பெரியாரின் கருத்துக்களை பெண்கள் படிக்க வேண்டும் பெண் ஏன் அடிமையானாள் நூலை படித்தால் எந்த தடைகளையும் துணிவு தமக்கு கிடைக்கும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் 28.04.2025 நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்பி பேசினார். கடந்த வார‌ தொடர்ச்சி....

கவர்னர் தேவையில்லை என்று பலகாலமாக திராவிட இயக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு கவர்னர் எதற்கு என்று நாம் கேட்டோம். இப்போது சுப்ரீம் கோர்ட்டையே கேட்க வைத்த இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் மாறியிருக்கிறது.

அதேபோல நமது மொழியை நம்மிடமிருந்து பறித்துவிட வேண்டும். மொழியின் வழியாகத்தான் நமக்கு செய்திகள் வருகிறது. ஒவ்வொரு இனமும் தன்னுடைய சரித்திரத்தை புத்தகங்களாக மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்ப்பதில்லை. கதைகளாக வீடுகளிலே பேசக் கூடிய உரையாடல்களாக மாற வேண்டும்.

யூதர்களை எடுத்துக் கொள்ளுங்கள்… ஜெர்மனியில் அவர்கள் நடத்தப்பட்ட விதம், அவர்கள் கொல்லப்பட்ட வரலாற்றை தங்களுடைய குழந்தைகளுக்கு இன்றுவரை தினமும் கதைகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் இன்று உலகத்தையே ஆளக் கூடிய இடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்:. நாம் அதுபோல் சொல்லிக் கொண்டிருக்கிறோமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று ஐயா சுபவீ அவர்கள் திராவிடப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் மகளிரணி நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அந்த பள்ளியிலே தயவு செய்து நீங்களும் பதிவு செய்துகொள்ளுங்கள். வரலாற்றை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சிலிகான் வேலியிலும் கனடாவிலும் அமர்ந்துகொண்டு, பள்ளிக் கூடங்களில் எதற்காக சாதி சர்டிபிகேட் என கேட்கிறார்கள். அதனால்தான் சாதி வளர்கிறது என்று சொல்லக் கூடிய ஒருதலைமுறையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் அங்கே வந்து உட்கார வாங்கிய அடியெல்லாம் உனக்குத் தெரியாது. தமிழ்நாட்டுக்கு திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கும் இளைஞர்களுக்கு அந்த செய்திகளை சொல்லாமல் விட்டது நாம் செய்த தவறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மகாபாரதம், ராமாயணம் கதைகளைச் சொல்கிறோம். கதைகளை சொல்லுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உங்கள் வரலாற்றைச் சொல்லுங்கள். எத்தனை அடிகள் வாங்கினோம். உரிமைகளை இழந்தோம், எப்படி போராடிப் பெற்றோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளருங்கள்.

இல்லையென்றால் ஆஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் போய் உட்கார்ந்துகொண்டு அவர்கள் ஜாதி மாநாடுகளை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. என்னுடைய ஜாதியில் பெண்ணைத் தேட வேண்டும் என்று அங்கிருந்து இங்கே பயணம் வந்துகொண்டிருப்பார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதனால் நாம் வந்த வழியை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும். அப்படி சொல்லித் தந்தால்தான் இன்றுநாம் பெற்றிருக்கும் உரிமைகளை எதிர்காலத்தில் நாம் தக்க வைக்க முடியும்.

இந்தியாவின் வொர்க் ஃபோர்சில் 42% பெண்கள் இருக்கிறோம் என்று பெருமையோடு பதிவு செய்யும் அதே நேரம்., இந்த நிலையை அடைய தந்தை பெரியார் போல பேரறிஞர் அண்ணா போல கலைஞர் போல, நமது தளபதி போல தலைவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் போராட்டம் முடிந்துவிட்டது என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. சுயமரியாதை இயக்கம் பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறது, சுயமரியாதை பற்றி எனக்கு விழிப்புணர்வு இருக்கிறது. அக்கறை இருக்கிறது என்று சொல்லக்கூடிய எந்த ஒரு ஆணும் பெண்ணும்.. பெண் விடுதலையை மறுக்கக் கூடியவர்களாக பெண்ணை மதிக்காதவர்களாக பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமான தளம் வேண்டும் என்று நினைக்காதவர்களாக, இருந்தால் அவர்கள் சுய மரியாதைக் காரர்களாக இருக்க முடியாது. எப்படி இருக்க முடியும்?

பாதி சுயமரியாதையை ஏற்க முடியும், மீதி ஏற்க முடியாது என்றால் நீ சுயமரியாதைக்காரனாக இருக்க முடியாது. 

போலித் தனம் கூடாது! 

ஒரு பெண்ணை இழிவுபடுத்தக் கூடியவன் ஒரு பெண்ணை தனிப்பட்ட முறையிலே கிண்டலாக கேலி பேசி மேடையிலே இழிவுபடுத்தக் கூடிய யாரும் சுயமரியதைக் காரர்களாக பெரியார் வழியிலே வந்தவர்களாக இருக்க முடியாது. பெண்ணுக்கு ஏன் இந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக் கூடியவர்கள் யாரும் சுய மரியாதைக் காரர்களாக இருக்க முடியாது.

அதேநேரத்திலே ஒரு பெண் எனக்கான உரிமைகள் வேண்டும் என்று கேட்கக் கூடிய பெண், ஜாதியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால், அவளுக்கும் அதற்கான எந்த தகுதியும் அருகதையும் கிடையாது.

ஏனென்றால் உரிமை என்று சொல்லும்போது சுயமரியாதை என்று சொல்லும்போது எல்லாருக்குமான ஒன்றாகத்தான் அது இருக்க முடியும். பாதிப் பாதியாக பிரித்து இதெல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொள்ளக் கூடிய சுயமரியாதை முழுமையான சுயமரியாதையாக உண்மையான சுயமரியாதையாக இருக்க முடியாது. அது போலித் தனத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

நாம் போராடிப் போராடிப் பெற்றிருக்கக் கூடிய இந்த நிலை, தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பிறருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பெயருக்குப் பின்னாடி ஜாதிப் பெயர் இல்லாததுதான் தமிழ்நாட்டின் அடையாளம்.

வேறு எந்த மாநிலத்திலும் இதைப் பார்க்க முடியாது. எவ்வளவோ படித்து முன்னேறிய மாநிலம் என்று சொல்லக் கூடிய மாநிலங்கள் கூட ஜாதிப் பெயரை இன்னமும் விடவில்லை. அந்த பெருமை அவர்களை இன்னும் விடவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்களை பெயரைப் பார்த்தாலேதெரியும். பெயருக்குப் பின்னால் வாலே இருக்காது. ஆனால் அந்த வால் சில தவறான அரசியலால் அதற்கு நாம் கொடுக்கக் கூடிய சின்னச் சின்ன வாய்ப்புகளால், மறுபடியும் இங்கே தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது என்பதையும் நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்.

அதை வெட்ட வேண்டும் என்று நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறும்! 

அதேபோல மதக் காழ்ப்புகள், மத துவேஷங்கள் என்ற போர்வையில் ஒருவர் தாக்கப்படுகிறார் சிலர் உயிரிழக்கிறார்கள் என்றால் அதைச் சுற்றி ஒரு கதையைப் பின்னி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடியவர்களிடம்தான் இன்று இந்திய நாட்டின் ஆட்சி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு மசோதாவிலும் மக்களைப் பிளவுபடுத்தக் கூடிய மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய ஆட்சிதான் பாஜக ஆட்சி.’ அவர்கள் இந்த மண்ணிலே பொறுப்பிலே இருக்கும் வாய்ப்பு தொடரும் என்றால் நாம் கட்டமைத்திருக்கும் இந்த நாடு ஒரு மிகப்பெரிய கேள்விக் குறியாக மாறும்.

அவர்கள் ஊடுருவாமல் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை கடப்பாடு நமக்கு இருக்கிறது. அதைத் தாண்டி இந்த நாட்டையும் பாதுக்காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நமக்கு எதிர்காலத்தில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை புரிந்து கொள்ளும் நிலையில் கூட பல மனிதர்கள் இல்லை.

மனித இனத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சியை நாம் திரும்பிப் பார்த்தோம் என்றால்… விவசாயிகளாக இருந்தோம், அதன் பின் தொழில் புரட்சி, அதன் பின் டெக்னாலஜி புரட்சி... இன்று ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் புரட்சி உனக்கு தெரிந்த எல்லாவற்றையும்

ஆர்ட்டிபிசீயல் இண்டெலிஜன்ஸ் செய்யும் உன் வேலையைப் பாரு என்ற நிலையில், அந்த வேலை என்ன என்பதை கூட புரிந்துகொள்ள முடியாமல் மனித இனம் நின்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இந்தியைப் படி ,அதைப் படி இதைப் படி என்று திணித்தால் இது கொஞ்சமாவது அறிவியலுக்கு ஒத்துவரும்படி இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். தொழில் நுட்பத்தை சொல்லிக் கொடுக்காமல் இந்தியை படி என்று சொல்லியிருந்தால் நம் தமிழ் பிள்ளைகள் இன்று உலகத்தின் பல நாடுகளில் வேலைகளில் இருக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

இன்று உலகம் மிகப்பெரிய மாற்றத்தின் வாசலிலே நின்று கொண்டிருக்கிறது. நம் பிள்ளைகள் எந்த பாடத்திட்டத்திலே சேர்த்து என்ன பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற முக்கியமான கேள்விகள் நம் முன்னே நின்று கொண்டிருக்கும் நிலையில்… 100 வருடம் முன்பு நாம் போட்ட ஜாதிச் சண்டையை இன்றும் போடு போடு என்று சொல்கிறார்களே அவர்களை இந்த மண்ணில் இருந்து ஓட ஓட விரட்டப்பட வேண்டும்.

அதுதான் நம்முடைய எதிர்காலத்தின் வளர்ச்சி. அதை மடைமாற்றுவதற்கு மொழியை கற்றுக் கொள், அதை மடை மாற்றுவதற்கு மதத்தைக் கொண்டு வந்து திணித்து பெண்கள் இளைஞர்கள் முன்னேற்றத்தில் தடைக்கற்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து கேள்வி கேட்டால் பெண்கள் அடங்கிவிடுவார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அது நடக்காது. எந்த கேள்விக்கும் நம்மால் பதில் சொல்ல முடியும், அதற்காக பெரியாரை படிக்க வேண்டும். ஏன் பெண் அடிமையானாள் என்ற புத்தகத்தை படித்தால் யார் தடுத்தாலும் நிற்க மாட்டோம். உடைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்போம்.

இதுபோன்ற சுயமரியாதை மாநாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட வேண்டும். நம்முடைய வலியை நம்முடைய போராட்ட உரிமை சரித்திரத்தை ஒவ்வொரு நாளும் எடுத்துச் சொல்வோம். கதைகளாக உரையாடல்களாக எடுத்துச் சொல்வோம்.

இனி நம் உரிமையை யாரும் பறித்துவிட முடியாத அரணாக திராவிட இயக்கம் திகழும். இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.

(நிறைவு)

- கனிமொழி கருணாநிதி