கர்ப்பத்தடை என்பது பற்றி சுமார் 2 வருஷங்களுக்கு முன் நாம் எழுதியது அநேகருக்கு திடுக்கிடும் படியான சேதியாயிருந்தது. ஆனால் இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும், ஒரு சாதாரண சேதியாய் விட்டது.
வர வர அது செல்வாக்குப் பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர். பி. சிவசாமி அய்யரும் பெரிய உத்தியோகத்தில் இப்போதும் இருக்கும் ஜஸ்டிஸ் ராமேசம் அவர்களும் மற்றும் பலரும் இது விஷயமாய் அடிக்கடி பேசி வருகின்றதையும் எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்தும் வருகின்றோம்.
சமீபத்தில் சென்னை சட்டசபையிலும் கர்ப்பத் தடை விஷயமாய் பிரசாரம் செய்ய வேண்டுமென்று பிரஸ்தாபிக்கப் பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம்.
ஆனால் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம்.
மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திர திசையை உத்தேசித்தும், குடும்ப சொத்து குலையாமல் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத் தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக்கின்றார்கள்.
ஆனால் நமது கருத்தோ இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல. மற்றெதைக் கருதியென்றால் முன் சொன்னது போல் பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்பதையே அடியோடு நிறுத்தி விட வேண்டும் என்கிறோம், அது மாத்திரமல்லாமல் பல பிள்ளைகளை பெருகின்ற காரணத்தால் ஆண்களும் கூட சுயேச்சையுடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவேயிருக்கிறார்கள்.
இதன் உண்மை சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்கள் சுதந்திரங்க ளுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.
ஒரு மனிதன் தான் கஷ்ட நிலையில் பேசும் போது “நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்து விட்டு விடுவேன். 4, 5 குழந்தையும் குட்டியும் ஏற்பட்டு விட்டதால் இவைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கின்ற கவலையால் பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு ஆளாயிருக்க வேண்டி இருக்கின்றது” என்றே சொல்லுகின்றான்.
அது போலவே ஒரு ஸ்திரீயும் புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும் போது “நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின் மேல் துணியைப் போட்டுக் கொண்டு போய் விடுவேன்; அல்லது ஒரு ஆற்றிலாவது குளத்திலாவது இறங்கி விடுவேன். இந்தக் கஷ்டத்தை சகித்துக் கொண்டு அரை நிமிஷமும் இருக்க மாட்டேன்.
ஆனால் இந்த குழந்தைகளையும் குஞ்சுகளையும் நான் எப்படி விட்டு விட்டு போகமுடியும்” என்றே சொல்லுகின்றாள். ஆகவே இந்த இருவர்களுக்கும் அவர்களது சுயேச்சையையும் விடுதலையையும் கெடுப்பது இந்த குழந்தைகளும் குஞ்சுகளும் என்பவைகளேயாகும்.
உலகத்தில் மக்கள் கஷ்டப்பட்டு தன் தன் ஜீவனத்திற்கு பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்று அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும்போது பிள்ளைகளையும் குட்டிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தலை மேல் இருக்குமானால் அந்த இடத்தில் எப்படி சுயேச்சை இருக்க முடியும்? ஆகையால் ஆண் பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கற்பமாவதும் பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது.
அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாயிருக்கிறது. அதனால் தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெருவதை நிருத்தியே ஆக வேண்டும் என்கின்றோம்.
அன்றியும், பெண்கள் வியாதிஸ் தர்கள் ஆவதற்கும் சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் இந்த கர்ப்பம் என்பதே மூல காரணமாயிருக்கின்றது. தவிரவும் ஆண் களில் பிரம்மச்சாரிகளும், சன்யாசிகளும், சங்கராச்சாரியார்களும், தம்பிரான்களும், பண்டார சன்னதிகளும் ஏற்பட்டிருப்பது போல் பெண்களில் பிரம்மச் சாரிகளும் சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவதற்கும் இந்த கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது.
இந்நிலையில் தான் பெண்கள் விடுதலைக்கும் சுயேச்சைக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். இந்தப்படி நம்மில் ஒருவருக்கொருவர் கருதும் காரணம் எப்படி இருந்த போதிலும் நமக்கும் மற்ற கர்ப்பத் தடைக்காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப்பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆனால் இந்த முக்கிய காரியங்களில் சமீபகாலத்தில் சட்ட சபையில் அரசாங்கத்தினர் சார்பாய் சுகாதார மந்திரி கர்பத்தடை பிரசாரத்தை எதிர்த் தும், பெண்கள் சார்பாய் சட்ட சபைக்கு சென்ற டாக்டர். முத்துலக்ஷ்மி அம்மாளும் அவருக்கு அணுசரணையாய் இருந்ததும் நமக்கும் மிக்க ஏமாற்றத்தையே கொடுத்து விட்டது.
இந்த தேசத்தில் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் இந்த தேசத்து அரசாங்கமே வளர்த்து அவைகளுக்கு கல்வி கொடுத்து மேஜர் ஆக்கி விட வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை இருந்திருக்குமானால் சுகாதார மந்திரி அரசாங்கத்தின் சார்பாய் கர்ப்பத்தடையை எதிர்த்திருக்க மாட்டார்.
அப்படிக்கில்லாமல் யாரோ பெற்று யாரோ வளர்த்தி மக்களைப் பெருக்கி அடிமைக்கு விடுவதனால் சர்க்கார் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முன் வருவார்கள். உண்மையான சுகாதாரத்தில் பிள்ளைப் பேற்றை தடுப்பது முக்கியமான சுகாதாரம் என்று சுகாதார மந்திரிக்கும் பெண்மணியாய் இருந்தும் டாக்டர் பட்டம் பெற்ற வைத்திய அம்மாளுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்க காரியமேயாகும்.
இந்த விஷயத்தில் அரசாங்கத்தார் விபரீதமான அபிப்பிராயப்பட்டு விட்டாலும் கூட பொது ஜனங்கள் அதை லக்ஷியம் செய்யாமல் ஒவ்வொருவரும் இதை கவனித்து அவரவர்களே தக்கது செய்து கொள்ள வேண்டியது மிக்க அவசியமான காரியமாகும்.
மது விலக்கு பிரசாரத்தை விட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரசாரத்தை விட, இந்த கர்ப்பத்தடை பிரசாரம் மிகவும் முக்கியமான தென்பதே நமது அபிப்பிராயம்.
ஆதலால் இந்த கர்ப்பத் தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி அதன் மூலம் பிரசாரம் செய்ய பொது ஜனங்களில் சிலராவது இது சமயம் முன் வரவேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 06.04.1930)