சியால் பெண்களுக்கான தனி அமைப்பை 1936 இல் தொடங்க ஹெட்கேவர் அனுமதி அளித்தார். அந்த அமைப்பின் பெயர் " இராஷ்ட்ரிய சேவிகா சமிதி "(RSS).

 இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் இந்து தேசம் காத்தல் என்னும் கொள்கையை, முழுமையாக ஒலிப்பதே இராஷ்டிரிய சேவிகா சமிதிதான். ஆர்எஸ்எஸ்ஸின் இந்த இரு அமைப்புகளுமே தேசபக்தி என்ற போர்வையில் மறைமுகமாகப் பார்ப்பனியத்தை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கின்றன.

 ஆர்எஸ்எஸ்ஸின் மகளிர் அமைப்பு இந்து தேசம் காத்தல் என்ற பெயரில் அங்குள்ள பெண்களுக்கு எத்தகைய எண்ணங்களை விதைக்கிறது என்பதை 2017 இல் வெளிவந்த ஒரு ஆங்கில நாளேட்டின் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 தாய்மை அடைதல் என்பது இயற்கையின் நியதி. ஆகையால் பெண்கள் மனைவி, சகோதரி, தாய் என்ற பொறுப்புகளிலிருந்து விலகாமல் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிறது சேவிகா சமிதி.

 இந்த அமைப்பை உருவாக்கிய இலட்சுமிபாய் கேல்கர், சமூக அமைப்பு முறையான திருமணத்தைப் பெண்கள் ஒருநாளும் புறக்கணிக்கக் கூடாது என்கிறார்.

 இன்னொரு சேவகியான நீலிமா கபூர் என்பவர் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்று எண்ணிக்கையில் உயர்கிறார்கள். ஆகையால் இந்துப் பெண்கள் ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது என்கிறார். இரண்டு பிள்ளைகள் இருந்தால் ஒருவர் இந்து தேசத்திற்கும், இன்னொரு பிள்ளை குடும்ப வாழ்க்கைக்கும் எனத் தேர்ந்தெடுத்து இந்து மக்கள் தொகையைப் பெருக்க வேண்டும் என்கிறார்.

இந்த இரு அமைப்புகளுமே தேசபக்தி என்ற பெயரில் பெண்களின் அடிப்படை உரிமையான காதல், சுதந்திரம், தனித்தன்மை ஆகியனவற்றைப் பறித்து, ஆண்களுக்குத் தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தலே பெண்களின் கடமை என்று பக்தியுடன், மதவெறியையும் விதைக்கின்றன.

நிர்வாக முறைக்காக இஸ்லாமிய , பார்சி, கிறிஸ்துவர்கள் அல்லாத மக்களை வேறுபடுத்திக்காட்ட ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட சொல்தான் இந்து.

இந்த சொல்லைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் தங்களின் நால்வருணமுறையை நிலை நிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றனர்.

இந்தியாவைப் பாரதம் என்ற பெயரில், மீண்டும் பார்ப்பனிய ஆதிக்கத்தை நடைமுறைபடுத்த நினைக்கும் ஆர்எஸ்எஸ் இன் கருவியாகச் செயல்படும் பாஜகவின் ஆட்சி தொடரக்கூடாது. தொடர்ந்தால் எதிர்காலத்தில் பெண்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய மக்களும் அனைத்து உரிமைகளையும் இழக்க நேரிடும். அத்தகைய சூழல் ஏற்படுவது நாகரிகம் வளர்ச்சி அடைந்த மனித இனத்திற்கு மிகப்பெரிய கேடாகும்.

 கொடிய நஞ்சு நிறைந்த பாம்பையும், தேளையும் கண்டவுடன் அதனை அகற்றி மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்கிறான். இந்த வரிசையில் முதலில் இடம்பெறவேண்டிய பார்ப்பனியத்தை இம்மண்ணிலிருந்து அகற்றுவதே மனித இனத்திற்குப் பாதுகாப்பானதாகும்.