அக்டோபர் 7ஆம் தேதி பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உடுமலை கவுசல்யாவின் எழுச்சி உரை

இந்த மேடை நமக்கெல்லாம் கற்றுத்தரும் அரசியல் பாடம் ஈடிணையற்றது என்று நான் இந்த அழைப்பிதழ் பார்த்ததிலிருந்தே உணர்கிறேன். நான் அறிந்து மேடையில் உள்ள ஒவ்வொரு வரும் சமூகத்தில் ஒவ்வொரு அடையாளங்களைப் பெற்றிருக்கிறார்கள். அது ஒடுக்கப்பட்டோரின் குரலாகவே தம் குரலை ஆக்கிக் கொண்டவர்கள், சாதி ஒழிப்பில் எவ்வகையிலும் சமரசமற்றவர்கள், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் அழிவுத் திட்டங்களுக்கு எதிராகக் களத்தில் அஞ்சாது நிற்கும் போராளிகள், அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையில் ஊன்றி நிற்பவர்கள் என எல்லாப் பெண்களும் பெண் விடுதலையின் அடையாளமாகவே தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். இன்னொரு வகையில் சமூகத்தின் விலங்குகளையும் பண்பாட்டுச் சிறைகளையும் உடைத்து விடுதலைப் பெண்ணாகவே வாழாமல் இப்படிப்பட்ட அடையாளங்களோடு பெண்கள் நிலைபெற்று வெற்றி பெற முடியாது. விடுதலை வாழ்வை பெண்கள் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதன் மூலம்தான், மக்களுக்கான போராட்ட வாழ்வை மேற்கொள்ள முடியும் என்பதே அடிப்படை பாடம். இந்த நிகழ்வும் மேடையும் நமக்கு இதை உயிரோட்டமாய் நிரூபித்துக் கொண்டுள்ளது. இன்னொரு வகையில் மேடையில் உள்ள இப்படிப்பட்ட அடையாளங்களைக் கொண்ட எல்லோரும் தாடிக் கிழவன் தந்த விடுதலைச் சுடரை உயர்த்திப்பிடிப்பவர்கள். அந்த வகையில் இந்த மேடை அனைத்துவகை அரசியல் அடையாளங்களையும் ஒருசேர பெற்றிருக்கிறது. நான் சாதி ஒழிப்பு களத்தில் நிற்கிறேன். என்னளவிலான குறைந்தபட்ச பங்களிப்பைத்தான் செய்து வருகிறேன். பெண் விடுதலை இல்லாமல் சாதி ஒழிப்பு இல்லை, இனத்தின் விடுதலை இல்லை, என்ற கருத்தில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். பெண் விடுதலையை சமூகத்தின் பொதுப்புத்தியும் ஏற்கும்படி என் கருத்துப் பரப்புரையின் மூலமும், நானே அப்படி வாழ்ந்து காட்டுவதன் மூலமும் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் தான் ஆயிரம் ஆயிரம் வளர்மதிகளை உருவாக்க முடியும், என நம்புகிறேன். இதற்கான பயணத்தில் நான் ஒருபோதும் சோர்ந்துவிடவோ, தேங்கிவிடவோ மாட்டேன்.

 இந்த அடிப்படையில் சொன்னால் நான் மேடையில் உள்ள சக தோழர்கள் போல், என்னை நான் முழுவதுமாய் ஒப்புக்கொடுத்து இயங்காத போதும், நானும் வளர்மதிதான், நானும் திவ்யா தான், நானும் ஜெயராணி தான்.

  நான் பலவிதமான நெருக்கடிகளை தினம் தினம் கடந்து வந்து கொண்டிருக்கிறேன். போராளிப் பெண்கள் இதே நெருக்கடிகளை மீறித்தான் என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடிகளாக விளங்குகிறார்கள் என நினைக்கும் போது, பெருமிதத்தோடு உங்களைப் பார்க்கிறேன்.

   நான் வாழும் சூழலில் நான் நானாக இருக்கவே பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. என் இயல்பைக் கொல்வதற்கு அவர்கள் அதிகாரத்தை செலுத்தினால் ஓங்கி மிதித்து வெளியே வந்துவிடுவேன். ஆனால் அவர்கள் பாசம் அக்கறை என்ற ஆயுதங்களைக் கொண்டு முடக்கப் பார்க்கிறார்கள். என் சங்கர் கொல்லப்பட்டதும், நான் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டதும்தான் அவர்கள் என் மீது கொண்டிருக்கிற கூடுதல் அக்கறைக்குக் காரணம். அதேநேரம், நான் சமூகத்தில் உள்ள பெண்கள் போல் அல்லாமல் தனித்து நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமும் அதே சாதிய வன்முறைதான். என்னை அன்பின் பேரால் ஒடுக்க நினைக்கும் அவர்களுக்கு சங்கரின் ரத்தவாடை தெரியாது. அதன் கனத்தை அருகில் நின்று பார்த்தவள் நான். இறுதியாக நானும் அவனும் சேர்ந்துதான் கண்மூடினோம். நான் எழுந்தேன். அவன் எழவேயில்லை. அந்த வெற்றிடத்தை எனக்குத் தந்தது யார்? என் தாய் தந்தையா? அவர்கள் கருவிகள் மட்டும்தான். அடிப்படையான காரணம் கொடிய சாதிதான். என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான். என் பெற்றோர் அதன் கருவிதான் என்றாலும் அவர்கள் பெறும் தண்டனைதான் சாதிய கௌரவக் கொலைகளுக்குத் தனிச்சட்டம் என்ற கோரிக்கைக்குப் பெரும் பாய்ச்சலைத் தரும். அந்தத் தனிச் சட்டம் சாதி ஒழிப்புக்கு கூர்மையான ஆயுதமாய் அமையும்.

பெற்ற தாய் தகப்பனை பழி தீர்க்கப் பார்க்கிறாளே என்ற சிந்தனையே எனைச் சுற்றியுள்ளோருக்கு பதற்றத்தைத் தருகிறது. ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இன்று கண்ணுக்குத் தெரியாத மனிதர்கள் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது பெற்றோர் என்பதையும் தாண்டி சக உயிர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மீதும் அன்பு உண்டு. அதனால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தரப்பட வேண்டுமா எனக் கேட்டபோது ஒரு உயிரின் மதிப்பை நான் அறிவேன். அப்படியொரு தண்டனை வேண்டாம் என்று பதில் சொன்னேன். ஆனாலும் அவர்களுக்கு அதைத்தாண்டிய அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தராமல் ஒயமாட்டேன். இப்போது என் மனநிலை சங்கருக்கான நீதி என்ற புரிதலில் மட்டுமில்லை சாதிய அமைப்பிற்கு எதிரான நீதி! சாதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான நீதி!

இந்த நீதிக்கு தாய் தந்தை பாசமே குறுக்கே வரமுடியாது என்று உதறித் தள்ளிவிடுகிறேன். அப்படியிருக்கும் போது அதற்கான பயணத்தைத் தடுக்கப் பாசம் எந்த வகையில் குறுக்கே வந்தாலும் பணிந்து போகமாட்டேன்.

பூ வைத்துக் கொள், பொட்டு வைத்துக் கொள், சேலை கட்டு, குடும்பப் பையனாகப் பார்த்து மணமுடித்து நல்ல மறுமகளாக இரு...இப்படிப்பட்ட அறிவுறுத்தல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தினம் தினம் கடக்க வேண்டியுள்ளது. பெரியாரின் பெண்ணாக உருவெடுத்த பிறகு காதலில் கூட முடங்கி வாழ்ந்துவிட மாட்டேன். காதலின் பெயரால்கூட சமூகத்திற்குப் பயந்து, என்னை என் உணர்வுகளை கொன்று, பிணம் போல் வாழ நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அப்படி அபலைப் பெண் என்ற பரிவை இந்த சமூகத்திடமிருந்து எல்லாக் காலமும் எதிர்பார்த்துக் கிடக்கமாட்டேன். அப்படி நானும் வாழ்வது பெரியார் எனும் மனிதரின் பேருழைப்புக்கு நியாயம் செய்வதாகாது. சங்கருக்கான அதாவது சாதி ஒழிப்பிற்கான நீதிப் பயணம் என்பது, மனதைச் சிறை வைத்துக் கொள்ளாது, கட்டற்ற சுதந்திரத்தோடு, எனக்கான வாழ்வை விட்டுத்தராமல் பயணிப்பதுதான். இந்தப் புரிதலையும் விடுதலை இதயத்தையும் எனக்குப் பரிசளித்த

ஒரே தோழன் தந்தை பெரியார் மட்டும்தான்.

விடுதலைப் பெண்ணாக வாழ்கிற போதுதான் சாதி ஒழிப்புக்கு சமரசமற்று பங்களிக்க முடியும் என நம்புகிறேன். இதற்குத் துணை செய்யும் பேரன்பு கொண்ட தோழமைகளுக்கு இந்நேரம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பூ வைக்கமாட்டேன், நகை அணியமாட்டேன், முடி வளர்க்க மாட்டேன், எனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன், என் பயணத்தை நான்தான் தீர்மானிப்பேன். இதற்குப் பொருத்தமான சூழலில்தான் வாழ்வேன். அல்லது இதற்குப் பொருத்தமான சமூக சூழலை உருவாக்கத் தொடர்ந்து போராடுவேன், என் பங்களிப்பைச் செய்து கொண்டே இருப்பேன். விடுதலைப் பெண்ணால்தான் சாதியை ஒழிக்க முடியும் என திடமாக நம்புகிறேன். சாதி ஒழிப்புக்காக என் விடுதலை வாழ்வை எவருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுத்தர மாட்டேன்.

சில மாதங்கள் முன்பு நெடுவாசல் போயிருந்தேன். ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அம்மக்களின் இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு நேரில் சென்றுவர விரும்பினேன். அம்மக்களோடு போராட்டத்தில் கலந்து கொண்டு என் ஆதரவைப் பதிவு செய்தேன். இதுவும் பலரையும் உறுத்தியது, பதற்றமடைந்தார்கள். இது தேசவிரோதம், ஏதோ சாதி ஒழிப்பு என்று சுற்றிக் கொண்டிருப்பது பரவாயில்லை. இதென்ன இந்தப் போராட்டத்திற்கெல்லாம் போகிறாய். உன்னை தேச விரோதி என்று சொல்லிவிடுவார்கள். உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று எச்சரித்தார்கள். ஒரு தரப்பில் அன்பு இருந்தது, இன்னொரு தரப்பில் தேசபக்தியின் அடிப்படையில் அச்சுறுத்தலும் இருந்தது.

தேசவிரோதம் Anti Indian என்று சொல்லுகிறபோதெல்லாம் நிறைய கேள்விகள் பிறக்கின்றன. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் பக்கம் நிற்பது தேசவிரோதமா? அப்படியானால் விவசாயிகள் இந்த தேசத்தின் குடிமக்கள் இல்லையா? அந்தக் குடிமக்களின் கருத்தை மதிக்காமல் செயல்படுகிறவர்கள் தேசபக்தர்கள், மதித்து அவர்கள் பக்கம் நிற்பவர்கள் தேசவிரோதிகள் என்றால் எப்படி? சனநாயகம் என்றால் பெரும்பான்மையின் கருத்தைச் செயலாக்குவது என்கிறார்கள். அப்படியானால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கும் போது ஏன் அதை ஏற்க மறுக்கிறீர்கள்? ஒருவேளை உங்களுக்குச் சாதகமானதற்கு சனநாயகம் வேண்டும், சாதகமில்லாத ஒன்றென்றால் சனநாயகம் வேண்டாமா? தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தொடங்கி பிஜேபி தவிர எல்லாக் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களைக் கைகாட்டி தேசவிரோதிகள் என்று இதுவரை யாரும் சொல்லவில்லையே ஏன்? முதலமைச்சர் கூட ஒருமுறை விவசாயிகளுக்கு விரோதமான திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றாரே, அவரும் அப்படியானால் தேசவிரோதியா? இவர் தேசவிரோதி அல்லவென்றால் தோழர் வளர்மதியை மட்டும் எப்படி தேசவிரோதி எனச் சொல்லலாம்?

நெடுவாசல் போயிருந்த போது சின்னஞ்சிறியவர்கள் கூட அத்திட்டத்தை எதிர்த்து முழங்கினார்களே, அவர்களை என்னவென்று சொல்வீர்கள்? குழந்தை குட்டிகளோடு வந்து பந்தலில் அமர்ந்து அமைதியாகப் போராடுகிறார்களே பெண்கள் அவர்களும் தேசத்தின் எதிரிகளா? அதையெல்லாம் விடுங்கள்... மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் எப்படி விவசாய மண்ணைப் பாலைவனமாக்கும் என்று அம்மக்கள் முன்வைக்கும் அத்தனைக் கேள்விகளுக்கு, இதுவரை ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்? அந்தக் கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை என்றால் அதை பதில் தந்து நிரூபிக்க வேண்டியதுதானே? அதை ஏன் இதுவரை செய்யவில்லை? அதற்கான முயற்சியைக் கூட தேசபக்தர்கள் எடுக்கவில்லையே ஏன்? இல்லையானால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அப்படித்தான் செய்வோம் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படித்தான் என்றால் விவசாயிகளை மதிக்காத, கேள்விகளுக்கும் பதில் தராத, சனநாயகத்தை மிதிப்பவர்கள் எப்படி மக்களைப் பார்த்து தேசவிரோதிகள் எனச் சொல்லலாம்?

அனிதா! இன்னும் நம்மால் மறக்க முடியாத அந்த உயிரின் இழப்பு எப்படி நடந்தது. இந்தியா முழுவதற்கும் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டும் நீட்டுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறது. இந்திய அரசின் சட்டப்படியான நீட் தேர்வை எதிரப்பதால் மக்களையும் தேசவிரோதிகள் என்பீர்களா? ஒட்டுமொத்த தமிழ்மக்களும் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அப்படியானால் தமிழ்நாடே தேச விரோதமான நாடா?

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தால் அனிதாவின் கனவு நனவாகியிருக்குமே? அவள் டெத்தஸ்கோப்பை (Stetescope) மாட்டிக்

கொண்டு கம்பீரமாய் அவள் கிராமத்தில் உலா வந்திருப்பாளே? அவளைப் பார்த்து மற்ற இளம் பிள்ளைகளுக்கும் டாக்டர் கனவு முளைத்திருக்குமே?

ஒரு வேளை கிராமத்தில் வாழ்கிற குறிப்பாக வீட்டில் முதன்முதலில் பட்டம் வாங்குகிறவர்களுக்கு டாக்டர் கனவுகூடக் காணக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா? இல்லை அப்படிப்பட்ட எளிய பிள்ளைகளும் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பது தேசத்துக்கு விரோதமானதா? அனிதாக்கள் டாக்டர் ஆக வேண்டும் என்ற அடிப்படையில், நீட் வேண்டாம் என்றால் அவர்கள் சட்டத்திற்கு எதிரானவர்களா? அல்லது ஏதுமற்றவர்கள் ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் டாக்டர் ஆகக் கூடாது என்றுதான் உங்கள் சட்டமே விரும்புகிறதா? அப்படிச் சொல்கிற சட்டம் எங்களுக்கான சட்டமே அல்ல என்று கருதுவது சட்டத்திற்கு விரோதமானதா? இல்லை அப்படிச் சொல்கிற சட்டம் மக்களுக்கு விரோதமானதா? அனிதாக்கள் கனவையும் கொன்று அனிதாவையும் கொல்லும் சட்டம் எப்படி மக்களுக்கான சட்டமாக இருக்க முடியும்?

மெரினாவில் போராடிய திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மீது வழக்குப் போட்டு சிறைவைக்கிறீர்கள். எதற்காக என்று பார்த்தால் கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் குற்றத்திற்காக என்கிறீர்கள். கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமா? இதுவரை அதே மெரினாவில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்களே! அப்போதெல்லாம் ஏதாவது மக்களுக்கு பாதிப்பு நடந்துள்ளதா? ஏதாவது வன்முறை நிகழ்ந்துள்ளதா? அப்படி இதற்கு முன்னால் எதுவுமே நடந்திராத போது , அமைதியாகக் கூடி செத்தவர்களுக்கு அழுவது குற்றமா? எங்கள் மண்ணில் எங்கள் மக்களுக்கு அழக்கூட எங்களுக்கு உரிமையில்லையா?

அங்கே மக்கள் கொல்லபட்டதை ஏற்கிறீர்கள் என்றால், அவர்களும் தமிழர்கள் என்றால் ஏன் தமிழக அரசே அந்த அஞ்சலியைச் செய்யக் கூடாது? நீங்களே செய்தால் நாங்கள் ஏன் தனியாகச் செய்யப் போகிறோம்? இல்லை அப்படித் தமிழ் மக்கள் கொல்லப்படவே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? ஆம் என்றால் தமிழீழ மக்களைக் கொன்றது யார்யார் என்று வெளிப்படையாய் சொல்வீர்களா? அங்கே நடந்தது இனப்படுகொலை என்று ஜெயலலிதா சொன்னார்களே? தோழர்களை சிறையில் அடைத்த நீங்கள் அதை மறுக்கிறீர்களா? மறுக்கவில்லை என்றால் ஏன் கைது செய்தீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு அழக்கூட உரிமையில்லை என்றால் இந்தியா எங்களுக்கான நாடுதானா?

இதுவெல்லாம் என்னுள் அடிக்கடி பிறக்கும் கேள்விகள். விடையை மீத்தேன் வேண்டும் என்பவர்கள் சொல்ல வேண்டும். நீட் வேண்டும் என்பவர்கள் சொல்ல வேண்டும். எம்மக்களுக்காக அழக்கூடாது என்பவர்கள் சொல்ல வேண்டும். கேள்வியை மட்டுமே நான் முன் வைக்கிறேன்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு கேள்வி : எங்கள் தமிழ் மக்களுக்காக நிற்பவர்கள் Anti Indian என்றால் எங்கள் மக்களுக்கு எதிராவே பேசுபவர்கள் எல்லாம் Anti Tamilana?

தமிழ்நாடு மட்டும் இவற்றிலெல்லாம் தனித்து முழங்குகிறது. அல்லது தமிழ்நாட்டின் மீது மட்டும் இந்திய அரசு தொடர்ந்து குறிவைத்து அடிக்கிறது. என்னுள் இப்படிப்பட்ட கேள்விகள் தோன்றும் போதெல்லாம் விடையையும் தேடுகிறேன். சரி அதையும் பெரியாரிடம் தேடலாம் என பெரியார் அன்றும் இன்றும் என்ற அன்பளிப்பாகக் கிடைத்த புத்தகத்தை எடுக்கிறேன். புரட்டுகிறேன். அதில் ஒரு முழக்கம் தென்பட்டது. அது என்னுள் பிறந்த கேள்விகளுக்கு நெருக்கமான முழக்கமாக இருந்து. என் கேள்விகளோடு ரொம்பத் தொடர்புடைய முழக்கமாகவும் இருந்தது. அந்த முழக்கம், பெரியாரின் முழக்கம் "தமிழ்நாடு தமிழருக்கே"

அப்படியானால் பெரியார், பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல தமிழ் மண் விடுதலையின் தந்தை! தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

சாதி ஒழிப்புதான் என்னைப் பெரியாரிடம் சேர்த்தது. அதே பெரியார்தான் பெண் விடுதலையின் பக்கம் சேர்த்தார். அவரேதான் மண்விடுதலையின் பக்கம் அழைக்கிறார். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததுஎன்றே நம்புகிறேன்.

பெண் விடுதலையே சாதி ஒழிப்புக்கு அடிப்படை. சாதி ஒழிப்பே தமிழர் விடுதலைக்கு அடிப்படை. இதுவே என் புரிதல். கற்றுக் கொடுங்கள். கற்றுக் கொள்கிறேன்” என்றார் கவுசல்யா.

Pin It