இந்து மதத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா புண்படுத்தி விட்டதாக பா.ஜ.க. பார்ப்பனர்கள் - சங் பரிவாரங்கள் கடும் கண்டனங்களை எழுப்புகிறார்கள். ‘சூத்திரர்’ என்று இந்து மதமான ‘வேதமதம்’ இழிவுபடுத்துவதை ஆ.இராசா சுட்டிக்காட்டிப் பேசியது தான் குற்றமாகி விட்டது.

சூத்திரர் இழிவை எங்கள் மதம் ஏற்காது என்று அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை - ஜாதி வெறியர்களால் இப்போதும் ‘மதத்தின் - கடவுளின்’ கொள்கையாகவே சட்டவிரோதமாகப் பின்பற்றப்படு கிறது. தென்காசி அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியல் இனக் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் விற்பதற்குக்கூட தடை செய்து ஊர்க் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். தீண்டாமை வெறியை மறைப்பதற்குக்கூட தயாராக இல்லை. இறுமாப்புடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் வழியாகத் தடை விதிக்கும் முயற்சியில் காவல்துறை செயல்படத் தொடங்கி யிருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய நடவடிக்கை. இந்தப் பிரிவு இப்போதுதான் தமிழ்நாட்டில் முதன்முறையாக அமுல்படுத்தப்படுகிறது. இந்த ‘தீண்டாமை’ வெறிக்குக் காரணம் ஊர்க் கோயில் திருவிழாவில் நடந்த ஜாதி மோதல் தான். பட்டியல் இனப் பிரிவினரும் இந்துக்கள்தான் என்று கூறும் பா.ஜ.க., அவர்களை இழிவுபடுத்துவது குறித்து ஏன் போராட முன் வரவில்லை? இந்தத் தீண்டாமையின் ‘மூல வேர்’ வர்ணாஸ்ரமத்தை எதிர்த்துப் பேசுவதே. இந்துக்களைப் புண்படுத்துவதாகி விடுமா?

‘மனுசாஸ்திரம்’ - சூத்திரர்களை பிராமணனின் வைப்பாட்டி மகன் - அடிமை என்று கூறுகிறது. அதைத் தடை செய்ய வேண்டாமா?

‘பகவத் கீதை’ பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒட்டு மொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துகிறது. வேதங்களை எதிர்ப்பவர்களை பகவான் கிருஷ்ணன், பகவத் கீதையில் வசை பாடுகிறான். துஷ்கருமன் (தீங்கு செய்பவன்); நர ஆத்மா (கீழ் மகன்); ஹத ஞானம் (அறிவு செத்தவன்); அல்ப மேதாவி (அறிவு கெட்டவன்); அவுத்துவன் (அறிவுப் பாதகன்); நஷ்டன் (அழிந்து போனவன்); அசேதனன் (மூளையற்றவன்); சம்சே ஆத்மா (சந்தேகப் பிராணி) - இது கிருஷ்ணன் சூட்டுகிற ‘பட்டம்’. வேதத்தைக் கேள்வி கேட்ட புத்தர்கள், சமணர்கள், சார்வாகர்கள், இப்போதும் கேள்வி கேட்கும் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் எல்லோருக்கும் இந்த இழிவு பட்டங்கள் பொருந்தக் கூடியது தானே?

அதேபோன்று கடவுள் இருப்பைக் கேள்வி கேட்போருக்கு பகவத் கீதையில் கிருஷ்ணன் தரும் பட்டம் என்ன? நஷ்டாத்துமா (அழிந்து போனவன்), இடம்பமான் (குதர்க்கம் பேசுவோர்), மதனவித்தன் (ஆணவக்காரன்), அசுரன், இராட்சசன். இந்த வசவுகளை புனித நூல் என்று கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். பெரியார் கேள்வி கேட்டால் மட்டும் கதறுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; அதை நியாயப்படுத்தி பரப்புகிறவன் அயோக்கியன்; சிந்திக்காமல் ஏற்றுக் கொள்கிறவன் காட்டுமிராண்டி என்ற பெரியார் குரல் ஒன்று மட்டும் பார்ப்பனியத்துக்கு எதிரான சிங்கமாக கர்ஜித்தது.

கிருஷ்ணன் கூறுகிறான். “உலகையே அழிக்கும் வல்லமை என்னிடம் இருக்கிறது; அர்ச்சுனா, நீ உனது கருமத்தை (அதாவது உயிர்க் கொலையை) செய்யா விட்டாலும் உனக்கு எதிரே நிற்கும் போர் வீரர்கள் உயிர் வாழப் போவது இல்லை; நீ மட்டுமே உயிர் வாழ்வாய் எனவே எழுந்து நில்; எதிரிகளை வென்று ஆட்சி உரிமையை எடுத்துக் கொள். என்னால் ஏற்கனவே கொல்லப்பட்ட துரோணனையும், பீஷ்மனையும், கர்ணனையும் பிற போர் வீரர்களையும் நீ கொன்று விடு” என்று வெளிப்படையாகக் கொலை வெறியைத் தூண்டும் பகவத் கீதையை தடை செய்ய வேண்டாமா? ‘கொலை’களைக் கொண்டாடுகிறவர்கள் பெரியாரின் கடவுள் மறுப்பையும் ஆ. இராசாவின் ‘சூத்திரர்’ எதிர்ப்பையும் புண்படுத்துவதாகக் கூப்பாடு போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

- விடுதலை இராசேந்திரன்

Pin It